பாலியல் சட்டங்களை யார் இயற்றுவது தகும்?
பசியையும் ருசியையும் போன்று மனிதனுக்குள் விதைக்கப்பட்ட மற்றொரு உணர்வே பாலியல் உணர்வு. பசியையும் ருசியையும் மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்கு உணவையும் பானங்களையும் அதை ஜீரணிப்பதற்கு உடல் உறுப்புக்களையும் படைத்துள்ளான்.
அதே போலவே எதிர் பாலினத்தின் மீது ஈர்ப்பு, காதல், காமம் போன்ற உணர்வுகளை மனிதனுக்குள் விதைத்த இறைவனே அவற்றை தணிப்பதற்குரிய அவையவங்களையும் மனித உடலில் அமைத்துள்ளான். எனவே இந்த உணர்வுகளை மனிதன் தான் விரும்பியவாறு தணித்துக்கொள்வதில் தவறுண்டா?
ஆம், கண்டிப்பாகத் தவறு உண்டு என்பதைத்தான் பொள்ளாச்சி, சேலம் மற்றும் கோவை சம்பவங்கள் நாட்டில் உண்டாக்கி வரும் கொந்தளிப்புகள் உறுதிப் படுத்துகின்றன.பசி, தாகம் இவற்றை தணிக்கும்போது உண்டாகும் விளைவுகள் அந்த மனிதனை மட்டும் பாதிக்கும்.
ஆனால் பாலியல் உணர்வுகளைத் தணிக்கும் போது உண்டாகும் விளைவுகள் அப்படிப்பட்டவை அல்ல. அவை முதலில் இன்னொரு நபரை மட்டுமல்ல, அவ்விருவர் சார்ந்த குடும்பத்தையும் சூழவுள்ள சமூகத்தையும் கண்டிப்பாக பாதிக்கும் என்பதை நாம் அறிவோம்.
அது சம்பந்தப்பட்ட இருவரின் இசைவோடு நடந்தேறியாலும் சரியே!தனி மனிதனுக்கு நிச்சயமாக ஒரு சில செயல்பாடுகளில் – அதாவது பிறரை பாதிக்காதவற்றில் – தனி சுதந்திரம் இருப்பது உண்மையே. ஆனால் மனிதனின் பெரும்பாலான செயல்பாடுகள் மற்ற மனிதர்களையும் சமூகத்தையும் பாதிக்கக்கூடியதாகவும் உள்ளன. அவற்றில் ஒன்றுதான் இந்த பாலியல் தொடர்புள்ள செயல்பாடுகளும்!
கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம்
உதாரணமாக கட்டுப்பாடற்ற பாலியல் சுதந்திரம் வழங்கப் பட்டால் – அதாவது யாரும் யாரோடும் பாலியல் உறவு கொள்ளலாம், அதைத் தட்டிக்கேட்க யாருக்கும் உரிமையில்லை என்ற நிலை உண்டானால் என்ன நடக்கும் என்பதை சற்று யோசித்துப்பாருங்கள்.
= சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அறவே பாதுகாப்பற்ற சூழல் உண்டாகும்.
= குடும்ப அமைப்பு என்பது சின்னாபின்னமாக சீர்குலையும்.
= கணவன், மனைவி, தாய், தந்தை, மக்கள், சகோதரன், சகோதரி உறவுகள் அர்த்தமற்றவையாகிப் போகும்.
= பரஸ்பர நம்பிக்கை, பொறுப்புணர்வு, மரியாதை போன்றவை மறைந்து அங்கு நம்பிக்கை மோசடி, பொறுப்பின்மை, தான்தோன்றித்தனம், காட்டுமிராண்டித்தனம் போன்றவை உடலெடுக்கும்.
= அங்கு பெண்கள் அநியாயமாக அந்நியனின் கற்பத்தை சுமந்து பின்னர் கைவிடப் படுவார்கள். தொடர்ந்து கருக்கொலைகள், சிசுக்கொலைகள், தற்கொலைகள், அனாதைகள், தந்தைகள் இல்லாப் பிள்ளைகள், வேண்டா வெறுப்பாக வளர்க்கப்படும் பிள்ளைகள், பொறுப்பற்ற குழந்தை வளர்ப்பு போன்ற விபரீதங்கள் உருவாகும்.
= ஒழுக்க சீர்கேடு, சுயநலம், திருட்டு, கொள்ளை, கொலை என அனைத்து தீமைகளும் மலிந்து அறவே அபாயகரமான சமூக சூழல் அமையும. மக்கள் மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை ஏற்படும். பிறகு என்ன நிகழும்?..
தற்கொலைகள் மலிந்துவிடும்.அதை நோக்கித்தானே நாம் இன்று சென்று கொண்டிருக்கிறோம்! இன்று இந்த பாலியல் சுதந்திரம் ஓரளவுக்குக் கட்டுபடுத்தப்பட்ட நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம்.
ஆம், தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகத்தின் சமீபத்திய அறிக்கைப்படி இன்று நாளொன்றுக்கு 371 நம் நாட்டில் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவல்துறையின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்படாத தற்கொலை எண்ணிக்கையையும் கணக்கிலெடுத்தால், நம்நாட்டில் ஏறக்குறைய ஆயிரத்திற்கும் மேற்பட்ட தற்கொலைகள் ஒவ்வொரு நாளும் நிகழ்கின்றன என்பதே உண்மை!
அமைதியை மீட்ட சட்டங்களும் கட்டுப்பாடுகளும் தேவை
இன்று நாம் வாழும் சமூகத்தில் அமைதி உண்டாக வேண்டும் என்று விரும்புவோமேயானால் இங்கு பாலியல் தொடர்பான நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது தெளிவு. நமது குடும்பங்களிலும் அல்லது சமூகத்திலும் தீய பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தெளிவான விதிமுறைகளும் தேவைப்படுகின்றன, அவை முறையாக பின்பற்றப்படவும் வேண்டும்.
சரி, இந்த விதிமுறைகளை எங்கிருந்து பெறுவது? இவற்றை எவ்வாறு நிர்ணயிப்பது? யார் நிர்ணயிப்பது? இங்குதான் நாம் பகுத்தறிவு பூர்வமாக சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம். நாம் வாழ்வில் அன்றாடம் புழங்கும் தையல் மிஷின், வாஷிங் மிஷின், ஸ்கூட்டர் போன்ற பொருட்களை அவர்களின் தயாரிப்பாளர்கள் தரும் பயன்பாட்டு கையேட்டைப் (Instruction manual) புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக நாமே நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் என்னென்ன விபரீதங்களும் விபத்துக்களும் ஏற்படும் என்பதை நாம் தெளிவாக உணர்ந்திருக்கிறோம்.
நாம் பயன்படுத்தும் இயந்திரங்களிலேயே அதிக சிக்கல்களும் நுட்பங்களும் கொண்டது (most complicated) நமது உடல் என்ற இயந்திரம். இதைத் தயாரித்தவனை நாம் புறக்கணித்து விட்டு நம் மனம்போன போக்கில் பயன்படுத்தினால் ஏற்படும் விபரீதங்களைத்தான் இன்று நாம் அனுபவித்து வருகிறோம்.அற்ப அறிவும் ஆயுளும் கொண்ட ஒரு மனிதன் சக மனிதனுக்கான பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ அறவே தகுதி இல்லாதவன்.
எந்த ஒரு தனிநபரும் சரி, மனிதர்களின் குழுக்களும் சங்கங்களும் சரி, ஊர் நிர்வாகமும் சரி, அரசியல் கட்சிகளும் அல்லது நாடாள்பவர்களும் சரி, இவர்களில் யாரும் பாலியல் சட்டங்களை இயற்றவோ பரிந்துரைக்கவோ சற்றும் தகுதி இல்லாதவர்களே என்பதை நாம் உணரவேண்டும்.
ஆண் பெண் உடற்கூறுகளையும் அவற்றின் இயற்கையையும் அவர்களின் பருவ மாற்றங்களையும் அவற்றுக்கேற்ற தேவைகளையும் உளவியலையும் அவர்களது வாழ்வின் நோக்கத்தையும் முழுமையாக அறிந்த அவர்களின் படைப்பாளன் மட்டுமே பக்குவமான பாலியல் சட்டங்களைத் தரமுடியும்.
அவன் மட்டுமே இருபாலார்க்கும் சமூகத்தில் அவர்களது பங்கு, கடமைகள், பொறுப்புக்கள், போன்றவற்றை முழுமையாக நிர்ணயிக்கக் கூடியவன். அந்த சர்வஞானமும் சர்வ வல்லமையும் கொண்டவனும் நுண்ணறிவாளனும் ஆன #இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்களே மிகமிகப் பக்குவமானவை. அனைவருக்கும் பொருத்தமானவை. அந்த வாழ்வியல் சட்டங்களின் ஒரு முக்கிய பிரிவே பாலியல் சட்டங்களும்.
இந்த வாழ்வியல் சட்டங்களை இறைவன் எதற்காக வழங்கியுள்ளான் ?இங்குதான் நாம் இந்த வாழ்க்கையின் நோக்கத்தையும் மறுமையையும் பற்றி சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.
நாம் வாழும் இந்தக் குறுகிய வாழ்க்கையை #இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான #பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ளான். #இறைவன் நமக்கு வழங்கும் வாழ்வியல் சட்டங்கள் நமது #இம்மை மற்றும் #மறுமை வாழ்வை அடிப்படையாகக் கொண்டவை.
அவற்றை உரிய முறையில் நிறைவேற்றும் பொழுது இவ்வுலக வாழ்க்கையும் அமைதியாக அமையும். மறுமையில் மோட்சமும் கிடைக்கும்.
பாலியலே வாழ்வியலின் ஆதாரம்:
மனித வாழ்வியலின் ஆதாரமாக உள்ளவை பாலியல் உணர்வுகளும் அதைத் தணிக்கும் வழிமுறைகளும். இவற்றை உரிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு நிறைவேற்றும் வரை மனித சமூகத்தில் அமைதி நீடிக்கும். அதற்கான வழிகாட்டுதலை #இறைவன் தன் #வேதங்களின் மூலமாகவும் #தூதர்களின் மூலமாகவும் அவ்வப்போது வழங்கி வந்துள்ளான்.
அதன் விளைவாகவே திருமணங்களும் குடும்ப உறவுகளைப் பேணும் வழிமுறைகளும் மனித சமூகத்தில் உருவாயின. அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே #முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட இறைவேதமே #திருக்குர்ஆன்.
ஆக, ஆண்- பெண் உறவுகள் விடயத்தில் மட்டுமல்ல, வாழ்வின் எல்லா விடயங்களிலும் அவன் கற்பிக்கும் ஏவல்-விலக்கல்களைப் பேணி வாழ்வதுதான் அறிவுடைமையாகும். அவற்றை பின்பற்றி நடைமுறைக்கு கொண்டுவந்தால் மட்டுமே இவ்வுலக வாழ்வு அமைதி மிக்கதாக அமையும்.சரி, இவற்றை பின்பற்றாவிட்டால்……?
இவ்வுலக வாழ்வை மேற்கூறப்பட்ட விபரீதங்களுக்கு மத்தியில் அல்லல்பட்டு கழிக்க வேண்டியிருக்கும் என்பது மட்டுமல்ல. அந்த #இறைவன் நமக்கு வழங்கிய வாழ்க்கைத் திட்டத்தை புறக்கணித்து வாழ்ந்ததன் காரணமாக #மறுமை வாழ்வில் தண்டனையையும் அனுபவிக்க நேரும்.