Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பாசத்தலைவன் பசியாறுவது எப்போது? - Thiru Quran Malar

பாசத்தலைவன் பசியாறுவது எப்போது?

Share this Article

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதரை அவரின் முகத்தையோ உருவத்தையோ கண்ணால் காணாமலேயே  உலக மக்கள்தொகையின் கால்வாசிக்கும் அதிகமான நபர்கள் உளமாற நேசிக்கிறார்கள் என்றால் அவர் எப்படிப்பட்ட மாமனிதராக வாழ்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும்.

பதினான்கு நூற்றாண்டுகளாக உலகெங்கும் மக்கள் தங்களைப் பிணைத்திருந்த இனம் நிறம் ஜாதி போன்ற அடிமைத்தளைகளிலிருந்து விடுபட்டு  சுதந்திரக் காற்றை சுவாசிக்கவும் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அனுபவிப்பதற்கும் காரணமாக அமைந்தவர் அவர் என்றால் அவர்மீது இவ்வளவு மக்கள் நேசம் கொள்வது இயற்கையான ஒன்றுதானே.

இவ்வுலகைப் படைத்த இறைவனே அவருக்கு சான்றிதழ் வழங்குகிறான்:

68:4மேலும், (நபியே) நிச்சயமாக நீர் மிக உயர்ந்த மகத்தான நற்குணம் உடையவராக இருக்கின்றீர்.

நிலைமை இப்படியென்றால் அவரைக் கண்ணால் கண்டு அவரோடு வாழ்ந்தவர்கள் எவ்வாறு நேசித்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள். அந்த நற்குண நாயகர் அவர்களின் சுகதுக்கங்களில் பங்கு கொண்டார்.

அவர்கள் கவலைப் படுவது கண்டு துயரமுற்றார். அதேபோல அந்த மக்களும் அவரது உயிருக்குயிராக நேசித்தார்கள். தங்கள் பாசத்தலைவனின் துன்பம் கண்டு துயரமுற்றார்கள். அக்காலத்தில் நடந்த ஒரு நிகழ்வைத்தான் இங்கு காண இருக்கிறோம்.

பசியறிந்து பரிமாற நினைத்த தோழர்

பசியும் பஞ்சமும் ஏழைகளை வாட்டிய காலம் அது. அன்று சிறுவராக இருந்த நபித்தோழர்  அனஸ் இப்னு மாலிக்(ரலி) அந்த சம்பவத்தைக் கூறுகிறார்கள்:

என் தந்தை அபூ தல்ஹா (ரலி) தாயார் உம்மு சுலைம் (ரலி)  அவர்களிடம், ‘நான் நபி(ஸல்) அவர்களின் குரலைப்  பலவீனமானதாகக் கேட்டேன். அதில் நான்  (அவர்களுக்கு இருக்கும்) பசியை அறிந்து கொண்டேன்.  உன்னிடம் (உணவு) ஏதேனும்  இருக்கிறதா?’ என்று  கேட்டார்கள். எனவே, உம்மு சுலைம்(ரலி)  வாற்கோதுமை ரொட்டித் துண்டுகள்  சிலவற்றை எடுத்து வந்தார்கள்.

பிறகு, உம்மு சுலைம் அவர்கள் தங்களின்  முகத்திரை ஒன்றை  எடுத்து அதன் ஒரு  பகுதியால் ரொட்டியைச் சுருட்டி என்னுடைய  கைக்குக் கீழே மறைத்து வைத்துவிட்டு,  மற்றொரு பகுதியை  எனக்கு  மேல்துண்டாக ஆக்கினார்கள்.

பிறகு என்னை இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம்  அனுப்பினார்கள். நான் அதைக் கொண்டு  சென்றேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களைப்  பள்ளிவாசலில் கண்டேன். அவர்களுடன்  மக்களும் இருந்தனர். நான் அவர்களுக்கு  முன்னால் (போய்) நின்றேன்.அப்போது  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘உன்னை அபூ  தல்ஹா அனுப்பினாரா?’ என்று  கேட்டார்கள்.  நான், ‘ஆம்’ என்று சொன்னேன். ‘உணவுடனா அனுப்பியுள்ளார்?’ என்று அவர்கள்  கேட்க, நான் ‘ஆம்’  என்றேன்.

அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்முடன்  இருந்தவர்களிடம், ‘எழுந்திருங்கள்’ என்று  சொல்லிவிட்டு நடக்கலானார்கள். நான்  அவர்களுக்கு முன்னால் நடந்தேன். இறுதியில்  அபூ தல்ஹா(ரலி)  அவர்களிடம் வந்(து  விவரத்தைத் தெரிவித்)தேன்.உடனே அபூ  தல்ஹா(ரலி) என் தாயாரிடம் ‘உம்மு சுலைமே!  இறைத்தூதர்(ஸல்)  அவர்கள் மக்களுடன்  வந்திருக்கிறார்கள். 

ஆனால், அவர்களுக்கு  உணவளிக்க நம்மிடம்  உணவு  இல்லையே!’ என்று கூறினார்கள்.  என் தாயார் உம்மு சுலைம்(ரலி), ‘இறைவனும் அவனுடைய தூதருமே  நன்கறிந்தவர்கள்’ என்று கூறினார்கள். உடனே  அபூ தல்ஹா(ரலி) தாமே நபி(ஸல்)  அவர்களை முன்சென்று வரவேற்பதற்காகப்  போய்  (ஸல்)  அவர்களைச் சந்தித்தார்கள்.  அபூ தல்ஹா அவர்களும் இறைத்தூதர் (ஸல்) அவர்களும் வந்து வீட்டுக்குள் நுழைந்தார்கள்.

அண்ணலார் மூலம் அற்புதம்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , ‘உம்மு சுலைமே!  உன்னிடமிருப்பதைக் கொண்டுவா!’ என்று  கூறினார்கள். உடனே  உம்மு சுலைம் அவர்கள்  அந்த ரொட்டியைக் கொண்டு வந்தார்கள். 

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அதைத் துண்டு  துண்டாகப் பிய்க்கும் படி பணித்தார்கள்.  அவ்வாறே அது பிய்க்கப்பட்டது. பிறகு, உம்மு  சுலைம்(ரலி) தோல் பையிலிருந்து வெண்ணெய்  எடுத்துப் பிழிந்து  அதை உருக்கினார்கள்.  பிறகு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறைவன்  நாடிய (பிஸ்மில்லாஹ் மற்றும் இதர  பிரார்த்தனை  வரிகள் சில)வற்றைக்  கூறினார்கள். பிறகு ‘பத்துப் பேருக்கு  (உள்ளே வர) அனுமதியுங்கள்’ என்று  (அபூ தல்ஹாவிடம்)  கூறினார்கள்.

அவ்வாறே அவர்களுக்கு அபூ தல்ஹா(ரலி)  அனுமதியளித்தார்கள்.  அப்போது அவர்கள்  (பத்துப் பேரும்) வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள். பிறகு  இறைத்தூதர்(ஸல்) அவர்கள்  ‘இன்னொரு  பத்துப் பேருக்கு (உள்ளே) வர அனுமதி  அளியுங்கள்’  என்று கூறினார்கள். அவ்வாறே  அபூ தல்ஹா(ரலி) அனுமதியளிக்க,  அவர்களும் வயிறு நிரம்பும் வரை உண்டு விட்டு வெளியேறினார்கள்.

 பிறகு, ‘மேலும் பத்துப் பேருக்கு அனுமதியுங்கள்’  என்று கூற, அபூ தல்ஹாவும் அனுமதியளித்தார்கள்.  அவர்களும்  வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டு  வெளியேறினார்கள். பிறகு பத்துப் பேருக்கு  அபூ தல்ஹா(ரலி) அனுமதி கொடுத்தார்கள்.  மக்கள்  அனைவரும் (இவ்வாறே) வயிறு  நிரம்பும் வரை உண்டார்கள். (அப்படி உண்ட)  அந்த மக்கள் எண்பது பேர் ஆவர்.
(ஆதாரம்: புஹாரி எண்; 5381)

ஆம் மக்களின் பாசத்தலைவன் தன் பசியை ஆற்றும் முன் தம் மக்களைப் பசியாறச் செய்தார்கள். தன் நேசத்துக்குரிய தன் தூதருக்கும் அவர்தம் நேசர்களுக்கும் அகிலம் படைத்த இறைவன் அற்புதமான முறையில் அற்ப அளவில் இருந்த அந்த உணவிலும் அருள்வளம் செய்து  அவர்களுக்கு உதவினான். இதுபோன்ற அற்புத நிகழ்வுகள் அண்ணலாரின் வாழ்வில் பல சந்தர்பங்களில் நிகழ்ந்துள்ளன.

இவ்வுலகம் என்ற அற்புதக் குவியலுக்கு முன்னால் இந்த அற்புதங்கள் அற்பமானவையே என்பதை சிந்திப்போர் அறியலாம்.

(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம் “குன்” – ஆகுக- என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன்2:117)

எப்பொருளையேனும் அவன் (படைக்க) நாடினால், அதற்கு அவன் கட்டளையிடுவதெல்லாம்; “குன்” (ஆய்விடுக) என்று கூறுவதுதான்; உடனே அது ஆகிவிடுகிறது. (திருக்குர்ஆன் 36:82)

Share this Article

Add a Comment

Your email address will not be published.