Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம். - Thiru Quran Malar

இறைவழி நின்று இலஞ்ச ஊழலை ஒழிப்போம்.

Share this Article

நம்மைச் சுற்றி பற்பல தீமைகள் கட்டுக்கடங்காமல் பெருகிக் கொண்டு வந்தாலும் இன்று அனைவரின் உள்ளத்திலும் ஒரு தீமை அதிகமாக உறுத்திக்கொண்டே இருப்பதை நாம் வெளிப்படையாகக் காண முடிகிறது. அதுதான் நம் நாட்டை வெகுவாக அச்சுறுத்தி வரும் இந்த இலஞ்ச ஊழல் எனும் தீமை! இதை எப்படியாவது முடிவுக்குக்கொண்டு வரவேண்டும் என்று கங்கணம்கட்டிக் கொண்டு பலரும் களம் இறங்கிப்போராடுவதை நாம் அன்றாடம் கண்டு வருகிறோம்.

ஒருசிலர் உண்மை உணர்வோடும் சிலர் சுய விளம்பரத்திற்காகவும் சிலர் அரசியல் ஆதாயம் தேடியும் இன்னும் சிலர் தங்களின் பாவ மூட்டைகளை மறைப்பதற்காகவும் போராட்டக் களத்தில் உள்ளனர்.எது எப்படியானாலும் இறைவனில் நம்பிக்கை கொண்டவர்கள் நம்மைச்சுற்றி நடக்கும் அநியாயங்களைக் கண்டு அலட்சியமாக இருக்க முடியாது. நாமும் களம் இறங்கியாக வேண்டும். விளம்பரத்துக்காகவோ அல்லது வேறு ஆதாயங்களுக்காகவோ அல்ல.

ஆனால் இந்த பூமியில் தர்மத்தை நிலை நாட்டவேண்டிய பொறுப்பை நம் மீது இறைவன் சுமத்தியுள்ளான் என்ற காரணத்தால்!  அது இறைநம்பிக்கையின் ஒரு பாகமாகும். நாளை மறுமையில் இறைவனால் இதுபற்றி நாம் விசாரிக்கப் படுவோம் என்ற பொறுப்புணர்வு நமக்கு இருக்கவேண்டும்.

இறைமார்க்கம் அல்லது இஸ்லாம் என்பது வெறும் தொழுகை, தியானம், விரதம் மற்றும் இன்னபிற சடங்குகளுக்குப் பெயரல்ல. மாறாக நம்மைச்சுற்றி நன்மைகளை வளர்க்க வேண்டும். நடக்கும் தீமைகளைத் தடுக்கவும் வேண்டும். இதோ தனது இறுதிவேதம் மூலம் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று இறைவன் கூறுகிறான் 

: மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்…… (திருக்குர்ஆன்  – 3:110)

(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்கு உரிய ஒரே இறைவன் என்று பொருள்)

மேலும் இறைத்தூதர் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
உங்களில் எவரேனும் தீமையைக் கண்டால் கையால் தடுக்க வேண்டும். இயலாவிட்டால் நாவால் தடுக்க வேண்டும். அதற்கும் இயலாவிட்டால் மனதால் வெறுக்க வேண்டும். இதுதான் இறைநம்பிக்கையின் இறுதிநிலையாகும்.
(நூல்: முஸ்லிம் 78)

ஆக, ஒரு இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை அவன் தீமைகளை எதிர்த்து எவ்வாறெல்லாம் முடியுமோ அவ்வாறு போராடக் கடமைப்பட்டிருக்கிறான். எனவே  இன்று நாம் உள்ள நிலையில் எந்தத் தீமைகளை நாம் கையினால் நேரடியாகத் தடுக்க முடியமோ அந்தத் தீமைகளை நேரடியாகத் தடுக்கவேண்டும். நமது நாடு இன்று ஜனநாயக நாடாக உள்ளது.

அரசியல் சாசனங்களுக்கு உட்பட்டு நாம் காணும் தீமைகளுக்கு எதிராகக் களம் இறங்க வேண்டும். ஆனால் போராட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கு இடையூறு தரும் அல்லது  பொதுசொத்துக்களைப்  பாழ்ப்படுத்தும் செயல்களை இறைவன் ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்பதையும் அது நமக்கு பாவமாகப் பதிவு செய்யப்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.

எவ்வாறு போராடுவது?

தீமைகளை எவ்வாறு சமூகத்தில் இருந்து களைவது என்பதையும் அதை மீறி அந்தத் தீமைகள் சமூகத்தில் உடலெடுத்து தலைவிரித்து ஆடும்போது அவற்றை எவ்வாறு கட்டுக்குக் கொண்டுவருவது என்பதையும் எல்லாம் வல்ல இறைவனே நமக்குக் கற்றுத் தருகிறான்

ஒழுக்கம் விதைப்போம்!

இலஞ்ச ஊழலை மட்டுமல்ல அனைத்து தீமைகளையும் ஒழிக்க தனிமனிதன் திருந்தினால்தான் முடியும். தனிமனிதன் திருந்தவேண்டும் என்றால் மனிதனுக்குள் உண்மையான இறைநம்பிக்கை விதைக்கப்பட வேண்டும். படைத்த இறைவனைப் பற்றிய உண்மையான நம்பிக்கையை பகுத்தறிவு ஏற்றுக்கொள்ளும் விதத்தில் விதைக்க வேண்டும். அதாவது இவ்வுலகத்தைப் படைத்து பரிபாலித்து வரும் அந்த சர்வவல்லமை கொண்ட அந்த இறைவன் ஒரே ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.

அவன் இவ்வுலகை ஒரு பரீட்சைக் கூடமாக ஆக்கியுள்ளான் இந்த தற்காலிக வாழ்வில் மனிதர்கள் செய்யும் பாவங்களுக்கு தண்டனையாக நரகமும் புண்ணியங்களுக்குப் பரிசாக சொர்க்கமும் மறுமையில் கிடைக்கும் என்ற உண்மையை மக்களுக்கு சிறுவயதுமுதலே ஊட்டி வளர்க்க வேண்டும்.   அப்போதுதான் உண்மையான இறையச்சம் உருவாகும். மாறாக உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களைக் காட்டி அவற்றையெல்லாம் கடவுள் என்று கற்பித்தால் குற்றங்கள் செய்ய அஞ்சாத தலைமுறைகள்தான் உருவாகும்..

இன்று அதுதானே நாட்டில் நடைபெற்றுக்கொண்டு வருகிறது! சிறுவயதுமுதலே முன்னோர்களின் வழக்கம் என்ற பெயரில் உயிரும் உணர்வும் இல்லாத உருவங்களையும் சிலைகளையும் சமாதிகளையும் எல்லாம் காட்டி இதுதான் கடவுள் அதுதான் கடவுள் என்று கற்றுக் கொடுத்து குழந்தைகளை வளர்த்து வருகிறோம். அதனால் பாவம் செய்ய சிறிதும் கூச்சமில்லாத தலைமுறைகள் பெருகி நம்மை அலைக்கழிக்கின்றன. இந்நிலை மாற படைத்தவனை நேரடியாக வணங்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

இறைசட்டங்களை அமுல்படுத்துவோம்!

தீமைகள் பெருகுவதற்கு அடுத்த காரணம் படைத்த இறைவன் வகுத்துத் தரும் வாழ்க்கைத் திட்டங்களையும் சட்டங்களையும் புறக்கணித்துவிட்டு மனிதன் மனம்போன போக்கில் உருவாக்கியவற்றை செயல்படுத்துவதுதான். மனிதனின் இயற்கையை நன்கறிந்தவன் இறைவன் மட்டுமே. அவன் நமக்கு வகுத்தளித்துள்ள வாழ்வியல் சட்டங்களையும் குற்றவியல் சட்டங்களையும் அமுல்படுத்தினாலே நாட்டில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்துவிடும். உதாரணமாக, இலஞ்ச ஊழல் தொடர்புள்ள இரு சட்டங்களை மட்டும் இங்கு காண்போம்.

குற்றவியல் சட்டம் :

நமது  நாட்டில் இலஞ்சம், மோசடி, திருட்டு, கொலை, கொள்ளை போன்றவை கட்டுக்கடங்காது பெருகுவதற்கு நமது நாட்டின் குற்றவியல் சட்டங்கள் மிகவும் துணை போகின்றன. திருடனுக்கும் மோசடிக்காரர்களுக்கும் கருணை காட்டும்விதம் அவை அமைந்துள்ளதால் திருடர்கள் மீண்டும் மீண்டும் திருடுகிறார்கள் என்பது மட்டுமல்ல சிறைச்சாலைகளில் இருந்து வெளியே வரும்போது புதுப்புது கலைகளையும் கற்றுக்கொண்டு வருகிறார்கள்.

ஆனால் இறைவன் வழங்கும் குற்றவியல் சட்டம் திருடனின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவனது முன்கையை பொதுமக்கள் சாட்சியாக வெட்டிவிடச் சொல்கிறது. அதை நடைமுறைப்படுத்தி  இன்று தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினால் என்ன நடக்கும்?….. சற்று யோசித்துப் பாருங்கள்! திருடர்களும் மோசடிக்காரர்களும் உண்மையாக தண்டிக்கப்படுவார்கள் என்பது மட்டுமல்ல நாட்டுமக்களுக்கும் ஒரு பாடமாக அமையும்.

இச்சட்டம் அமலுக்கு வந்தால் இன்று நீங்கள் காண்பதுபோல் இலஞ்ச ஊழல் தலைவிரித்தாடும் நிலையையோ ஊழல்பேர்வழிகள் நாட்டைக் கொள்ளையடித்து ஆளும் நிலையையோ காணமுடியாது.

நியாயமான வரிவிதிப்பு:   

இலஞ்சமும் ஊழலும் பெருகுவதற்கும் கறுப்புப் பணம் அதிகரிப்பதற்கும் முறையற்ற வரிவிதிப்பும் காரணமாக உள்ளது. சம்பாதிப்பதில் நாற்பது சதவீதத்தை அரசுக்கு வரியாக செலுத்து என்று வற்புறுத்தப் படும்போது பணத்தைப் பதுக்க வழி தேடுவது மனித இயல்பு! அதைத்தான் இன்று நம் நாட்டில் கண்டு வருகிறோம்! நம் நாட்டில் சம்பாதிக்கப்பட்ட பணம் நம் நாட்டில் புழக்கத்தில் இருக்கவேண்டிய பணம் சுவிஸ் வங்கிகளில் அடைக்கலம் தேடுகிறது.

இதற்கு மாற்றாக இறைவன் கூறும் ஜகாத் அமைப்பை நடைமுறைப்படுத்திப் பாருங்கள். நியாயமான முறையில் எவ்வளவு வேண்டுமானாலும் சம்பாதித்துக் கொள்! உனது சேமிப்பில் இரண்டரை சதவீதம் எழைவரியாக செலுத்து என்கிறது ஜகாத் சட்டம். இதை நம் நாட்டில் சட்டமாக்கினால் யோசித்துப்பாருங்கள்! மக்கள் தாங்களாகவே முன்வந்து வரியை செலுத்தமாட்டார்களா? வரிசெலுத்தும்போது இறைப்பொருத்தமும் கிடைக்கும் என்று மக்கள் அறிந்துகொள்வார்களானால் வரிஏய்ப்பு என்பது நடக்குமா? இலஞ்ச ஊழல் மன்னர்கள் நாட்டில் உருவாகுவார்களா?

பயனுள்ள கல்வி   

குழந்தைகளுக்கு வீணானவற்றை போதிப்பதை விட பயனுள்ள கல்வியை கற்றுக் கொடுக்க சொல்கிறது இஸ்லாம். படைத்த இறைவனை முறைப்படி வணங்கக் கற்றுக் கொடுப்பதோடு பள்ளிப் பாடத்திட்டத்தில் அரசு அலுவலகங்களின் நடைமுறைகளைப் பற்றியும் சட்டதிட்டங்கள் மற்றும் வரைமுறைகள் பற்றிய பாடங்களை  உட்படுத்தி மக்களின் அறியாமையைப் போக்கினால் இடைத்தரகர்களும் இலஞ்ச ஊழல்களும் ஒழிந்தே போகும்.

Share this Article

Add a Comment

Your email address will not be published.