Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நோன்பும் நோக்கமும் மாண்பும் - Thiru Quran Malar

நோன்பும் நோக்கமும் மாண்பும்

Share this Article

#நோன்பு என்பது இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக பசி, தாகம், இச்சை இவைகளை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட நேரம் வரை – அதாவது விடியற்காலையில் இருந்து சூரியன் மறையும் நேரம் வரை – கட்டுப்படுத்திக் கொள்வதாகும்.

நோன்பின் நோக்கமே #இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.

விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (திருக்குர்ஆன் 2: 183)

இறைவனுக்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் பொறுப்புணர்வோடு நடப்பதுதான் இறையச்சமாகும். அதற்கு உரிய  பயிற்சியை நோன்பு கொடுக்கின்றது. பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (ஆதாரம்: நபிமொழி நூல் புகாரி)= எத்தனையோ நோன்பாளிகள் தனது நோன்பிலிருந்து பசியைத்தான் உணர்கிறார்களே தவிர வேறு எதையும் உணர்வதில்லை. எத்தனையோ இரவு நேரங்களில் நின்று வணங்கும் தொழுகையாளிகள் கண்விழித்தைத்தவிர வேறு எதையும் உணர்வதில்லை.( அறிவிப்பாளர்: அபுஹூரைரா (ரழி) நூல்: நஸயி, இப்னுமாஜா, ஹாகிம்.)

ரமலான் மாதத்தில் முஸ்லிமான, வயது வந்த, புத்தி சுவாதினமுள்ள, ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் நோன்பு நோற்பது கடமையாகும்.

நோன்பின் மாண்புகள்

= நோன்பு பரிந்து பேசும்

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும்: நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விடயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

= நோன்பை போன்ற ஓர் நற்காரியம் இல்லை

‘நான் நபிகளார் (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைத் பெற்றுத் தரும் ஒரு காரியத்தை கட்டளையிடுவீராக எனக் கேட்டேன். அதற்கு அன்னார் நான் உனக்கு நோன்பை உபதேசிக்கிறேன், அதை போன்று ஒன்று இல்லை’ என கூறினார்கள், என அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நஸாஈ).

= கணக்கின்றி கூலி வழங்கப்படும்

‘ஆதமுடைய மகனின் ஒவ்வொரு அமலுக்கும் (செயலுக்கும்) பத்திலிருந்து எழு நூறு மடங்கு வரை கூலி பெருக்கி கொடுக்கப்படுகிறது நோன்பைத் தவிர. நிச்சயமாக அது எனக்குரியதாகும், நானே அதற்கு கூலி வழங்குவேன்’ என அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முத்தபகுன் அலைஹி).

= நோன்பின் கூலி சுவர்க்கம்:

 ‘நிச்சயமாக சுவர்க்கத்தில் ஒரு வாசல் இருக்கிறது, அதற்கு ரய்யான் என்று சொல்லப்படும். அவ்வாசல் வழியாக நோன்பாளிகள் மாத்திரம் நுழைவார்கள், அவர்களல்லாது வேறு யாரும் அதனால் நுழைய மாட்டார்கள், அவர்கள் நுழைந்தவுடன் அவ்வாசல் மூடப்பட்டு விடும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

= நரகத்தை விட்டு பாதுகாப்பு:

‘எவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அல்லாஹ் அவரது முகத்தை நரகத்தை விட்டு எழுபது ஆண்டுகளுடைய தொலைவுக்கு தூரப்படுத்தப்படுவான்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

= கேடயம்: 

’நோன்பு ஒரு அடியானை நரகத்தை விட்டு தடுக்கும் கேடயமாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அத்தபரானி அல்கபீர்).

= முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்

‘எவர் ரமலான்மாதத்தில் நம்பிக்கையுடனும், நன்மையை எதிர்ப்பார்த்தவராகவும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்).

= மனோ இச்சைகளை கட்டுப்படுத்தும்

 : ‘வாலிபர்களே! உங்களில் திருமணம் முடிப்பதற்கு சக்தியுடையவர்கள் திருமணம் செய்து கொள்ளட்டும். நிச்சயமாக அது பார்வையை தாழ்த்தக்கூடியதாகவும், மர்மஸ்தானத்தை தவறான வழியின் பக்கம் செல்வதை விட்டுத் தடுக்கக்கூடியதாகவும் இருக்கும். எவர் திருமணம் முடிக்க சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு இருக்கட்டும், நிச்சயமாக அது அவரை (தவறானவைகளை) விட்டு பாதுகாக்கும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

= நோன்பாளிக்கு ஈருலகிலும் மகிழ்ச்சி: ‘

நோன்பாளிக்கு இரு மகிழ்ச்சிகள் உள்ளன: ஒன்று அவன் நோன்பு திறக்கும் நேரத்தில் ஏற்படக்கூடியது, மற்றது (நாளை மறுமையில்) அவனது இறைவனை சந்திக்கும் பொழுது ஏற்படக்கூடியது’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி, முஸ்லிம்).

= கஸ்தூரியை விட சிறந்த வாடை:

 ‘எனது உயிர் எவன் கை வசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக நோன்பாளியின் வாயிலிருந்து வரக்கூடிய வாடை அல்லாஹ்விடத்தில் கஸ்தூரியை விட சிறந்ததாகும்’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(புஹாரி, முஸ்லிம்).

Share this Article

Add a Comment

Your email address will not be published.