Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஜாதிகள் எவ்வாறு உருவாகின? - Thiru Quran Malar

ஜாதிகள் எவ்வாறு உருவாகின?

Share this Article

‘ஜாதிகள் இல்லையடி பாப்பா’ என்று உலகறியப் பாடினாலும் சரி, ‘ஜாதி ஒழிக மனிதம் வாழ்க!’ என்று வானுயர முழங்கினாலும் சரி, இயக்கங்கள் அமைத்து இரவுபகலாகப் போராடினாலும் சரி ஜாதிகள் அழிவதில்லை என்பது அனுபவம் நமக்குச் சொல்லும் பாடம். பிறகு என்னதான் வழி?

வழி தேடும் முன் இன்று நாம் காணும் மதங்களும் ஜாதிகளும் எப்படி உருவாகின என்பதை நாம் பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து அறிய முற்படுவோம்.

ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகிப் பல்கிப் பெருகியதே மனித குலம் என்பதை நாம் அறிவோம். இவர்களுக்கு இறைவனைப் பற்றியும் இவ்வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றியும் எடுத்துரைத்து நேர்வழி நடத்த இவர்களில் சிறந்த மனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்களைத் தூதர்களாக இறைவன் நியமிக்கிறான்
,உதாரணமாக, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒரு நாட்டுக்கு ஒரு இறைத் தூதர் வருகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அவர் அந்நாட்டு மக்களுக்கு தான் இறைவனிடமிருந்து பெற்ற செய்திகளை எடுத்துரைக்கிறார்.

•    மக்களே உங்களைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே அவனுக்கு நன்றி உள்ளவர்களாக வாழுங்கள். அவனையே வணங்குங்கள்.அவன் மட்டுமே உங்கள் பிரார்த்தனைகளுக்கு பதில் அளிக்கக்கூடியவன். அவனை விடுத்து படைப்பினங்களை ஒரு போதும் வணங்காதீர்கள். அவ்வாறு செய்தால் பிரிந்து விடுவீர்கள்.

•    இன்று நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் தற்காலிக உலகம் ஒருநாள் அழிக்கப்படும். இறுதித்தீர்ப்பு நாள் ஏற்படுத்தப்படும். அன்று நல்லோருக்கு சொர்க்கமும் தீயோருக்கு நரகமும் விதிக்கப்படும். எனவே இறை கட்டளைகளைப் பேணி வாழுங்கள்.சொர்க்கத்தை அடையலாம். மாறாக ஷைத்தானுக்கும் மனோ இச்சைகளுக்கும் அடிபணிந்தால் நரகத்தை அடைவீர்கள்.

மேலும் அவர் மக்களுக்கு பாவம் எது புண்ணியம் எது என்பதை விளக்கிக் கூறுவதோடு ஒரு முன்மாதிரி புருஷராகவும் மக்களிடையே வாழ்ந்து காட்டுகிறார். இவ்வாறு அவர் அவ்வூரில் .மக்களோடு இணைந்து தர்மத்தை நிலை நாட்டுகிறார். மக்களும் கலப்படமில்லாத ஏக இறைவழிபாடு மூலம் ஒன்றிணைந்த நல்லொழுக்கமுள்ள சமூக வாழ்வில் சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அமைதியையும் அனுபவிப்பார்கள்.

இவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் இறைத்தூதர் மரணம் அடைகிறார். நிலை நாட்டப்பட்ட தர்மத்தின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருக்கும். ஆனால் நாள் செல்லச் செல்ல என்ன நடக்கிறது?

பிற்கால மக்களில் சிலர் இறந்து போன இறைத் தூதருக்கு அஞ்சலி என்ற பெயரில் அவருக்கு ஒரு ஓவியத்தை வரைந்து மரியாதை செய்ய ஆரம்பிப்பார்கள். நாள் செல்லச் செல்ல ஷைத்தானுடைய தாக்கத்தால் அந்த இறைத்தூதருக்கு சிலை வடிக்கப் படுகிறது! மக்கள் அந்த இறைத்தூதரையே வணங்க முற்படுகிறார்கள் ! என்ன விபரீதம்! ‘படைத்தவனை மட்டுமே வணங்குங்கள் , மனிதர்களையோ, புனிதர்களையோ, சிலைகளையோ எதையுமே வணங்காதீர்கள்’ என்று மக்களிடையே பிரச்சாரம் செய்து தர்மத்தை நிலை நாட்டியவருக்கே சிலை வடிக்கப்பட்டு அவரையே வணங்கும் மடத்தனம்! , இல்லை இல்லை அவரது சிலையை வணங்கும் மடத்தனம்! நாளடைவில் அவருக்காக கோவிலும் கட்டப்படுகிறது.

(இதை உங்களால் நம்ப முடியவில்லையா? ஓர் அண்மை உதாரணத்தைப் பாருங்கள். ‘கடவுளே இல்லை’ என்று சிலைகளை உடைத்த பெரியாருக்கே தாங்கள் பகுத்தறிவு வாதிகள் என்று மார் தட்டிக்கொள்பவர்களே சிலை எடுத்தது மட்டுமல்ல தவறாமல் மாலை இடவும் செய்கிறார்கள்!)
உயிரற்ற உணர்வற்ற ஒரு செதுக்கப்பட்ட பொருளை இப்பேரண்டத்தைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவனுக்கு ஒப்பாக்கும் ஒரு மாபெரும் மூட நம்பிக்கைக்கு மக்கள் இடம் கொடுத்ததைத் தொடர்ந்து என்ன நடக்கிறது?

•    பல மூட நம்பிக்கைகள் உடலேடுக்கின்றன.

•    கடவுளுக்கு நாங்கள் தான் நெருங்கியவர்கள் , எங்கள் மூலமாகத்தான் கடவுளை நெருங்க முடியும் என்று கூறிக்கொண்டு இடைத்தரகர்களும் புரோகிதர்களும் உருவாகிறார்கள்.

•    கடவுள் பெயரைச் சொல்லிக்கொண்டு மக்களை ஏய்த்துப் பிழைக்கும் ஒரு கூட்டம் புறப்படுகிறது.

•    அந்நாட்டு அரசனையும் செல்வந்தர்களையும் தன கைக்குள் கொண்டு வந்து புரோகிதம் நாட்டை ஆள்கிறது.

•    பாமரர்களுடையதும் சாமானியர்களுடையதும் உரிமைகள் கொள்ளை போகின்றன.

•    கல்லையும் மரத்தையும் காட்டி கடவுள் என்று கற்பிக்கப் படுவதால் மக்களின் உள்ளத்தில் கடவுளைப்பற்றிய பயம் போய் விடுகிறது.

•    தன செயல்களுக்கு கடவுளிடம் பதில் சொல்லியாக வேண்டும் என்ற உணர்வு மழுங்கடிக்கப்படுகிறது.

•    பாவங்கள் மலிந்து விடுகிறது.

•    அநியாயமும் அக்கிரமங்களும் கொலைகளும் விபச்சாரமும் பெருகி வழிகின்றன.

இவ்வாறு அதர்மம் பரவி நாட்டை சீர்குலைத்துக் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் தர்மத்தை நிலை நாட்டுவதற்காக புதிய தூதர் ஒருவர் அனுப்பப்படுகிறார். அவர் மீண்டும் மக்களுக்கு முந்தைய இறைத்தூதர் போதித்த அதே அடிப்படை உண்மைகளை நினைவூட்டி மக்களை மீண்டும் படைத்தவனை வணங்குமாறு அழைப்பார்.

அவர்கள் செய்து கொண்டிருக்கும் மூட பழக்கவழக்கங்களை எடுத்துரைப்பார். இப்போது என்ன நடக்கிறது? சிந்திக்கும் மக்கள் இவரது போதனைகளால் நல்லுணர்வு பெற்று இவரை பின் தொடர ஆரம்பிப்பார்கள். மற்றவர்களோ ‘இல்லை ,எங்கள் மூதாதையர்கள் எதில் இருந்தார்களோ அதுவே சரி, உங்கள் போதனை எங்களுக்குத் தேவை இல்லை’ என்று மறுத்து எதிர்ப்பார்கள்.அதர்மத்தையும் அக்கிரமங்களையும் மூலதனமாக கொண்டு வயிறு வளர்போரும் அரசியல் நடத்துவோரும் இம்மக்களை முழு மூச்சாக இறைத் தூதருக்கும் சத்தியத்தை ஏற்றுக் கொண்டோருக்கும் எதிராக முடுக்கி விடுவார்கள்.

ஆனால் காலப்போக்கில் இறை அருள் கொண்டு தருமம் மறுபடியும் வெல்கிறது! .

தொடர்ந்து புதிய இறைத்தூதரும் அவருடைய பிற்கால மக்களால் வணங்கப்படுகிறார். அவருக்கும் சிலைகளும் கோவில்களும் எழுப்பப்படுகின்றன.அந்த அதர்மமானது அவரது பெயரைச் சூட்டி ஒரு மதமாக உருவெடுக்கிறது. மீண்டும் ஒரு புதிய தூதர்…….என மீண்டும் அதே கதைத் தொடர்கிறது. இவ்வாறு வந்த தூதர்களின் வரிசையில் கடைசியாக வந்த இறைத் தூதர்தான் முஹம்மது நபி அவர்கள். அவருக்கு முன்னதாக வந்து சென்றவர்தான் இயேசு கிருஸ்து அவர்கள்.

இந்த தொடர் சரித்திரத்தில் என்ன நடக்கிறது? அதர்மம் அந்தந்தக் காலத்து இறைதூதர்களின் அல்லது நாட்டின் அல்லது வமிசத்தின் பெயரால் மதமாக அறியப்படும். ஆனால் தர்மமோ ‘இறைவனுக்கு கீழ்படிதல்’ என்ற பண்புப் பெயரால் அறியப்படும்!

இப்போது புரிந்து கொண்டிருப்பீர்கள் ஒரே மனித குலமாக இருந்த நமக்குள்ளே எப்படி பிரிவினைகள் உருவாயின என்று! இங்கு மதங்கள் உருவாவது மக்களின் அறியாமையினால் என்பது தெளிவு. அந்த அறியாமையைத் தக்கவைத்துக் கொள்ளவும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்டவும் பிற மனிதர்களின் உரிமைகளை பறித்திடவும் இடைத்தரகர்களும் சுயநல சக்திகளும் கற்பிப்பவையே சாதிகள் என்பதை நாம் அறியலாம்.

எனவே ஜாதிகளை ஒழித்து பிரிந்துகிடக்கும் நம் குடும்பத்தை ஒன்றிணைக்க ஒரே வழி நம்மைப் படைத்தவனை மட்டுமே வணங்குவோம் என்ற கொள்கையை ஏற்பது மூலம் மட்டுமே! சிந்திப்போம், சீர் செய்வோம், செயல்படுவோம்!

Share this Article

Add a Comment

Your email address will not be published.