Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
காய்ச்சல் என்பது நோயல்ல, சிகிச்சை! - Thiru Quran Malar

காய்ச்சல் என்பது நோயல்ல, சிகிச்சை!

Share this Article

காய்ச்சல் என்பதும் இறை அருட்கொடையே:


சிறுவயதில் நீங்கள் செய்த சேட்டைக்காக உங்கள் ஆசிரியர் குச்சியால் உங்கள் உள்ளங்கையில் அடித்து இருக்கலாம். அவ்வாறு அடிவாங்கிய இடத்தில் உடனே என்ன நேருகிறது? அந்த இடம் உடனே சிவப்பு நிறமாக மாறுவதை கவனித்திருப்பீர்கள். என்ன காரணம்?ஆம், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக அங்கே செயல்படுகிறது. உடனே அந்த இடத்துக்கு இரத்தத்தை அனுப்புகிறது. இது போலவே உடலில் எங்கே பாதிப்பு ஏற்பட்டாலும் அதை சரிக்கட்ட போதுமான ஏற்பாடுகளை இறைவன் நம் உடலில் ஏற்படுத்தியுள்ளான்.

அதுபோன்ற ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான் காய்ச்சல் என்பதும். மேற்கூறப்பட்ட உதாரணத்தில் கையில் அடிவாங்கிய இடத்தில் சூடு பரவியிருப்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். அதுபோன்றே நமது உடலில் நோய் எதிர்ப்புக்கான சக்தி உடலுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கு எதிராக வேலைசெய்யும் போது ஏற்படும் வெப்ப அதிகரிப்பையே காய்ச்சல் என்கிறோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகள்:

இதேபோல நமது உடலில் பல பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இறைவன் அமைத்திருப்பதை நாம் காணலாம். நாம் உண்ணும் உணவு உண்ணத் தகுந்ததா என்பதை கை, மூக்கு, மூளை என்பவை பார்த்துத் தேர்ந்தெடுக்கின்றன. தொடர்ந்து அது தகுதியில்லாததாக இருந்தால் நாக்கு, வாய், போன்றவை அதைத் துப்பி விடுகின்றன. உண்ட உணவு செரிமானத்திற்குத் தகுதி இல்லாததாக இருந்தால் அதை வெளியேற்ற வாந்தி என்ற ஏற்பாடு உள்ளது. அதேபோன்ற இன்னொரு ஏற்பாடுதான் வயிற்றுப்போக்கு என்பதும். அதேபோல நுரையீரலில் தூசு அல்லது ஒவ்வாத ஏதேனும் சேரும்போது அதை வெளியேற்ற தும்மல் உண்டாகிறது. அதிகமான கழிவுகள் அங்கு சேரும்போது அதை சளி திரண்டு அவற்றை வெளியேற்றுகிறது. இவை அனைத்தும் நம் உடல் தானாகவே தனக்கு செய்துகொள்ளும் சிகிச்சைகளாகும்.

அல்லாஹ்தான் அனைத்துப் பொருட்களையும் படைப்பவன்; இன்னும், அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான். (திருக்குர்ஆன் 39:62)

ஒவ்வொரு ஆத்மாவுக்கு ஒரு பாதுகாவலர் இல்லாமலில்லை. (திருக்குர்ஆன் 86:4)

அவ்வாறு காய்ச்ச்சல் ஏற்படும்போது பலரும் அதை ஒரு நோயாக நினைத்து உடனே சிகிச்சைக்காக மருத்துவரிடம் விரைகின்றனர். வெப்பத்தைத் தணிப்பதற்கான மாத்திரைகளை எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் தற்காலிகமாக காய்ச்சல் தணியலாம். ஆனால் இயற்கையாக உடல் தனக்குத்தானே செய்துகொள்ளும் சிகிச்சை தடைபடுகிறது.எனவே காய்ச்சல் வரும்பொழுது வெப்பநிலை அதிகரிப்பதால் உடலுக்கு நன்மை மட்டுமே ஏற்படுமே தவிர நாம் அதைப்பார்த்து பயப்பட அவசியமில்லை. காய்ச்சல் என்பது உடல் தனக்குத்தானே பார்த்துக் கொள்ளும் வைத்தியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

காய்ச்சல் வரும்பொழுது நாம் என்ன செய்யவேண்டும்? 

காய்ச்சலின் போது நமது உடல் என்ன கேட்கிறதோ அதைக் கொடுத்துக்கொண்டு இருப்பதுதான் நாம் செய்யவேண்டிய அறிவார்ந்த செயலாகும். காய்ச்சலின் போது உடல் சோர்வாக இருக்கும். அப்போது நாம் கொடுக்கவேண்டியது ஒய்வு. படுத்துக்கொள்ள வேண்டும். அதேபோல தாகம் எடுத்தால் தண்ணீர் கொடுப்பதும் பசி எடுத்தால் உணவு கொடுப்பதும்தான் நாம் செய்யவேண்டியது. இவற்றை உடல் கேட்காதபோது நாம் வலியசென்று திணிக்கக் கூடாது.

எப்பொழுது காய்ச்சல் வந்து நாக்கு கசக்கிறதோ அப்பொழுது உணவு தேவையில்லை என்று பொருள். எனவே அந்த நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது நலம். படுத்து ஓய்வு எடுக்க வேண்டும். தாகம் எடுத்தால் லேசாக சூடு செய்த நீரை மட்டுமே குடிக்க வேண்டும். பசி எடுத்தால் அரிசி கஞ்சி கோதுமை கஞ்சி மற்றும் இயற்கையான பழ வகைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். தேன் கலந்த நீரை அருந்துவதும் கருஞ்சீரகத்தை வாயில் இட்டு மெல்லுவதும்  சிகிச்சையை மேலும் தீவிரப்படுத்தும்.

உங்களது இறைவன் தேனீக்கு மலைகளிலும்,  மரங்களிலும்,  மக்கள் கட்டும் கட்டிடங்களிலும் கூடுகளை அமைத்துக் கொள்ளும்படி அறிவூட்டினான். அன்றி “நீ ஒவ்வொரு புஷ்பத்திலிருந்தும் புசித்து, உனதிறைவன் உனக்கு அறிவித்த எளிதான வழியில் (உன்னுடைய கூட்டுக்குள்) ஒடுங்கிச் செல் (எனக் கட்டளையிட்டான்.) இதனால் அதன் வயிற்றிலிருந்து பல நிறங்களையுடைய ஒரு பானம் (தேன்) வெளியாகின்றது. அதில் மனிதர்களுக்கு நிவாரணமுண்டு. நிச்சயமாக இதிலும் சிந்திக்கக்கூடிய மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது. (திருக்குர்ஆன்16:68,69)

 ”கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் நிவாரணம் உள்ளது” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி) அவர்கள். (நூல்கள்: புகாரி, முஸ்லிம்)


காய்ச்சலும் பாவநிவாரணமும்

இவ்வாறு மூன்று நாட்கள் வரை உடலின் தேவையறிந்து கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டால் காய்ச்சலும் குணமாகும். அது எதற்காக வந்ததோ அந்த நோக்கமும் – அதாவது சிகிச்சையும் – நிறைவேறும் இறைவன் நாடினால். மட்டுமல்ல, நம் பாவங்களும் மன்னிக்கப்படும்.

நபித்தோழர் ஜாபிர் (ரலி) அறிவிக்கின்றார்கள்: ”உம்மு ஸாயிப் (ரலி) அவர்களின் வீட்டிற்கு வந்த நபி(ஸல்) அவர்கள், ”உம்மு ஸாயிபே! உமக்கு என்ன? ஏன் துடிக்கிறீர்” என்று கேட்டார்கள். ”காய்ச்சல்தான். அதிலே அல்லாஹ் பரக்கத்(அபிவிருத்தி) செய்யாதிருப்பானாக” என்று உம்மு ஸாயிப் (ரலி) கூறினார். ”காய்ச்சலைத் திட்டாதே! நெருப்பு உலை, இரும்பின் துருவை நீக்குவது போல், காய்ச்சல் மனிதனின் குற்றங்களை நீக்கி விடும்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்) 

(மருத்துவ தகவல்கள் மாற்று மருத்துவ அறிஞர்களின் கருத்தின் அடிப்படையில் எழுதப்பட்டது)

Share this Article

Add a Comment

Your email address will not be published.