Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன? - Thiru Quran Malar

திருக்குர்ஆனின் முக்கிய போதனைகள் என்ன?

Share this Article

1 .ஓரிறைக்கொள்கை:

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் ஒருவனே. அவனை மட்டுமே நாம் வணங்க வேண்டும். அவனது படைப்பினங்களை அவை எவ்வளவு புனிதமானவையாக இருந்தாலும் அவற்றை வணங்குவதோ அவற்றிடம் பிரார்த்திப்பதோ பாவமாகும். இறைவனது தன்மைகள் பற்றி திருக்குர்ஆன் கூறுகிறது;

நபியே நீர் கூறுவீராக! அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.(திருக்குர்ஆன் 112: 1-4) 

(அல்லாஹ் என்றால் அரபு நாட்டுக் கடவுள் என்றோ முஸ்லிம்களின் குலதெய்வம் என்றோ கருதி விடாதீர்கள். அரபு மொழியில் ‘வணங்குவதற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது இவ்வார்த்தயின் பொருள். திருக்குரான் இறைவனைக் குறிக்க அந்த வார்த்தையைத்தான் பயன்படுத்துகிறது.)  அப்படிப்பட்ட இறைவனை நேரடியாக இடைத்தரகர்களின்றி வீண் சடங்குகளின்றி  வீண் செலவுகளின்றி வணங்கச் சொல்கிறது குர்ஆன்.

2. வாழ்வின் நோக்கமும் மறுமை வாழ்வும்: 

இன்று நாம் காணும் உலகம் ஒருநாள் முற்றாக அழிக்கப்படும். பிறகு மீணடும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் மீணடும் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள். இறைவனின் முன்  இறுதி விசாரணைக்காக நிறுத்தப்பட்டு ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் பூமியில் செய்த பாவங்களும் புண்ணியங்களும் முழுமையாக எடுத்துக் காட்டப்படும். அதன்; அடிப்படையில் அவனது நிரந்தர இருப்பிடம் தீர்மானிக்கப்படும். சொர்க்கம் அல்லது நரகம்- இந்த இரண்டில் ஒன்றுதான் மனிதனின் நிலையான வீடு. அதைத் தீர்மானிக்கும் பரீட்சைக்களமே இவ்வுலகம்!திருக்குர்ஆன் கூறுகிறது: 

அவன்தான் உங்களுக்கு மரணத்தையும் வாழ்வையும் படைத்தான், உங்களில் யார் நற்செயல்கள் செய்கிறீர்கள் என்று சோதித்து அறிவதற்காக. (திருக்குர்ஆன் 67:2)

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும். அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3 : 185 )

3. இறைத்தூது: 

மனிதர்களுக்கு நேர்வழி காட்டுவதற்காக அவர்களில் சிறந்தவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் மூலமாக இறைவன் தனது போதனைகளை அவ்வப்போது அறிவிக்கிறான். இதுவரை 1,24,000 இறைத்தூதர்கள் இந்த பூமிக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இறைவனுக்கு அடிபணிந்து வாழுங்கள் அவனை மட்டுமே வணங்குங்கள் என்ற ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். இந்தத் தூதர்களில் இறுதியாக வந்தவர்தான் முஹம்மது நபி அவர்கள்.

இவருக்கு முன் வந்தவர் இயேசு நாதர். அவர்களுக்கு  முன்னர் இந்தியா உட்பட பல நாடுகளுக்கும் பல ஊர்களுக்கும் வௌ;வேறு காலகட்டங்களிலும் இறைத்தூதர்கள் அனுப்பப் பட்டுள்ளார்கள். (அவர்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தி உண்டாவதாக!)  இவுர்கள் அனைவரும் ஒரே இறைவனால் ஒரே கொள்கையை போதிக்க அனுப்பப்பட்டவர்கள் என்பதால் இவர்களில் யாரையும் மறுப்பதோ தரக் குறைவாக கருதுவதோ பாவமாகும். அதே வேளையில் இவர்களுக்கு மரியாதை செய்கிறோம் என்ற பேரில் உருவங்கள் சமைப்பதோ அவற்றை வணங்குவதோ பெரும் பாவமாகும். 

4. மனித குல ஒற்றுமை:

மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்.  பின்னர்  இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். (திருக்குர்ஆன் 4 :1)

மனிதர்கள் அனைவரும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்பது திருக்குர்ஆனின் அடிப்படை போதனைகளில் ஒன்று. இனம் நிறம் நாடு மொழி இவைகளின் அடிப்படையில் மனித குலம் பிளவு படாமலிருக்க ஒரே வழி அனைவரும் படைத்த இறைவனை மட்டுமே வணங்குவதிலும் அவனிடமே பிரார்த்திப்பதிலும் தான் இருக்கிறது.

5. இறைவன் அல்லாதவற்றை அறவே வணங்கக் கூடாது

இன்று மனிதகுலம் பிரிந்து கிடப்பது அவரவர்களின் முரண்பாடான கடவுள் கொள்கையினால்தான். இறைவனுக்கு பதிலாக உயிரற்ற உணர்வற்ற பொருட்களையோ, அல்லது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ வணங்குவதும் இறைவனுக்கு கற்பனை உருவங்களை சமைப்பதும் இறைவனால் மன்னிக்கப் படாத பாவங்கள் என்றும் அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்று திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.மனிதன் பாவம் செய்யாமல் இருக்க வேண்டுமானால் அவனிடம் கடவுளைப் பற்றிய அச்சமும் அவன் என்னைக் குற்றம் பிடிப்பான் என்ற உணர்வும் இருக்கவேண்டும்.

ஆனால் உயிரற்ற உணர்வற்ற பொருட்களைக் காட்டி அவற்றைக் கடவுள் என்று கற்பிப்பதால் மனிதனிடம் உண்மையான கடவுளைப் பற்றிய பயம் போய் விடுகிறது. அதனால் அவன் எப்பாவத்தையும் தயக்கமின்றி செய்யத் துணிகிறான். அதனால் பூமியில் பாவங்கள் பெருக ஒரு முக்கியக் காரணம் இதுவாகும். இந்த ஒரு பாவத்திலிருந்து மனிதன் திருந்தி மீண்டாலே கடவுளின் பெயரால் ஏற்றத்தாழ்வுகள் கற்பிக்கப் படுவதும் மக்கள் சுரண்டப்படுவதும் நிற்கும்! உலகில் சகோதரத்துவமும் மனித சமத்துவமும் அமைதியும் திரும்பும்!

  மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை வழங்குகிறது.

இல்லறம் திருமணம் ஆண்-பெண் பிரச்சினைகள் குழந்தை வளர்ப்பு தூய்மை உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம் கொடுக்கல்-வாங்கல் பாகப்பிரிவினை குற்றவியல் நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய  தீரவுகளை வழங்குகிறது திருக்குர்ஆன்அவற்றை ஏற்று அதன் அடிப்படையில் வாழ்வை அமைத்துக் கொள்வோருக்கு இம்மையிலும் அமைதி கிடைக்கிறது. மறுமையிலும் சொர்க்க வாழ்வு கிடைக்கிறது. அலட்சியம் செய்வோருக்கு இம்மையில் அமைதியின்மையும் மறுமையில் நரகவாழ்வும் காத்திருக்கிறது!

Share this Article

Add a Comment

Your email address will not be published.