இஸ்லாம் என்றால் என்ன? முஸ்லிம் என்றால் யார்?
ஒரு தொழிற்சாலையையோ பள்ளிக்கூடத்தையோ இராணுவத்தையோ மருத்துவ மனையையோ எடுத்துக் கொள்ளுங்கள். பலமக்களும் சேர்ந்து இயங்கும் இவை உரிய பயன் தரவேண்டுமாயின் அங்கு ஒரு உறுதியான தலைமையும் வரையறுக்கப்பட்ட விதிமுறைகளும் ஒழுங்கும் இருந்து அவை எல்லோராலும் பின்பற்றப்படுதல் வேண்டும். அதைப்போலவே நாம் வாழும் இந்த உலகத்திலும் இவ்வுலகிற்கு சொந்தக்காரனான இறைவனின் தலைமையை ஏற்று அவன் கற்பிக்கும் விதிமுறைகளையும் ஒழுக்கத்தையும் பின்பற்றினால் வாழ்க்கை பயனுள்ளதாக அமையும். மனிதனைத் தவிர மற்ற படைப்பினங்கள் அனைத்தும் இந்த முறையில் பயனுள்ளவையாக அமைந்துள்ளதை இயற்கையில் காணலாம்.
. இஸ்லாம் என்றால் அதன் பொருள் கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். அதாவது இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் கூறும் ஏவல் விலக்கல்களுக்குக் கீழ்படிந்து வாழும்போது தனிநபர் வாழ்விலும் அதன்மூலம் சமூக வாழ்விலும் கட்டுப்பாடும்(discipline) நல்லொழுக்கமும் உண்டாகிறது. அதன்மூலம் ஏற்படும் அமைதிக்குப் பெயரே இஸ்லாம் எனலாம். அவ்வாறு பேணுதலோடு வாழ்வோருக்கு மறுமையிலும் அமைதி தொடர்கிறது…
அதாவது நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் அவர்களுக்குப் பரிசாக வழங்கப்படுகிறது என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்
முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் என்று பொருள். உதாரணமாக ஆசிரியருக்கு கீழ்படிந்து நடக்கக்கூடிய மாணவனையோ அல்லது முதலாளிக்கு கீழ்படியும் சிப்பந்தியையோ அரபு வார்த்தையைப் பொறுத்தவரை ஒரு முஸ்லிம் எனலாம். அதேபோல் யார் இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ அவரகளே முஸ்லிம்கள் எனப்படுவர்.. ஒரு தொப்பியோ தாடியோ வைப்பதனாலோ அல்லது அரபியிலோ உருது மொழியிலோ பெயர் வைப்பதனாலோ யாரும் முஸ்லிம் ஆகி விட முடியாது.
ஒரு முஸ்லிம் தாய் தந்தையருக்குப் பிறந்து விட்டாலும் ஒருவர் முஸ்லிம் ஆக முடியாது. முழுக்க முழுக்க பின்பற்றுதல் மூலமே ஒருவர் முஸ்லிம் ஆக முடியும்.
முஸ்லிம் என்ற வார்த்தையை இவ்வாறும் நீங்கள் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் இயற்கையைப் பாருங்கள். மரம், செடி, கொடி , சூரியன் சந்திரன், நட்சத்திரங்கள், மீன்கள், பறவைகள், விலங்கினங்கள்…….. என இவை அனைத்தும் இறைவனின் கட்டளைகளுக்கு – அதாவது இறைவன் விதித்த விதிகளுக்கு கட்டுப்பட்டே வாழ்கின்றன. எனவே இவை அனைத்தும் முஸ்லிம்களே! மட்டுமல்ல நம் உடலையே நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். நம் உடல் உறுப்புக்கள் ஒவ்வொன்றும்- இதயம், வயிறு, ஈரல்கள், நாடி, மூளை, சிறுநீரகம்….. என அனைத்தும் முஸ்லிம்களே! காரணம் அவை அனைத்தும் இறைவனுக்குக் கீழ்படிந்தவையாகவே இருக்கின்றன.
அதாவது ஒரு மனிதன் இன்னும் முஸ்லிமாக ஆகாவிட்டாலும் அவனது உடல் என்றும் முஸ்லிமாகவே இருக்கிறது! .ஆக, இந்த அடிப்படையில் இறைவனுக்குக் கீழ்படியும் பண்பு யாரிடம் எல்லாம் இருக்கிறதோ, அவர்கள் எந்த மதத்தில் பிறந்திருந்தாலும் சரி, எம்மொழியில் பேசினாலும் சரி, உலகின் எந்த மூலையில் பிறந்திருந்தாலும் சரி……. மட்டுமல்ல அவர்கள் எக்காலத்தில் வாழ்ந்திருந்தாலும் சரி, அனைவரும் முஸ்லிம்களே! இதுதான் எமக்கு இஸ்லாம் கற்றுத்தரும் பரந்த கண்ணோட்டமாகும்.
இஸ்லாம் புதிதல்ல!
ஆம், அன்புக்குரிய சகோதர சகோதரிகளே, இஸ்லாம் என்பது ஒரு புதிய மார்க்கமும் அல்ல என்ற உண்மையை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக மக்களில் பெரும்பாலோர் இன்றும் இது ஒரு புதிய மார்க்கம் என்றும் முஹம்மது நபி அவர்களால் தோற்றுவிக்கப்பட்டது என்றும் நம்பி வருகின்றனர். இன்றும் கூட இந்தத் தவறு பள்ளிக்கூடப் பாட புத்தகங்களில் திருத்தப்படாமலே தொடர்கிறது.
ஆம், அன்புக்குரியவர்களே, நாம் அனைவரும் ஓரே குலத்தைச் சார்ந்தவர்கள் என்னும்போது நம் இறைவன் நமக்காக ஒரே மார்க்கத்தைத்தான் அருளியிருக்க முடியும் என்பதும் தெளிவாகிறது. அதே மார்க்கம்தான் ஒவ்வொரு காலகட்டங்களிலும் எங்கெல்லாம் நம் குடும்பங்கள் பரவியதோ அங்கெல்லாம் பற்பல தூதர்கள் மூலம் மீணடும் மீணடும் அறிமுகம் செய்யப் பட்டது. அதே மார்க்கமே இறுதியாக முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மூலம் மறு அறிமுகம் செய்யப் பட்டுள்ளது.
அந்த மார்க்கத்திற்க்குப் பெயர்தான் ‘இஸ்லாம்’ என்று இன்று அரபி மொழியில் அறியப்படுகிறது. மாறாக முஹம்மது நபி அவர்கள் புதிதாக எதையும் கொண்டுவரவும் இல்லை தோற்றுவிக்கவும் இல்லை.
இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதன் மூலம் மனிதனை பாவங்களில் ஈடுபடுவதில் இருந்து தடுத்து கட்டுப்பாடு மிக்கவனாக ஆக்குகிறது. மேலும் மூடநம்பிக்கைகளில் இருந்தும் பிரிவினை வாதங்களில் இருந்தும் விடுவித்து உலகளாவிய சகோதரத்துவத்தையும் மனித சமத்துவத்தையும் ஒற்றுமையையும் நிலைநாட்டுகிறது.
1. ஒன்றே குலம்:
மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும்,பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 4:1)
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
அதாவது நிறம், இனம், நாடு, மொழி, செல்வம், கல்வி, அந்தஸ்து, பதவி போன்றவை மூலம் உண்டாகும் வேற்றுமைகளைத் தாண்டி சக மனிதன் தன் சகோதரனே என்பதோடு அவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்த பூமியில் உரிமைகள் உள்ளன என்றும் அவற்றை அனைவரும் மதித்து வாழவேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
2.. ஒருவனே இறைவன்:
சொல்வீராக: இறைவன் ஒருவனே, அவன் தேவைகள் அற்றவன் அவன் யாரையும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனையும் யாரும் பெற்றேடுக்கவும் இல்லை. அவனுக்கு நிகராக யாரும் எதுவும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1-4)
இறைவனின் தன்மைகளை இவ்வாறு புரிந்துகொண்டு இடைத்தரகர்களுக்கோ மூடநம்பிக்கைகளுக்கோ வீண் சடங்குசம்பிரதாயங்களுக்கோ இடம் கொடாமல் அவனை நேரடியாக வணங்க வேண்டும் என்று கற்பிக்கிறது இஸ்லாம்.
(நபியே!) என்னுடைய அடியார் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நிச்சயமாக நான் அவர்களுக்கு மிகச் சமீபமாக உள்ளேன். என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கிறேன். அவர்கள் நேர்வழி பெறுவதற்காக என்னையே அழைக்கட்டும், என்னையே விசுவாசம் கொள்ளட்டும். (திருக்குர்ஆன் 2:186)
படைத்தவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. எனவே அந்த இறைவனுக்கு பதிலாக படைப்பினங்களை – அவை உயிருள்ளவை ஆயினும் சரி உயிரும் உணர்வுமற்ற உருவங்களாயினும் சரி – அவற்றை வணங்குவதோ அல்லது கடவுள் என்று கற்பிப்பதோ மோசடியும் பாவமும் ஆகும் என்கிறது இஸ்லாம். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதுடன் மனித மனங்களில் இறைவனைப்பற்றி அலட்சியப் போக்கை உண்டாக்கி விடுகிறது. அதனால் மேற்கூறியவாறு நல்லொழுக்கத்தைப் பேணுவதற்கு மிகப்பெரும் தடையாகிறது.
சமூகத்தில் பாவங்கள் பெருக காரணமாகிறது. மேலும் இவ்வாறு மனிதர்கள் வெவ்வேறு விதமாக கடவுளைக் கற்பனை செய்து வணங்க முற்படும்போது ஒரே மனித குலம் பிளவுபட்டு ஒருவரையொருவர் அடித்துக்கொண்டு மாய்வது, இடைத்தரகர்கள் இறைவனின் பெயரால் மக்களை ஏய்த்துப் பிழைப்பது என்பனவும் நிகழ்கின்றன. பல குழப்பங்களுக்கும் தீமைகளுக்கும் காரணமாகும் இப்பாவத்தை மட்டும் இறைவன் மன்னிப்பதே இல்லை என்கிறது திருக்குர்ஆன்.
3. இறைவனின் நீதிவிசாரணையும் மறுமை வாழ்வும்.
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;.இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)
அதாவது இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்டு மீண்டும் இறைவனின் கட்டளை வரும்போது அனைத்து மனிதர்களும் இறுதி விசாரணைக்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள். புண்ணியவான்களுக்கு அளவிலா இன்பங்கள் நிறைந்த சொர்க்கமும் பாவிகளுக்கு கடும் வேதனைகள் நிறைந்த நரகமும் நிரந்தர இருப்பிடங்களாக வழங்கப்படும். ஆக இந்த தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைக்கப்பட்டுள்ளது என்பதே இஸ்லாம் நினைவூட்டும் உண்மையாகும். இதை மறந்து வாழ்வதே மனித குலத்தின் அமைதியின்மைக்குக் காரணமாகும்.
நடைமுறை வழிகாட்டுதல்
மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு நிறுத்திவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் தனது இறுதி வேதமாம் திருக்குர்ஆன் மூலமும் தனது இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை முன்மாதிரி மூலமும் வழங்குகியுள்ளான் இறைவன். மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் வழிகாட்டுபவையாக அவை அமைந்துள்ளதை ஆராய்வோர் அறியலாம்.