குழந்தை செல்வங்களின் இழப்பை ஈடு செய்வது யார்?
தொடர்பான செய்திகள்:= ‘’ஆந்திர மக்கள் அதிக குழந்தைகளை பெறவேண்டாம். குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று முன்பு நான் கூறினேன். ஏன்? நானே ஒரு மகனுடன் நிறுத்திக்கொண்டேன். இப்போது ஜனத்தொகையை பெருக்குங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்” – சந்திரபாபு நாயுடு ((தினமலர்,மாலைமலர், தினபூமி.. 2015 செய்தி)
“ இந்து தம்பதியர் அதிக அளவு குழந்தைகளை பெற்றுக்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசிக்க வேண்டும்” – மத்திய சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை இணை அமைச்சர் கிரிராஜ் சிங் (தினபூமி செய்தி Oct 23, 2016 )
=”இந்து தம்பதிகள் அதிக குழந்தைகளை பெறவேண்டும்” – உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவில் ஆர்.எஸ்.எஸ். மாநாட்டில் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். (தினபூமி- Dec 9, 2016)
இறைவன் மக்களுக்கு வகுத்து வழங்கும் வாழ்க்கை நெறி இயற்கையானது. குறைகளற்றது. அதைத் தவற விட்டோர்களின் நிலை இதுதான். மனிதர்களையும் அவர்களுக்காக இவ்வுலகையும் படைத்தவன் பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே எச்சரித்தான்….
‘நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள்; அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்’ (அல்-குர்ஆன் 17:31)
இந்த எச்சரிக்கையைப் பாடமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்கள் குழந்தைச் செல்வங்கள் மூலம் உண்டான அருட்கொடைகளை இழக்கவில்லை. மக்கள்தொகைப் பெருக்கமே பொருளாதார வீழ்ச்சிக்குக் காரணம் என்ற அரசாங்கங்களின் பொய்கள் மூலம் அவர்கள் ஏமாறவில்லை. மாறாக தங்கள் உணவு மற்றும் வசதிகள் குறைந்துவிடுமோ என்று பயந்து சுயநல நோக்கோடு தங்கள் மக்களை தாங்களாகவே கொன்றொழித்தவர்கள் தாங்கள் செய்தது மிகப்பெரிய பிழை என்பதை இறுதியாக உணர்ந்திருக்கிறார்கள். அதற்கு இவ்வளவு காலம் பிடித்திருக்கிறது! இன்னும் அதை வேறு பலர் உணரவில்லை என்பது வேதனை கலந்த வேடிக்கை! மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் சந்திரபாபு நாயுடு மேற்கண்டவாறு பேசியதைத் தொடர்ந்து நாட்டில் பலரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளானார் என்பதைக் காணும்போது உண்மையை உணர்ந்தவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது!
காலம்கடந்த ஞானோதயம்
பல கசப்பான அனுபவங்களையும் ஈடுசெய்ய முடியாத எண்ணற்ற இழப்புகளையும் சந்தித்துவிட்டு இறுதியில் ஞானோதயம் அடைவதால் என்ன பயன்?
இதனால் இனங்களின் இனப்பெருக்கம் தடைபட்டது ஒருபுறம் இருக்கட்டும. ஆனால் இதைத் தவிர உண்டான வேறு பல இழப்புகளை ஈடு செய்வது யார்? மக்களை ஏமாற்றிய அரசாங்கங்கள் இதற்கு ஏதாவது நஷ்டஈடு திட்டங்கள் வைத்துள்ளார்களா?
பல குடும்பங்களில் தந்தையும் தாயும் முதியோர் ஆன நிலையில் அவர்களைப் பராமரிக்கவோ அன்பு காட்டவோ ஆதரிக்கவோ ஆளில்லாத நிலை. வயதாகி நோயுற்ற நிலையில் மருத்துவமனைகளில் அவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தாலும் அவர்களுக்கு துணை நிற்கவோ ஆதரவளிக்கவோ ஆறுதல் அளிக்கவோ யாரும் இல்லை. முதியோர் இல்லங்களின் அவலங்கள் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
பல குடும்பங்கள் தங்களுக்கு ஆண் சந்ததி வேண்டும் என்பதற்காக தங்களுக்குப் பிறந்த பெண்சிசுக்களை கொன்றொழித்தன. அதனால் அக்குடும்பங்களில் அந்தப் பெண்குழந்தைகளில் இருந்து கிடைக்கைகூடிய தனிபாசம், மென்மை, போன்ற விலைமதிப்பற்ற பல நன்மைகளும் இழப்படைந்த நிலை.
அரசாங்கங்கள் தங்கள் அறியாமையின் காரணமாகவும் தங்கள் கையாலாகாத்தனத்தை மறைப்பதற்காகவும் நாட்டு மக்களின்மீது திணித்த கொடுமைக்கு பல குடும்பங்கள் தங்கள் ஈடில்லாத பொக்கிஷங்களை தொலைத்து விட்டு நிற்கின்றன. பல உயிர்களை காவு கொடுத்து இறுதியில் அவர்கள் தேடிக் கொண்டது பாதிக்கப் பட்டவர்களின் சாபத்தை மட்டுமல்ல. இவ்வுலகத்தின் உரிமையாளனின் கோபத்தையும்தான்! அது நாளை இறுதித் தீர்ப்பு நாளின் போது நரகத்தின் உருவில் காத்திருக்கிறது!
‘உயிருடன் புதைக்கப்பட்டவளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)