Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள் - Thiru Quran Malar

ஈருலக அமைதிக்கு ஐந்து கடமைகள்

Share this Article

#இஸ்லாம் என்றால் அதன் பொருள் #கீழ்படிதல் என்பது. அதன் இன்னொரு பொருள் #அமைதி என்பதாகும். அதாவது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலக வாழ்க்கையிலும் அமைதி பெறலாம்.

#மறுமையிலும் அமைதி அல்லது மோட்சம் பெறலாம் என்பது இந்த இறைமார்க்கம் முன்வைக்கும் தத்துவமாகும்  அதாவது இறைவன் கற்பிக்கும் கட்டுப்பாடுகளை(discipline)ப் பேணி வாழ்வதால் தனிநபர் வாழ்விலும் குடும்ப வாழ்விலும் சமூக வாழ்விலும் பெறப்படும் அமைதிக்குப் பெயர்தான் #இஸ்லாம்!

இவ்வாறு கட்டுப்பாடு மிக்க வாழ்வை வாழ்ந்ததற்குப் #இறைவன் புறத்திலிருந்து மறுமையில் வழங்கப்படும் பரிசே நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம்!

இஸ்லாம் கீழ்கண்ட மூன்று நம்பிக்கைகளை கற்பிக்கிறது:

  1. ஒன்றே மனிதகுலம்: அனைத்து மனித குலமும் ஒரு ஆண் – பெண் ஜோடியில் இருந்து உருவானதே. நாம் அனைவரும் ஒரே குடும்பத்தவரே என்ற உண்மை.
  2. ஒருவனே இறைவன்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவன் எவனோ அவன் மட்டுமே நம் வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த இறைவன் ஆவான். அவனைத் தவிர மற்ற அனைத்தும் படைப்பினங்களே. படைப்பினங்கள் எதுவும் வணக்கத்திற்கு உரியவை அல்ல.
  3. இறைவனின் கண்காணிப்பும் இறுதி விசாரணையும்: இந்தக் குறுகிய தற்காலிக வாழ்வை இறைவன் ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக்கூடமாகவும் படைத்துள்ளான். இங்கு நமது செயல்கள் கண்காணிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டு மறுமையில் இறுதித்தீர்ப்பு நாளன்று இறைவனின் விசாரணைக்காக சமர்ப்பிக்கப்பட உள்ளன. அன்று புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் பாவிகளுக்கு நரகமும் நிரந்தர வாழ்விடங்களாக விதிக்கப்பட உள்ளன. 

மேற்படி நம்பிக்கைகளை வெறும் போதனையோடு அல்லது எண்ணத்தளவில் விட்டுவிடாது அவற்றில் மனிதன் வாழ்நாள் முழுக்க நிலைத்திருக்க அவனுக்கு தெளிவான ஒரு வாழ்க்கைத் திட்டத்தையும் வழிகாட்டுதலையும் இஸ்லாம் வழங்குகிறது. இஸ்லாத்தை ஏற்று வாழ முற்படுபவர்களுக்கு ஐந்து விடயங்கள் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை இஸ்லாத்தின் தூண்கள் என்றழைக்கப்படுகின்றன:

1. கொள்கைப் பிரகடனம்: “வணக்கத்துக்கு உரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை. மேலும் முஹம்மது நபி அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்” என்ற வாசகத்தை மனதார ஏற்று வாயால் மொழிதல். அரபு மொழியில் “லா இலாஹ இல்லல்லாஹ். முஹம்மதுர் ரசூலுல்லாஹ்”)  ஆத்மார்த்தமாக மேற்கூறப்பட்ட கொள்கைப் பிரகடனத்தை இதயத்தில் உறுதி செய்து வாயால் மொழிந்தால் அந்த நொடியிலிருந்து ஒரு முஸ்லிமாகி விடுகிறார். 

எந்த ஒரு மத குருவின் முன்னிலையோ யாருடைய சாட்சியமோ அல்லது ஒரு வழிபாட்டுத்தலத்தில் பதிவு செய்யும் அவசியமோ அங்கு இல்லை! 
ஆம், இம்மார்க்கத்தை ஏற்க  மன மாற்றமும் குண மாற்றமும் தவிர வேறு எந்த மாற்றங்களும் முக்கியம் இல்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும்.

மீணடும் படைத்தவன் அல்லாதவற்றை கடவுள் என்று சொல்வதோ கற்பனை உருவங்களை வணங்குவதோ தொழுகையை விடுவதோ தீமைகள் பக்கம் செல்வதோ கூடாது! 
இதைத் தொடர்ந்து  ஐவேளைத் தொழுகை, ஜகாத் எனும் கட்டாய தானம், நோன்பு, ஹஜ்ஜ் போன்றவைக் கடமையாக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொன்றும் தனிநபர் நல்லொழுக்கத்தையும் சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்துவதையும் சமூக உறவுகளை வலுப்படுத்துவதை நீங்கள் காணலாம்.

2. ஐவேளைத் தொழுகை 
ஒருவர் இஸ்லாத்தில் நிலைத்திருக்க வேண்டுமானால் ஷைத்தானின் தீங்குகளில் இருந்து பாதுகாப்பு பெற வேண்டும். அதற்கு சதா இறைவனின் தொடர்பும் நினைவும் வேண்டும். உடல்தூய்மை பேணி தொழுகைகளை வேளாவேளை நிறைவேற்றுவதன் மூலம்  இறை நினைவும் இறைவனுக்கு பதில் சொல்லவேண்டும் என்ற பொறுப்புணர்வும் உண்டாவதால் அது மனிதனை பாவங்களில் இருந்து விலக்கி வைக்கிறது.  

ஐவேளைத் தொழுகைகளுக்கு முன் உடல்தூய்மையும் அங்கத் தூய்மையும் வலியுறுத்தப்படுவதால் தூய்மை பேணும் பண்பும்  உண்டாகிறது. தொழுகையில் இறைவனுக்கு முன்னால் அடக்கத்தோடு நிற்றல், குனிதல், அமருதல், சாஷ்டாங்கம் போன்ற பல நிலைகளும் இருப்பதால் தொழுகையாளிக்கு அன்றாடம் தேவையான உடற்பயிற்சியும் மனோவளமும் அதே நேரத்தில் நிறைவான ஆரோக்கிய பயன்களும் கிடைக்கின்றன. 

 தொழுகைகளை குறிப்பிட்ட நேரங்களில் நிறைவேற்ற வேண்டும் என்றிருப்பதால் நேரக்கட்டுப்பாடு (punctuality) உணர்வுடன் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை முன்னதாகவே திட்டமிடுவதும் எளிதாகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன் தொடங்கி  இரவு முடியும் வரைக் கச்சிதமான இடைவேளைகளோடு ஐவேளை தொழுகை நேரங்கள் அமைந்திருப்பதால் தொழுகையாளி நாள்முழுக்க சோம்பல் மறந்து சுறுசுறுப்பாக இயங்குகிறான்.

எல்லாவற்றுக்கும் மேலாக இறைவன் தன்னோடு துணையிருக்கிறான் என்ற உணர்வு அவனுக்கு அலாதியான தன்னம்பிக்கையைத் தருகிறது. அது அவன் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சவால்களையும் சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற உதவுகிறது.

கூட்டாகத் தொழுவதன் பயன்கள் 

 முடிந்தவரை இத்தொழுகைகளை கூட்டாக நிறைவேற்ற இஸ்லாம் பணிக்கிறது.

= ”ஜமாஅத்துடன் கூட்டாகத் தொழுவது தனித்துத் தொழுவதைவிட 27 பங்கு பதவியால் கூடுதலாகும்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு உமர்(ரழி), புகாரீ, முஸ்லிம்

இல்லங்களில் சிறியோர் முதல் பெரியோர் வரை அனைவரும் ஐவேளைத் தொழுகைகளைக் கூட்டாக நிறைவேற்றும்போது அங்கு குறிப்பாகக் குழந்தைகளுக்கு ஒழுக்கமும் நேரக்கட்டுப்பாடும்பயிற்றுவிக்கப்படுகிறது.இதைப் பள்ளிவாசல்களில் கூட்டாக வரிசைகளில் அணிவகுத்து நிறைவேற்றும்போது சகோதரத்துவமும் சமத்துவமும் இயற்கையாகவே பேணும் பண்பு வந்துவிடுகிறது.நம்நாட்டில் நூற்றாண்டுகளாகத் தொடரும் தீண்டாமைத் தீமையில் இருந்து இந்த இறைமார்க்கத்தை ஏற்றுக்கொண்ட மக்கள் விடுதலை பெற்று வருவதை அனைவரும் அறிவோம்.

ஒரு காலத்தில் தீண்டாமையால் பிரிந்திருந்தவர்கள் இன்று பள்ளிவாசல்களில் தோளோடு தோள் நின்று அணிவகுத்து தொழுவதும் ஒரே தட்டில் பகிர்ந்து உண்ணுவதும் சாதாரணப் புரட்சிகள் அல்ல.

படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்திற்கு உரியவன் என்ற கொள்கை காரணமாக இன்ன பிற மனிதர்கள் முன்னாலும் தன்னைவிடத் தாழ்ந்த படைப்பினங்களுக்கு முன்னாலும் இம்மார்க்கத்தை ஏற்றுக்கொண்டவர்கள் தலை சாய்க்கவோ வணங்கவோ முற்படுவதில்லை.

அதனால் மனிதனின் சுயமரியாதை உணர்வு நிலைநிறுத்தப்படுகிறது.மேலும் பள்ளிவாசல்களில் மக்கள் பரஸ்பரம் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்பு ஏற்படுவதால் சமூக உறவுகள் வலுப்படுவதோடு சமூகத்தின் குறைகளையும் பிரச்சினைகளையும் தீர்க்கும் குழுக்கள் அல்லது கூட்டமைப்புகள் உருவாகின்றன.

3. நோன்பின் மாண்பு: நோன்பின் மூலம் ஆன்மீகப் பரிசுத்தமும் சுயக் கட்டுப்பாடும் சமூகத்தின் தேவை உணரும் பண்பும் உருவாகின்றன. சக நோன்பாளிக்கு உணவளிப்பது அந்த நோன்பாளி பெறும் நற்கூலிக்கு சமமான கூலியைப் பெற்றுத்தரும் என்பது நபிமொழி.

இதன் காரணமாக ரமலான் மாதத்தில் பள்ளிவாசல்களில் செல்வந்தர்கள் முன்வந்து ஏற்பாடு செய்யும் நோன்புக் கஞ்சி விருந்தும்  இப்தார் உணவுவிருந்துகளும் சகஜமாக நடைபெறுவதைக் காணலாம். இந்த விருந்துகளில் ஏழை பணக்காரன், மொழி வேற்றுமை போன்றவை மறந்து அனைவரும் சமபந்திகளில் அமர்ந்து உணவுண்பதும் நடைபெறுகின்றன.

4. வறுமை ஒழிப்பில் ஜகாத்   செல்வம் என்பது இறைவனுக்கு சொந்தமானது, அது தற்காலிகமாக தன்னிடம் தரப்பட்டுள்ளது என்ற உணர்வை தனிமனிதனிடம் உண்டாக்கி அதை ஏழைகளோடு பங்கிட்டு உண்ணச் செய்கிறது ஜகாத் என்ற கட்டாய தர்மம். இதை இஸ்லாமியர்கள் கூட்டுமுறையில் ஆங்காங்கே நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

உண்மையில் சமூகத்தில் குற்றங்கள் பெருகக் காரணங்களில் ஒன்று வறுமை. ஜகாத் விநியோகம் நிறைய ஏழைகளின் வறுமை நீங்க ஏதுவாகிறது. இருந்தாலும் இதே ஜகாத் முறையை அரசாங்கம் கையிலெடுத்து முறையாக நடைமுறைப்படுத்துமானால் வறுமை ஒழிப்பு செவ்வனே நிறைவேறும். நம் நாட்டில் விதிக்கப்படும் வருமானவரி விகிதத்தை விட ஜகாத் விகிதம் பன்மடங்கு குறைவாக இருப்பதால் மக்கள் தாங்களாகவே முன்வந்து ஜகாத்தை செலுத்துவார்கள். கோடிக்கணக்கில் வெளிநாட்டு வங்கிகளில் முடங்கிக் கிடக்கும் கருப்புப்பணமும் உள்நாட்டிலேயே புழக்கத்திற்கு வரும்.

5. ஹஜ்ஜ் என்ற உலக முஸ்லிம்கள் சங்கமம்!போதிய பொருள் வசதியும் ஆரோக்கியமும் கொண்ட முஸ்லிம்கள் மீது வாழ்வில் ஒரு முறையேனும் ஹஜ்ஜ் என்ற புனித யாத்திரை மேற்கொள்வது கடமையாக்கப்பட்டுள்ளது. உலக முஸ்லிம்கள் இனம், நிறம், மொழி, இடம் போன்ற வேற்றுமைகள் மறந்து சகோதரர்களாக சங்கமிக்கும் நிகழ்வே வருடாவருடம் மக்காவில் நடைபெறும் ஹஜ்ஜ். 

 இஹ்ராம் என்ற வெள்ளை சீருடை அணிந்து மக்காவில் அமைந்துள்ள கஅபா என்ற புனித ஆலயத்தை வலம் வருதல், சஃபா மற்றும் மர்வா என்ற குன்றுகளுக்கு இடையே ஓடுதல், மினா என்ற பள்ளத் தாக்கில் தங்குதல், அரபா பெருவெளியில் ஒன்று கூடுதல், தொழுகைகள் மற்றும் பிரார்த்தனைகள் நிறைவேற்றுதல் போன்ற பல சடங்குகள் ஹஜ்ஜ் என்ற கடமையின் அம்சங்களாகும்.

ஒன்றே மனிதகுலம் ஒருவனே இறைவன் என்ற கொள்கை முழக்கத்தை நடைமுறை வடிவில் உலகறியச் செய்து உலகளாவிய சகோதரத்துவத்தை பறைசாற்றுகிறது ஹஜ்ஜ் என்ற கடமை!

Share this Article

Add a Comment

Your email address will not be published.