Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இவற்றுக்கும் ரமலானுக்கும் என்ன தொடர்பு? - Thiru Quran Malar

இவற்றுக்கும் ரமலானுக்கும் என்ன தொடர்பு?

Share this Article

– சிலருக்கு லெக்கின்ஸ் என்பது ஆபாச உடை, வேறு சிலர் அதில் தவறே இல்லை என்கிறார்கள்.-   

–    சிலருக்கு உயிரினங்களை கொன்று உண்பது பாவகரமான செயல், ஆனால் அவ்வாறு உண்பவர்களைப் பொறுத்தவரையில் அப்படி அல்ல.-   

 –   மதுவினால் சீரழிந்த குடும்பங்கள் மதுவிலக்கு கோரி போராட்டம் நடத்தும்போது மறுபுறம் அதற்கெதிராக மது அருந்துவது தனிமனித உரிமை என்று கூறி வேறொரு கூட்டம் மதுவிலக்குக்கு எதிராகப் போராடுகிறது..-     

–  காதல் என்பதைப் புனிதமானது என்பார் சிலர். “உங்கள் மகளை அவளுக்கு விருப்பமானவரைக் காதலிக்க விடுவீர்களா? என்று அவர்களில் யாரிடமாவது கேட்டால் “அதெப்படி முடியும்?” என்பார்.

 –  நாங்கள் வெள்ளையர்கள், எங்கள் மொழியே உயர்ந்தது என்று வாதித்து கறுப்பினத்தவரை அடிமையாக்கினார்கள். –         

–  ஒரு சாரார் நாங்கள் கடவுளுக்கு நெருக்கமானவர்கள், நாங்களே உயர்ந்த குலம் என்று வாதித்து மற்றவர்களை தீண்டாத்தகாதவர்களாக நடத்தினார்கள்.

இவ்வாறு ஆளுக்கு ஆள், இனத்துக்கு இனம், நிறத்துக்கு நிறம், நாட்டுக்கு நாடு என மக்கள் வெவ்வேறு விடயங்களில் ஒருவருக்கொருவர் முரண்பட்ட நிலைப்பாடு கொள்வதை நாம் அறிவோம். ஒருவருக்குப் பாவமாகப் படுவது மற்றவருக்கு புண்ணியமானதாகப் படுகிறது.

ஒருவருக்குப் புனிதமானதாகப் படுவது மற்றவைக்கு பாவமாகவோ அருவறுபபானதாகவோ படுகிறது. இதில் யார் மற்றவர் மீது ஆதிக்கம் பெறுகிறார்களோ அவர்கள் தம் கருத்துக்கு இணங்காதவர்கள் மீது தம் அடக்குமுறைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.

ஆனால் பலதரப்பட்ட மக்கள் இணைந்து நல்லிணக்கத்தோடு வாழவேண்டுமானால் அங்கு அனைவருக்கும் பொதுவான நியாயமான சட்டங்கள் இயற்றப்பட்டு அவை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பது தெளிவு.

நாட்டின் அமைதியின்மைக்கும்  நீதியும் நியாயமும் கேலிக்குரியதாவதற்கும் முக்கிய காரணம்  சரி எது, தவறு எது அல்லது நன்மைகள் எவை தீமைகள் எவை என்பதைப் பற்றி தெளிவான அறிவில்லாமல் மனிதன் தன் மனம்போன போக்கில் இயற்றும் சட்டங்களே! பலதரப்பட்ட மக்களும் பல்வேறு விதமான ஜீவராசிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழும் இவ்வுலகில் அனைவருக்கும் உரிமைகள் உள்ளன. 

 அவற்றை நீதமாகப் பங்கிடக் கூடிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டுமானால் அதற்கு பரந்த விசாலமான அறிவும் மிக ஆழமான நுண்ணறிவும் பக்குவமான தூரநோக்கும் அத்தியாவசியமானதாகும். இப்பரந்து விரிந்த உலகில் நீர்க்குமிழி போன்று வாழ்ந்து மறையும் ஆறடி மனிதனுக்கு அந்த இயல்புகள் இல்லை என்பதை நாம் அறிவோம்.

அப்படிப்பட்ட அறிவும் ஆற்றலும் இவ்வுலகின் அதிபதியாகிய இறைவன் ஒருவனுக்கு மட்டுமே உண்டு என்பது தெளிவு!அந்த இறைவன் எவற்றை நமக்கு நல்லது என்று பரிந்துரை செய்கிறானோ அவற்றை ஏற்பதும் எவற்றை நமக்குத் தீமை என்று சொல்லி அவற்றை செயயாதே என்று சொல்லி நம்மைத் தடுக்கிறானோ அவற்றிலிருந்து தவிர்ந்து கொள்வதும்தான் அறிவுடைமை.

அதுவே இவ்வுலகில் தனிநபர் நல்லொழுக்கத்திற்கும் சமூகத்தில் அமைதிக்கும் பல்வேறு சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்திற்கும் வழிவகுக்கும்.மட்டுமல்ல, ஆன்மீக ரீதியாக இவ்வுலகம் என்ற இந்தப் பரீட்சைக் களத்தில் இறைவன் எதைச் செய் என்று சொல்கிறானோ அதுவே புண்ணியம் என்பது.

அவன் எதைச் செய்யாதே என்று தடுக்கிறானோ அதுவே பாவம் என்பது! எந்த மனிதனும் மனிதர்களின் குழுக்களும் நீதிமன்றங்களும் சட்டசபைகளும் பாராளுமன்றங்களும் இன்ன பிற ஆன்மீக மற்றும் அரசியல் தலைவர்களும் பாவ-புண்ணியங்கள் எவை என்பதைத் தீர்மானிக்க முடியாது. காரணம் இறுதித் தீர்ப்பு நாளின் அதிபதி இறைவன் மட்டுமே.

அன்று அவனே நமது வாழ்க்கையில் நாம் செய்த புண்ணியங்களையும் பாவங்களையும் கணக்கிட்டு அதன் அடிப்படையில் நமக்கு சொர்க்கத்தையோ நரகத்தையோ விதிக்க இருக்கிறான்.எனவே நமக்கு இம்மைக்கும் மறுமை வாழ்வுக்கும் நன்மை பயப்பது இறைவன் தரும் வாழ்வியல் சட்டங்களேயாகும். 

சரி எது தவறு எது நல்லது எது தீயது எது நியாயம் எது அநியாயம் எது என்பதைப் பிரித்தறிய இறைவன் எதை அளவுகோலாக தருகிறானோ அதுவே அதிபக்குவமானதும் பின்பற்றத் தக்கதும் ஆகும். இன்று இவ்வுலகில் வாழும் மக்களுக்காக இலட்சிய அளவுகோலை (ideal criterion) #இறைவன் அவனது இறுதித் தூதர் #முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினான்.

அதுவே #திருக்குர்ஆன் என்ற இறை அற்புதம். அந்த #திருக்குர்ஆன் இறக்கியருளப்பட்ட மாதமே #ரமலான் என்ற அரபு மாதம். அதை கொண்டாடும் விதமாகவே உலகெங்கும் முஸ்லிம்கள் இந்த மாதம் முழுவதும் விரதம் இருக்கிறார்கள்

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில்தான் மனிதர்களுக்கு முழுமையான  வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், ……,,(திருக்குர்ஆன் 2:185)

Share this Article

Add a Comment

Your email address will not be published.