அற்புதங்களுக்கெல்லாம் அற்புதம் திருக்குர்ஆன்
திருகுர்ஆன் பல காரணங்களால் அது ஒரு அற்புதம் என்று பலரால் போற்றப்படுகின்றது -முரண்பாடில்லாத ஒரே வேதம் திருகுர்ஆன்தான் என்று சிலர் போற்றுகின்றார்கள். இது ஒரு பதிற், ஒரு கசர், நுஃக்தா கூட மாற்றப்படாத அற்புத வேதம் இது ஒன்றே என்று சிலர் பாராட்டுகின்றார்கள். குர்ஆனின் ஓசை நயமே ஒரு அற்புதம் என்கின்றனர் சிலர்.
குர்ஆன் அருளப்பட்ட அரபிமொழி இன்றும் அதே பாணியில் பேசப்படுகின்றது. ஆனால் அதே வேளையில் பல வேத மொழிகள் இன்று உலகில் அடிச்சுவடு இல்லாமல் மறைந்து போய்விட்டன. மூலமொழியில் அப்படியே பாதுகாக்கப்பட்டு வருகின்ற ஒரே வேதம் திருமறைதான். இதுவல்லவா அற்புதம் என்று சிலர் வியக்கின்றனர். பெருவாரியான மக்களால் மனனம் செய்யப்பட்டு வருகின்ற ஒரு வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்பதை ஒரு அற்புதமாக பேசுகின்றனர் சிலர். எல்லா நாடுகளிலும், எல்லாமொழி பேசும் மக்கள் மத்தியிலும் அதன் மூல மொழியில் ஓதப்படுகின்ற ஒரு வேதம் திருகுர்ஆனல்லவா என்று கேட்கின்றர் சிலர்.
உலகில் இரவிலும், பகலிலும் ஒவ்வொரு நாளிலும் அதிகமான மக்களால், அதிகமாக ஓதப்படுகின்ற வேதம் அது ஒன்றே என்கின்றனர் சிலர்.
கொஞ்சம் கூட ஆபாசம் இல்லாத, தூய்மையான கண்ணியமான வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்று புலகாங்கிதம் அடைகின்றனர் சிலர்.
இன்றைய விஞ்ஞான கண்டுபிடிப்புகள் யாவும் திருகுர்ஆனை உண்மைபடுத்துகின்றனவே என்று மூக்கின் மேல் விரல் வைக்கின்றனர் சிலர்.
ஒரு அருமையான ஆரோக்கியமான அரசியல் சிந்தாந்தம் அல்லவா திருகுர்ஆன் என்று அரசியல் விற்பன்னர்கள் ஆச்சரியபப்படுகின்றனர்.
எத்தனை இஸங்கள் வந்தாலும் குர்ஆனிஸத்தை வெல்ல முடியவில்லையே என்று பெருமிதம் கொள்கின்றனர் சிலர்.
குர்ஆன் படித்த பின்னால்தான் இறைவன் மீது நம்பிக்கையும், ஒரு மரியாதையும் வருகின்றது என்கின்றனர் சிலர். மனிதனை மனிதன் அடிமைப்படுத்தக் கூடாது, மனிதனை மனிதன் வணங்கக்கூடாது என்று மனிதனின் சுயமரியாதையை காக்கும் அரணாக திருகுர்ஆன் என்கின்ற வேதம் ஒன்றுமட்டும் தான் போதிக்கின்றது என்று ஒப்புக் கொள்கின்றனர் சிலர். தனி மனித உரிமைகளை திருகுர்ஆன் வலியுறுத்துவது போல் இதுவரை எந்த முற்போக்காளரும் வலியிறுத்தவில்லை என்று அடித்து சொல்கின்றனர் சில சுயமரியாதை விரும்பிகள்.
திருகுர்ஆன் மனிதனின் சிந்தனையை தூண்டுவது போல், வேறு எந்த வேதமும் தூண்டவில்லை என்று நற்சான்றிதழ் அளிக்கின்றனர் சில தலைச்சிறந்த சிந்தனையாளர்கள். திருகுர்ஆன் ஒன்றுதான் தேசியம், பிராந்தியம், இனம், மொழி ஆகிய உணர்வுகளுக்குப்பால் ஒன்றுப்படுத்துகின்றது என்று மனம் குளிர்கின்றனர். மனித ஒருமைப்பாட்டை விரும்புபவர்கள். உண்மையான மனித நேயம் திருகுர்ஆனில் அல்லவா இருக்கின்றது என்று மயங்குகின்றனர் மனித நேயம் மிக்கவர்கள். திருகுர்ஆன் தோற்றுவித்த, தோற்றுவித்துக் கொண்டிருக்கின்ற புரட்சிகளைப் போல் வேறு எந்த புரட்சியாளரும் தோற்றுவிக்கவில்லை என்கின்றனர் உண்மையான புரட்சியாளர்கள்.
இன்று அனைத்துலக வல்லரசுகளும் தடை செய்யத் துடிக்கும் ஒரு நூல் உள்ளது என்றால் அது திருகுர்ஆன் ஒன்றே என்கின்றனர் சிலர்.
இன்னும் சிலர் உலக அமைதிக்கு திருகுர்ஆன் சொல்லும் தீர்வுகள் தான் தீர்க்க தரிசனம் மிக்கவை என்கின்றனர்.குர்ஆன் வகுத்துத் தந்துள்ள சட்டதிட்டங்களை விட மேலான சட்டத்திட்டங்கள் இது வரை யாராலும் படைக்க முடியவில்லை என்று ஆச்சரியபப்டுகின்றனர் சில சட்ட வல்லுனர்கள். பெண்களின் கெளரவம், பெண்களின் கண்ணியம் திருகுர்ஆன் வழங்குவது போல் வேறு எந்த வேதமும் வழங்கவில்லை என்று ஒப்புக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் சில அகில உலக மகளிர் அமைப்புகள். இறைவனின் மகிமையையும், பெருமையையும், அவன் மதிப்பையும் திருகுர்ஆனைப் போல் எந்த வேதமும் எடுத்துரைக்கவில்லை என்று பரவசப்படுகின்றனர் சில கடவுள் நம்பிக்கையாளர்கள்.
மனிதனுக்குத் தேவையான எல்லாத் துறைகளுக்கும், திருகுர் ஆனைப்போல் வேறு எந்த வேதத்தாலும் வழிகாட்ட முடியவில்லை என்று முழங்குகின்றனர் சில அறிவு ஜீவிகள். உலகில் உள்ள அத்தனை மூடநம்பிக்கைகளையும் முளையிலேயே கிள்ளி எறிகின்ற வேதம் திருகுர்ஆன் ஒன்றே என்று எக்காளமிடுகின்றனர் சில மூடநம்பிக்கை ஒழிப்பாளர்கள். இறைவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்ற உயர்ந்த தத்துவத்தை, திருகுர்ஆனைத் தவிர வேறு எந்த வேதமும் தெளிவாக எடுத்துரைக்கவில்லையே என்று எழுச்சி பெறுகின்றனர் ஏகத்துவவாதிகள்.
குறிப்பிட்ட எண்களுக்குள்ளே திருகுர்ஆன் முழுமையும் சுருக்கம் செய்யப்பட்டுள்ள விந்தையைக் கண்டு வியக்குகின்றனர் சில நவீன நுண்ணறிவாளர்கள். விதவிதமான விதங்களில் திருகுர்ஆன் வரையப்பட்டது போல் வேறு எந்த வேதமும் வரையப்படவில்லை என்கின்றனர் சில கலை வல்லுனர்கள். படிக்கப் படிக்க தெகிட்டாத புது புது அர்த்தங்கள் தரக்கூடிய ஒரு அபூர்வ நூல் என்று மெய்சிலிர்க்கின்றனர் சிலர்.
மனிதனால் கலப்படம் செய்ய முடியாத மாசுப்படுத்தப்படாத வேதம் திருகுர்ஆன் மட்டுமே என்று மட்டில்லா மகிழ்ச்சியடைகின்றன சில திருச்சபைகள். எல்லா வேதங்களையும் மாச்சரியமின்றி உண்மைப்படுத்தும் வேதம் இதுவன்றோ என்று அக மகிழ்ந்து பாராட்டுகின்றனர் சில வேத விற்பன்னகர்கள். திருகுர்ஆன் அரபு மொழியில் மிக தரமான இலக்கியத்தில் அமைந்துள்ள அதே வேளையில், பாமர மக்களும் புரிந்துக் கொள்ளும் புரிந்துக் கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. இது ஆச்சரியமான உண்மையாகும் என்று மொழிகின்றனர் சில மொழி வல்லுனர்கள்.
கண்ணுக்குத் தெரிகின்ற மனித கூட்டங்களும், கண்ணுக்கு தெரியாத”ஜின்’வர்க்கமும் ஒன்றாய் சேர்ந்து திருகுர்ஆனைப் போல் ஒரு அத்தியாயத்தை உருவாக்க முடியாது என்று திருகுர்ஆன் இடும் சவாலுக்கு இதுவரை பதில் தரமுடியாமல் போனது மிகப் பெரிய ஆச்சரியம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். எந்த வகையிலும் குர்ஆனை பொய்யாக்க முடியவில்லை. வாதங்களின் வலையில் அதை சிக்க வைக்க முடியவில்லை. கிடுக்குப் பிடி போட்டால் அது புதிய ரூபம் எடுத்து எத்தனைத் தந்திரங்களையும் தவிடு பொடியாக்கி விடுகின்றதே என்று அங்கலாய்க்கின்றனர் பலர்.
காலத்தால் மாற்ற முடியாத எந்தக் காலத்திலும் வளைந்துக் கொடுக்காத, எல்லாக் காலத்திற்கும் ஒத்து வருகின்ற ஒரு அற்புத படைப்பு திருகுர்ஆன் என்று திக்குமுக்காடுகின்றனர் சிலர்.வல்லரசுகளை எல்லாம் சில்லறை அரசுகளாக மாற்றும் சக்தி படைத்தது திருகுர்ஆன் என்று சரணாகதி தேடுகின்றன சில சிகப்பு சகாப்தங்கள்.
எல்லா வேதங்களும் அவற்றை நம்புகின்றவர்களிடம் மட்டும் பேசுகின்றன. திருகுர்ஆன்மட்டும்தான் எல்லாவித நம்பிக்கையாளர் களுடனும் பேசுகின்றது என்று புதிய வியாக்கியானம் தருகின்றனர் சிலர். திருகுர்ஆனின் தாக்கங்கள் இன்று எல்லா இசங்களிலும் காணப்படுகின்றன என்று ஆமோதிக்கின்றனர் சிலர். எல்லா வேதங்களும் வணக்கங்களை வலியுறுத்துகின்றன. ஆனால் திருகுர்ஆனே வணக்கமாக இருக்கின்றது என்று வக்காலத்து வாங்குகின்றனர் சிலர்.
இப்படி சொல்லிக் கொண்டே, போகலாம். இப்படி ஒவ்வொரு கோணத்திலும் அது அற்புதமாக தெரிகின்றது. இன்னும் சொல்லப்படாத எங்கள் கற்பனைக்கு எட்டாத ஆயிரமாயிரம் அற்புதங்கள் அதில் ஒளிந்துக் கிடக்கின்றன. அற்புதங்களுக்கெல்லாம் ஓர் அற்புதம் திரு குர்ஆன். நபி(ஸல்) அவர்களுக்குத் தரப்பட்ட அற்புதங்களில் தலையாய அற்புதம் திருகுர்ஆன். எல்லா நபிமார்களுக்கும் வழங்கப்பட்ட அற்புதங்கள் மறைந்துவிட்டன. அவர்களின் காலங்களோடு முடிந்துவிட்டன. ஆனால் திருகுர்ஆன் என்கின்ற அற்புதம் வாழ்வாங்கு வாழ்கின்றது.
நான் சற்று வித்தியாசமாக திருகுர்ஆனை பார்க்கின்றேன்.
நான் காணும் அற்புதம் திருகுர்ஆனில் மட்டும் தான் இறைவனே முழுக்க முழுக்க பேசுகின்றான்.
மற்ற வேதங்களில் மற்றவர்களும் பேசுகின்றார்கள்.
திருகுர்ஆன் மட்டும்தான் இறைவன் மட்டும் பேசும் இறைவேதமாக இருக்கின்றது. இதை யாராலும் எவராலும் மறுக்க முடியாது.
திருகுர்ஆன் மக்களுடன் பேசுவது போல் மற்ற எந்த வேதமும் பேசவில்லை.
திருகுர்ஆனின் மூலம் மனிதர்களிடம் இறைவன் நேரிடையாகச் சொல்கின்றன.
திருகுர்ஆனில் மட்டும் இறைவன் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கின்றான்.
இறைவனுடன் பேசும் அந்த அற்புத அனுபவத்தை அடைய விரும்புபவர்கள் திருகுர்ஆன் படிக்கட்டும்.
என்றும் ஜீவித்துக் கொண்டிருக்கின்ற பேசும் தெய்வத்தை திருகுர்ஆனின் மூலம் அவர்கள் தரிசிக்கட்டும்.
நன்றி : இஸ்லாமிய செய்தி (facebook.com)