Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா? - Thiru Quran Malar

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?

Share this Article

இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்துவிட்டாலும் வேறுவிதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் மாற்று மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும் தக்னி,லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும் இவர்கள்தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ கொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத்தான் நாம் மறுக்கிறோம்.முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.இஸ்லாமிய மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும் நபிகள்நாயகம்(ஸல்) அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

”நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம்தான் (அல்குர்ஆன்21:92)”

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் இறைவனிடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்” (அல்குர்ஆன் 49:13)

எல்லா மக்களுக்கும் மூலபிதா ஒருவர்தான். எல்லா மக்களுக்கும் மூலஅன்னையும் ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்துவிட்டது. இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால்தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை.அடுத்ததாக, ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாது. இதுதான் சாதிக்குரிய இலக்கணம். முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்தபிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவானதன்று.

ஷியா, சன்னி போன்ற பிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்துவேறுபாடு கொண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்து விட்டு மற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. ஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும்போது இந்தப் பிரிவை சாதியுடன் சேர்ப்பது எந்தவகையிலும் ஏற்புடையதாகாது.மரைக்காயர், லெப்பை, இராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் ஒருபகுதியினர் அரபுநாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர்.இந்தத் தொழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின் அடிப்படையிலோ, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறு அழைக்கப்பட்டதில்லை.மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அழைக்கப்பட்டனர். இதுவே மரைக்காயர் என்று ஆனது.அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள். அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.யாரேனும் அழைத்தால் ”ஓ” என்று நாம் மறுமொழி அளிப்போம். அன்றைய அரபுநாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர்.இங்கு வந்து குடியேறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறிவந்ததால் அவர்கள் லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர்.உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அழைக்கப்படவில்லை.எனவே இதையும் காரணமாக வைத்துக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக்கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.

அடுத்தப்படியாக, கொள்கை மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாக தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை.வேறு பிரிவினரிடம் திருமண சம்பந்தம் கூட செய்து கொள்கின்றனர்.இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மாட்டார். எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிடையாது என அறிந்து கொள்ளமுடியும்.உருது, தமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்லை என்பது உண்மைதான்.இதற்குக் காரணம் சாதிஅமைப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிடையே நல்லுறவை வளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒருமொழியை இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும். ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் சொல்ல முடியாது.இது போன்ற காரணங்களுக்காகத் திருமண சம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை. தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லை. உருது முஸ்லிம்தான் உயர்ந்தவன் என்ற அடிப்படையில் திருமண சம்பந்தத்தைத் தவிர்த்தால்தான் அதைச் சாதியாகக் கருதமுடியும்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள் தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக்கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.இது போன்ற பிரிவுகளையும் கூட தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத் தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிடவேண்டும். என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக்கொள்கிறோம்.அவர்கள் கைவிடாவிட்டாலும் அதையும் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்

Share this Article

Add a Comment

Your email address will not be published.