Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை! - Thiru Quran Malar

மனித வரலாற்றில் மாபெரும் திருப்புமுனை!

Share this Article

நபிகளாரிடம் அந்த அந்தகர் வந்தபோது……

மனித வரலாற்றை திருத்தி எழுதிய நிகழ்வு அது! உண்மையில் அதுவே வரலாற்றின் ஒரு மிகப்பெரிய திருப்பு முனையும் கூட!

மனிதன் சக மனிதனைப் பார்க்கும் பார்வையை மாற்றி அமைத்த நிகழ்வு அது! உலகெங்கும் மானிடப் பூங்காக்களில் சமத்துவப் பூக்கள் துளிர்விடத் துவங்கிய நாளேன்றே அந்நாளைக் கூறலாம்!

இனம், நிறம், மொழி, குலம், கோத்திரம் ஜாதி இவற்றின் பெருமைகளைக் கூறி மனிதர்களின் மத்தியில் வேறுபாடுகளை விதைத்து அதன் மூலம் பிற மனிதர்களின் உரிமைகளைக் கொள்ளையடித்துக் கொண்டு இருந்த தீய பழக்கத்திற்கு சாவுமணி ஒலிக்கத் துவங்கியது அதற்குப் பிறகுதான்! இஸ்லாம் என்பது இறைவனுக்குக் கீழ்படிந்து வாழுதல் என்ற கட்டுக்கோப்பான வாழ்க்கை முறை.

இதை நோக்கியே ஒவ்வொரு காலகட்டங்களிலும் உலகின் பல்வேறு பாகங்களுக்கும் வந்த இறைவனின் தூதர்கள் தத்தமது மக்களை அழைத்தார்கள். இதை இறுதியாக மறுஅறிமுகம் செய்ய வந்தவரே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். நபிகளார் பிறந்த மண்ணான மக்கா நகரம் அன்று எவ்வாறு இருந்தது?  அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர்.

யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள்.

பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர், பெண்களை அடிமைகளாக நடத்தினர், சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்,  நிறவெறி,  கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில்தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.

அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள். இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும்.

அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுவதை நபிகளார் மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே  சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச்  சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் இதைப் பொறுத்துக்கொள்வார்களா? கற்பனை செய்து பாருங்கள்!

ஆம், நபிகளாரும் அவரோடு  சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. ஆனாலும் இறைவனின் உதவியாலும் நபிகளாரின் துவளாத பிரச்சாரத்தினாலும் கொள்கை உறுதிப்பாட்டினாலும் இஸ்லாம் வேகமாகப் பரவிக் கொண்டிருந்தது. இஸ்லாத்தின் கொள்கைகளை தங்களின் சூழ்ச்சிகளால் வென்றெடுக்க இயலாது என்பதை மக்கத்து (இறை) நிராகரிப்பாளர்கள் உணர்ந்தே இருந்தனர். 

முஹம்மது (ஸல்) அவர்கள் இறைசெய்தி என்று கூறுவது அனைத்தும் அவர்களின் சொந்த கருத்தல்ல மாறாக அனைத்துலகையும் படைத்த இறைவனால் அருளப்படும் இறைச்செய்தியே என்பதை அறிந்து கொண்ட அக்குறைஷித் தலைவர்கள் முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒரு நிபந்தனையின் அடிப்படையில் அவர்கள் அனைவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தனர்.

நிபந்தனை என்னவெனில் அக்குறைஷித் தலைவர்கள் இஸ்லாத்தை ஏற்றபின் அவர்கள் இருக்கும் அவையில் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அவர்களோடு அமர்ந்துவிடக்கூடாது என்கின்றனர். முதலில் இந்நிபந்தனையை ஏற்றுக்கொண்டு அக்குறைஷித் தலைவர்களை இஸ்லாத்தை ஏற்கச்செய்யலாம், பின்னர் இஸ்லாத்தின் சீரிய கொள்கைகளை அறிந்தபின் தங்களின் நிபந்தனையின் தவறை தாங்களாகவே உணர்ந்து விளங்கிக் கொள்வார்கள் என்ற முடிவு நபி (ஸல்) அவர்களின் எண்ண ஓட்டத்தில் இருந்தது.

அந்த தருணத்தில் குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த  அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள். இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் போன்றவர்கள் தாங்கள் அமர்ந்திருக்கும் சபைக்கு வரக்கூடாது என்ற நிபந்தனையைப் பற்றித்தானே குறைஷித்தலைவர்கள் பேசிக்கொண்டிருக்கிறனர். இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர். உதாரணமாக, நாட்டின் ஜனாதிபதியிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு இனப்போராளித் தலைவனை அந்நேரம் பார்த்து ஓர் அடிமட்டத் தொண்டன் தொடர்ந்து செல்பேசியில் அழைத்தால் அத்தலைவனின் நிலையை நீங்கள் கற்பனை செய்யமுடியும்.

இங்கு நபிகளார் சுயலாபத்துக்கான பேச்சுவார்த்தை அல்ல. பொது நலனுக்கான ஒரு சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ள வேளையில் நடந்த இந்த எதிர்பாராத குறுக்கீடு நபிகளாரை அதிருப்தி கொள்ள வைத்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது. இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. ‘அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்’ என்று துவங்கும் ‘அபஸ’ என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான். அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்! அன்று முதல் மனித உறவுகளில் புது நடைமுறை அமுலுக்கு வருகிறது. மனித வரலாற்றை திருத்தி எழுதிய அந்த திருமறை வசனங்கள் இவையே:

80: 1,2. தன்னிடம் அந்தக் குருடர் வந்தற்காக இவர் (முஹம்மது) கடுகடுத்தார். அலட்சியம் செய்தார்.

80:3. அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்.

80:4. அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம்.

80:5,6. யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர்.

80:7. அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை.

80:8,9,10. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்.

80:11. அவ்வாறில்லை! இது ஓர் அறிவுரை.

80:12. விரும்பியவர் படிப்பினை பெற்றுக் கொள்வார்

இந்த சம்பவம் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை. எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது! இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம், ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்!
மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13)
இறைவன் ஒருவனே என்ற கோட்பாட்டில் எவ்வித சமரசத்திற்கும் இடமின்றி எவ்வாறு உறுதியாக உள்ளதோ அது போன்றே ‘ஒன்றே குலம்’ என்பதிலும் அது உறுதியாக உள்ளது. ஏற்றத் தாழ்வை உருவாக்கும் அனைத்து வழிகளையும் அது அடைத்து விடுகின்றது. சமயக் கோட்பாடுகளின் சந்து பொந்துகளில் ஒளிந்துகொண்டு பேதம் வளர்க்கும் அனைத்து முயற்சிகளையும் அது முறியடித்து விடுகின்றது.

“படைப்புகள் அனைத்தும் இறைவனின் குடும்பம் ஆகும்”  (நபிமொழி)

“கருப்பரை விட வெள்ளையரோ வெள்ளையரை விட கருப்பரோ சிறந்தவர்கள் அல்லர். அரேய்பியரை விட அரபி அல்லாதவரோ , அரபி அல்லாதவரை விட அரேபியரோ சிறந்தவர்கள் அல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்” என்றார் நபிகள் நாயகம் அவர்கள். (இஸ்லாம் என்பது நபிகளார் தோற்றுவித்த மதம் அல்ல என்பதும் திருக்குர்ஆன் நபிகளாரின் வார்த்தைகள் அல்ல என்பதும் அவை முழுக்க முழுக்க இறைவனின் வார்த்தைகளே என்பதும் இந்த சம்பவத்தில் இருந்து வெளிப்படும் வேறு விடயங்கள்)

Share this Article

Add a Comment

Your email address will not be published.