Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்! - Thiru Quran Malar

பெயர்தாங்கிகள் உங்களை ஏமாற்றி விடவேண்டாம்!

Share this Article

அண்மையில் திருக்குர்ஆன் நற்செய்தி மலருக்கு வந்த ஒரு வாசகர் கடிதத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விழைகிறோம்

= எப்ரல் இதழ் படித்தேன். அதிலுள்ள ஒவ்வொரு கட்டுரையும் சிந்தனையைத் தூண்டுவதாக உள்ளது. இருப்பினும் சில சந்தேகங்களும் ஏற்படுகின்றன. தொடர்ந்து தங்கள் பத்திரிகையை நான் படிக்கும்போது அவற்றிற்கு விடை கிடைக்கும் என நம்புகிறேன். அன்புகூர்ந்து பத்திரிகையை தொடர்ந்து அனுப்புங்கள். நான் ஒரு கிறிஸ்தவன். பைபிள் படி வாழவேண்டும் என்று நினைப்பவன். என் வயது எழுபது எனக்கு நபிகள் நாயகத்தை மிகவும் பிடிக்கும். காரணம், மற்றவர்களுக்கு எதை உபதேசித்தாரோ அதையே தன் சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடித்தார். இன்று இஸ்லாமிய சகோதரர்களே நபிகள் நாயகம் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். அதுதான் எனக்கு மிகவும் மனவேதனையாக இருக்கிறது. கடைசிவரை நபிகள் நாயகம் எளிமைக்கு இலக்கணமாகவே வாழ்ந்தார். – ஆர். ஆர். ராஜராஜன், கிருஷ்ணகிரி

இதற்கு முன்னரும்இது போன்று வேறு வாசகர்களும் தங்கள் உள்ளகிடக்கைகளை வெளிப்படுத்தியுள்ளார்கள்,  “ இஸ்லாம் சொல்வது எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் இன்று நடைமுறையில் முஸ்லிம்களின் நடத்தைகளைப் பார்க்கும்போது நேர் மாற்றமாக இருக்கிறதே!” 

இன்னும் பலர் இவற்றை வெளிப்படுத்த தயங்கியும் பயந்தும் உள்ளுக்குள் ஒரு வெறுப்பாக அடக்கிவைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்பது உண்மை  நாட்டில் இஸ்லாம் பற்றிய தவறான கருத்துக்கள் பரவுவதற்கு முஸ்லிம்களின் தவறான நடத்தை முக்கியமான காரணமாக இருக்கிறது.

இந்நிலை மாறவேண்டுமானால் முஸ்லிம்கள் என்று தங்களைக் கருதுபவர்கள் இஸ்லாத்துக்குப் புறம்பான போக்கை மாற்றிக்கொண்டு நேர்வழிக்கு உடனடியாகத் திரும்பியாக வேண்டும். அவர்களை நோக்கி இறைவன் கூறுகிறான்:

3:110  .மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்;. இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்;……

 ஆம் அப்படிப்பட்ட முன்மாதிரி சமுதாயம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? மக்களை நேர்வழியில் அழைத்துச் செல்லவேண்டிய பொறுப்பு தம்மீது சுமத்தப் பட்டிருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர்ந்து நமது நடைமுறைகள் பழக்கவழக்கங்கள் மூலம் இஸ்லாத்தின் அருமை பெருமைகளை மக்கள் உணருமாறு செய்யவேண்டும்.அதேவேளையில் நமது அண்ணன் ராஜராஜன் அவர்களுக்கும் மற்றும் அவரைப்போன்ற மற்ற சகோதரர்களுக்கும் இஸ்லாத்தை சரியாகப் புரிந்துகொள்ளாத பரம்பரை முஸ்லிம்களுக்கும் கீழ்கண்ட உண்மைகளை நினைவூட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்:

இஸ்லாம் என்றால் என்ன?

இஸ்லாம் என்றால் இறைவனுக்குக் கீழ்படிதல் என்று பொருள். இதன்மற்றொரு பொருள் அமைதி என்பது. அதாவது இறைவனுக்குக் கீழ்படிவதால்பெறப்படும் அமைதியின் பெயரே இஸ்லாம் என்பது.முஸ்லிம் என்றால் கீழ்படிபவன் அல்லது கீழ்படிபவள் என்று பொருள்.

அதாவது இறைவனின் வேதம் மூலமாகவும் இறைவனின் தூதர்மூலமாகவும் நமக்கு இறைவன் எதை எவுகிறானோ அதைச் செய்வதும் இறைவன் எதைவிட்டும் நம்மைத் தடுக்கிறானோ அதைச் செய்யாமல்அதிலிருந்து விலகி இருப்பதும்தான் முஸ்லிமுக்கு இலக்கணம். மாறாக ஒருதொப்பியையோ தாடியையோ வைப்பதாலோ ஒரு ஜுப்பாவையோ பைஜாமாவையோ புர்காவையோ அணிவதாலோ யாரும் முஸ்லிமாகிவிட முடியாது.

அவ்வாறே முஸ்லிம் தாய்தந்தையருக்குப் பிறந்துவிட்டாலோ அரபுமொழியிலோ உருது மொழியிலோ பெயர் வைத்துவிட்டாலோ ஒருவர் ஒருபோதும் முஸ்லிம் ஆகி விட முடியாது. நீங்கள் இயற்க்கையில்  பார்க்கின்ற பறவைகள், விலங்கினங்கள், சூரியன் சந்திரன் நட்சத்திரங்கள்  போன்ற அனைத்துமே இறைவன் விதித்த விதிகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைப் பார்க்கலாம்.

இவை அனைத்துமே முஸ்லிம்களே. உண்மையில்மனிதனைத் தவிர அனைத்துமே இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதால் முஸ்லிமாகவே இருக்கின்றன. மனிதன் எப்போது இறைவனுக்குக்கட்டுப்பட்டு நடப்பதற்கு முடிவு செய்து அதன் படி வாழ ஆரம்பிக்கின்றானோ அன்றுதான் அவன் முஸ்லிம் ஆகிறான். எப்போது இப்பண்பை  விட்டுவிடுகிறானோ அப்போது அவன் முஸ்லிம் என்ற தகுதியை இழந்தும் விடுகிறான் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இஸ்லாம் என்பது புதிய மார்க்கம் அல்ல! 

உண்மையில் ஏசு, மோசஸ், ஆப்ரஹாம் உள்ளிட்ட இறைவன் புறத்திலிருந்து வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு காலங்களில் வந்திருந்த அனைத்துத் தூதர்களும் இந்த இறைவனுக்குக் கீழ்படிதல் என்ற மார்க்கத்தையே தத்தமது மக்களுக்கு போதித்தார்கள். அதே இறைமார்க்கம் தான் இன்று இறுதித் தூதராக வந்த முஹம்மது நபி அவர்கள் மூலம் இஸ்லாம் என்ற பெயரில் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.(அனைத்து தூதர்கள் மீதும் இறை சாந்தி உண்டாவதாக!)

அனைத்து தூதர்களும் நம் தூதர்களே!

பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வந்த இறைத்தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபியவர்கள். அவருக்கு முன்னர் வந்து சென்றவர்தான் இயேசு கிருஸ்து. ஆனால் இன்றைய காலகட்டத்தில் வாழக்கூடிய நாம் அனைத்து இறைத்தூதர்களையும் ஒரேபோல ஏற்றுக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையே வேற்றுமை பாராட்டக்கூடாது.

ஒருவரை ஏற்றுக்கொண்டு மற்றவர்களை விட்டுவிடுவதோ ஒருவரை உயர்த்தி மற்றவர்களைத் தாழ்த்துவதோ அவமதிப்பதோ அறவே கூடாது. அனைத்து மக்களுமே நமது ஆதாம் ஏவாள் குடும்பத்தின் அங்கத்தினர்களே! அனைத்து இறைத்தூதர்களும் நமது குடும்பத்து அங்கத்தினர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் வழிகாட்டுவதற்காக நமது இறைவனால் அனுப்பப்பட்டவர்களே என்ற பரந்த மனப்பான்மையோடு அணுக இறைவன் நமக்குக் கட்டளையிடுகிறான்.( பார்க்க 2:285) 

இஸ்லாம் உங்கள் பிறப்புரிமை

ஆகவே நாம் அண்ணன் ராஜராஜன் அவர்களுக்கும் மற்றும் அவரைப்போன்ற மற்ற சகோதரர்களுக்கும் கூறிக் கொள்வது என்னவென்றால். இன்று சில பெயர்தாங்கி முஸ்லிம்களின் செய்கைகளைப் பார்த்துவிட்டு இஸ்லாத்தைத்  தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். அவர்களின் நடத்தையைப் பார்த்துவிட்டு வெறுப்படைந்த காரணத்தினால் அந்த வெறுப்பை இறைவன் உங்களுக்குத் தந்தருளியுள்ள மார்க்கத்தின் மீது காட்டாதீர்கள்.

இம்மார்க்கத்தைப்  பின்பற்றுவதை விட்டும் உங்களை நீங்களே தடுத்துக் கொள்ளாதீர்கள் இப்பூமியில் இறைவனின் மற்ற அருட்கொடைகளை அனுபவிப்பது எவ்வாறு உங்கள் உரிமையோ அவ்வாறே இஸ்லாத்தைப் பின்பற்றுவதும் உங்கள் உரிமை! மட்டுமல்ல உங்கள் கடமையும்தான் என்பதை மறந்துவிடாதீர்கள்! உங்களைப் படைத்து பரிபாலித்து வருபவனுக்கு நீங்கள் நன்றிக்கடன் செய்யவேண்டாமா? அந்த நன்றிக்கடனை எவ்வாறு நிறைவேற்றுவது.? அவனுக்குக் கீழ்படிதல் மூலம்தானே!

அந்தக் கீழ்படியும் பண்புக்குப் பெயர்தான் அரபு மொழியில் இஸ்லாம் எனப்படும். இறைவன் அளவில்லாமல் வழங்கிவரும் அருட்கொடைகளையும் அனுபவித்துவிட்டு அவன் தந்த மார்க்கத்தைப் பின்பற்றாவிட்டால் இழப்பு உங்களுக்குத்தான்! வல்ல இறைவன் தன் இறுதி மறையில் அழுத்தம் திருத்தமாக அறிவிப்பும் செய்துவிட்டான்.

3:85    .இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது. மேலும் அவர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில்தான் இருப்பார்.

உதாரணமாக, நீர் என்பது இறைவன் அனைத்து மக்களுக்காகவும் தந்துள்ள அருட்கொடை சிலர் பாலில் கலப்படம் செய்வதற்க்காகவோ கஞ்சாவைப் பயிரிடுவதற்காகவோ நீரை பயன்படுத்துகிறார்கள் என்ற காரணத்தைக் கூறி நீரே குடிக்காமல் உங்கள் தாகத்தை அடக்கிக் கொள்வீர்களா? உங்களால் உயிர் வாழத்தான் முடியுமா? உங்கள் தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதற்கு உங்களுக்கு உரிமையும் கடமையும்  உள்ளது என்பதை மறுக்க மாட்டீர்கள்தானே!

அதேபோல்தான் உங்கள் இறைவன் உங்களின் தேவைக்காக இந்த நேர்வழியைத் தனது இறுதித் தூதர் மூலமாக அருளியுள்ளான் இவ்வழியைப் பின்பற்றி வாழ்ந்தால் சொர்க்கம் இல்லையேல் நரகம் என்று இறைவன் விதித்திருக்கும் போது சில பெயர்தாங்கிகள் இஸ்லாத்தைப் பின்பற்றவில்லை என்பதற்காக இறைவனின் மார்க்கத்தை உதாசீனம் செய்து விடுவீர்களா?

ஆக, நாம் ஒவ்வொருவரும் நமக்கு மோட்சம் கிடைக்க வேண்டும் என்று விரும்பினால் இறைவன் நமது காலட்டதிற்காக அனுப்பப்பட்ட அவனது  தூதர் மூலமாக மறு அறிமுகம் செய்யப்பட்ட இஸ்லாம் என்ற பாதையில் நமது பூர்வீகம், இனம், மொழி, நாடு போன்ற வேற்றுமைகள் அனைத்தையும் மறந்துவிட்டு ஓரணியில் அணிவகுத்தே ஆகவேண்டும்.
இறுதியாக தவறான போக்கில் தொடரும் பெயர்தாங்கி முஸ்லிம்களுக்கு நபிகளார் விடுக்கும் எச்சரிக்கையை நினைவூட்டுகின்றோம்.

“ என் உயிரைத் தன் கைவசம் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! நீங்கள் நல்லதை எவுங்கள். தீயதைத் தடுங்கள். இல்லையெனில் உங்கள் மீது தனது தண்டனையை அல்லாஹ் இறக்கி வைப்பான். பின் அவனை அழைத்தாலும் அவன் உங்களுக்கு பதில் கூறமாட்டான் (அறிவிப்பு : ஹுதைஃபா(ரலி) நூல் : திர்மிதி): 

Share this Article

Add a Comment

Your email address will not be published.