Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
தேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை! - Thiru Quran Malar

தேவை ஒரு தெளிவான கடவுள் கொள்கை!

Share this Article

கடவுளைப் பற்றியும் மறுமை வாழ்க்கை பற்றியும் முரண்பாடுகள் இல்லாத  தெளிவான கொள்கை இருந்தால் மட்டுமே மனிதன் கடவுள் நம்பிக்கையில் நிலைத்திருப்பான். பாவங்களில் இருந்து விலகி இருப்பான். திருக்குர்ஆன் அதற்கு அறிவுபூர்வமாக வழிகாட்டுகிறது. அதனால் மனிதனுக்கு ஆர்வமும் ஈடுபாடும் உண்டாகிறது. கடவுளும் மறுமையும் கண்ணால் கண்டு நம்பவேண்டிய விஷயங்கள் அல்ல. அவற்றைப் பகுத்துதான் அறிய வேண்டும். இதற்கு மிகப்பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவையில்லை.

நம்மைச்சுற்றியுள்ள  படைப்பினங்களைப் பற்றி சற்று சிந்தித்தாலே போதும். அவ்வாறுதான் ஆராயத் தூண்டுகிறது இறைவனின் இறுதி வேதம் திருக்குர்ஆன்.

12:105இன்னும் வானங்களிலும் பூமியிலும் எத்தனையோ அத்தாட்சிகள் இருக்கின்றன, ஆனால் அவற்றை அவர்கள் புறக்கணித்தவர்களாகவே அவற்றினருகே நடந்து செல்கின்றனர்.

படைத்தவனின் உள்ளமையைப் பற்றியும் அவனது ஆற்றல்களையும் பற்றி விளங்க அன்றாடம் நம்மைச் சுற்றி நடக்கின்ற நிகழ்வுகளின் பக்கம் சற்று நம் கவனத்தைச் செலுத்தினாலே போதும்.

2:164நிச்சயமாக வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமியை இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு (அல்லாஹ்வுடைய வல்லமையையும், கருணையையும் எடுத்துக் காட்டும்) சான்றுகள் உள்ளன.

(அல்லாஹ் என்றால் வணங்குவதற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)

42:11வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே; உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை; அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன்.

16:12இன்னும் அவனே இரவையும், பகலையும், சூரியனையும்,  சந்திரனையும் உங்க(ள் நலன்க)ளுக்கு வசப்படுத்திக் கொடுத்துள்ளான்; அவ்வாறே நட்சத்திரங்களும் அவன் கட்டளைப் படியே வசப்படுத்தப்பட்டுள்ளன – நிச்சயமாக இதிலும் ஆய்ந்தறியக் கூடிய மக்கள் கூட்டத்தாருக்கு(த் தக்க)அத்தாட்சிகள் இருக்கின்றன.

இம்மாபெரும் பிரபஞ்சத்தை படைத்தவனும் பரிபாலிப்பவனும் இயக்குபவனும் அந்த ஏக இறைவனே. அவனையல்லவா நீங்கள் வணங்கவேண்டும்? படைத்தவனை விட்டுவிட்டு போலி தெய்வங்களை வணங்குவோரைப் பார்த்து அவன் கூறுகிறான்:

30:40அல்லாஹ்தான் உங்களைப் படைத்தான்; பின் உங்களுக்கு உணவு வசதிகளை அளித்தான்; அவனே பின்னர் உங்களை மரிக்கச் செய்கிறான். பிறகு அவனே உங்களை உயிர்ப்பிப்பான் -இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்யக் கூடியதாக உங்கள் இணை தெய்வங்கள் இருக்கிறதா? அல்லாஹ் மிகவும் தூயவன்; அவர்கள் இணை வைப்பதை விட்டும் மிகவும் உயர்ந்தவன்.  

குழந்தைகளுக்கும் பாமரர்களுக்கும்  கடவுளைப் பற்றி கற்றுக் கொடுப்பது எப்படி?. 

குழந்தைகளும் பாமரர்களும் கடவுளைப் பற்றி புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே சிலைகளையும் உருவங்களையும் கற்பிக்கிறோம் என்பார் சிலர். ஆனால் திருக்குர்ஆன் மிக எளிதாக இந்தப் பிரச்சினையைத்  தீர்க்க வழிகாட்டுகிறது:

43:9(நபியே!) நீர் அவர்களிடம்: “வானங்களையும்,  பூமியையும்  படைத்தவன்  யார்?” என்று கேட்டால், “யாவரையும் மிகைத்தவனும், எல்லாவற்றையும் அறிந்தோனுமாகிய அவனே அவற்றை படைத்தான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறுவார்கள். 

எந்த ஒரு மனிதனிடமும் இக்கேள்வியைக் கேட்டால் அவனிடமிருந்து இயற்கையாகவே வரக்கூடிய பதில் இது. அவரவர் மொழிகளில் அந்த உண்மை இறைவனை  என்ன பெயரில்  குறிப்பிடுவார்களோ அதைத்தான் அவர்கள் பதிலாகச் சொல்வார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்த்து இறைவன் கூறுகிறான்:

43:87மேலும், அவர்களிடம் யார் அவர்களைப் படைத்தது என்று நீர் கேட்டால் “அல்லாஹ்” என்றே அவர்கள் நிச்சயமாக கூறுவார்கள்; அவ்வாறிக்கும் போது (அவனைவிட்டு) அவர்கள் எங்கு திருப்பப்படுகிறார்கள்?

ஏக இறைவனைக் குறிப்பிட அரபு மக்கள் பயன்படுத்தும் வார்த்தையே ‘அல்லாஹ்” என்பது. “வணங்குவதற்குத்  தகுதிவாய்ந்த ஒரே இறைவன்” என்பதே இதன் பொருள் என்பதை மேலே கண்டோம்.

29:63இன்னும், அவர்களிடம்: ”வானத்திலிருந்து நீரை இறக்கி, பிறகு அதனைக் கொண்டு இப்பூமியை – அது (காய்ந்து) மரித்தபின்உயிர்ப்பிப்பவன் யார்?” என்று நீர் கேட்பீராகில்: “அல்லாஹ்” என்றே இவர்கள் திட்டமாகக் கூறுவார்கள்; (அதற்கு நீர்) “-புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது” என்று கூறுவீராக; எனினும் இவர்களில் பெரும்பாலோர் அறிந்துணர மாட்டார்கள்.  

அந்த இறைவன் எப்படிப்பட்டவன்?

படைத்தவனைப் பற்றிய இலக்கணங்களையும் அவனது தன்மைகளையும் தெளிவுபடுத்துகிறது திருக்குர்ஆன்:  

112:1-4 நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் – அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”

இடைத் தரகர்கள் தேவை இல்லை  

2:186     .(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; ”நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;. அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;. என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்” என்று கூறுவீராக.

கடவுளுக்கு எதுவும் தேவையில்லை என்ற உண்மையை மனிதன் புரிந்து கொண்டால் அவன் வழிபாட்டுத் தலங்களில் உணவுப் பொருட்களைக் கொட்டி வீணடிக்க மாட்டான் இதைத் தெளிவாக விளங்கிக் கொண்டால் அவனை யாரும் மதத்தின் அல்லது கடவுளின் பெயர் சொல்லி ஏமாற்ற முடியாது. வழிபாட்டுத் தலங்களில் உண்டியல்களுக்கும் காணிக்கைகளுக்கும் வேலை இருக்காது.! 

அவ்விறைவனுக்கு மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று கீழேயும் சந்ததிகள் கிடையாது, தந்தை, பாட்டன் கொள்ளுப் பாட்டன் என்று மேலேயும் சந்ததிகள் கிடையாது. கடவுளுக்குப் பிறப்பு என்பதும்  இறப்பு என்பதும் கிடையாது. அவன் ஆதியும் அந்தமும் இல்லாதவன். அவன் திடீரென உருவானவன் அல்ல. அவன் என்றென்றும் வாழ்பவன்.

கடவுளுக்கு சந்ததி இருக்க முடியாது என்று உணரும் மக்களிடம் யாரும் வந்து தான் கடவுளின் அவதாரம் என்றோ தான் கடவுளின் பிள்ளை அல்லது சந்ததி என்றோ கூறி ஏமாற்ற முடியாது. இறைவனை நேரடியாக அழைத்துப் பிரார்த்திக்கலாம் என்று நம்பும்போது இடைத்தரகர்களும் அவர்களால் பரப்பப்படும் மூடநம்பிக்கைகளும் கடவுள் பெயரால் அவர்கள் நடத்தும் கொள்ளைகளும் ஒழிகின்றன.

Share this Article

Add a Comment

Your email address will not be published.