நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்
நபிகளாரைப் பற்றி இயேசு நாதர்(இருவர் மீதும் இறைசாந்தி உண்டாகுக!)இயேசு தனக்குப் பின்னர் வரப் போகின்ற இறுதித் தூதுவர் பற்றி முன்னறிவிப்பு செய்ததைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துக் கூறுகிறான்:
மேலும், மர்யமின் குமாரர் ஈஸா ”இஸ்ராயீல் மக்களே! எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும். எனக்குப் பின்னர் வரவிருக்கும் ‘அஹமது’ என்னும் பெயருடைய தூதரைப் பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்” என்று கூறிய வேளையை (நபியே! நீர் நினைவு கூர்வீராக!) எனினும், அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளை அவர் கொண்டு வந்த போது, அவர்கள் ”இது தெளிவான சூனியமாகும்” என்று கூறினார்கள். (திருக்குர்ஆன் 61:6)
பைபிளின் பழைய ஏற்பாட்டிலும் – புதிய ஏற்பாட்டிலும் எதிர்காலத் தூதுவர் பற்றிய தீர்க்கதரிசன வசனங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களைப் பற்றிய பல்வேறு முன்னறிவிப்புகள் (தீர்க்கதரிசன உரைகள்) பழைய ஏற்பாட்டில் உள்ளன. இந்த தீர்க்கதரிசன உரைகள் இறைவனால் மோஸேவுக்கு அருளப்படுகின்றன. மோஸேயைப் போலவே ஒரு மார்க்க நிறுவனரை (தலைவரை) – நம்பிக்கையாளரின் சமூகத்திற்கு உரிய அழகிய எடுத்துக் காட்டை இஸ்ரவேலவர்களின் சகோதர சமுதாயத்திலிருந்து எழுப்பச் செய்வேன் என இறைவன் கூறுகிறான்:
உன்னைப் போலொரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக உங்களது சகோதரரிலிருந்து எழும்பப்பண்ணி எம் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன். நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர் சொல்வார். எம் நாமத்தினாலே அவர் சொல்லும் என் வார்த்தைகளுக்கு செவி கொடாதவன் எவனோ அவனை நான் விசாரிப்பேன். (பைபிள்: 18 :18-20)
இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றோடு நற்தொடர்பு உள்ள வர்கள் (அந்த வசனங்கள்) அந்த இறைத்தூதரைத் தவிர வேறு எவருக்கும் பொறுத்தமாக இருக்காது என்பதை எளிதாக உணர்வார்கள்.முஹம்மது நபி (ஸல்) அவர்கள் மோஸேயைப் போல் சாதாரணமாகப் பெற்றோருக்குப் பிறந்து திருமண முடித்து நம்பிக்கையாளர்களின் சமூகத்தை அமைத்து, மிகப் பெரிய அளவில் சடடங்களை நிறுவி இயற்கையான மரணத்தை அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இயேசுவும் இது போன்ற ஒரு திருத்தூதர் பற்றி முன்னறிவிப்புச் செய்வதைக் கவனிக்கலாம்.
நான் பிதாவை வேண்டிக் கொள்வேன் – அவர் என்றென்றைக்கும் உங்களுடன் கூட இருக்கும்படி சத்திய ஆவியாகிய வேறு ஒரு தேற்றறவாளனை அவர் உங்களுக்கு தந்தருள்வார்!
சத்திய ஆவி பற்றியும் அதன் பணிகள் பற்றியும் யோவான், குறிப்பாக விவரித்துள்ளதையும் கவனிப்போம்.
சத்திய ஆவியாகிய அவர் வரும் போது சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார். அவர் தம்முடைய சுயமாகப் பேசாமல் தாம் கேள்விப்பட்டவைகளை யாவையும் சொல்லி வரப் போகிறவைகளையும் அறிவிப்பார். அவர் என்னுடையதை எடுத்து உங்களுக்கு அறிவிப்பதால் என்னை மகிமைப்படுத்துவார், (யோவான்:16:13-14)
இந்த முன்னறிவிப்பின் விவரங்கள் பின்னர் வரப் போகிறவரைப் பற்றிய குறிப்பே என்பதை ஆராய்வோர் அறியலாம்
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். நான் போகிறது உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். நான் போகாதிருந்தால் தேற்றறவாளன் உங்களிடத்திலே வாரார். (யோவான் : 16:7)
தேற்றறரவாளர் என்பவருக்கு உரிய குணக்கூறுகள் எவை என்பதை தீர்க்கதரிசனங்களில் இருந்து நாம் காணலாம்.
1. அவர் (தேற்றவாளர்) இயேசு இவ்வுலகத்தை விட்டுப் போகாமல் (அவர்) வாரார்!
2. அவர் நம்பிக்கையாளர்களிடம் நிரந்தரமாகக் குடியிருப்பார்.
3. இயேசுவை அவர் பெருமைப்படுத்துவார்
4. இறைவனிடமிருந்து கேட்ட செய்திகளையே அவர் பேசுவார்.
இந்த குணமேன்மைகள் இறைத்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு மிகப் பொருத்தமாக இருப்பதை அன்னாரது வாழ்வைப் படிப்பவர்கள் புரிந்து கொள்ளலாம்.