Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி! - Thiru Quran Malar

சுயமரியாதையை மீட்டெடுக்க ஒரே வழி!

Share this Article

தினமும் ஐவேளைத் தொழ வேண்டும் என்று தூய இறைமார்க்கமாம் இஸ்லாத்தில்  வலியுறுத்தப்பட்டுள்ளது. இத்தொழுகையில் மனிதன் நின்று, குனிந்து, சிரம் பணிந்து, அமர்ந்து படைத்த இறைவனைத்   துதிக்கிறான். இறைவன் மிகப் பெரியவன்; நான் அவனது கட்டளைக்குப் கட்டுப்படவேண்டிய சிறியவன் என்ற பயிற்சியை மனிதன் ,இதன்   மூலம் பெறுகிறான்.

இதனால் மனித சமுதாயத்திற்குக் கிடைக்கும் நன்மைகள் என்ன?

ஏராளமாக உள்ளன. மனிதன் மானத்துடனும், ரோஷத்துடனும்,  சுயமரியாதையை இழக்காமலும் வாழவேண்டும் என்று அறிவுடையோர் எதிர்பார்க்கின்றனர். இந்த சுயமரியாதைக்காகவே பல இயக்கங்கள் தோன்றியுள்ளன.  மனிதனைவிட எல்லாவகையிலும் குறைந்த நிலையிலுள்ள கற்கள், விலங்குகள்,  பறவைகள் ஆகாயம், சூரியன், சந்திரன், நெருப்பு, ஆகியவற்றுக்கு முன்னால் மனிதன் மண்டியிட்டு வணங்கும் போது சுயமரியாதையை இழந்து விடுகிறான்.

தன்னைவிட தாழந்தவற்றுக்கு முன் இவன் தாழ்ந்து விடுகிறான். தனக்குச் சமமான, தனனைப்போலவே ஆசாபாசங்கள் உள்ள – தன்னைப்போலவே பலவீனங்கள் நிறைந்த – மலஜலத்தைச் சுமந்திருக்கக் கூடிய இன்னொரு மனிதன் முன்னால் மண்டியிடும்போதும் மனிதன் தனது சுயமரியாதையை இழந்து விடுகிறான்.

இவற்றை எதிர்த்துப் பிரச்சாரம் செய்த சுயமரியாதைக்காரர்களும் கூட இன்னொரு வடிவில் சுயமரியாதையை இழந்து நிற்கும் பரிதாப நிலையைப் பார்க்கின்றோம். கல்லுக்குப் பூஜை செய்யலாமா? அவற்றால் அதை உணர முடியுமா? என்றெல்லாம் கேள்வி கேட்டவர்கள் இன்னொரு கல்லுக்கு – பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கின்றனர். என்றோ இறந்துவிட்ட பெரியார் இதை உணர முடியுமா?  என்பதைச் சிந்திக்க மறந்து விட்டனர். சிலைகள்தான் மாறியுள்ளனவேத் தவிர சிலை வணக்கம் மாறவில்லை.

அவ்வழி வந்த திராவிட கட்சிகளுக்குள் காலில் விழும் கலாசாரம் நாளுக்கு நாள் போட்டிப்போட்டுக் கொண்டு வளர்ந்து வருவதும் கண்கூடு. ஆக அனைவரும் சுயமரியாதையை வந்த விலைக்கு விற்றுக் கொண்டுதான் உள்ளனர். விற்கும் சந்தைதான் மாறியுள்ளதேத் தவிர விற்பனை நின்றதாகத் தெரியவில்லை.இப்போது உலகில் காணும் மற்ற வழிபாட்டு முறைகளோடு  உண்மை இறைமார்க்கம் கூறும் ஐவேளைத் தொழுகை முறையை ஒப்பிட்டுப் பாருங்கள்:    

வணக்கத்துக்கு உரியவன் படைத்த இறைவனைத்தவிர வேறு யாரும் இல்லை என்ற மூல மந்திரத்தைப் பின்பற்றி ஐங்காலத் தொழுகைகளை வீட்டிலோ அல்லது பள்ளிவாசல்களிலோ நிறைவேற்றும்போது –

படைத்தவன் முன்னால்  ஐவேளையும் நின்று வணங்கும்போது  இறைவனது வல்லமையை நினைவு கூர்ந்து அவனைச் போற்றிப் புகழ்வதால் மனிதனுக்கு உண்மையான இறையச்சமும் பக்தியும் ஏற்படுகிறது அதனால் அவன் ஒரு தொழுகைக்கும் மறு தொழுகைக்கும் இடையே பாவம் செய்ய முற்பட மாட்டான். இதனால் பாவங்கள் அற்ற ஆரோக்கியமான சமூகம் உருவாகிறது.

படைத்த இறைவனை நேரடியாக வணங்குவதால் மிகப்பெரிய தன்னிறைவும் மனஉறுதியும் நமக்குள் ஏற்படுகிறது. சந்தேகங்களுக்கோ வீண் சஞ்சலங்களுக்கோ அங்கு இடமில்லை.

இடைதரகர்களுக்கு அங்கு வேலை இல்லை.–அதனால் கடவுளின்  பெயரால் நடத்தப்படும் சுரண்டல்களுக்கும் மோசடிகளுக்கும் பாலியல் குற்றங்களுக்கும் அங்கு இடமில்லை.

உயிரும் உணர்வுமற்ற பொருட்களைக் கடவுள் என்று நம்பி ஏமாறுதலும் பொருட்செலவும் வீண் அலைச்சல்களும் நீண்ட வரிசைகளில் காத்திருப்புகளும் அங்கு இல்லை.  –

மனிதர்களும் அனைவரும் இறைவன் முன்பு சமம் என்ற கொள்கை என்ற அடிப்படையில் கூட்டுத் தொழுகைகளில் தோளோடு தோள் சேர்ந்து அணியணியாக நிற்கும் போது நம்மிடையே சமத்துவமும் சகோதரத்துவமும் ஈடிணையற்ற முறையில் வளர்கிறது. சமூகத்தில் தீண்டாமையும் ஜாதிகளும் ஒழிந்து போகின்றன.

படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதால் மனிதன் மனிதனுக்கு முன்னாலோ அவனுக்கு கீழானவற்றுக்கு முன்னாலோ தலை சாய்த்தல் என்பது அறவே சமூகத்திலிருந்து ஒழிக்கப்படுகிறது. சுயமரியாதை பேணும்  சமுதாயம் அங்கு உடலெடுத்து ஓங்கி வளர்கிறது.

தொழுகைகளில் வரிசைகளில் நிற்கும்போது பாதங்கள் முன்பின் என்றிராமல் சீராக அமைய வேண்டும் அவ்வாறு இல்லாவிட்டால் விட்டால் உங்கள் தொழுகைகள் ஏற்றுக்கொள்ளப் படமாட்டாது என்பது நபிகளாரின் கூற்று. ஏழை பணக்காரன் அரசன், ஆண்டி படித்தோன், பாமரன் என அனைவரும் ஒரே வரிசையில் சீராக இடைவெளியின்றி ஐவேளையும் நின்று பழகும்போது மனிதர்களுக்கிடையே நிலவும் தாழ்வுமனப்பான்மை, உயர்வுமனப்பான்மை போன்றவை அறவே துடைத்து எறியப்படுகின்றன.

இன்னும் இவைபோன்ற பற்பல நன்மைகளை தாங்கி நிற்கிறது ஐவேளைத் தொழுகை!.

நிச்சயமாகத் தொழுகைத் மானக்கேடானவற்றை விட்டும் தீயவைகளை விட்டும் தடுக்கின்றது.’ (அல்-குர்ஆன் 29:45;).

Share this Article

Add a Comment

Your email address will not be published.