Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
நாட்டுப்பற்று என்றால் என்ன? - Thiru Quran Malar

நாட்டுப்பற்று என்றால் என்ன?

Share this Article

வெள்ளைய ஆதிக்க சக்திகளிடம் இருந்து போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அருமையை அப்போதைய தலைமுறை உணர்ந்திருந்த அளவு இன்றைய தலைமுறை உணரும் என்று எதிர்பார்ப்பதும் தவறே! அதற்காக இவர்களை நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று கூற முடியாது.

அதை இவர்கள் வெளிப்படுத்தாவிட்டாலும் நாட்டுப்பற்று என்ற ஒன்று அனைவரின் உள்ளத்திலும் இயல்பாகவே இருக்கக் கூடிய ஒன்று. அது படைத்த இறைவன் விதைத்த ஒன்றாகத்தான் இருக்க வேண்டும்.

பல வேளைகளில் அது இனம் மொழி மதம் அல்லது கொள்கை போன்றவற்றின் மீது உள்ள பற்றினாலும் தாக்கத்தினாலும் மாற்றங்களுக்கு உள்ளாகிறது என்பதும் உண்மை.

மட்டுமல்ல பொருளாதாரம் வாழ்க்கை வசதிகள், வறுமை, செழிப்பு, உறவு, போன்ற காரணிகளும் நாட்டுப் பற்றின் மீது நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ தாக்கத்தை உண்டுபண்ணுகின்றன.

மனிதர்களுக்கு மத்தியில் பிரச்சினைகள் உண்டாக இது ஒரு காரணமே அல்ல. தேசப்பற்றின் கூடுதல் அல்லது குறைவு என்பது புறக் காரணிகளைப் பொறுத்து அமைகிறது.

உதாரணமாக பாலைவனத்தில் பிறந்த ஒரு மனிதன் வறுமை பாதிக்கும்போது தான் பிறந்த பூமி என்றும் நாட்டுப்பற்று என்றும் கூறிக்கொண்டு வாழ்வாதாரம் தேடி அண்டை நாடுகளில் அடைக்கலம் தேடாமலோ அல்லது குடிபெயராமலோ இருப்பதில்லை.

அது போலவே பயம், ஆபத்து அல்லது வறுமை போன்றவை பாதிக்கும்போதும் மனிதன் தன் நாட்டை துறக்கவே செய்கிறான்!ஆனால் இன்று ஆதிக்க சக்திகள் தங்கள் அடக்குமுறையால் நலிந்தோர்களை அடக்கியாளும்போது அதனால்  பாதிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து தப்பிக்க வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்தால் உடனே அவர்களை மிக எளிதாக தேசத்துரோகிகள் என்று முத்திரைகுத்தி விடுகிறார்கள்.

ஊடகங்கள் மூலம் அவர்களை பெரும் குற்றவாளிகளாக சித்திரிக்கவும் செய்கிறார்கள். அதேவேளையில் அந்த ஆதிக்கசக்தியாளர்களும் அவர்களின் ஆதரவாளர்களும் தங்கள் சொந்த விஷயம் என்று வரும்போது வாழ்க்கை வசதிகள், கல்வி மற்றும்  வேலைவாய்ப்பு வசதிகள் தேடி தங்கள் குழந்தைகளை நாட்டுப்பற்றைக் காரணம் காட்டி வெளிநாடுகளுக்கு அனுப்பாமல் இருப்பதில்லை.

தாய்நாட்டில் சம்பாதித்த செல்வங்களை வெளிநாடுகளில் முதலீடு செய்யவும் அங்கு வங்கிகளில் சேமிக்கவும் இவர்கள் தவறுவதும் இல்லை. இது இவர்களின் இரட்டை நிலை!ஆக, இன்று ‘நாட்டுப்பற்று’ அல்லது  ‘தேசத்துரோகம்’ போன்ற பதங்கள்  சந்தர்பங்களுக்கு ஏற்றவாறு அரசியல் நடத்த கையாளப் படுவதைக் காணலாம்.

ஆனால் உண்மையில் நாட்டுப் பற்று என்பது என்ன?பொதுமக்கள் காணும்படியாக நிலத்தை முத்தமிடுவதும், சில கவிஞர்கள் இயற்றிய பாடல்களை உருவிடுவதும், தேசத்தின் கொடியை பலர் காண வணங்குவதும் எல்லாம் நாட்டுப்பற்றாக சித்தரிக்கப் படுகிறது.

இவற்றில் எந்த அளவுக்கு ஆத்மார்த்தம் உள்ளது என்பதையும் இவற்றில் பெரும்பாலானவை  புறக்கவர்ச்சிக்காக செய்யப்படுபவையே என்பதையும் நாம் அறிந்தே இருக்கிறோம்.உண்மை நாட்டுப்பற்று என்பது நாட்டின் வரைபடத்தையோ பூகோள அமைப்பையோ நேசிப்பதைவிட அந்நாட்டைச் சேர்ந்த மக்களை நேசிப்பதுதான்.

நாட்டு மக்களின் நலன் கருதி அவர்களுக்கு தன்னால் முடிந்த சேவைகளை ஆத்மார்த்தமாக செய்வதும் அவர்களோடு இணக்கமாக வாழ்வதும் அவர்களுக்காக உழைப்பதும்தான் உண்மையான தேசப்பற்று.

நாட்டில் ஆரோக்கியம் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றின் வளர்ச்சிக்கு தன்னலம் கருதாது உழைப்பதும் அவர்களை ஒரு பண்பாடு மிக்க குடிமக்களாக வார்த்தெடுக்க தன்னால் ஆன ஒத்தாசைகளை செய்வதும் நாட்டுப் பற்றின் உண்மை அடையாளங்களாகும். 

நாடு ஆபத்துக்கோ வறுமைக்கோ பஞ்சத்துக்கோ அநியாயத்துக்கோ உள்ளாகும்போது உயிரை துச்சமாகக் கருதி நாட்டை விட்டு ஓடாமல் அங்கேயே நிலைத்து நின்று நாட்டின் இடுக்கண்ணை விடுவிக்கப் பாடுபடுவது  என்பது உண்மை நாட்டுப்பற்றின் உச்சகட்டம் எனலாம்!இப்படிப்பட்ட ஆத்மார்த்தமான நாட்டுப்பற்று மனித உள்ளத்தில் வரவேண்டுமானால் அங்கு இறைநம்பிக்கையும் இறையச்சமும் அடிப்படைத்  தேவைகளாகும்.

நம்மைப் படைத்த இறைவன் நமக்கு கற்றுத்தரும் வாழ்க்கைத் திட்டத்திற்கே அரபி மொழியில் இஸ்லாம் என்று வழங்கப் படுகிறது. அதை வாழ்க்கை நெறியாக ஏற்றவர்கள் அவர்கள் வாழும் நாட்டை அதாவது நாட்டு மக்களை நேசிக்காமல் இருக்கமுடியாது. 


இன, மொழி, நிற, மத வேற்றுமைகளை மறந்து மனிதகுலம் அனைத்தையும் தங்கள் சகோதரர்களாக பாவிக்கவேண்டும் என்பது இங்கு இறைவன் கற்பிக்கும் அடிப்படைப் பாடமாகும்.

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக்  கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (திருக்குர்ஆன் 49: 13)

மேலும் நாட்டு மக்களை நேசிப்பதை வழிபாடாகக் கற்பிக்கிறது இஸ்லாம்.


“மண்ணிலுள்ள மனிதர்களை நேசித்தால் விண்ணில் உள்ள இறைவன் உங்களை நேசிப்பான்” என்பதும் “மனிதர்கள் மீது கருணை காட்டாதவர் இறைவனால் கருணை காட்டப்பட மாட்டார்” என்பதும் நபிமொழிகள்.

இஸ்லாம் முன்வைக்கும் மறுமை நம்பிக்கை – அதாவது இறைவனின் கட்டளைகளை பூமியில் நடப்பாக்க செய்யப்படும் எந்த ஒரு செயலும் வீண்போவதில்லை.

அவற்றிற்கு இறைவனிடம் மறுமையில் அதாவது சொர்க்க வாழ்வில் நற்கூலி உண்டு என்ற உறுதியான நம்பிக்கை – இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்பவர்களுக்கு அலாதியான துணிச்சலையும் வீரத்தையும் தருகிறது.

நாட்டு மக்களை அநியாயத்தில் இருந்தும் அக்கிரமங்களில் இருந்தும் அந்நியர்களின் தாக்குதல்களில் இருந்தும் பாதுகாக்க சொந்த உயிரையும் உடமைகளையும் அர்பணிக்க மாபெரும் உந்துசக்தியாக இந்த நம்பிக்கை செயல்படுகிறது. இதை மிஞ்சும் நாட்டுப்பற்றை எங்கேனும் காணமுடியுமா?

Share this Article

Add a Comment

Your email address will not be published.