பரீட்சையே வாழ்க்கை என்றிரு மனமே!
நாம் வாழ்ந்துக்கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை ஒரு #பரீட்சை என்று உணர்பவர்கள் அனாவசியமான மன உளைச்ச்சல்களில் இருந்து பாதுகாக்கப்படுகிறார்கள். வாழ்க்கையில் தோல்விகளையும் இழப்புகளையும் கண்டு துவண்டு போவதில்லை, தற்கொலைகளில் தஞ்சம் புகுவதில்லை.
எந்த மாதிரியான சூழ்நிலைகள் எதிர்வந்தபோதும் சுதாரித்துக்கொண்டு முன்னேறுகிறார்கள். பள்ளிக் கூடங்களில் பயிற்றுவிக்கப்பட வேண்டிய அடிப்படை பாடங்களில் ஒன்று இது. ஆனால் பகுத்தறிவு என்ற பெயரில் அறவே நிரூபிக்கப்படாத அறிவியல் ஊகங்களைக் கோர்வையாக்கி படைத்தவனை மறுக்கும் பாடங்களைத்தான் இன்று கல்விக் கூடங்களில் போதிக்கிறார்கள்.
அதன் காரணமாக தன்னம்பிக்கை அறவே இல்லாத மாணவர்களாக பலர் வளர்கிறார்கள். சிலர் ஒன்றோ இரண்டோ மதிப்பெண் குறைந்தாலும் கூட தற்கொலைகளில் தஞ்சம் புகுவதையும் நாம் கண்டு வருகிறோம். இனியாவது உருப்படியாக பகுத்தறிவை பயன்படுத்தி நம் தலைமுறைகளைக் காக்க முயற்சிப்போம்.
வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையே என்பதை அறிந்து கொள்ள பெரும்பெரும் ஆராய்ச்சிகள் எதுவும் தேவையில்லை.
ஆறடி மனிதர்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள மிகமிக அற்பமான பகுத்தறிவு கொண்டு சிந்தித்தாலே அனைத்தும் விளங்கும். நாமாக நாம் இங்கு வரவில்லை என்பது உண்மை!நமது, நிறம், மொழி, நாடு, தாய், தந்தை, உறவுகள் இவை எவையும் நாமாகத் தேர்ந்தெடுத்துக்கொண்டு அமைந்தவை அல்ல என்பதும் உண்மை!
நமது என்று நாம் சொல்லிக்கொள்ளும் உடல், பொருள், ஆவி என இவை எவையும் நமது முழுமையான கட்டுப்பாட்டுக்குள் இல்லை என்பதும் உண்மை! இவற்றுள் ஆவி அல்லது உயிர் என்பது பறிக்கப்பட்டால் மற்ற அனைத்தும் நம்மைக் கைவிட்டுப்போகும் நிலைமை உள்ளதை அறிவோம். உடல் என்ற கூட்டுக்குள் நாம் வந்ததும் இதை விட்டுப் பிரிவதும் நம்மைக் கேட்டு நடப்பவை அல்ல என்பதையும் அறிவோம்.
ஒரு அற்ப இந்திரியத் துளியில் இருந்து தொடங்கி படிப்படியாக பல கட்டங்களைக் கடந்து கருவாக உருவாகி கருவறையில் சொகுசாக வளர்ந்து உரிய பக்குவம் அடைந்த பின் குழந்தையாக வெளிவந்து தொடர்கிறது நம் ஒவ்வொருவரதும் வாழ்க்கைப் பயணம்! ஆக, எதுவுமே நம் கட்டுப்பாட்டில் இல்லாதவை.
இவற்றோடு இவற்றின் பின்னணியில் உள்ள இப்பிரபஞ்சத்தின் விசாலமும் நுட்பமும் குறையில்லா இயக்கமும் அதற்குப் பின் உள்ள பலவும் இவற்றைப் படைத்து பரிபாலித்து வருபவனின் வல்லமையையும் நுண்ணறிவையும் அதிபக்குவமான திட்டமிடுதலையும் பறைசாற்றி நிற்பதை நமக்கு உணர்த்தவில்லையா?.
திருமறை குர்ஆனில் #இறைவன் கூறுகிறான்:
2:164 .நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்; இரவும்,பகலும் மாறி, மாறி வந்து கொண்டிருப்பதிலும்;, மனிதர்களுக்குப் பயன் தருவதைக் கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும்; வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக பூமி இறந்த பின் அதை உயிர்ப்பிப்பதிலும்; அதன் மூலம் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி, மாறி வீசச் செய்வதிலும்; வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் – சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.
(அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு இப்பிரபஞ்சம் முழுவதுமே நமக்காக இயங்கிக்கொண்டிருக்கும் போது நாம் வீணுக்காகப் படைக்கப் பட்டிருப்போமா? இதையே #இறைவன் தன் இறுதிவேதமாம் திருக்குர்ஆனில் கேட்கிறான்:
23:115. “நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?”
அவ்வாறு சிந்திக்கும்போது இவை எதுவும் வீணுக்காக அல்ல. ஒரு மகத்தான உறுதியான திட்டத்தின் கீழ்தான் நாம் படைக்கப் பட்டிருக்கிறோம் என்பது புலனாகும். இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்வது உண்மை என்று புலப்படும்.
அந்த உண்மை என்னவெனில் இவ்வுலகை இறைவன் ஒரு பரீட்சைக்கூடமாப் படைத்துள்ளான் என்பது. இதில் நமது செயல்கள் அனைத்தும் பதிவு செய்யப் படுகின்றன. யார் இறைவனுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் வெற்றி பெறுகிறார்கள்.
அவர்களுக்கு #சொர்க்கம் என்ற நிரந்தர வசிப்பிடம் உண்டு. யார் கட்டுப் படாமல் தான்தோன்றித்தனமாக வாழ்கிறார்களோ அவர்கள் இப்பரீட்சையில் தோல்வி அடைகிறார்கள். அவர்களுக்கு #நரகம் என்ற நிரந்தர வேதனைகள் கொண்ட வசிப்பிடம்தான் கிடைக்கும்.
இந்தப் பரீட்சைக் கூடத்திற்குள் நாம் அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட தவணையில் வந்து போகிறோம். இங்கு இறைவனின் கட்டளைகளுக்குக் கீழ்படிந்து செய்யப் படும் செயல்கள் நன்மைகளாகவும் கீழ்படியாமல் மாறாகச் செய்யப்படும் செயல்கள் தீமைகளாகவும் பதிவாகின்றன.
இவ்வாறு ஒவ்வொருவருக்கும் நன்மைகள் அல்லது தீமைகள் செய்வதற்கு சுதந்திரமும் வாய்ப்பும் அளிக்கப்படும் இடமே இந்த தற்காலிகப் #பரீட்சைக் கூடம்!.
= உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன். (திருக்குர்ஆன் 67:2)
= ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைப்பதாகவே இருக்கிறது; பரீட்சைக்காக கெடுதியையும், நன்மையையும் கொண்டு நாம் உங்களைச் சோதிக்கிறோம். பின்னர், நம்மிடமே நீங்கள் மீட்கப்படுவீர்கள். (திருக்குர்ஆன் 21:35)