சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம் திருக்குர்ஆன்
சந்தேகங்களுக்கு அப்பாற்பட்ட வேதம்(100 % DOUBT FREE book)
2:2. இது திரு வேதமாகும்;. இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
இப்படியொரு வாசகத்தை நீங்கள் எந்த மனித ஆக்கங்களிலாவது காண முடியுமா? அதாவது ‘நான் சொல்லப் போவது நூறு சதவிகிதமும உண்மை, இதில் எந்தவித சந்தேகமும் இல்லை’. என்று எந்த மனிதராவது தனது ஆக்கத்தில் சொல்லத் துணிவாரா? இதுவே திருக்குர்ஆன் இவ்வுலகைப் படைத்தவனின் – சர்வஞானம் கொண்டவனின் – ஆக்கம் என்பதை நிரூபிக்கிறது.தொடர்ந்து. இவ்வேதத்தைப் பற்றி சந்தேகம் கொள்வோரைப் பார்த்து இறைவன் விடுக்கும் அறைகூவலையும் எச்சரிக்கையையும் பாருங்கள்:
2:23. நமது அடியாருக்கு (முஹம்மதுக்கு) நாம் அருளியதில் நீங்கள் சந்தேகம் கொண்டு, (அதில்) நீங்கள் உண்மையாளர்களாகவும் இருந்தால் இது போன்ற ஓர் அத்தியாயத்தைக் கொண்டு வாருங்கள்! அல்லாஹ்வைத் தவிர ஏனைய உங்கள் உதவியாளர்களையும் அழைத்துக் கொள்ளுங்கள்!
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு வானவர் ஜிப்ரீல் (காப்ரியேல்) மூலம் அருளப்பட்ட இந்த வேதவசனங்களில் உங்களில் யாருக்கேனும் சந்தேகம் இருந்தால் இது போன்றதொரு அத்தியாயத்தையேனும் கொண்டுவருமாறு மனிதகுலத்தை நோக்கி சவால் விடுக்கிறான் இவ்வுலகின் அதிபதி!அவ்வாறு இந்த சவாலை எதிர்கொள்ள முடியாத சத்திய மறுப்பாளர்களுக்கு தொடர்ந்து அவர்களுக்குக் காத்திருக்கும் தண்டனையைக் குறித்து எச்சரிக்கையும் விடுக்கிறான்.
2:24. உங்களால் (இதைச்) செய்யவே முடியாது. நீங்கள் செய்யாவிட்டால் (நரக) நெருப்புக்கு அஞ்சுங்கள்! மனிதர்களும் கற்களுமே அதன் எரி பொருட்கள். (இவ்வேதத்தை) மறுப்போருக்காகவே அது தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த வசனங்கள் மூலம் இறைவன் அகல உலக மக்கள் அனைவரையும் நோக்கி விடுக்கும் செய்தி இதுதான்:இதோ இந்தத் திருக்குர்ஆன் என்பது எனது கட்டளைகளைக் கொண்ட இறுதிவேதம். அகில உலகிலும் இனி இறுதிநாள் வரை வரப்போகும் அனைத்து மக்களுக்காகவும் வழிகாட்ட இது அருளப்பட்டுள்ளது. இதன் அடிப்படையிலேயே நீங்கள் வாழக் கடமைப்பட்டுள்ளீர்கள். இதைப் பின்பற்றி வாழ்ந்தால் உங்களுக்கு மோட்சம் உண்டு. மாறாக யார் இதை மறுத்து இதில் சந்தேகம் கொள்கிறார்களோ அவர்கள் தங்கள் கூற்றை நிரூபிப்பதற்காக இது போன்ற ஒரு அத்தியாயமேனும் இயற்றிக் காட்டட்டும்.
அதற்காக அகில உலக மக்களையும் அனைத்து சக்திகளையும் வேண்டுமானால் உதவிக்கு அழைத்துக் கொள்ளட்டும்.அந்த முயற்சியில் நீங்கள் தோல்விகண்டால் – நிச்சயமாக அது நீங்கள் தோல்வி காண்பீர்கள் என்பது திண்ணம் – உங்கள் இயலாமையை ஒப்புக்கொண்டு இறைவனிடம் திரும்புங்கள். அவ்வாறு திரும்ப மனம் இல்லையானால் இறைவனையும் அவன் வேதத்தையும் மறுப்போருக்காக தயார் செய்யப்பட்டுள்ள நரக நெருப்பை பயந்து கொள்ளுங்கள்.
அது எப்படிப்பட்ட கடுமையான நெருப்பு என்றால் தீய மனிதர்களும் கற்களுமே அதன் விறகுகளாக எரிந்துகொண்டிருக்கும்.அதாவது இவ்வுலகின் அதிபதி தன் அடிமைகளை நோக்கி திருக்குர்ஆனைக் காட்டி இதை ஏற்றுக் கொள்ளுங்கள்! இல்லையேல் உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது என்று கூறும் பாணியில் அமைந்துள்ளன இவ்வசனங்கள்!
முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டது இவ்வேதம்
ஒன்றை இறைவேதம் என்று சொல்வதாக இருந்தால் அதில் எவ்வித முரண்பாடும் இல்லாமல் இருக்க வேண்டும். ஏனெனில் மனிதனின் வார்த்தையில் தான் முரண்பாடுகள் வரும். ஏக இறைவனின் வார்த்தையில் முரண்பாடுகள் வருவதற்கு அறவே வாய்ப்பிருக்காது. அப்படி இருந்தால் அது மனிதனின் வார்த்தையாகத் தான் இருக்குமே தவிர இறைவேதமாக இருக்க முடியாது.இவ்வுலகில் காணப்படும் நூல்களில் இரண்டு வகையான முரண்பாடுகளில் ஒன்றையோ அல்லது இரண்டையும் சேர்ந்தோ நீங்கள் காண முடியும்
1.முன்னுக்குப் பின் முரண்படுதல்: அதாவது அந்நூலின் பக்கங்களுக்குள் காணப்படும் முரண்பாடு. உதாரணங்கள் பல இருந்தாலும் இதைப் புரிந்து கொள்வதற்காக ஒன்றை மட்டும் இங்கு காண்போம்:பைபிளின் எஸ்றா 2 வது அதிகாரத்திற்கும், நெகேமியா 7 வது அதிகாரத்திற்குமிடையே உள்ள காணப்படும் முரண்பாடுஆராகின் புத்திரர் அறுநூற்று ஐம்பத்திரண்டுபேர். (நெகேமியா 7:10)ஆராகின் புத்திரர் எழுநூற்று எழுபத்தைந்துபேர்.(எஸ்றா 2:5)
2.இரண்டாவது வகை முரண்பாடு காலத்தால் ஏற்படும் முரண்பாடு. உதாரணமாக, ஐம்பது வருடம் முன்பு எழுதப்பட்ட ஒரு நூலை எடுத்து இன்று வாசித்துப் பாருங்கள். அது அறிவியல் நூலேயானாலும் சரி, ஆன்மீக அல்லது சட்ட நூல்ளானாலும் சரி. இன்றைய மனிதனின் அறிவு வளர்ச்சி மற்றும் அறிவியல் வளர்ச்சியின் பின்னணியில் ஏராளமான முரண்பாடுகளை நீங்கள் காண முடியும்.ஆனால் திருக்குர்ஆனின் அற்புதம் என்னவென்றால் மேற்படி இரண்டு முரண்பாடுகளும் எள்ளளவும் இல்லை. இறைவன் கூறுகிறான்
4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா,(இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.
அருளப்பட்ட காலம் தொட்டு சுமார் 1430 வருடங்கள் கடந்தாலும் இன்று வரை எந்த விதமான முரண்பாடுகளும் இல்லாமல் வெற்றிநடை போடுகிறது திருக்குர்ஆன்!திருக்குர்ஆனில் முதல்வகை முரண்பாடுகளும் இல்லை. கால வளர்ச்சியின் மூலம் உண்டாகும் மனித ஆக்கங்களில் காணப்படும் முரண்பாடுகளும் அறவே இல்லை. காரணம் இது முக்காலத்தையும் அறிந்தவனும் நுண்ணறிவாளனும் ஆகிய இறைவனிடமிருந்து இறக்கியருளப்பட்டது!
39:1(யாவரையும்) மிகைத்தவனும் ஞானம் மிக்கவனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இவ்வேதம் இறங்கியருளப் பெற்றுள்ளது.
விஞ்ஞானமும் மனித அறிவும் வளர வளர புதுப் புது ஞானங்கள் மனிதனுக்குப் புலப்படும்போது எந்த மனித ஆக்கங்களும் காலமாற்றத்தால் ஏற்படும் முரண்பாடுகளுக்கு ஆளாகாமல் இருக்க முடியாது. ஆனால் திருக்குர்ஆன் இன்றுவரை 1400 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் எந்த நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகளோடும் சரித்திர உண்மைகளோடும் சிறிதும் முரண்படாமல் தொடர்கிறது!