Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
கொலை கொலையாகத் தற்கொலைகள்! - Thiru Quran Malar

கொலை கொலையாகத் தற்கொலைகள்!

Share this Article

ஏற்றதாழ்வுகள் வாழ்க்கையின் நியதி என்பதை அறியாதோர் இல்லை. ஆயினும் ஏற்றங்கள் வரும்போது ஏற்றுக்கொள்ளும் மனம் தாழ்வுகள் வரும்போது தகர்ந்து போகிறது!கடந்த சில நாட்களுக்கு முன்னால் கஜா எனும் பெயருடைய பெரும் புயல் தமிழகத்தின் பல பகுதிகளை தாக்கியது. உயிர்கள், விலங்குகள், மரங்கள், வீடுகள்,  விவசாயம், தொழில் என பலவற்றையும் திடீரென இழந்து மக்கள் செய்வதறியாது புலம்பிக்கொண்டிருக்கின்றனர்.

இவற்றுக்கு முன்னரும் பல பேரழிவுகள் நம்மைக் கடந்து சென்றுள்ளதை நாம் அறிவோம்.மனிதன் பிறந்ததில் தொடங்கி இறக்கும் வரை அவனது வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறு சோதனைகளைக் கடந்தே போக வேண்டியுள்ளது. செல்வம்,  வறுமை, ஆரோக்கியம், நோய், இலாபம், நஷ்டம் இளமை முதுமை என ஒன்றுக்கொன்று முரணான நிலைகளைக் கொண்டதே வாழ்க்கை.

இதில் ஆரோக்கியத்தோடு வாழ்ந்தவர்கள் திடீரென நோயுறும்போதும், செல்வ வளத்தோடு வாழ்ந்தவர்கள் திடீரென வறுமைக்குத் தள்ளப்படும் போதும் பெரும்பாலும் வாழ்க்கையையே வெறுத்து விடுகிறார்கள். தற்கொலைகளில் தஞ்சம் புகுகிறார்கள். ( தேசிய குற்றவியல் ஆவண  காப்பகத்தின் (NCRB)  அறிக்கைப் படி நாளொன்றுக்கு  371 தற்கொலைகள்!)

எதற்காக தற்கொலைகள்?

எதற்காகவெல்லாம் தற்கொலைகள் நிகழ்கின்றன என்ற தகவல்களை காப்பகம் பதிவு செய்துள்ளது. பொதுவாக குடும்பப் பிரச்னைகள், எய்ட்ஸ், புற்றுநோய் போன்ற நாள்பட்ட, தீராத நோய்கள், காதல் தோல்வி, வேலையின்மை, ஏழ்மை, பரீட்சையில் தோல்வியுறுவது, பொருளாதார நிலையில் ஏற்படும் திடீர் பின்னடைவு, சொத்துத் தகராறு, தொழில் நஷ்டம், போதைக்கு அடிமையாதல், வரதட்சணைப் பிரச்சினை, பாலியல் பலாத்காரம், முறையற்ற கர்ப்பம், விவாகரத்து, குழந்தையின்மை,  பிரியத்துக்குரியவர்களின் மரணம்… என எத்தனையோ காரணங்கள் காணப்படுகின்றன…

சற்று விரிவான உதாரணங்கள்

= சிறுவயதில் ஏற்பட்ட இன்னல்கள், வறுமை.
= இளம் வயதில் பள்ளியைவிட்டு நீங்குதல், நீக்கப்படுதல்.
= பெற்றோருக்கு இடையே பிரச்னை, அதன் காரணமாக பெற்றோர் பிரிதல்.
= நண்பர்களோடு கருத்து மாறுபாடு, பிரச்னை, உறவு முறிதல்.
= ஏதோ காரணத்தால் வேலையிலிருந்து நீக்கப்படுதல்; நிறுவனத்தில் இருந்து ஆள்குறைப்பு காரணமாக நீக்கப்படுதல்.
= குடும்ப உறவுகளால் மனரீதியான பிரச்னைகளை எதிர்கொள்ளுதல்… மனப் பதற்றம், மனஅழுத்தம் ஏற்படுவது போன்றவை.
= சமுதாயரீதியாக ஒதுக்கப்படுதல்.
=  மாற்றுத்திறனாளியாக இருந்து, அதன் காரணமாக மற்றவர்களால் மனக்கசப்புக்கு ஆளாகுதல்.
= சட்டச் சிக்கலில் மாட்டிக்கொள்வது.
= சுயகௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் நிலைமை வந்தால், அதனால் மனதளவில் பாதிக்கப்படுவது.
=  உறவினர்களில் முக்கியமானவர் இறந்துபோவது அல்லது பிரிந்துபோவது.
= உறவினர்களோடும் மற்றவர்களோடும் உறவின்மை (Belongingness) = மற்றவர்களுக்கு நாம் பயனில்லாமல் இருக்கிறோம் என்கிற நினைப்பு.
= மற்றவர்களுக்கு நாம் சுமையாக, பாரமாக இருக்கிறோமோ என்று நினைத்துக்கொள்வது.
= மீளாத்துயரம்.. உதாரணமாக, திருமணம் செய்யும் அளவுக்கு வளர்ந்த மகன் இறந்து போவது, பெற்றோரை பாதிக்கும்; தாங்க முடியாது.

சிலருக்கு அந்தத் துயரம் வாழ்நாள் முழுக்க தோய்ந்து இருக்கும். எப்போது சமயம் கிடைக்கும், அவர்களோடு சேர்ந்து போய்விடலாம் என்று காத்துக்கொண்டிருப்பார்கள். 

மாணவர்களைப் பொறுத்த வரை…

= பரீட்சையில் தேர்ச்சி அடையாமை.
= பள்ளியில் மற்ற மாணவர்களுடன் சுமுகமாக இருக்க முடியாமல் போதல். 
= மற்ற நண்பர்களால் ஒதுக்கிவைக்கப்படுதல். 
= உடல்ரீதியாக ஏதாவது குறைபாடு இருந்தால், அதனால் சுயபச்சாதாபம் ஏற்பட்டு, அதனால் பாதிக்கப்படுவது… 
இவ்வாறு ஒவ்வொரு தரப்பாரிடமும் வெவ்வேறு காரணங்களை நாம் காண முடியும்

தீர்வுகளாகப் பரிந்துரைக்கப் படுபவை :

மன நல மருத்துவர்களும் உளவியல் நிபுணர்களும் கீழ்கண்ட தீர்வுகளை பரிந்துரைப்பதைக் காணலாம்.

= குழந்தைகளுக்கு பள்ளியிலேயே தோல்வியால் ஏற்படும் ஏமாற்றத்தை எதிர்கொள்ளும் பக்குவத்தைச் சொல்லிக் கொடுக்க வேண்டும். 
= அம்மா, அப்பா இருவரும் ஒரே மாதிரியான நிலைப்பாட்டோடு பிள்ளைகளை வளர்க்க வேண்டும். பிள்ளைகளுக்கு வெளியுலகத் தொடர்பை ஏற்படுத்துவது, விளையாடவிடுவது அவசியம். குழந்தைகளின் ஆளுமைத்திறன் வளர அது உதவும். 
= விரக்தி வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏமாற்றங்களைத் தாங்கிக்கொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். 
= இப்போது தற்கொலை எண்ணம் வருபவர்களுக்கு கவுன்சலிங் கொடுக்க பல மையங்கள் இருக்கின்றன. தொலைபேசியில்கூட தொடர்புகொண்டு அவர்களுடன் பேசலாம். = உறவினர்களுடனான உறவைப் பேணுவது; நண்பர்களுடன் அதிகமான நேரத்தைச் செலவிடுவது; ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருப்பது.
=  ஓய்வுகாலத்தைக்கூட பயனுள்ள வகையில் ஏதாவது அமைப்போடு சேர்ந்து பணியாற்றுதல், மற்றவர்களுக்கு உதவி செய்வது என அர்த்தமுள்ளதாக வாழ்க்கையை மாற்றிக்கொண்டால், இந்த எண்ணம் வராது. 
= தற்கொலை எண்ணத்தைத் தூண்டும் இடங்களைத் தவிர்ப்பது நல்லது. உயரமான இடங்கள் (செல்போன் டவர், லைட் ஹவுஸ்) பாதுகாப்பற்ற இடங்களில் அதை நெருங்க முடியாதபடி தடைகளை (Barricade) ஏற்படுத்தலாம். அதற்கு அரசு ஆவன செய்யலாம்.
= தற்கொலைகளுக்கு பயன்படுத்தப்படும் ஆயுதங்களும் (துப்பாக்கி போன்றவை) பூச்சிகொல்லிகள், போன்றவை எளிதில் கிடைக்காத மாதிரி அரசு கட்டுப்படுத்துவது.

= அரசுப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே, பெற்றோரே குழந்தைகளை எதையும் எதிர்கொள்ள  மனோரீதியாக தயார்ப்படுத்த வேண்டும்.

பரீட்சை வாழ்க்கையில் ஒருமுறை மட்டும் நடப்பதல்ல. ஒரு மாதம் கழித்து இன்னொரு பரீட்சை எழுதிக்கூட தேர்ச்சி பெற்றுவிடலாம் என தைரியம் கொடுக்கலாம். இது ஒரு தற்காலிகத் தோல்வி; இதற்காக நிரந்தரமாக ஒரு முடிவைத் தேடிக்கொள்ளக் கூடாது என்ற விஷயத்தை அவர்களுக்குக் கற்பிக்க வேண்டும். இதை ஊடகங்களிலும் பரவலாகச் சொல்ல வேண்டும். 

= பள்ளிகளில் ஸ்டூடன்ட் கவுன்சலர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். ஒரு மாணவனுக்கோ, மாணவிக்கோ பிரச்னை வரும்போது அவர்களுக்கு உரிய ஆலோசனை தர வேண்டும்.

 = நாட்டில் பஞ்சம், இயற்கைப் பேரிடர்கள், போன்றவை நிகழும்போது மக்கள் வறுமைக்குத் தள்ளப்படுகிறார்கள். அந்நிலைகளில் தற்கொலைகள் அதிகரிக்கும். அந்த நேரத்தில் அரசும் மக்களுக்கு உதவ வேண்டும்.  

ஏட்டுச்சுரைக்காய் போன்ற தீர்வுகள்   

மேற்கண்ட தீர்வுகள் நடைமுறைப் படுத்தப் பட வேண்டுமானால் அதற்கான முறையான உந்துதல் தீர்வை நடைமுறைப் படுத்தப் போகிறவருக்கும் தற்கொலைக்கு முயற்சிப்பவருக்கும் இருக்க வேண்டும். அப்படியே அவை நடைமுறைப்படுத்தப்படுமானாலும் எந்த அளவுக்கு தற்கொலைகளைத் தடுக்கும் என்பது சந்தேகத்துக்குரிய விடயமே.

காரணம் மனித மனம்தான் இங்கு முக்கியமான காரணி. இது முக்கியமாக பண்படுத்தப்படாத வரை தீர்வு என்பது எட்டாக்கனியாகவே தொடரும் என்பதில் ஐயமில்லை. எந்த ஒரு மனிதனும் தான் சந்திக்கும் வாழ்க்கைப் பிரச்சினைக்கு தற்கொலைதான் தீர்வு என்று அவனுக்குத் தோன்றுவதற்கு முக்கியமான காரணம் அதனால் தனக்கு எந்த பாதிப்பும் இழப்பும் இல்லை என்று வலுவாக நம்புவதால்தான்.

அதனால் தனக்கு எந்த பின்விளைவுகளும் நேரப்போவது இல்லை என்ற எண்ணமே தற்கொலைக்கு மிகப்பிரதானமான காரணம் என்பதே உண்மை!

அதாவது வாழ்க்கை என்பது அர்த்தமற்றது, நோக்கமற்றது, ஒரு மாயை, வாழும் வரைதான் வாழ்க்கை அதற்குப்பிறகு மண்ணோடு மண்ணாகிப் போகிறோம், வாழ்க்கை என்பது தற்செயலானது இங்கு எப்படி வாழ்ந்தாலும் தட்டிக்கேட்க யாரும் இல்லை என்பன போன்ற உணர்வுகளும் அந்த உணர்வுகளை ஊக்குவிக்கும் பரப்புரைகளுமே தற்கொலைக்குத் தள்ளும் முக்கிய காரணிகள் என்பதை நாம் உணரவேண்டும்.

இறைவன் தருவதே தீர்வு

மாறாக மனித மனங்களில் பகுத்தறிவு பூர்வமான இறைநம்பிக்கையையும் வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய தெளிவும் ஏற்படுத்தினால் மட்டுமே தற்கொலைகளை ஆக்கபூர்வமான முறையில் தடுக்க முடியும்.

மனித வாழ்வில் மன அமைதியும் சோதனைகள் வரும்போது எதிர்கொள்ளும் தன்னம்பிக்கையும் தைரியமும் இல்லாமல் போவதற்கு முக்கியமான காரணங்களில் ஒன்று நாம் யார்?  இந்த வாழ்க்கை என்பது எதற்காக? 

இதன் பின்னணி என்ன? நாம் ஏனிங்கு உள்ளோம்? இங்கிருந்து எங்கே போகிறோம்? என்ற கேள்விக்கான பதில்களை அறிய முற்படாமையே. இக்கேள்விக்கான தெளிவான பதில்களை இவ்வுலகைப் படைத்த இறைவனே தன் தூதர்கள் மூலமாக வழங்கியுள்ளான்.

அந்த இறைத் தூதர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். அவர் மூலமாக அருளப்பட்ட வேதமே திருக்குர்ஆன். திருக்குர்ஆனில் இருந்தும் நபிகளாரின் வழிகாட்டுதல்களில் இருந்தும் மனஅமைதி மற்றும் தன்னம்பிக்கை வளர்பதற்கான வழிகளை அறிய முற்படுவோம் வாருங்கள்.

“நாம் உங்களைப் படைத்ததெல்லாம் வீணுக்காக என்றும், நீங்கள் நம்மிடத்தில் நிச்சயமாக மீட்டப்பட மாட்டீர்கள் என்றும் எண்ணிக் கொண்டீர்களா?” (திருக்குர்ஆன் 23:115) 

Share this Article

Add a Comment

Your email address will not be published.