நீங்கள் தோன்றிய அதிசயம்
நீங்கள் எப்படி இறைவனை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான்; பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான்; மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான்; இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள் (திருக்குர்ஆன் 2:28)
இந்த உலகில் உங்கள் முதல் இருப்பிடம் கருவறை. ஓர் உயிர் தனக்குள்ளிருந்து இன்னொரு உயிரைப் புதிதாக உருவாக்கித் தரும் அற்புத விஷயம்தான் மனிதப் பிறப்பு என்பது! அதில் நிகழும் அறிவியல் அதிசயங்கள் கொஞ்சநஞ்சமா? ஒரு சைக்கிள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இருந்து ஒரு சைக்கிள் தயாரிக்கப்பட்டு வெளிவருவதற்கு என்னென்ன தேவை என்பதை யோசித்துப் பாருங்கள்…
கச்சாப்பொருட்கள், பக்குவமான இயந்திரங்கள், உபகரணங்கள், திறன் மூலம், பணியாளர்கள், பல்வேறு துறைகள் ஒருங்கிணைத்தல், திட்டமிடுதல், கண்காணிப்பு, தரக்கட்டுப்பாடு என பற்பல இன்றியமையாத தேவைகள் இருப்பதை அறிவீர்கள்.
அதேவேளையில் புதிதாக ஓர் உயிர் உருவாவதற்கும் அதே உயிர் மீண்டும் ஒரு உயிரை உற்பத்தி செய்வதற்கும் பின்னால் என்னென்ன தேவைகள் இருக்கும் என்பதை நம்மால் கற்பனை செய்துகூட பார்க்க முடியுமா?
எண்ணற்ற ஜீவிகளை அவற்றின் பக்குவத்தோடும் நுணுக்கங்களோடும் ஆரம்பம் முதலே படைத்தது மட்டுமல்ல பக்குவமான முறையில் அவற்றின் இனப்பெருக்கத்தையும் நிகழ்த்திக் கொண்டிருக்கும் இறைவனின் படைப்பாற்றலைப் பற்றி வியக்காமல் இருக்கமுடியுமா?
= இறைவன் எவ்வாறு முதன் முறையாகப் படைக்கின்றான் என்பதையும், பிறகு எவ்வாறு அதை மீண்டும் படைக்கின்றான் என்பதையும் அவர்கள் என்றுமே கவனித்ததில்லையா? (மீண்டும் படைப்பது எனும்) இந்தப் பணி திண்ணமாக, இறைவனுக்கு எளிதானதாகும். (திருக்குர்ஆன் 29:19)
இவ்வுலகில் மனிதன் தோன்றியது முதல் இடையறாது நடந்துவரும் மனிதப் பிறப்பு என்ற பேரற்புதத்தின் பின்னால் நடப்பவற்றை சற்று சிந்தித்துப்பாருங்கள்.
இந்த மாபெரும் அற்புதத்தில் பங்குகொள்ளும் உறுப்புகளின் உருவாக்கமும் இயக்கமும் பரிபாலித்தலும் இன்ன பிற விந்தைகளும் படைத்தவன் ஒருவனின்றி நடந்துவிடுமா கூறுங்கள்! நமது ஒவ்வொருவரதும் உருவாக்கத்திற்கும் பின்னால் அமைந்துள்ள இறை அற்புதங்களை அறியும்போது அவனுக்கு நன்றி சொல்லாமல் இருக்கமுடியுமா?
ஆண் உறுப்பு எனும் அதிசயம்:
விரிந்து சுருங்கும் தன்மையுடைய மெல்லிய தசைகளும் ஏராளமான ரத்தக்குழாய்களும் உள்ளடக்கிய ஆண் உறுப்பு பாலுணர்வு நிறைந்திருக்கும்போது ரத்தம் பாய்வதால் விறைப்படைகிறது:
உறவுக்குப் பின் பாலுணர்வு குறைந்ததும், இந்தக் குழாய்களில் ரத்த ஓட்டம் குறைந்துவிடுவதால், பழைய நிலைக்குத் திரும்பிவிடுகிறது.
இந்த உறுப்பின் மத்தியப் பாதைக்குச் சிறுநீர்க்குழாய் (Urethra) என்று பெயர்.
இது சிறுநீர்ப்பையில் இருந்து வருகிறது. இதன் ஆரம்பப் பகுதியில் விந்து ஏற்றக்குழாய்கள் இணைந்திருக்கும். இது சுமாராக 15 வயது வரை சிறுநீரை மட்டுமே வெளியேற்றுகிறது. அதற்குப் பிறகு விந்துவை வெளியேற்றும் பாதையாகவும் மாறிவிடுகிறது.
சிறுநீர் வெளியேறும்போது சிறுநீரும், விந்து வெளியேறும்போது விந்துவும் மட்டுமே வெளியேறும்படியான ஓர் ஒழுங்குமுறையை கடைப்பிடிப்பது உடலியல் அதிசயங்களில் தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று.
விதைப்பை : ஆணுறுப்பை ஒட்டிக் கீழ்ப்புறமாக ஒரு விதைப்பை(Scrotum) தொங்குகிறது. இதனுள்ளே இரண்டு விதைகள்(Testicles) உள்ளன. ஆண் பருவ வயதை அடைந்ததும் விந்தணுக்கள் உற்பத்தியாவது இங்குதான். ஆண்மையின் அடையாளமான மீசை வளர்வதற்குக் காரணமான டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனை உற்பத்தி செய்வதும் இவைதான்.
வெப்பம், குளிர் போன்ற தட்ப வெப்பநிலைகளிலிருந்து விதைகளைக் காப்பது விதைப்பையின் முக்கிய வேலை.
விதைப்பையின் இரண்டு பக்கத்திலும் உள்ள விதைகளின் மேல் தளத்தில் தலா ஒரு விந்தணுக்குழாய் (Epididymis) உள்ளது.
இவற்றிலிருந்து கயிறு போன்ற விந்துக்குழாய்கள்(Vasdeferens) அடிவயிற்றை நோக்கிப் புறப்படுகின்றன. இவை ‘புராஸ்டேட்’ (Prostate) எனும் ஆண்மை உறுப்பில் உள்ள விந்து ஏற்றக்குழாயில்(Ejaculatory duct) முடிகின்றன.
புராஸ்டேட் என்பது ஆண்களுக்கே உரித்தான ஒரு ஸ்பெஷல் சுரப்பி. இது சிறுநீர்ப்பையின் அடிப்பாகத்தில் இருக்கிறது. இதன் நடுவில் சிறுநீர்ப்பையில் இருந்து கிளம்பும் சிறுநீர்க்குழாய் செல்கிறது. விந்து ஏற்றக்குழாய்கள் இரண்டும் இந்தச் சிறுநீர்க்குழாயில் இணைந்து ஒன்றாகி,சிறுநீர் வெளித்துவாரத்தில் முடிகிறது.
உயிரணுவின் பயணம் :
விதைகளில் உற்பத்தியாகும் விந்தணுக்கள் ஒன்று சேர்ந்து அணி அணியாக விந்தணு குழாய்க்கு வந்து சேரும். பாலுறவின்போது வெளியேறுவதற்காக இவை இங்கு காத்திருக்கும். பாலுறவின்போது ஏற்படும் தசை இறுக்கங்களால், இவை அடிவயிற்றை நோக்கி, விந்து ஏற்றக்குழாய்க்கு உந்தப்படுகின்றன.
சிறுநீர்ப்பைக்குப் பின்னால் விந்துக்கிடங்கு(Seminal vesicle) உள்ளது. விந்தணுக்கள் முதலில் விந்துக்கிடங்கு சுரப்போடும், பிறகு புராஸ்டேட் சுரப்போடும் கலந்து விந்து திரவமாக(Semen) மாறி, விந்து ஏற்றக்குழாய் வழியாக சிறுநீர்க்குழாயை அடைந்து, சிறுநீர் வெளித்துவாரத்தில்(Urethral orifice) வெளியேறுகிறது.
சிறுநீர்ப்பையின் அடியிலுள்ள சுருக்குத் தசைகள் பாலுறவின்போது இறுகுவதால், சிறுநீர்ப்பைக்கும் சிறுநீர்க் குழாயோடு விந்து ஏற்றக்குழாய்கள் இணையும் இடத்துக்கும் இடையில் உள்ள பாதை அடைத்துக்கொள்கிறது.
இதன் பலனால், விந்து வெளியேறும்பொழுது அதனுடன் சிறுநீர் கலப்பது தடுக்கப்படுகிறது. அதுபோலவே, விந்து சிறுநீர்ப்பைக்குள் பின்னோக்கிச் செல்வதும் தடுக்கப்படுகிறது.
பெண் உறுப்புகள் எனும் பேரதிசயம் :
1. கருப்பை(Uterus):
பார்ப்பதற்கு கருஞ்சிவப்பு நிறத்தில் மேற்புறம் பருத்தும், கீழ்ப்பகுதி சிறுத்தும் இருக்கும் முக்கிய உறுப்பு இது. கடுமையான தசைகளால் அமைந்த இந்த ‘வீட்டில்’தான் கண்ணுக்குத் தெரியாத புள்ளியாக இருக்கும் கரு, முழுக்குழந்தையாக உருவெடுக்கும் அதிசயம் நடக்கிறது.
விரிவாகச் சொன்னால், கருப்பைக் குழி(Uterine cavity) என்று அழைக்கப்படும் இதன் உட்பரப்பு முக்கோண வடிவத்தில் இருக்கிறது. அதில் மெல்லிய சவ்வுப் படலம் (Endometrium) இருக்கிறது. இதில்தான் கரு புதைந்து வளர்கிறது. கருத்தரிக்காதபோது, இந்தச் சவ்வு விரிசல்விட்டு விலகி, கசியும்
ரத்தத்துடன் கலந்து மாதவிடாயாக வெளியேறுகிறது.
2. கருப்பை வாய் (Cervix):
கருப்பைக்கான உள்வாசல் இது; கருப்பையையும் ஐனனப் பாதையையும் இணைக்கிறது. முட்டையின் வெள்ளைக் கருபோல இங்கே சுரக்கும் ஒருவித திரவம், பெண்களுக்குப் பாலுறவின் மீது ஈடுபாட்டை அதிகப்படுத்தவும், ஆணின் விந்தணுக்கள் வழுக்கிக்கொண்டு கருப்பைக்கு உள்ளே பாய்ந்து செல்லவும் வசதி செய்து தருகிறது.
3. சினைப்பைகள்(Ovaries):
கருப்பையின் இரண்டு பக்கமும் இருப்பவை சினைப்பைகள். குழந்தை உருவாவதற்குத் தேவையான சினைமுட்டையை(Ovum) மாதம் ஒன்று வீதம் இடது பக்கம், வலது பக்கம் என ஒன்று மாற்றி ஒன்றாக உற்பத்தி செய்து, கருக்குழாய்க்கு அனுப்பிவைக்க வேண்டியது சினைப்பையின் வேலை. இங்கு சுரக்கும் ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஹார்மோன்கள்தான் பெண்களின் கவர்ச்சிக்கு முக்கிய காரணமாகின்றன.
4. கருக்குழாய்கள் (Fallopian tubes):
கருக்குழாய்கள் கருப்பையின் இரண்டு பக்கமும் இருக்கின்றன; சினைப்பையையும் கருப்பையையும் இணைக்கின்றன. தலா 10 செ.மீ. நீளம் உள்ள இந்தக் குழாயின் மேல்முனையில்தான் சினைமுட்டையோடு ஆணின் விந்தணு கலந்து கரு உருவாகும் அற்புதம் நடக்கிறது.
5. ஜனனப் பாதை :
வஜைனா(Vagina) எனப்படும் ஜனனப் பாதைதான் கருப்பைக்கான வெளிவாசல்!
குழந்தை பிறப்பின்போது கருப்பையிலிருந்து வெளிவரும் குழந்தையை இந்தப் பூமிக்குத் தருவதற்கு பயன்படும் முக்கிய வழியாக இது இருக்கிறது. இதன் நீளம் சுமாராக 8 செ.மீ. அகலம்3 செ.மீ. இத்தனை சிறிய துளைதான் நாம் அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் பிரசவத்தின்போது அகல விரிந்து பத்து மாதம் ஆன சிசுவுக்கு வழிவிடுகிறது.
கரு உருவாவது எப்படி?
ஒரு பெண்ணுக்கு மாதவிலக்கு ஆன நாளிலிருந்து 12-வது நாள் முதல் 17-வது நாள் வரைமுக்கியமனவை. ஒரு பெண்ணின் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெடித்து வெளிவந்து,இந்த நாட்களில் ஏதாவது ஒருநாளில் கருக்குழாய்க்கு வந்து காத்திருக்கும். வெடித்து வெளிவந்த பின் இரண்டு நாட்களுக்குத்தான் அது உயிரோடு இருக்கும்.
அதற்குள் ஆணின் விந்துத்திரவம் வந்தடைந்தால் தான் விந்தணு சினைமுட்டையுடன் கலந்து கரு உருவாக முடியும்.
அப்போது ஆணின் விந்துத்திரவம் கருப்பை வாய்க்கு அருகில் கொட்டப்படும்போத இதில் உள்ள கோடிக்கணக்கான விந்தணுக்கள் எப்படியும் சினைமுட்டையை அடைந்தே தீருவது என்று தீர்மானித்து, அணிவகுத்துச் செல்லும் போர் வீரர்களைப்போல வீராவேசமாகப் புறப்பட்டு கருப்பைக்குள் நுழைவார்கள்.
கருப்பையின் உள் தூரம் 8 செ.மீ.வரை இருக்கும். நிமிடத்துக்கு சராசரியாக 2 மி.மீ.தூரம் என்ற வேகத்தில் நீந்திச் செல்வார்கள். பாதி தூரம் போனதும் பாதி வீரர்கள் களைப்படைந்து பயணத்தை நிறுத்திக்கொள்வார்கள். மீதிப் பேர்தான் பயணத்தைத் தொடர்வார்கள்.
இவர்கள் மட்டுமே மில்லி மீட்டரில் ஒரு பங்கு அளவே இருக்கும் சினைமுட்டையின் ‘கோட்டைக் கதவை’மோதிப்பார்ப்பார்கள். ஆனால், ஏதாவது ஒருவருக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் கிடைத்து‘கோட்டைக் கதவு’ திறந்து வழிவிடும்.
சினைமுட்டையை அதிர்ஷ்டக்கார ‘மாவீரன்’ துளைத்த மறுகணமே, முட்டி மோதும் மற்ற வீரர்கள் உள்ளே நுழைவதைத் தடுக்க, சினை முட்டையின் சவ்வுப் பகுதி இறுகிக் கோட்டைக் கதவைத் தாழ் போட்டு மூடிக்கொள்வது இன்னொரு அதிசயம்.
அந்த ‘மாவீரன்’ உயிரணுவின் வால் பகுதி சினைமுட்டையின் சவ்வுக்கு வெளியிலேயே நின்றுவிட, நீள்வட்ட தலை மட்டும் உள்ளே போகிறது. சினைமுட்டையில் நடுநாயகமாகக் காத்திருக்கும் அதன் உட்கருவோடு கலக்கிறது. இணையும் பொழுது, தன்னிடமுள்ள 23 நிறக்கோல்களையும் அவிழ்த்துக் கொட்டி விடுகின்றது.
இந்த நிறக்கோல்களில் தந்தை வழி இறங்கக்கூடிய மரபு வழிப் பொருள்கள் யாவும் அடங்கியுள்ளன. ஒரு புதிய உயிர் கருவாக உருவாகும் அற்புதம் அங்கே அரங்கேறுகிறது!
= நாமே உங்களைப் படைத்தோம். எனவே, (நாம் கூறுவதை) நீங்கள் உண்மையென்று நம்ப வேண்டாமா? நீங்கள் செலுத்துகின்ற இந்த இந்திரியத்துளியைப் பற்றி எப்போதாவது நீங்கள் சிந்தித்ததுண்டா? அதை நீங்கள் படைக்கிறீர்களா? அல்லது நாம் படைக்கின்றோமா?(திருக்குர்ஆன் 56:57-59)
= நிச்சயமாக நாம் மனிதனைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்.. பின்னர் நாம் அவனை ஒரு பாதுகாப்பான இடத்தில் இந்திரியத் துளியாக்கி வைத்தோம். பின்னர் அந்த இந்திரியத் துளியை அலக் என்ற நிலையில் ஆக்கினோம்; பின்னர் அந்த அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம்; பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம்; பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம்; பின்னர் நாம் அதனை வேறு ஒரு படைப்பாக (மனிதனாகச்) செய்தோம். (இவ்வாறு படைத்தவனான) அல்லாஹ் பெரும் பாக்கியமுடையவன் – (படைப்பாளர்களில் எல்லாம்) மிக அழகான படைப்பாளன்.(திருக்குர்ஆன் 23:12-14)