Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி! - Thiru Quran Malar

சமத்துவமும் சகோதரத்துவமும் இங்கு உயிர்நாடி!

Share this Article
Thousands of Indian Muslims gather for the Eid al-Fitr prayer at the Jama Mosque in New Delhi, India, Monday, Sept. 21, 2009. Muslims around the world are celebrating Eid al-Fitr, marking the end of the holy fasting month of Ramadan. (AP Photo/Kevin Frayer)

ஒன்றே குலம் ஒருவனே இறைவன் என்ற முழக்கத்தை பலரும் முழங்கினாலும் அதை அன்றாட வாழ்வில் நடைமுறைப் படுத்திக் காட்டும் இடம் பள்ளிவாசல்.   உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை, பணக்காரர், ஏளியவர், வெள்ளையர், கறுப்பர் என்ற வேறுபாடின்றி தீண்டாமை எழுவதற்கு வழியின்றி எல்லோரும் வரிசையில்  நின்று தொழும் இடம் பள்ளிவாசல்.  

படைத்தவனுக்கு முன் அனைவரும் சமம் என்ற கொள்கையை மக்கள் உள்ளங்களில் ஆழமாக விதைக்கும் இடம் அதுவே!சமூகத்தில் செல்வாக்குள்ளவர், அந்தஸ்துள்ளவர்,  படிப்பால் உயரந்தவர், செல்வம் படைத்தவர் என்ற  கௌரவம் பெற்றவர்கள் கூட பள்ளிவாசலுக்குள் வந்து விட்டால், தொழுகைக்காக நின்று விட்டால்  இறைவனின் அடிமைகள் என்ற நிலைப்பாட்டிலேதான் நிற்க வேண்டும்.

ஜனாதிபதியாக இருந்தாலும், மந்திரிகளாக இருந்தாலும் அவர்களும் சாதாரண குடிமக்களோடு தோளோடுதோள் இணைந்து வரிசைகளில் அணிவகுத்து நின்றே தொழுகை நிறைவேற்ற வேண்டும். அவர்களுக்கான பிரேத்தியகமான இடமோ கவனிப்போ கிடையாது.

ஒரு நாளைக்கு ஐந்து நேர தொழுகையின் பயிற்சி இதுதான். இந்தப் பயிற்சியினை பெற்றவர்களால் மட்டும்தான் உலகில் தீண்டாமையை ஒழிக்க முடியும். சகோரத்துவத்தை வளர்க்க முடியும். சமூகத்தை சீரமைக்க முடியும்.

மக்கா தலைவர்களின் பேரம்

நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரப் பணியில் ஈடுபட்டு ஓரிறை கொள்கையின் பால் அழைப்பு விடுத்த போது மக்காவின் தலைவர்களில் சில முக்கியமானவர்கள்  முஹம்மத் நபி(ஸல்) அவர்களிடம் வந்து பின்வருமாறு முறையிட்டார்கள்.

“முஹம்மதே! இதோ உம்முடன் சாதாரண மக்கள் இருக்கிறார்கள். அவர்களுடன் எமக்கு இருக்க முடியாது எமக்கு தனி இடம் வேண்டும் அவர்களுடன் சேர்ந்து இருப்பதை அவமானமாக கருதுகிறோம். நாம் வந்தால் அவர்கள் எழுந்து சென்று விட வேண்டும் என்று நீர் உத்தரவு இட வேண்டும்” என்று கோரினர். இவர்களின் கோரிக்கையை ஏற்றால் மக்காவில் உயர் குலத்தாரும் பிரமுகர்களும் இஸ்லாத்திற்கு வந்து விட வாய்ப்புண்டு.

எதிர்ப்புகள் மறையக்கூடும்.  இஸ்லாமும் வளர்ந்து விடக்கூடும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு பேரம் இஸ்லாம் என்ற மக்கள் இயக்கத்திற்கு அறவே தேவையில்லை என்பது இறைவனின் முடிவாக இருந்தது. உடனடியாக  இவர்களின் கோரிக்கையை நிராகரித்து இறைவன் கீழ்கண்ட எச்சரிக்கை வசனத்தை இறக்கி வைத்தான்:

எவர்கள் தங்கள் இரட்சகனின் (சங்கையான) முகத்தை நாடி காலையிலும் மாலையிலும் அவனை பிரார்த்தனை செய்கின்றார்களோ, அவர்களை நீர் விரட்ட வேண்டாம். அவர்கள் பற்றிய விசாரணையில் உம்மிடமோ உம்மை பற்றிய விசாரணையில் அவர்களிடமோ எந்தப் பொறுப்பும் இல்லை. அப்படி அவர்களை நீர் விரட்டினால் அநியாயக் காரர்களில் உள்ளவராக ஆகிவிடுவீர் (திருக்குர்ஆன் 6:52)

எந்த வழியிலும் மக்களிடையே பாகுபாடு காட்டுகின்றவர்களுக்கு இஸ்லாத்தில்  இடமில்லை. அவர்களின் தயவும் இந்த இயக்கத்திற்கு அறவே தேவையில்லை. ஏக இறைவனை ஏற்றுக் கொண்டால் அவர்கள் ஒரே இனமாகவே ஐக்கியமாக வேண்டும் என்பது இங்கு விதி! சமூக சீரமைப்புக்கு அடித்தாளமிடும் இக்கொள்கையில் விட்டு கொடுப்புக்கு இடமேயில்லை என்பதை இறைவன் இங்கே மிகத் தெளிவாக குறிப்பிடுகிறான்.

இன்னொரு தருணத்தில் மக்காவின் பெரும் தலைவர்களின் குழு ஒன்று  நபிகளாரிடம் வந்து இதுபோன்றதொரு பேரத்தைப் பேசிக்கொண்டு இருந்தார்கள். அப்போது   குறைஷிகளின் தாழ்ந்த குலத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்றிருந்த அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரழி) என்ற கண்பார்வையற்ற ஒரு நபித்தோழர் அந்த அவைக்கு வந்து நபியவர்களுக்கு ஸலாம் உரைக்கிறார்கள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத நபிகள் நாயகம் (ஸல்) இந்த நேரத்தில் இவர் அவைக்கு வருகிறாரே என்று முகம் சுளிக்கின்றனர்.நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்தது கண்பார்வையற்ற அந்நபித்தோழருக்கு தெரியாது.

இருப்பினும் இறைவன் புறத்திலிருந்து கடுமையான வாசகங்களோடு எச்சரிக்கை வருகிறது. ‘அவர் கடுகடுத்தார், மேலும் (முகத்தைத்) திருப்பிக் கொண்டார்’ என்று துவங்கும் ‘அபஸ’ என்ற 90 ஆவது அத்தியாயத்தின் ஆரம்ப வசனங்களை இறைவன் உடனடியாக அருளினான்.

அக்குறைஷித் தலைவர்களுக்காக ஒரு பாமர இறைவிசுவாசியிடம் முகத்தைத் திருப்பிக்கொள்கிறீர். இஸ்லாத்தை புறக்கணிக்கும் அந்நிராகரிப்பாளரை நேசங்கொண்டு ஒரு இறைவிசுவாசியை புறக்கணிக்கிறீர் என்று நபி (ஸல்) அவர்களைக் கண்டிக்கிறான். தங்களின் திட்டத்தை உடனடியாகக் கைவிடுகிறார்கள் நபிகளார்!

மக்கத்து பிரமுகர்கள் கோரியது போல் சமான்ய மக்களை ஒதுக்கி வைத்தால்  பள்ளிவாசலி லிருந்து பாதையோரம் வரை ஏன் சுடுகாடு வரை அனைத்திலும் ஒதுக்கி வைத்திட வேண்டி வரும். இது சமூக சாபகேடாக அமையுமே தவிர முன்னேற்றமாக அமையாது.புனித ஆலயமான கஃபாவை சாமானிய மக்களும் மற்றும் அடிமைகளும் அணுக முடியாதவாறு மக்கத்து இணைவைப் பாளர்கள் நிர்வாகம் செய்து வந்தார்கள்.

இஸ்லாம் பரவி மக்கா நகரம் இஸ்லாமியர்களின் ஆளுகைக்குக் கீழ் வந்தபோது முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் இந்நிலையை முற்றிலுமாக மாற்றிய மைத்தார்கள்.மக்காவில் அடிமையாக இருந்து இஸ்லாத்தை ஏற்ற அபீசீனாவைச் சார்ந்த பிலால் என்பவர் சாமானிய மனிதர். அவரை தொழுக்கான அழப்பு விடுக்கும் அழைப்பாளராக நியமித்து நபி (ஸல்) அவர்கள் கௌரவப் படுத்தினார்கள். 

இறையச்சம் மட்டுமே உயர்வுக்கான அளவுகோலாக மாறியது.இதுபோன்ற சம்பவங்கள் மூலமாக இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கத்தின் உறுதியான தெளிவான நிலைப்பாடு உலகறிய பறைசாற்றப் படுகின்றது. இது உலகைப் படைத்தவன் வழங்கும் வாழ்க்கைத் திட்டம். கெஞ்சிக்கூத்தாடி இதை யார் காலடியிலும் சமர்பிக்க வேண்டியதில்லை.

எந்த ஒரு மனிதனுக்காகவும் குலத்துக்காகவும் நாட்டுக்காகவும் தலைவர்களுக்காகவும் இஸ்லாம் என்ற கொள்கை வளைந்து கொடுக்காது. சந்தர்பவாதத்திற்கு இங்கு இடம் கிடையாது! இதை ஏற்போர் ஏற்கட்டும். மறுப்போர் மறுக்கட்டும். இனம், நிறம், குலம்,  ஜாதி, செல்வம், செல்வாக்கு, ஆதிக்கம் போன்ற எந்த அடிப்படையிலும் மனிதன் பிற மனிதனை விட உயர்வு பெற முடியாது. இறையச்சத்தால் மட்டுமே ஒருவர் மற்றவரை விட உயர முடியும் என்கிறான் இறைவன்!

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும் கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்கள் இறைவனிடம் அதிக கண்ணியம் வாய்ந்தவர் உங்களில் அதிக இறையச்சம் கொண்டவர்தாம்.” (குர்ஆன் 49: 13) 

Share this Article

Add a Comment

Your email address will not be published.