பாவத்தின் சம்பளமா மரணம்?
ஒருவருக்கு #மரணம் வந்தாலே அவர் பாவி என்று தீர்மானிப்பவர்கள் இவ்வுலகில் உண்டு. அதேபோல ஒருவர் எப்படி மரணிக்கிறார்? எந்த நேரத்தில் மரணிக்கிறார்? எந்த இடத்தில் மரணிக்கிறார்? என்பதன் அடிப்படையில் அவரை நல்லவர் என்றோ கெட்டவர் என்றோ முடிவு செய்யும் மனநிலையும் பரவலாக மக்களிடம் உள்ளது.இறைவனின் இறுதிவேதம் #திருக்குர்ஆன் மற்றும் #நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகள் இந்த ஆதாரமற்ற நம்பிக்கைகளைத் தவறு என்று எடுத்துக் கூறுகின்றன.
சிறு வயது அல்லது இளம் வயது மரணம்
ஒருவர் வாழ்க்கையில் எதையும் அனுபவிக்காமல் இளம் வயதில் மரணித்து விட்டால் அவர் நல்லவர் அல்ல என்று சிலர் நம்புகின்றனர்.சிறு வயதில் ஒருவர் மரணித்தால் அவரது பெற்றோர்கள் கெட்டவர்கள் என்பதால் தான் பிள்ளையைப் பறிகொடுத்துள்ளனர் எனவும் பேசுகின்றனர்.இந்த உலக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சை. இதை இறைவன் தான் விரும்பியவாறு நடத்துகிறான். நுண்ணறிவாளனான அவன் ஒவ்வொரு மனிதனுக்கும் இந்தப் பரீட்சைக் கூடத்திற்கு வந்துசெல்லும் கெடுவை நிர்ணயித்துள்ளான்.
அந்த அடிப்படையில் மனிதர்களின் பிறப்பும் இறப்பும் நிகழ்கின்றன. ஒருவரது நற்செயல்கள் காரணமாக மரணம் தள்ளிப் போவதுமில்லை. அவரது தீய செயல்கள் காரணமாக மரணம் முன்கூட்டியே வருவதும் இல்லை. இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. கீழ்கண்ட இறைவசனங்கள் இதைத் தெளிவாகக் கூறுவதைக் காணலாம்:
= ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 7:34)
= அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 10:49)
= மனிதர்களுடைய அநீதியின் காரணமாக அவர்களை அல்லாஹ் தண்டிப்பதாக இருந்தால் பூமியில் எந்த உயிரினத்தையும் அவன் விட்டு வைக்க மாட்டான். மாறாக குறிப்பிட்ட காலக்கெடு வரை அவர்களைப் பிற்படுத்தியிருக்கிறான். அவர்களின் கெடு வந்ததும் சிறிது நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள். (திருக்குர்ஆன் 16:61)
= மனிதர்களை அவர்கள் செய்தவற்றுக்காக அல்லாஹ் பிடிப்பதாக இருந்தால் பூமியின் மேல் எந்த உயிரினத்தையும் விட்டு வைத்திருக்க மாட்டான். மாறாகக் குறிப்பிட்ட தவணை வரை அவர்களுக்கு அவகாசம் அளித்துள்ளான். அவர்களின் அவகாசம் வரும் போது அல்லாஹ் தனது அடியார்களைப் பார்ப்பவனாக இருக்கிறான். (திருக்குர்ஆன் 35:45)
= அவனே உங்களை மண்ணிலிருந்தும், பின்னர் விந்துத் துளியிலிருந்தும், பின்னர் கருவுற்ற சினை முட்டையிலிருந்தும் படைத்தான். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளியேற்றுகிறான். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். பின்னர் முதியோராக ஆகின்றீர்கள். இதற்கு முன்பே கைப்பற்றப்படுவோரும் உங்களில் உள்ளனர். குறிப்பிட்ட காலக் கெடுவை நீங்கள் அடைகின்றீர்கள். நீங்கள் விளங்குவதற்காக (இதைக் கூறுகிறான்) (திருக்குர்ஆன் 40:67)
= அதற்குரிய தவணை வந்து விட்டால் எவருக்கும் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (திருக்குர்ஆன் 63:11)
சிறுவயதிலேயே ஒருவர் மரணிப்பது அவரது பெற்றோரின் தீய செயல்களின் காரணமாக அல்ல என்பதைக் கீழ்கண்ட நபிமொழியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்:
“ஒரு பெண்ணுடைய மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அக்குழந்தைகள் அவரை நரகத்திலிருந்து காக்கும் தடையாக அமைவார்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி, “இரண்டு குழந்தைகள்?” என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “இரண்டு குழந்தைகள் இறந்தாலும்தான்” என்று விடையளித்தார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: புகாரி 102, 1250, 7310