சிறுவனின் கேள்வியும் சிந்திக்க வைத்த முஹம்மதலியும்
உலகப் புகழ் பெற்ற அமெரிக்காவைச் சேர்ந்த குத்துச்சண்டை வீரரான முஹம்மது அலி தனது 74ஆவது வயதில் ஜூன் 4 அன்று மரணமடைந்துள்ளார். அவர் 1977 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நியுகாசில் (Newcastle) நகரில் தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சியில் நேயர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள் பிரபலாமானவை. அதில் ஒரு சிறுவனின் கேள்விக்கு அலி அளித்த பதில் அவர் எவ்வளவு தீர்க்கமான சிந்தனை கொண்ட அறிவாளி என்பதை எடுத்துரைக்கின்றது. ஒன்பது நிமிட வீடியோ கிளிப் யூ டியுப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் வெகுவாக உலகெங்கும் பகிரப்பட்டு வருகிறது. இதன் தமிழாக்கத்தை வாசகர்களுக்கு வழங்குவதில் திருக்குர்ஆன் நற்செய்தி மலர் மகிழ்ச்சியுறுகிறது.
சிறுவன்: “முஹம்மத், நீங்கள் குத்துசண்டையிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் என்ன செய்ய போகிறீர்கள்?”கேள்வியைக் கேட்டவுடன் முஹம்மது அலி “ர்ர்ர்ர்ர்ர்ர்ர்” என்று இரண்டுமுறை குறட்டை விடுவதைப்போல பாவனை செய்கிறார். தொடர்ந்து சிரித்துக்கொண்டே “நான் உறங்கப் போகிறேன்!” என்கிறார். தொடர்ந்து ….“நான் ஓய்வு பெற்றபின் என்ன செய்ய போகிறேன் என்று உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை.ஆனால் நான் இங்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன் அது உங்கள் எல்லோரையும் சிந்திக்க வைக்கலாம்.
குறுகிய வாழ்வும் பயனும்
இந்த வாழ்க்கை உண்மையிலேயே சிறியது. இதில்தான் உங்களுடைய தூக்கம், பள்ளி வாழ்க்கை, பொழுதுபோக்கு அனைத்தும் அடங்கியிருக்கிறது. நம்முடைய பாதி வாழ்க்கை எதுவும் செய்யாமலே கழிந்து விடுகிறது.இப்போது எனக்கு 35 வயது ஆகிறது. இன்னும் 30 வருடங்களில் எனக்கு 65 வயது ஆகிவிடும். நமக்கு ஒரு முன்மாதிரி இல்லையெனில் நம்மால் எதுவும் செய்ய முடியாது.
65 வயதில் உங்கள் மனைவி அதை உங்களுக்கு கூறுவார். 65 வயதில் உங்களால் அதிகமாக எதுவும் செய்ய வழியே இல்லை.இதோ பாருங்கள், இன்னும் நான் 30 வருடங்களில் 65 வயதை அடைந்து விடுவேன்.
அந்த வருடங்களில் 9 வருடங்கள் எனது தூக்கத்திலேயே கழிந்துவிடும். ஆக அந்த 30 வருடங்கள் முழுவதும் பகலை நான் காண முடியாது. நான் திரும்ப அமெரிக்காவிற்கு பயணம் செய்வதற்கு 6 முதல் 7 மணி நேரம் ஆகிறது. அடுத்த 30 வருடங்களில் என்னுடைய எல்லா பயணங்களும் சேர்த்தால் 4 வருடங்கள் காலி! சினிமா, பொழுதுபோக்கு, தொலைக்காட்சி என என்னுடைய பொழுதுபோக்குகளுக்கு 3 வருடங்கள் காலி!
ஆக 30 வருடங்களில் 16 வருடங்கள் எனக்கு பயனுள்ளதாக இருக்கலாம். இவ்வாற நம்முடைய சொந்த வாழ்க்கை பெரும்பாலும் பயனற்றதாக கழிகிறது. சரி, இந்த 16 வருடங்களில் நான் என்ன செய்ய போகிறேன் என்பதுதான் கேள்வி! அப்படித்தானே!இது பயனுள்ளதாக அமைய என்ன வழி?
ஆம், ஒரு வழி இருக்கிறது… அது என்ன?
இறைவனை சந்திக்க இன்றே தயாராவது
அதுதான் இறைவனை சந்திக்க இன்றே தயாராவது….. #இறைவன் தன்னிடம் தயார்செய்து வைத்துள்ள சொர்க்கத்தை அடைய முயற்சிப்பது….
ரியல் எஸ்டேட் தொழிலோ வியாபாரம் செய்வதோ, குத்துசண்டை வீரர்களுக்கு பயிற்சி அழிப்பதோ இவை எல்லாம் என்னை சொர்க்கத்திற்கு அழைத்து செல்லப்போவதில்லை.
“சரி.. இங்கு எத்தனை பேர் நம்புகிறீர்கள் இறைவன் இருக்கிறான் என்று? எத்தனை பேர் நம்புகிறீர்கள் இந்த சூரியனையும் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்த சக்தி ஒன்று நமக்கு மேலே இருக்கிறது என்று? எத்தனை பேர் நம்புகிறீர்கள் நம்மை விட அறிவுடைய ஒரு சக்தியே இவற்றை படைத்தது என்று?”
பலர் கைகளைத் தூக்குகிறார்கள்.
“எத்தனை பேர் நம்புகிறீர்கள் இறைவனே இல்லை என்று?”
ஒரு சிலர் கைகளைத் தூக்குகிறார்கள்..
இறைவன் இருப்பதற்கான சான்றுகள்
முஹம்மது அலி மேஜை மீது இருந்த கண்ணாடிக் குவளையைக் காட்டி….“சரி. இறைவனை நம்ப மறுப்பவர்களிடம் கேட்கிறேன்… இதோ இந்த கண்ணாடி குவளை… இதை எந்த மனிதனும் உருவாக்கவில்லை என்று நான் சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? இது தன்னைத்தானே உருவாக்கி கொண்டது என்றால் நீங்கள் நம்புவீர்களா? இல்லைதானே, நீங்கள் நம்ப மறுக்கிறீர்கள். யாரும் நம்ப மாட்டார்கள்…
இந்த தொலைக்காட்சி நிலையம்… இதை யாரும் உருவாக்கவில்லை என்று நான் சொன்னால் முஹம்மத் அலிக்கு பைத்தியம் பிடித்திருக்கிறது என்று சொல்வீர்கள்.ஆக, இந்தக் குவளை தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இந்த ஆடைகள் தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இந்த கட்டடம் தன்னைத்தானே உருவாக்கி கொள்ள முடியாதென்றால் இம்மாபெரும் பிரபஞ்சத்தைப் பற்றி சற்று சிந்தித்துப்பாருங்கள்.
இந்த சந்திரன் எப்படி தானாக வர முடியும்? இந்த சூரியன், நட்சத்திரங்கள், நெப்டியூன், வியாழன், செவ்வாய் மற்றும் இயற்கை இவை எல்லாம் எந்த அறிவின் பின்துணையும் இல்லாமல் ஒரு திட்டமில்லாமல் எவ்வாறு தானாக உருவாக முடியும்? இவையெல்லாம் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதற்குச் சான்று பகர்ந்து கொண்டிருக்கின்றன.
நம் வினைகளுக்கு எதிர்வினை உண்டு
அதனால் நான் என்ன சொல்கிறேன் என்றால் நமது செயல்களெல்லாம் கண்காணிப்பில் உள்ளன. அந்த இறைவனால் நாமெல்லாம் தீர்ப்பளிக்கப்பட இருக்கிறோம் என நம்புகிறேன். ஒரு மனிதன் அனைத்து யூதர்களையும் கொன்று விட்டு அப்படியே சென்று விட்ட ஹிட்லர் மாதிரி இருக்க வேண்டுமா? அவர் செய்த குற்றத்திற்கு தண்டனை பெற்றாக வேண்டும்.
அதற்கான ஏற்பாடு இந்த உலகில் இல்லை என்பதை அறிவீர்கள். அந்த குற்றவாளி இப்போது தண்டிக்கப்படவில்லை என்றால் அவன் மரணித்த பிறகு தண்டனை கிடைக்கும். அதற்கான ஏற்பாடுதான் மறுமையில் நரகம்!
ஆக, நான் குத்து சண்டையிலிருந்து ஓய்வு பெறும் போது நான் என்ன செய்யப்போகிறேன்?நான் இறைவனை சந்திப்பதற்கு தயாராக வேண்டாமா? ஏனெனில் என்னுடைய விமானம் விபத்துக்குள்ளாகலாம். நம் நாட்டில் விமானங்கள் விபத்துக்கு உள்ளாகவில்லையா மற்றும் சில நேரங்களில் அவை மோதிக்கொள்ளவில்லையா?ஒவ்வொரு நாளும் மனிதர்கள் இறக்கவில்லையா? எனக்கும் மரணம் என்பது நிச்சயம்.
மரணத்திற்குப் பிறகு நமக்குக் காத்திருப்பது சொர்க்கம் அல்லது நரகம்! இந்த இரண்டில் ஒன்றுதான் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது. நரகம் என்பது நினைப்பதற்கே அதிர்ச்சியான ஒன்று! இறைவனது கட்டளைப்படி வாழாவிட்டால் நான் நரகத்தில் என்றென்றும் முடிவே இல்லாமல் எரிந்து கொண்டிருப்பேன். அந்த நரகத்தைத் தவிர்க்க நான் என்ன செய்யப் போகிறேன்? இதைத்தான் நான் சிந்தித்தாக வேண்டும்.
இறைவனை சந்தோஷப்படுத்தும் வழி
நீங்கள் என்னிடம் கேள்வி கேட்டீர்கள்… அதற்கு சாதாரணமாக என்னால் விடையளிக்க முடியாது. நான் குத்து சண்டையை விட்டு வெளியே வந்தபின்பு மக்களுக்கு என்னால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உதவிகள் செய்யப்போகிறேன். அதனால்தான் நான் இங்கு ஜானி வாக்கருடன் இருக்கிறேன். இங்கே ஒரு ஏழை மனிதர் அமெரிக்காவுக்கு வந்தார். சில வறுமையில் வாடும் சிறுவர்கள் பணம் தேவையுடையவர்களாக இருக்கிறார்கள்.
மற்றும் அவர்களுக்கு உதவி செய்ய என்னை ஒருவர் அழைத்துக் கொண்டிருக்கிறார். இறைவன் என்னை கவனித்துக் கொண்டு இருக்கிறான் என்பதை பலமாக நம்புகிறேன் நான் குத்துச்சண்டையில் ஜோ பிரேஸியரை வீழ்த்தி விட்டேன் என்பதற்காக இறைவன் என்னை புகழபோவதில்லை. ஜோ பிரேஸியர் விஷயத்திற்காக இறைவன் எனக்கு எதுவும் தரப்போவதில்லை.
இறைவன் நான் ஆங்கிலேயனா அமரிக்காக்காரனா என்பதை கவனிக்கப் போவதில்லை. எல்லாம் அவனுக்கு சமமே. எல்லாம் அவனுடையதே. ஆனால் இறைவனைப் பொறுத்தவரையில் நாம் எவ்வாறு பிற மக்களிடம் நடந்து கொள்கின்றோம், எவ்வாறு ஒருவருக்கொருவர் உதவுகின்றோம் என்பது தான் முக்கியம்!.
அதனால் நான் என்னுடைய செல்வாக்கை பயன்படுத்தி தானதர்மங்கள் செய்வதற்கும், மக்களுக்கு உதவுவதற்கும், மக்களை ஒன்றுபடுத்தவும், மதத்தின் பெயரால் நிகழ்த்தும் வெடிகுண்டு தாக்குதல்களுக்கு எதிராகப் போராடவும் என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கப் போகிறேன்.நம் எல்லோருக்குமிடையே அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்க இந்த உலகத்தில் நாம் செயல்பட்டே ஆகவேண்டும்.
நீண்ட ஆயுளானாலும் முடிவுக்கு வரும்
ஆக நான் இறந்த பின் அங்கு சொர்க்கம் இருந்தால் அதை நான் அடையவே விரும்புகிறேன். யோசித்துப்பாருங்கள், நாம் இன்னும் எவ்வளவு நாள் வாழப்போகிறோம்? 80 வருடங்களா? இங்கே இருக்கும் ஒவ்வொருவரிலும் சிலர் இன்னும் 20 வருடங்களில் மரணிக்கப் போகிறோம். சிலர் 50 வருடங்களில்… சிலர் 30 வருடங்களில்… இன்னும் சிலர் 60, 70 வருடங்களில்…. அவ்வளவுதான்!
மீறி மீறி நீங்கள் 125 வருடங்கள் வாழ்ந்தாலும்… ம்ம் அதற்கு வாய்ப்பே இல்லை.. அதுவும் ஒரு முடிவுக்கே வந்தே ஆகவேண்டும்! சரி, அவ்வாறு 250 வருடங்கள் வாழ்வதாக வைத்துக்கொண்டாலும் அதிலும் நாம் என்ன சாதித்துவிடப் போகிறோம்? அதிகபட்சமாக 145 வருடங்கள் வரை உடலுறவு கொள்ள முடியும். அதற்கு பிறகு அதுவும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்தானே!
அவ்வளவு வேண்டாம், 80 வருடங்கள் இந்த பூமியில் இருக்கப் போகிறோம் என்றே வைத்துக்கொள்வோம். உண்மையில் இந்த வாழ்க்கை என்பது ஒரு சோதனை என்பதுதானே உண்மை? நமக்கு தரப்பட்ட இந்த தவணையை நாம் எவ்வாறு செலவளித்தோம் என்பதையே இறைவன் பார்க்கப் போகிறான். அதைப் பொறுத்தே நமது நாளைய இருப்பிடம் சொர்க்கத்திலா அல்லது நரகத்திலா என்பது தீர்மானிக்கப்படும்.
உண்மை வாழ்வு இங்கல்ல!
இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருப்பது உண்மை வாழ்க்கை அல்ல. உண்மையான நீங்கள் உங்களுக்கு உள்ளே இருக்கிறீர்கள். உங்கள் உடலுக்கு வயதாகிறது… தோற்றம் மாறுகிறது…. நீங்கள் கண்ணாடின் முன் நின்று பாருங்கள். உங்களில் சிலருக்கு பற்கள் இல்லை… உங்களது தலைமுடி கொட்டிப்போகிறது. உங்களது உடம்பு பலவீனமடைகிறது. ஆனால் உங்களுடைய உயிர் அல்லது ஆத்மா என்றும் மரணிக்காது.
அவை என்றென்றும் வாழப்போகின்றன. ஆக உங்களுடைய உடல் என்பது ஆத்மாவையும் உயிரையும் தக்கவைத்துள்ள இடமாகும்.
உண்மையில் இந்த உடலுக்குள் தற்காலிகமாக உயிரை வைத்து உங்களை இறைவன் சோதிக்கிறான்… எவ்வாறு பிறரிடம் நாம் நடந்து கொள்கிறோம், இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்கிறீர்களா இல்லையா என்பதை பரிசோதிக்கவே இந்த வாழ்க்கை!
நம்முடைய உண்மையான நிரந்தரமான வாழ்விடம் சொர்க்கத்தில் அமைய வேண்டுமானால் இன்றே நமது வாழ்வை சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். பாருங்கள், இந்த உடல் நீண்ட நாள் நீடிக்கப்போவதில்லை. இந்த கார், இந்த கட்டிடம், அதைக் கட்டியவர் மரணிக்கும்போது அவை இங்கேயே இருக்கப் போகிறது. இங்கிலாந்தில் நிறைய மன்னர்கள், ராணிகள் இருந்தார்கள். ஆனால் இப்போது இறந்து விட்டனர். ஆக ஒருவர் இறந்தபின் இன்னொருவர் வருகின்றார். நாம் இங்கே நிலைத்திருக்கப் போவதில்லை.
மரணம் முடிவல்ல!
நாம் எல்லோரும் பயணிகள் என்பதே உண்மை! நம்முடையது என்று கூறிக்கொள்ளும் படியாக எதையும் நாம் சொந்தம் கொண்டாட முடியாது. உங்கள் குழந்தைகள் உட்பட உங்கள் மனைவி உட்பட யாருமே உங்களுக்கு சொந்தம் கிடையாது. அனைத்தையும் அனைவரையும் மரணத்தின்போது விட்டுசென்றேயாக வேண்டும். மிக மிக முக்கியமாக நாம் சிந்திக்கவேண்டியது என்னவென்றால் நாம் மரணிக்கும் போது என்ன நடக்கும் என்பதே!
நாம் போகப்போவது சொர்க்கத்திற்கா இல்லை நரகத்திற்கா? இதில் அலட்சியம் காட்டுவது ஆபத்து! ஏன்?அது முடிவே இ்ல்லாதது (eternity) முடிவே இ்ல்லாதது என்றால் என்ன? உதாரணத்திற்கு ஸஹாரா பாலைவனத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஸஹாரா பாலைவனத்தில் எவ்வளவு மணல் இருக்கிறது?
உதாரணத்திற்கு ஒரு துளி மணல் 1000 வருடங்களுக்கு ஒப்பாகும் மற்றும் நீங்கள் நரக நெருப்பில் இருக்கும் போது, நீங்கள் மரணிக்கும் போது நீங்கள் நரகத்தில் என்றென்றும் எரியப்போகிறீர்கள் மற்றும் என்றென்றும்.. என்றென்றும்.. அதற்கு முடிவே இல்லை.
அது எவ்வளவு தூரம் என்று புரிந்துகொள்வதற்காக உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்… ஸஹாரா பாலைவனம்… அதில் எவ்வளவு மணல் துளிகள் இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள்… இப்போது அவை அனைத்தையும் நீங்கள் ஒவ்வொன்றாகப் பொறுக்கி எடுக்கவேண்டும். ஒரு துளி மணலை எடுத்தபின் அடுத்த துளிக்காக ஆயிரம் வருடங்கள் காத்திருக்க வேண்டும் இவ்வாறு ஸஹாரா பாலைவனமே தீரும்வரை ஒவ்வொரு துளி மணலையும் நீங்கள் சேகரிக்கப் போகிறீர்கள்.
இப்படியே பாலைவனம் முழுதும் தீரும் வரை இதைத்தான் செய்யப் போகிறீர்கள். உங்களுக்குப் புரிகிறதா eternity என்பது எவ்வளவு நீண்ட காலகட்டம் என்று?
ஆக, நான் ஒரு நாள் மரணிக்கப் போகிறேன் என்பது உறுதி. அதன் பின்னர் நரகத்திற்கு செல்லப் போகிறேன் என்று கற்பனை செய்தால் அந்த அதிர்ச்சியை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. மரணம் எந்த நேரமும் எனக்கு நேரலாம்.
நான் அடிக்கடி பயணம் செய்பவன். நான் விமானத்தில் செல்லும் போது அது விபத்துக்குள்ளாகலாம். அப்போது நான் மறுமையை நேருக்குநேர் சந்தித்தே ஆகவேண்டும். இறைவனின் விசாரணையை யாரும் தப்பிக்க முடியாது. இவ்வுலகில் நீங்கள் மக்களைக் கொல்லலாம் கொள்ளை அடிக்கலாம்.
எல்லாம் செய்துவிட்டு போலீஸ் பிடியில் சிக்காமலும் தப்பிக்கலாம். ஆனால் இறைவன் ஒருவனின் பார்வையை விட்டோ அவனது தண்டனையை விட்டோ ஒருக்காலும் தப்பிக்க வழியேயில்லை. அதனால் சிறந்தது என்னவென்றால் நரகத்தைத் தவிர்த்து அவனது சொர்க்கத்தை அடைவதற்காக ஆவன செய்வதுதான் என்று நினைக்கிறேன். ஆம், என் இறைவனை சந்திக்க தயாராகப் போகிறேன். அதுதானே அறிவார்ந்த செயல்?
மொழிபெயர்ப்பு உதவி: சுதா