Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
தோல் எனும் உயிர்த்தோழன்! - Thiru Quran Malar

தோல் எனும் உயிர்த்தோழன்!

Share this Article

தோல் படுத்தும் பாடு!

மனித உடலில் தோல் வகிக்கும் பங்கு அலாதியானது. அதற்கு அழகைக் கொடுப்பது அதுதான், மனிதனுக்கு சமூகத்தில் மதிப்பைப் பெற்றுத்தருவதற்கும், அழகன், அழகி என்றெல்லாம் போற்றப்படுவதற்கும் அடுத்த பாலினத்தவரை கவருவதற்கும், அந்த கவர்ச்சியை மூலதனமாக வைத்தே விளம்பரம், வியாபாரம், சினிமா என பல துறைகள் செழிப்பதற்க்கும் காரணமாக அமைகிறது தோல்!

அதே கவர்ச்சி பலரை உழைப்பின்றியே கோடீஸ்வரர்களாக ஆக்கியுள்ளது. பலரை மக்கள் போற்றும் நாயகர்களாகவும் இஷ்ட தெய்வங்களாகவும் ஆக்கியுள்ளது. தகுதியே இல்லாத  சிலரை ஆட்சிக் கட்டிலில் ஏற்றி அழகுபார்க்கவும் காரணமாக அமைகிறது!
 உடலியல் ரீதியாகவும் தோலின் பங்கு மிக முக்கியமானது.

குளிர், வெப்பம், வலி, சுகம், மென்மை, கடினம் போன்ற பலவற்றையும் உணர்ந்து மூளைக்கு அறிகுறிகள் அனுப்பி உடலின் பாதுகாப்புப் பணியில் முக்கிய பங்கு வகிக்கிறது தோல். உடலை நோக்கி வரக்கூடிய எந்த ஆபத்தையும் உடலை அண்டவிடாமல் வலி என்ற முன்னெச்சரிக்கை ஏற்பாட்டினால் பாதுகாக்கிறது தோல்!

வலியின் உறைவிடம்

 வலி என்ற ஒன்று இல்லாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப்பாருங்கள். போக்குவரத்து நெரிசல் நிறைந்த ஒரு வீதியில் உங்கள் டூ வீலரில் பயணித்து விட்டு வீடு வந்து சேர்ந்திருப்பீர்கள். வீடு வந்து சேர்ந்ததும்தான் காண்பீர்கள், உங்கள் காலின் ஒரு சுண்டு விரல் மிஸ்ஸிங் என்பதை! வழியில் எவ்வளவு இரத்தம் வழியில் கொட்டிப் போயுள்ளது என்பதையும் அறிந்திருக்க மாட்டீர்கள்!  அவ்வளவு ஏன்?

வலி என்ற ஒன்று இல்லாவிட்டால் சாலைப் போக்குவரத்து தாறுமாறாகப் போய்விடும். சட்டம், நீதி, நியாயம் என்பவை மட்டுமல்ல, மனிதவாழ்வே  அர்த்தமற்றாதாகிப் போய்விடும். அனைத்தும் வலி என்ற உணர்வையே மையம்கொண்டுள்ளன. ஆம், அந்த வலி மையம்கொண்டு இருப்பது இந்தத் தோலில்தான்! வலி உணரும் நரம்புகளைத் (pain receptors)  தாங்கி நிற்பது இந்தத் தோல்தான்!தோல் என்ற அற்புதத்தைப் படைத்த இறைவன் தன் திருமறையில் வெளிப்படுத்தியுள்ள பிரபஞ்ச இரகசியங்களில் இதுவும் ஒன்று என்பது வேறு விடயம். 

4:56யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம்; அவர்களின் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லா (வேறு) தோல்களை, அவர்கள் வேதனையைப் (பூரணமாக) அனுபவிப்பதற்கென, அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம் – நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்.

காட்டிக்கொடுக்கும் தோல்

இப்போது நாம் கூறவந்த விடயத்திற்கு வருவோம்.  மனித உடலை இவ்வுலகத்தின் தீமைகளில் இருந்து பாதுகாக்க எவ்வாறு தோலை முக்கிய பங்கு வகிப்பதாக இறைவன் ஆக்கியுள்ளதை அறிந்தோம். அதே தோலின் மற்றொரு முக்கிய பங்கையும் அறிந்து கொண்டால் மறுமை ஆபத்துகளில் இருந்தும் நம்மைத் தற்காத்துக் கொள்ள முடியும்.

இன்று காவல்துறையினர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப  முன்னேற்றத்தின் காரணமாக குற்றவாளிகளை உடனுக்குடன் பிடிப்பதைக் கண்டு வருகிறோம். இன்றைய மொபைல் போன் மற்றும் cctv கேமராக்கள் பயன்பாடுகள், வாய்ஸ் ட்ராக்கிங் போன்ற பலவும் குற்றவாளிகளைக் கையும்களவுமாக அடையாளம் காட்டிவிடுகின்றன.

 இறைவன் மனிதனுக்காகப் படைத்த பொருட்களின் இயல்புகளை மனிதன் சிறுகச்சிறுக ஒவ்வொன்றாகக் கண்டறிந்து அதைத் தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக ஆராய்ச்சிகள் மேற்கொள்ளும்போது உண்டாகும் நேட்டங்களையே அறிவியல் வளர்ச்சி என்கிறோம். உண்மையில் பொருட்களின் இயல்புகளும் அவை இயங்கும் விதிகளும் அவை படைக்கப்படும்போது இருந்தே இருந்து வருகின்றன.

மனிதன் அவற்றைக் கண்டுபிடிக்கவும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் இவ்வளவு காலமாயிற்று என்பதே உண்மை!அந்த வகையில் நமது தோலுக்கு இருக்கும் ஒரு சிறப்புத் தன்மையை இறைவன் இன்றே எடுத்துக் கூறுவதை கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்களில் .காண்கிறோம். அந்த வசனங்களைக் காணும் முன் இவ்வாழ்க்கை பற்றிய சில உண்மைகளை இங்கு நினைவு படுத்துவது அவசிய,மாகிறது.

வாழ்க்கையும் நோக்கமும்

இம்மாபெரும் பிரபஞ்சத்தில் நாம் ஒவ்வொருவரும் புற்றீசல்களைபோல் வந்து செல்வதை அறிவோம். இந்த குறுகிய தற்காலிக வாழ்க்கை என்பது ஒரு பரீட்சையாகும். இவ்வுலகம் அதற்கான பரீட்சைக் கூடமும் ஆகும். இங்கு நமது ஒவ்வொருவரதும் செயல்கள் பல வழிகளில் பதிவாகின்றன.

இவ்வுலகம் ஒருநாள் முழுமையாக அழிக்கப்பட்ட பின் இறைவனின் கட்டளை வரும்போது முதல் மனிதர் முதல் கடைசி மனிதர் வரை இங்கு வாழ்ந்து மறைந்த அனைவரும் நீதி விசாரணை செய்யப்படுவதற்காக உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்.. விசாரணையன்று நாம் இந்த பூமியில் செய்த புண்ணியங்கள் மற்றும் பாவங்கள் அனைத்தும் நமக்கு முன் எடுத்துக்காட்டப்படும்.

அதாவது இறைவன் எந்த செயல்களை ஏவினானோ அவையே புண்ணியங்கள் மற்றும் எதைவிட்டும் தடுத்தானோ அவையே பாவங்கள். விசாரணையின் முடிவில் யாரிடம் புண்ணியங்கள் மிகைக்குமோ அவர்களுக்கு சொர்க்கமும் யாருடைய பாவங்கள் மிகைக்குமோ அவர்களுக்கு நரகமும் விதிக்கப்படும்.

ஆக, யார் இறைவன் கூறும் எவல்விலக்கல்களுக்கு ஏற்ப வாழ்ந்தார்களோ அவர்களே இந்தப் பரீட்சையில் வெற்றி அடைகிறார்கள். இறைவனின் ஏவல் விலக்கல்களை அடிப்படையாகக்கொண்ட வாழ்க்கைத் திட்டமே இஸ்லாம் என்று அறியப்படுகிறது.

 நமக்கெதிரான சாட்சிகளாக நம் அவையவங்கள்

சரி, இந்த வாழ்க்கைப் பரீட்சைக்கும் தோலுக்கும் என்ன தொடர்பு? ஆம், பிறப்புமுதல் இறப்புவரை மனிதனோடு ஒட்டி உறவாடும் இந்தத் தோலில் மனிதனின் அனைத்து செயல்களின் பதிவுகளும் காணப்படுகின்றன என்பதே நாம் சிந்திக்க வேண்டிய விடயமாகும். மேற்கூறப்பட்ட நீதிவிசாரணையின் போது நமது தோலே நமக்கு எதிரியாக சாட்சி சொன்னால் எப்படியிருக்கும்? …

இதோ அந்தக் காட்சியை திருமறை படம்பிடித்துக் காட்டுகிறது:

41:19. மேலும், இறைவனின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள்.

41:20இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும்.

ஆம், மனிதன் பிறந்தது முதல் இறக்கும் வரை அவனோடு ஒட்டி உறவாடிக் கொண்டிருப்பவை அவனுடைய காதுகளும் கண்களும் தோல்களும். ஒலி அலைகள் காதுகளால் ஏற்கப்படுவதையும் ஒளி அலைகள் கண்களால் ஏற்கப்படுவதையும் அவற்றை உரிய இடங்களில் பதிவு செய்வதையும் இன்றைய அறிவியல் நமக்கு  சொல்லித் தருகிறது.

இவற்றோடு தோல்களும் நம்  செயல்பாடுகளின் பதிவுகளைத் தாங்கி நிற்கின்றன என்பது மேற்படி வசனம் எச்சரிக்கிறது. இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணையின்போது அவை மனிதனைக் காட்டிக்கொடுக்கும்போது அங்கு நடக்கும் உரையாடலைப் படம்பிடித்துக் கட்டுகிறான் இறைவன்:

41:21. அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும்.

41:22. “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ(ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள்.

41:23. ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்).

41:24. ஆகவே, அவர்கள் (வேதனையைச் சகித்துப்) பொறுமையாக இருந்த போதிலும், அவர்களுக்கு (நரக) நெருப்புத்தான் தங்குமிடம் ஆகும் – அன்றி (கூக்குரலிட்டு) அவர்கள் மன்னிப்புக்கேட்ட போதிலும், அவர்கள் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

இன்று நாம் எந்தக் காரியத்தைச் செய்தாலும் காது, கண், தோல் இவற்றை மறைத்துக்கொண்டு செய்ய முடியாது. இந்த உணர்வு நம்மில் எப்போதும் இருக்குமானால் நம்மைப் பாவங்கள் அண்டாது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.