Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பொருள் போதையால் அழிந்த நண்பன்! - Thiru Quran Malar

பொருள் போதையால் அழிந்த நண்பன்!

Share this Article

இவ்வுலகில் செல்வம் என்பது முழுக்க முழுக்க இறைவனுக்கு சொந்தமானது. மனிதனின் உண்மை நிலையை பகுத்தறிவு கொண்டு சிந்திக்கும் எவரும் அது மனிதனிடம் தற்காலிகமாக வந்து செல்வது என்பதை உணர்வார்கள்.

செல்வம் என்பது இறைவனால் மனிதனுக்கு தற்காலிகமாக வழங்கப்படும் சோதனைப் பொருளாகும் என்பதை உணர்ந்த உண்மையான இறைவிசுவாசிகள் அவற்றை முறைப்படி கையாண்டு மறுமையில் சொர்க்கத்தைப் பெற முயற்சிப்பார்கள். ஆனால் இதை உணராத அறிவீனர்கள் இம்மையிலும் நிம்மதியை இழக்கிறார்கள்.

மறுமையிலும் நரக வேதனையை அடைகிறார்கள். அவ்வாறு தங்களுக்கு வழங்கப்பட்ட செல்வத்தைப் பற்றி இருவேறு கண்ணோட்டம் கொண்ட இரு நண்பர்களின் சரிதையைத் திருக்குர்ஆன் தனது பதினெட்டாம் அத்தியாயத்தில் கூறுகிறது.

18:32(நபியே!) இரு மனிதர்களை அவர்களுக்கு உதாரணமாகவும் கூறுவீராக! அவ்விருவரில் ஒருவருக்கு நாம் திராட்சைத் தோட்டங்களில் இரண்டைக் கொடுத்தோம்; இன்னும் பேரீத்த மரங்களைக் கொண்டு அவ்விரண்டையும் சூழப்பட்டவை ஆக்கினோம், அவ்விரண்டிற்கும் இடையில் (தானிய) விவசாயத்தையும் அமைத்தோம்.

18:33அவ்விரு தோட்டங்களும் அவற்றின் பலன்களை – எப்பொருளையும் குறையாது கொடுத்துக் கொண்டிருந்தன. அவ்விரண்டிற்கும் நடுவே நாம் ஓர் ஆற்றையும் ஒலித்தோடச் செய்தோம்.

சற்று கற்பனை செய்து பாருங்கள்… இரண்டு மிகப்பெரிய திராட்சைத் தோட்டங்கள்.. அவ்விரண்டையும் பேரீத்தமர தோட்டங்கள் சூழ்ந்திருக்கின்றன. இப்படிப்பட்ட பெரும் தோட்டங்களின் நடுவே தானியங்களை உற்பத்தி செய்யும் வயல். இவற்றின் நடுவே சதா ஒலித்தோடிக் கொண்டிருக்கும் ஒரு ஆறு! அங்கு விளைச்சலுக்குப் பஞ்சமில்லை.

இவற்றைப் பராமரிக்க ஏராளமான பணியாளர்கள். இவைபோக அவனுக்கு இன்னும் பல வருமானங்களும் இருந்தன. அந்த இரு நண்பர்களில் ஒருவன் இப்படிப்பட்ட பெரும் செல்வந்தன். அவனுக்கு தன் செல்வம் சேரச்சேர, விளைச்சல்கள் வெகுவாக அதிகரிக்க அவனுக்கு செல்வச்செருக்கு என்ற போதை தலைக்கேறியது.

மனித வாழ்வு என்பது தற்காலிகமானதே, விவசாயமும் விளைச்சலும் இறைவன் தருவதே, மரணமும் அதைத் தொடர்ந்து மறுமையும் வர உள்ளன, இறைவனிடம் தனக்கு வழங்கப்பட்ட செல்வம் பற்றி விசாரணை உள்ளது என்ற உண்மைகளையெல்லாம் அவனுக்கு ஷைத்தான் மறக்கடித்தான். தன்னிலை மறந்து தன் தோழனிடம் தன் செல்வநிலை பற்றி பெருமை பாராட்டினான் இவன்.

18:34இன்னும் அவனுக்கு (வேறு) கனிகளும் இருந்தன; அப்பொழுது அவன் தன் தோழனிடம் விதண்டாவாதம் செய்தவனாக: “நான் உன்னை விடப் பொருளால் அதிகமுள்ளவன், ஆட்களிலும் நான் (உன்னை) மிகைத்தவன்” என்று கூறினான்.

18:35(பெருமையினால்) தன் ஆத்மாவுக்குத் தீங்கிழைத்தவனாக தன் தோட்டத்திற்குள் நுழைந்தான்; அவன், “இந்த(த் தோட்டம்) எப்பொழுதாவது அழிந்துவிடும் என்று நான் எண்ணவில்லை” என்றும் கூறிக் கொண்டான்.

18:36. (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை ஏற்படும் என்றும் நான் எண்ணவில்லை. (அப்படி ஏதும் நிகழ்ந்து) நான் என் இறைவனிடம் மீண்டும் கொண்டு செல்லப்படுவேனாயின், நிச்சயமாக இங்கிருப்பதைவிட மேலான இடத்தையே நான் காண்பேன்” என்றும் கூறினான்.

செல்வச்செருக்கு அவனை எப்படியெல்லாம் பிதற்ற வைக்கிறது பாருங்கள்! ஷைத்தானின் தாக்கம் அப்படிப்பட்டது. அவனது தோழனோ நேர் எதிரான கருத்தைக் கொண்டிருந்தான். அவனது உண்மை நிலை பற்றியும் இவற்றின் பின்னணியில் அனைத்துக்கும் காரணமாக இருக்கும் இறைவனைப் பற்றியும்  நினைவூட்டினான்:

18:37அவனுடைய தோழன் அவனுடன் (இது பற்றித்) தர்க்கித்தவனாக: “உன்னை மண்ணிலிருந்தும், பின் ஒரு துளி இந்திரியத்திலிருந்தும் படைத்து, பின்பு உன்னைச் சரியான மனிதனாக ஆக்கினானே அவனையா நீ நிராகரிக்கின்றாய்?” என்று அவனிடம் கேட்டான்.

18:38“ஆனால், (நான் உறுதி சொல்கிறேன்:) அல்லாஹ் – அவன்தான் என் இறைவனாவான்; என் இறைவனுக்கு நான் யாரையும் இணை வைக்கவும் மாட்டேன் –

செல்வச்செருக்கு எவ்வளவு பெரிய பாவத்தைச் செய்யத் தூண்டுகிறது! நேற்றுவரை ஒன்றுமே இல்லாமல் இருந்து, பின்னர் ஒரு அற்பமான இந்திரியத் துளியில் இருந்து படிப்படியாக வளர்த்து மனிதனாக உருவாக்கி அவனுக்கு வேண்டியதையெல்லாம் கொடுத்துப் பரிபாலித்து வருபவனை மறுத்து, தன் செல்வமே எல்லாம் அதுவே கடவுள் என்று வழிபடும் நிலைக்கு மனிதனைக் கொண்டு செல்கிறது.

படைத்த இறைவனுக்கு பதிலாக மற்றவர்களையோ, உயிரற்ற உணர்வற்ற பொருட்களையோ வணங்குவதே இணைவைத்தல் என்று அறியப்படுகிறது. இப்பாவத்தை இறைவன் மன்னிக்காத பாவம் என்றும் இதைச் செய்பவர்களுக்கு மறுமையில் தண்டனை நிரந்தர நரகம் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

18:39. “மேலும், நீ உன் தோட்டத்தில் நுழைந்தபோது “மாஷா அல்லாஹு; லா குவ்வத்த இல்லா பில்லாஹ்” – அல்லாஹ் நாடியதே நடக்கும்; அனைத்து சக்தியும் அல்லாஹ்வுக்கேயன்றி வேறில்லை – என்று நீ கூறியிருக்க வேண்டாமா? செல்வத்திலும், பிள்ளையிலும் நான் உன்னைவிடக் குறைந்தவனாக இருப்பதாய் நீ கண்ட போதிலும்

18:40“உன்னுடைய தோட்டத்தைவிட மேலானதை என் இறைவன் எனக்குத் தரவும் (உன் தோட்டத்தின் மீது) வானத்திலிருந்தும் இடிகளை அனுப்பி அதை அதனால் மழுமட்டையான திடலாக ஆக்கி விடவும் போதும்.

18:41“அல்லது அதன் நீர் முழுதும் உறிஞ்சப்பட்டதாகி – அதை நீ தேடிக்கண்டு பிடிக்க முடியாதபடியும் ஆகிவிடலாம்” என்று கூறினான். அறிவும் விவேகமும் நண்பனின் அறிவார்ந்த வார்த்தைகள் அவனைத் திருத்தவில்லை. இறுமாப்பு அவனை சுயநினைவுக்கு மீளாமல் தடுத்தது!நண்பனின் கூற்று போல இறைவன் அந்த அகங்காரிக்கு வழங்கியவற்றைப் பின்வாங்கிக் கொள்ள தீர்மானித்தான் போலும்! அவனுக்குத்தான் அது எளிதாயிற்றே. அவனைப் பொறுத்தவை ‘ஆகுக’ என்று கட்டளையிட்டால் எக்காரியமும் ஆகிவிடுமே!

18:42அவனுடைய விளைபொருட்கள் அழிக்கப்பட்டன. அதற்காக தான் செலவு செய்ததைக் குறித்து (வருந்தியவனாக) இரு கைகளையும் பிசைந்து கொண்டிருந்தான். அ(த்தோட்டமான)து வேரோடு சாய்ந்து கிடக்கின்றது. (இதனைப் பார்த்த) அவன் “என் இறைவனுக்கு எவரையும் நான் இணை வைக்காமல் இருந்திருக்க வேண்டுமே!” என்று கூறினான்.

18:43மேலும், அல்லாஹ்வையன்றி, அவனுக்கு உதவி செய்யும் கூட்டத்தார் எவரும் அவனுக்கு இருக்கவில்லை; ஆகவே, அவன் (இவ்வுலகில்) எவராலும் உதவி செய்யப்பட்டவனாக இல்லை.

18:44அங்கே உதவிசெய்தல் உண்மையான அல்லாஹ்வுக்கே உரியது, அவன் கூலி வழங்குவதிலும் மிக்க சிறந்தவன்; முடிவெடுப்பதிலும் மிக்க மேலானவன்.

இந்த இரு நண்பர்களின் சரிதையைக் கூறிய இறைவன் தொடர்ந்து வாழ்வின் உண்மை நிலையைப் பற்றி சிந்திக்க அழைகிறான்:

18:45மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! “அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன; ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான்.

18:46செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும்; என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.

Share this Article

Add a Comment

Your email address will not be published.