இஸ்லாமிய பண்டிகைகளின் தனிச்சிறப்புகள்
உலகெங்கும் எல்லா சமுதாய மக்களுக்கும் பண்டிகைகள் உண்டு. நாத்திகக் கொள்கைகளைக் கொண்டவர்களும் கூட தங்கள் தலைவர்களின் பிறந்த நாளையோ அல்லது ஏதாவது சிறப்பு நிகழ்வுகள் நடந்த நாட்களையோ கொண்டாடவே செய்கின்றனர்.இஸ்லாம் என்ற இறைவனின் மார்க்கமும் அதனைப் பின்பற்றுவோருக்கு இரண்டு பண்டிகைகளைக் கற்பிக்கிறது.
- ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை
- தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை
மற்ற பண்டிகைகளுக்கும் இஸ்லாமிய பண்டிகைகளுக்கும் இடையே பல வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும்.
1.பண்டிகைகளுக்கும் கொண்டாடுவோருக்கும் உள்ள தொடர்பு:
உலகின் பெரும்பாலான பண்டிகைகளைக் கொண்டாடுவோரிடம் எதற்காக நீங்கள் இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடுகிறீர்கள் என்று கேட்டால், “நாங்கள் எங்களின் மூதாதையர்கள் இதைக் கொண்டாடினார்கள், அதனால்தான் கொண்டாடுகிறோம்” என்று கூறுவார்கள்.
பண்டிகை தொடர்பான நபர்களோடும் சம்பவங்களோடும் அவர்களுக்கும் தொடர்பைக் காண்பது அரிதே.ஆனால் இஸ்லாமியப் பண்டிகைகள் இதில் வேறுபட்டு நிற்பதைக் காணலாம்.முக்கியமான இஸ்லாமியக் கடமைகளை ஒட்டியே இஸ்லாமிய பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன.
ஈகைத் திருநாள் எனும் ரம்ஜான் பண்டிகை
திருக்குர்ஆன் என்ற அற்புத வாழ்வியல் வழிகாட்டி நூலை தந்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறும் முகமாக ரமலான் மாதம் பகல் முழுக்க உண்ணாமல் விரதம் இருந்தும் இரவில் நின்று வணங்குவதிலும் வழிபாடுகளிலும் முஸ்லிம்கள் ஈடுபடுகிறார்கள். இந்த மாதத்தை நிறைவு செய்யும்போது இயற்கையான சந்தோஷத்தை வெளிப்படுத்தும் நாளாக ஈதுல் பித்ர் என்ற ஈகைத் திருநாள் கொண்டாடப்படுகிறது.
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பண்டிகை
சுமார் 5000 வருடங்களுக்கு முன் ஒரு முன்மாதிரி வழிகாட்டியாகவும் இறைத்தூதராகவும் திகழ்ந்த இப்ராஹீம் என்பவரின் தியாகத்தை நினைவுகூரும் முகமாகவும் அதில் இருந்து பெறும் படிப்பினையை வாழ்வில் நடைமுறைப்படுத்தவும் ஒவ்வொரு முஸ்லிம்களும் பணிக்கப்படுகிறார்கள்.
எனவே வசதியுள்ள ஒவ்வொருவரும் ஒரு பிராணியை கூட்டாகவோ தனித்தோ பலியிட்டு அதை ஏழைகளோடு பங்கிட்டு பகர்ந்து உண்பதே பக்ரீத் பண்டிகை. அதேபோல் பொருள் வசதியும் உடல்நலமும் கொண்டோர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள ஹஜ் என்ற கடமையின் முடிவும் இதையொட்டியே அமைகிறது. எனவே இதற்கு ஹஜ்ஜுப் பெருநாள் என்றும் கூறுவர்.
2.அனைவரையும் அரவணைத்துக் கொண்டாடுதல்
இஸ்லாமியப் பண்டிகைகளை யாரும் தனித்துக் கொண்டாட முடியாது.
= ரம்ஜான் மாதத்தில் நோன்பு இருக்கும்போதும் ஏழைகளை அரவணைத்தே நோன்பை அனுஷ்டிக்க இஸ்லாம் வலியுறுத்துகிறது, யாராவது நோன்பை அனுஷ்டிப்பவருக்கு நோன்பு திறக்க உண்ணக் கொடுத்தால் அவரது நோன்பின் நற்கூலி போன்றே கொடுப்பவர்களுக்கும் எழுதப் படும் என்பது நபி மொழி.
இதன் காரணமாக தினமும் பள்ளிவாசல்களில் கூட்டாக நோன்பு திறப்பதையும் பகிர்ந்து உண்ணுவதையும் நீங்கள் காண்கிறீர்கள்.அதேபோல் நோன்பு மாதத்தை நிறைவு செய்யும் நாளான ரம்ஜான் பண்டிகையின் அன்று ஏழைகளை அவர்களின் வீடுதேடிச் சென்று நாம் உண்ணும் அதே உணவுதானியங்களை வழங்கிவிட்டே பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்று இஸ்லாம் கற்பிக்கிறது.
இதற்கு ஃபித்ரா என்று பெயர். அதாவது சமூகத்தில் நலிந்தவர்களோடு பெருநாளின் சந்தோஷத்தை பகிர்ந்துகொள்ள செல்வந்தர்களைக் கட்டாயப்படுத்துகிறது இஸ்லாம்.
= பக்ரீத் பண்டிகை அன்று பலியிடப்படும் பிராணிகளின் மாமிசத்தின் மூன்றில் ஒரு பகுதியை உறவினர்களோடும் இன்னொரு பகுதியை சமூகத்தில் உள்ள ஏழைகளோடும் பகிர்ந்து உண்ணுமாறு கற்பிக்கப்படுகிறது.
= பொதுவாகவே எல்லாத் தொழுகைகளையும் பள்ளிவாசல்களில் கூட்டாக தோளோடு தோள் சேர்ந்து அணிவகுத்துத் தொழ வலியுறுத்தும் இஸ்லாம், இந்த பெருநாள் தொழுகைகளை பெரும் திடல்களில் ஊர் மக்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து நிறைவேற்றப் பணிக்கிறது.
3.ஒழுக்கமும் கட்டுப்பாடும் பேணுதல்
பண்டிகை, கொண்டாட்டம் என்ற பெயரில் மதுவருந்துதல், வீண் விரயங்கள் செய்தல், பட்டாசு வெடித்தல், சுற்றுப் புற சூழலை மாசுபடுத்துதல், பொதுமக்களுக்கு இடையூறு செய்தல் அந்நிய ஆண்களும் பெண்களும் ஆடல் பாடல்கள் என்று வரம்புகள் மீறி கலத்தல் போன்ற அனைத்தையும் இஸ்லாம் தடை செய்கிறது.
வரம்புகள் மீறாத விளையாட்டுகளுக்கும் பொழுதுபோக்குகளுக்கும் அன்று தடை இல்லை. ஒழுக்கம் பேணுதலை எந்த சூழலிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. மேலும் இஸ்லாமிய பண்டிகைகள் இறைவணக்கத்தை கொண்டே ஆரம்பிக்கப்படும்.
பெருநாள் அன்று முதல் வேலை தொழுகையே. பண்டிகைகள் அன்று அதிகமாக தக்பீர் (இறைவனின் பெருமையை) முழங்குவது வலியுறுத்தப்படுகிறது:
நீங்கள் (ரமளானின்) எண்ணிக்கையை நிறைவு செய்யுங்கள்; உங்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் (தக்பீர் முழக்கத்தினால்) பெருமைப்படுத்துங்கள். (இதன் மூலம்) நீங்கள் நன்றி செலுத்துபவர்களாக திகழலாம். (அல்குர்ஆன் 2:185)
ஆக, இறைவனின் தூய மார்க்கமான இஸ்லாம் ஒன்றே மனிதகுலம், ஒருவனே இறைவன் என்னும் தனது கொள்கையை பண்டிகைகளின் போது இன்னும் வீரியமாக வலியுறுத்தி மக்களை செயல்பட வைப்பதை ஆராய்வோர் காணலாம்.