Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள் - Thiru Quran Malar

இயற்கை தாங்கி நிற்கும் பாடங்கள்

Share this Article

பாமரர்களையும் படித்தவர்களையும் தங்களை சுற்றி சதா நடந்துகொண்டிருக்கும் எண்ணற்ற அற்புதங்களைப் பார்வையிடுமாறு அழைக்கிறான் இவைகளைப் படைத்தவன்.

அவ்வாறு மனிதனை பகுத்தறிவுகொண்டு சிந்திக்க வைத்து அவனது வாழ்வின் நோக்கத்தையும் இந்த வாழ்க்கைக்குப் பிறகு காத்திருப்பதையும் பற்றி நினைவூட்டுவதை  திருக்குர்ஆனில் பற்பல இடங்களில் காணலாம்.

இதோ கீழ்கண்ட வசனங்களிலும்….  

 36:33. அன்றியும், இறந்து (தரிசாகக்)கிடக்கும் பூமி அவர்களுக்கு ஓர் அத்தாட்சியாகும்; (பின்னர் மழையினால்) அதனை நாமே உயிர்ப்பித்து, அதிலிருந்து தானியத்தை வெளிப்படுத்துகின்றோம்; அதிலிருந்துதான் இவர்கள் உண்கிறார்கள்.

36:34. மேலும், அதில் நாம் பேரீத்த மரங்களினாலும், திராட்சை(க் கொடி)களினாலும் தோட்டங்களை உண்டாக்குகிறோம்; இன்னும் அதில் நீரூற்றுக்களைப் பீறிட்டு ஓடச்செய்கின்றோம்.

36:35. அதன் பழவகைகளை அவர்கள் உண்பதற்காக; ஆனால் அவர்களுடைய கைகள் இதை உண்டாக்கவில்லை – ஆகவே அவர்கள் நன்றி செலுத்தமாட்டார்களா?

36:36. பூமி முளைப்பிக்கின்ற (புற்பூண்டுகள்) எல்லாவற்றையும், (மனிதர்களாகிய) இவர்களையும், இவர்கள் அறியாதவற்றையும் ஜோடி ஜோடியாகப் படைத்தானே அவன் மிகவும் தூய்மையானவன்.இவையும் இன்னும் எண்ணற்ற அருட்கொடைகளையும் சலிக்காமல் தந்துகொண்டு இருக்கிறது இந்த பூமி என்ற பொக்கிஷம்! அனைத்துமே இலவசமாக! இவையெல்லாம் நிகழ்வது இந்த மனிதன் என்ற ஒரு ஜீவி இங்கிருப்பதனால்தானே! வானத்திலும் அற்புதங்களுக்குப் பஞ்சமா?

10:5.  அவன்தான் சூரியனைச் (சுடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரனை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை – அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவரிக்கின்றான்.

10:6.  நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.

ஆம், இந்த சூரியனும் சந்திரனும் இன்ன பிற கோள்களும் நட்சத்திரங்களும் எல்லாம் படைக்கப் பட்டு இருப்பதும் இங்கு இரவும் பகலும் மாறிமாறி வந்து கொண்டு இருப்பதும் இன்ன பிற அருட்கொடைகள் அனைத்தும் வீணுக்காக அல்ல! மனிதன் என்ற ஒரு ஜீவி இங்கு வாழ்ந்துக்கொண்டு இருப்பதால்தானே! இவை தக்க உருவிலும் அளவையிலும் படைக்கப்பட்டு சமநிலை தவறாது இயக்கப் பட்டு வருவது மனிதன் என்ற ஜீவியை மையப்படுத்தியே என்பதை சிந்திப்போர் உணரலாம். 

தன்னைத்தானே சுற்றிக்கொண்டு பூமியை சுற்றிவரும் கோளம் சந்திரன். அதைப் போலவே சூரியனை மையமாகக்கொண்டு தன்னைத்தானே சுற்றிவரும் கோளம் நாம் வாழும் பூமி. இவற்றின் சுழற்சி வேகத்திலோ இவைகளுக்கு இடையேயுள்ள தூரத்திலோ ஒரு சிறிதளவு மாற்றம் நேர்ந்தாலும் மனித வாழ்வையே பாதித்து அவனை அழித்து விடும்.

உதாரணமாக சூரியனுக்கும் பூமிக்கும் இடையேயான தூரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அது சற்று கூடிவிட்டால் குளிரில் நாம் இறந்து விடுவோம். அது சற்று குறைந்து விட்டாலோ வெப்ப மிகுதியைத் தாங்கமுடியாமல் இறந்து விடுவோம். இதைப்போல ஒவ்வொன்றையும் சிந்தித்தால் இப்பிரபஞ்சத்தின் இயக்கத்தின் ஒரே நோக்கம் மனித வாழ்வை இங்கு தக்க வைப்பதே என்பது பகுத்தறிவு நமக்கு சொல்லும் பாடமாகும்.

அவ்வாறென்றால் இந்த மனித வாழ்வின் நோக்கம்தான் என்ன?
நம்மைச்சுற்றி நாம் அன்றாடம் காணும் அல்லது புழங்கும் பொருட்கள் ஒவ்வொன்றும் ஒரு நோக்கத்துடனேயே படைக்கப் பட்டிருப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறெனில் இந்த மனிதன் என்ற அதிநுட்பமும் சிக்கலும் நிறைந்த ஒரு தயாரிப்பின் (most complicated product) பின்னால் ஒரு நோக்கம் இல்லாமல் போகுமா?
அதைத்தான் இறைத்தூதர்களும் இறைவேதங்களும் நமக்கு எடுத்துச் சொல்கின்றன.

 18:7(மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார் என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.

அதாவது இந்த குறுகிய வாழ்வு என்பது ஒரு பரீட்சை என்பதும் இந்த பூமி என்பது அதற்கான பரீட்சைக் கூடம் என்பதும் நாம் உறுதியாக அறிய முடிகிறது.இந்த வாழ்க்கை என்னும் பரீட்சை ஒருநாள் முடிவுக்கு வரும், இவ்வுலகமும் அழியும், மீண்டும் நாம் விசாரணைக்காக எழுப்பப் படுவோம், நம்மைப் படைத்தவனை சந்திக்க உள்ளோம் என்னும் சத்தியத்தை பெரும்பாலோர் மறந்து வாழ்கிறார்கள். அவர்களைப் பற்றியும் இறைவன் எச்சரிக்கிறான்…

10:7 நிச்சயமாக எவர்கள் நம்மைச் சந்திப்பதை(ச் சிறிதும்) நம்பாது, இவ்வுலக வாழ்க்கையை (மிகவும்) விரும்பி, அதில் திருப்தியடைந்து கொண்டும் இன்னும் எவர்கள் நம் வசனங்களைப் புறக்கணித்துக் கொண்டும் இருக்கிறார்களோ –

10:8. அவர்கள் சம்பாதித்த (தீமைகளின்) காரணமாக அவர்கள் தங்குமிடம் நரகம் தான்.ஆம், அவர்களுக்கு இந்த சத்தியத்தை பூமி வாழ்க்கையின் போது எடுத்துச் சொன்னபோது அவர்கள் இவற்றை அப்பட்டமாக மறுத்தார்கள், கேலி செய்தார்கள். இறைவனுக்கு நன்றி மறந்து வாழ்ந்தார்கள். அதற்கான தண்டனையே நரகம் என்பது!ஆனால் இறைவன் கூறுபவற்றை நம்பி அதன்படி செயல்புரிந்த நல்லோரின் நிலையோ மிக்க உயர்வானதாக இருக்கும் என்கிறான் இறைவன்!

10:9. நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை  கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்; இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.அந்த சொர்க்கம் மட்டுமா? அங்கு அவர்கள் இவ்வுலகில் காணத் துடித்துக்கொண்டிருந்த தங்கள் இறைவனை நேரடியாகக் காணும்போது ஏற்படும் மகிழ்ச்சியைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?

10:10. அதில் அவர்கள்: “(எங்கள்) அல்லாஹ்வே! நீ மகா பரிசுத்தமானவன்” என்று கூறுவார்கள்; அதில் (தம் தோழர்களைச் சந்திக்கும் போது) அவர்களின் முகமன் ஸலாமுன் என்பதாகும். “எல்லாப் புகழும் அகிலங்கள் அனைத்துக்கும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே” என்பது அவர்களது பிரார்த்தனையின் முடிவாகவும் இருக்கும்.

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது பொருள்) 

Share this Article

Add a Comment

Your email address will not be published.