இயேசுவிடமிருந்து முஸ்லிம்கள் கற்கும் பாடங்கள் -1
இயேசுவின் தோற்றமும் விண்ணேற்றமும்
யாகோப்(யஃகூப்) என்ற தீர்க்கதரிசியே ‘இஸ்ராயீல்’ என்றும் அழைக்கப்பட்டார்கள். இவர்களின் சந்ததியில் வந்தவர்கள்கள்தான் யூதர்கள் என்று அழைக்கப்படக்கூடிய இஸ்ரவேலர்கள்.
யாகோபிற்கு மரணம் நெருங்கியதும் அவர் தம் மக்களிடம் கேட்கிறார் ”எனக்கு பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?”மக்கள் பதில் சொல்கிறார்கள் ”நீங்கள் வணங்கிய அந்த வணக்கத்திற்குரியவனும் உங்கள் (குடும்ப) முன்னோர்களான அப்ரஹாம்(இப்ராஹீம்) இஸ்மவேல்(இஸ்மாயீல்) ஈசாக்(இஸ்ஹாக்) ஆகியோர் வணக்கத்திற்குரியவனாக ஏற்று வணங்கிய அந்த ஒரே இறைவனையே வணங்குவோம்” (அல் குர்ஆன் 2:133)
யாகாபின் சந்ததிகள் (யூதர்கள்) ஏக இறை வழிபாட்டிலேயே நிலைத்திருந்தார்கள். பல இறைத்தூதர்களும் அந்த சந்ததிகளில் வந்தார்கள். பல இறைத்தூதர்களிடமிருந்து அறிவுரைகளைப் பெற்றபோதிலும் யூதர்கள் பின்னாளில் கடின சித்தம் உள்ளவர்களாகவும் எத்தகைய கொடுமையை செய்வதற்கும் அஞ்சாதவர்களாகவும் மாறிப்போனர்கள்.
மோஸே அவர்களுக்குப் பிறகு இறைவன் தொடர்ச்சியாக யூதர்களுக்காக தீர்கதரிசிகளை அனுப்பிக் கொண்டிருந்தான். அப்படி அனுப்பப்பட்ட தீர்க்கதரிசிகள் அவர்களது அநியாயமான செயல்பாடுகளுக்கு எதிராக இருந்ததால் அவர்களில் பலரும் அந்த யூதர்களால் பொய்பிக்கப்பட்டார்கள் அல்லது கொலை செய்யப்பட்டார்கள்.
இந்த சூழலில்தான் அந்த சமூகத்திற்கு வழிகாட்ட இயேசு(ஈஸா) தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எவ்வளவுதான் கெட்ட சமுதாயமாக இருந்தாலும் அதிலும் அபூர்வமாக இறைவனுக்கு அஞ்சி தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளக் கூடிய சில நல்ல மனிதர்கள் இருந்து விடுவது இயல்புதான்.
அந்த நல்லவர்கள் மூலமாகவும், தாம் நல்லவர்களாக உருவாக்கும் தம்முடைய சந்ததிகள் மூலமாகவும் – வரும் தலைமுறைக்கு – நல்ல விஷயங்கள் போய் சேர இது வழிவகுக்கிறது. இறைவன்தான் இந்த ஏற்பாட்டை செய்கிறான். இறைவனின் இந்த ஏற்பாட்டின் அடிப்படையில்தான் யூத வம்சத்தில் பிறந்த இயேசு(ஈஸா) அவர்களின் பாட்டி – அதாவது மரியாள்(மர்யம்) உடைய தாயார் – நல்லவர்களாக இருந்திருக்கிறார்கள்.
இறைவனுக்கு அஞ்சி அவனுக்கு மட்டும் வழிபட்டு நடந்த அந்த அம்மையாரின் பிரார்த்தனைக்காகவும், இயல்பாக அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள் பொய்பிக்கப்பட்டு பலர் கொலையும் செய்யப்பட்டதால் கடின சித்தம் படைத்த யூதர்களை நல்வழி படுத்த இயல்புக்கு மாற்றமாக ஒரு அத்தாட்சி மிக்க இறைத்தூதரை அனுப்புவோம் என்ற இறைவனின் ஏற்பாட்டின் படியுமே இயேசு(ஈஸா) அவர்களின் பிறப்பு நிகழ்கிறது
(இயேசுவாகிய) அவர் (நம்முடைய) அடியாரேயன்றி வேறில்லை. அவர்மீது நாம் அருள்புரிந்து இஸ்ராயீலின் மக்களுக்கு அவரை ஓர் உதாரணமாக்கினோம் (அல் குர்ஆன் 43:59)
இறைத்தூதர்களின் தியாகம்
இந்த குறுகிய வாழ்வை மனிதர்களுக்கு ஒரு பரீட்சையாகவும் இவ்வுலகை அதற்கான பரீட்சைக் கூடமாகவும் படைத்துள்ள இறைவன் மக்கள் அதர்மத்தின்பால் எவ்வளவுதான் வரம்புமீறிச் சென்றாலும் அங்கு மீண்டும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக அவ்வப்போது தன் தூதர்களை நியமிக்கிறான். அவ்வாறு அதர்மம் அவ்வப்போது கட்டுப்படுத்தப் படாமல் விடப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
இறைவன் நினைத்திருந்தால் அப்படியே நம்மை கலவரங்களுக்கும் குழப்பங்களுக்கும் இடையே விட்டிருக்கலாம். அவனை கேட்பதற்கு யாரும் இல்லை. ஆனால் அவன் தன் கருணையினால் மீண்டும் மீண்டும் தர்மத்தை நிலைநாட்டுவதற்காக மனிதர்களுள் புனிதர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் மூலம் தனது தர்மத்தை நிலைநாட்டுகிறான். அதற்காக நாம் நம் இறைவனுக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.
தர்மத்தை நிலைநாட்டும் பணியில் தங்கள் உயிரைத் துச்சமாகக் கருதி தியாகங்கள் பல மேற்கொண்டு இறைவனின் மார்க்கம் பூமியில் நிலைபெற வேண்டும் என்பதற்காக இரவுபகலாக உழைத்த அந்த உத்தமர்களுக்கும் நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். பூமியில் இத்தனை கலகங்களுக்கும் குழப்பங்களுக்கும் மத்தியிலும் ஆங்காங்கே ஓரளவாவது தர்மமும் நன்மைகளும் எஞ்சியிருப்பதாகக் காண்பீர்கள் ஆனால் அதற்கு அந்த புனிதர்கள் மேற்கொண்ட தியாகங்களும் முக்கிய காரணமே.
பூமியின் எந்த மூலைக்கு அவர்கள் வந்திருந்தாலும் சரியே. நாம் அவர்கள் அனைவரையும் நன்றி உணர்வோடு நினைத்து நாம் அந்த சான்றோர்களுக்காக பிரார்த்திக்கவேண்டும். எல்லாம்வல்ல இறைவன் அவர்கள் அனைவர் மீதும் அருளும் சாந்தியும் நல்குவானாக. மறுமையில் அந்த சான்றோருடன் வாழும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் தருவானாக.
இறைத்தூதர்களின் வரிசையில் இயேசுநாதரின் சிறப்பு
அவ்வாறு இறைவனின் கருணையை பூமியின்மேல் பரப்ப வந்த நல்லோர்களில் ஒருவரே இயேசு. அவ்வாறு பூமியில் நன்மையை எவ வந்த புனிதர்களை கொடியோர்கள் கொன்று தீர்க்கத் துணிந்தவேளை அவர்களுக்கு இறைவன் புதியதோர் பாடம் கற்பிக்க நினைத்தான் போலும்! பிறக்கும்போதே இறைவனின் தூதராகவே பிறந்தார் இயேசு! வேத அறிவுடன் பிறந்தார் அவர்! அவர் இறைதூதராக ஆற்றவேண்டிய பணிகளை அயராது ஆற்றினார்! இறுதியில் கயவர்கள் அவரைக் கொல்ல முற்பட்டபோது அந்த சதியில் சிக்கவிடாமல் அவரை அற்புதமான முறையில் விண்ணேற்றம் செய்தான் எல்லாம் வல்ல இறைவன்!
3:54-55. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்; இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்; நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்; மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்; பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது; (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!
4:157-158. மேலும் அவர்கள் தம் நிராகரிப்பி(ல் எல்லை மீறிவிட்டத)னாலும் மர்யம் மீது பெரியதொரு அவதூறை அவர்கள் கூறியதாலும், அல்லாஹ்வுடைய தூதரும் மர்யமின் மகனுமான ஈஸா – மஸீஹை நாங்கள் தாம் கொன்றோம். என அவர்கள் கூறியதாலும் (அவர்களை நாம் சபித்தோம்). – உண்மையில் அவர்கள் அவரைக் கொலை செய்யவுமில்லை, அவரைச் சிலுவையில் அறையவுமில்லை. மாறாக, அவருடைய நிலைமை அவர்களுக்குச் சந்தேகத்துக்குரியதாக ஆக்கப்பட்டு விட்டது. மேலும், எவர்கள் ஈஸா விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டார்களோ அவர்கள் இதுபற்றி சந்தேகத்திலே இருக்கின்றார்கள். யூகத்தைப் பின்பற்றுவதைத் தவிர இதுபற்றி வேறு எந்த அறிவும் அவர்களிடத்தில் இல்லை. நிச்சயமாக அவர்கள் அவரை – மஸீஹை – கொலை செய்யவேயில்லை. மாறாக அல்லாஹ் அவரைத் தன்பக்கம் உயர்த்திக் கொண்டான். அல்லாஹ் வலிமை மிக்கவனும் நுண்ணறிவாளனுமாய் இருக்கின்றான்.