இன இழிவு நீங்க என்ன வழி?
‘சாதிகள் இல்லையடி பாப்பா – குலத்
தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றார் பாரதி.
பாடியோர் பலர். ஓடியாடி உழைத்தோர் பலர். நாடியது நடக்காமல் நம்பிக்கையிழந்தோர் பலர்.
நீண்ட காலமாக நம் நாட்டை பீடித்துள்ள சாதிக் கொடுமைகளையும் தீண்டாமைக் கொடுமைகளையும் வேரறுக்க வேண்டும் என்று பலரும் இடையறாது பாடுபடுவதை நாம் கண்டு வருகிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற பழம்பெரும் தலைவர்களும் தங்கள் வாழ்நாளையே இதற்காக தியாகம் செய்து போராடிச் சென்றதையும் நாம் கண்டோம்.
இன்றும் அவர்களைத் தொடர்ந்து அவர்களின் தொண்டர்களும் சீடர்களும் பல இயக்கங்களை உருவாக்கி அவையும் பல குழுக்களாக நாடெங்கும் செயல்பட்டு வருவதையும் நாம் காண்கிறோம்.
ஆனால் இந்த ஜாதிக் கொடுமைகளும் தீண்டாமைக் கொடுமைகளும் ஜாதிச்சண்டைகளும் அதிகரித்துக் கொண்டிருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை. காரணம் என்ன? நாட்டின் நலன் கருதி நாம் இதை ஆராயக் கடமைப்பட்டுள்ளோம்.அதேவேளையில் உலகெங்கும் வாழும் கோடிக்கணக்கான மக்களும் அவர்களின் தலைமுறையினரும் ஒருகாலத்தில் தங்களை பீடித்திருந்த ஜாதிக் கொடுமைகளில் இருந்தும் தீண்டாமைக் கொடுமைகளில் இருந்தும் தங்களைத் தாங்களே எளிதாக விடுவித்துக்கொண்டுள்ளனர். இன்னும் தொடர்ந்து இது நடந்துகொண்டே இருக்கிறது. இதற்காக இவர்கள் யாரிடமும் முறையிடுவதும் இல்லை. யாரையும் உதவிக்கு அழைப்பதும் இல்லை. எந்தப் பொருட்செலவும் இல்லை! இதற்காக இவர்கள் செய்வதெல்லாம் என்னவெனில், ஒரு சில அடிப்படை உண்மைகளை உணர்ந்து அதன் அடிப்படையில் தங்கள் வாழ்க்கை நடைமுறைகளை மாற்றிக் கொள்வதுதான்! அது என்ன?
அதை அறியும் முன் கவிக்குயில் சரோஜினி நாயுடு அம்மையார் அதைப்பற்றிக் கூறுவதைக் கேட்போம்:
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. அந்த மனிதர், ஏக சகோதரத்துவத்துக்கு ஒரு சரியான விளக்கம் கூறினார். எந்த விதமான உயர்வும் தாழ்வும் வேற்றுமையும் இல்லாத மக்களைக்கொண்ட ஒரு ‘குடிஅரசு’ எப்படி இருக்கவேண்டும் என்பதையும் அவரே விளக்கினார்.
டாக்டர் அம்பேத்கர் இது பற்றி என்ன கூறினார்? இதோ,
“பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது.”
இது பற்றி தந்தை பெரியாரின் கூற்றும் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே:
“இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து_!” இவர்களெல்லாம் கூறுவதில் உண்மை உள்ளதா?…. ஆராய்வோம் வாருங்கள்இஸ்லாம் அப்படி என்ன கொள்கையைக் கொண்டிருக்கிறது?
முக்கிய அடிப்படைகள்
கீழ்க்கண்ட முக்கியமான அடிப்படைகளை மனித மனங்களில் விதைப்பதன் மூலம் அது பரவும் இடங்களில் எல்லாம் மனித சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டி வெற்றி ஈட்டுவதை நாம் உலகெங்கும் காணலாம்:
1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.
”மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான் அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்;. பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ……..நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.’ ( திருக்குர்ஆன் 4:1) (அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)
2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்.
நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.” (திருக்குர்ஆன் 112: 1-4)
அவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை வணங்குவதோ உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக் க் காட்டி அவற்றைக் கடவுள் என்று சொல்வதோ மோசடியும் பாவமும் ஆகும். இச்செயல் இறைவனைச் சிறுமைப்படுத்துவதும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதால் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும்.
3. வினைகளுக்கு விசாரணை உண்டு:
இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம் வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர். இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாது தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.
‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்; எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்; இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’ (திருக்குர்ஆன் 3:185)
மேற்படி கொள்கைகளை வெறும் போதனைகளாக நிறுத்திவிடாமல் வாழ்க்கையில் அவற்றை நடைமுறைப்படுத்த ஐவேளைத தொழுகை, ஜக்காத் போன்ற கடமைகளை விதித்திருக்கிறது இஸ்லாம். இவை சமூகப் பிணைப்பையும் சகோதரத்துவத்தையும் உறுதிப் படுத்துகின்றன. மேலும் மனித சமத்துவத்தை சமூகம் மறந்துவிடாமல் பேணிக்காக்கவும் இதில் அத்துமீறல் நிகழாமல் இருக்கவும் உதவுகின்றன.
நிகழ்கால உதாரணங்கள்
உதாரணமாக இன்று இந்தியாவில் வாழக்கூடிய முஸ்லிம்கள் நேற்று வேறு மதங்களில் இருந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு வந்தவர்களே. அன்று ஜாதிக் கொடுமைகளாலும் தீண்டாமையாலும் வெகுவாக பாதிக்கப் பட்டிருந்த அவர்களிடையே இன்று ஜாதிகளும் தீண்டாமையும் இல்லை. பள்ளிவாசல்களில் தொழுகையில் தோளோடு தோள் சேர்ந்து அணிவகுப்பதையும் கூட்டாக அமர்ந்து ஒரே தட்டில் உணவு உண்பதையும் நாம் காண்கிறோம். பெரியார், அம்பேத்கர் போன்ற சீர்திருத்த வாதிகள் வாழ்நாளில் செயல்படுத்த முடியாத தீண்டாமை ஒழிப்பையும் ஜாதி ஒழிப்பையும் அற்புதமான முறையில் இக்கொள்கை நடைமுறைப் படுத்துவதை யாரும் மறுக்க முடியுமா?இங்கு மட்டுமல்ல, அமெரிக்காவிலும் ஆப்ரிக்காவிலும் நிறவெறி கொண்டு அடித்துக் கொண்டும் மாய்த்துக்கொண்டிருந்தம் இருந்த மக்களை இதே கொள்கை அன்பினால் பிணைத்துவருவதை உலகம் கண்டு வருகிறது.
எனவே இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து என்று பெரியார் கூறிச் சென்றது 100% உண்மை என உறுதியாக நாம் அறியலாம்.