Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி! - Thiru Quran Malar

பாலியல் பலாத்காரங்கள் ஒழிக்க ஒரே வழி!

Share this Article

Related image
இறைவனுக்குச் சொந்தமான இந்த பூமியில் அவனது வழிகாட்டுதல்களைப்  பின்பற்றாது அவன் வழங்கும் தீர்வுகளை ஏளனம் செய்து வந்ததன் விபரீத விளைவுகளை இன்று மனித சமுதாயம், குறிப்பாக நம்நாடு அனுபவிப்பது கண்கூடு. உதாரணமாக, இறைவன் பெண் இனத்தின் பாதுகாப்பு கருதி  கற்பிக்கும் வரம்புகளையும் ஆடைக் கட்டுப்பாட்டையும் பெண்ணடிமைத்தனம் என்றும் பிற்போக்குத்தனம் என்றும் அவன் தரும் சட்டங்களை காட்டுமிராண்டித்தனமானவை என்றும் விமர்சித்தார்கள் சில போலி முற்போக்குவாதிளும் பெண்ணுரிமைவாதிகளும்!

நாடு இவர்களை நம்பி மோசம் போனதன் விளைவே இன்று கட்டுப்படுத்த முடியாமல் பெருகிவரும் பாலியல் பலாத்காரங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களும்! 
தேசிய குற்றவியல் ஆவணக்காப்பகமும் National Family Health Survey (NFHS) என்ற அமைப்பும் வழங்கும் தகவல்களின் படி நம் நாட்டில் நாளொன்றுக்கு 600 க்கும் மேற்பட்ட பெண்கள் கற்பழிக்கப் படுகிறார்கள்.

இவற்றில் மிகவும் குறைந்த அளவே வெளிச்ச்சற்கு வருகின்றது.
தொடரும் இக்கொடுமைகளைத் தடுக்க இனியாவது உரிய கட்டுப்படுத்தும் வழிகளை ஆராய்ந்து அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியது நம் ஒவ்வொரு குடிமக்கள் மீதும் கடமையாகும்.

இஸ்லாம் என்ற இறைதந்த வாழ்வியல் 

நம்மைப் படைத்து பரிபாலித்து வரும் இறைவன் நமக்காக வழங்கும் வாழ்க்கைத் திட்டத்தின் பெயரே அரபு மொழியில் இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் கீழ்படிதல் என்பதாகும். இதன் இன்னொரு பொருள் அமைதி என்பதாகும். .இறைவனுக்குக் கீழ்படிவதால் கிடைக்கப்பெறும் அமைதி என்பதே இஸ்லாம் என்று அறியப்படுகிறது.

இது பிறப்பினால் வருவதல்ல, மாறாக பின்பற்றப்படுவதால் வருவதே! இஸ்லாம் என்பது ஒரு கொள்கை என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஒரு வெற்று மதம் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்ப்பதுதான் மேற்படி போலி முற்போக்குவாதிகள் செய்யும் தவறாகும்.வாருங்கள், இஸ்லாம் என்ற கொள்கையின் மூலம் மேற்கூறப்பட்ட பிரச்சினைகளுக்கு எப்படி தீர்வு காணலாம் என்பதை சற்று காண்போம்.

தனிமனித நல்லொழுக்கம்

சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை முன்வைக்கும் முன் இஸ்லாம் தனிமனித சீர்திருத்தத்தை வலியுறுத்துகிறது. மனிதன் தவறு செய்யாமல் அல்லது பாவம் செய்யாமல்  வாழ வேண்டுமானால் மிக மிக முக்கியமாக  அவனுக்குள் இறையச்சம் இருக்கவேண்டும். அதாவது  என்னைப் படைத்தவன் என்னை கண்காணித்துக்  கொண்டிருக்கிறான். 

நான் செய்யும் செயல்களுக்கு நாளை அவனிடம்  விசாரணை உள்ளது, பாவம் செய்தால் அவன்  என்னை  தண்டிப்பான் என்ற உணர்வு  மனிதனுக்குள் விதைக்கப்  படவேண்டும். அது இல்லாத பட்சத்தில் எந்தப் பாவம் செய்யவும் மனிதன் சிறு தயக்கமும் இல்லாமல்  துணிகிறான்.

இன்று நாட்டில் உயிரற்ற உணர்வற்ற உருவங்களைக்  காட்டி  இவைதான்  கடவுள் என்று சிறு வயது முதலே கற்பித்து  வருவதன் விளைவாக மனிதனிடம் கடவுள் பயமே இல்லாமல் போய்விடுகிறது. இஸ்லாம் தனது தெளிவான கடவுள் கொள்கை மூலம் இந்த அபாயகரமான போக்கைத் தடை செய்கிறது.  

நபியே நீர் கூறுவீராக! “இறைவன்- அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)

இவ்வாறு இறைவனின் தன்மைகளைத் தெளிவாக போதித்து அவனை மட்டுமே மனிதன் வணங்கவேண்டும் என்றும் அவனை  இடைத்தரகர்கள் இன்றி நேரடியாக வழிபட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்கிறது.

அத்துடன் இவ்வுலக வாழ்வின் நோக்கம் மனிதனைப் பரீட்சிப்பதே என்பதையும் இவ்வுலகில் மனிதன் செய்யும் செயல்களுக்கு மறுமையில் விசாரணை உண்டு என்பதையும் மறுமையில் நல்லோர்க்கு சொர்க்கமும் தீயோர்க்கு நரகமும் காத்திருக்கிறது என்பதையும் அறிவுப்பூர்வமாக கூறுகிறது..

ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (திருக்குர்ஆன் 3:185)

அந்த நிரந்தர இன்பங்களால் நிறைந்த சொர்க்கத்தை அடைவதை இலட்சியமாகக் கொண்டு அவன் விதிக்கும் ஏவல் விலக்கல்களைப் பேணி வாழ்வதில் சில சிரமங்கள் இருந்தாலும் அவை வீண்போவதில்லை என்ற நம்பிக்கையை தனி மனித ஒழுக்கத்திற்கு அடிப்படையாக்குகிறது இஸ்லாம்.

பெண்மையை ஏன் பாதுகாக்க வேண்டும்?

அடுத்ததாக பெண்கள் விவகாரத்தில் இறைவன் கூறும் வழிகாட்டுதலைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் பெண்மை பற்றியும் சமூகத்தில் அதன் முக்கியத்துவம் பற்றியும் நாம் உணர வேண்டும்.மனிதசமுதாயத்தின் ஆரோக்கியமான சூழலுக்கும் அமைதிக்கும் பெண்மை என்பது பாதுகாக்கப்பட்டே ஆகவேண்டும். பெண்ணுரிமை என்றும் பெண்விடுதலை என்றும் கூறி கட்டுப்பாடற்ற சுதந்திரம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டால் முதலில் பாதிக்கப்படுவது அப்பெண்தான்.

உதாரணமாக அநியாயமாக ஒரு கற்பத்தைச் சுமந்தபின் கைவிடப்படுவாள். அவள் திருமணமானவளாக இருந்தால் என்னென்ன விளைவுகள் உண்டாகும் என்பது அனைவரும் அறிந்ததே! அடுத்த பாதிப்பு அவளது பெற்றோருக்கு. சிறுவயது முதலே அவள்மீது பாசமும் நம்பிக்கையும் வைத்து கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தபின் அனைத்தையும் இழந்துவிடும் அவலம்! அடுத்த பாதிப்பு சமூகத்திற்கு.

தந்தைகளற்ற குழந்தைகளும் சீர்குலைந்த குடும்பங்களும் விபச்சாரம், கொலை, கொள்ளை, மோசடிகள் என பாவங்களும் நிறைந்து மனிதன் வாழவே வெறுத்துவிடும் நிலை உருவாவதை அனுபவப்பூர்வமாகவே அறிந்து வருகிறோம்.. குடும்பங்களே சமூக அமைப்பின் ஊற்றுக்கண்கள் எனபதையும் அதில் பெண்கள்தான் மனித இனத்தின் விளைநிலங்கள் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது.

அதில் உருவாகும் குழந்தைகள் எவ்வளவு நல்லோழுக்க்கத்தொடும் கட்டுப்பட்டோடும் வளர்கிறார்களோ அதைப் பொறுத்தே சமூகமும் ஒழுக்கமுள்ளதாக அமையும். சமூக வாழ்விலும் அமைதி நிலவும்.

இறைவன் விதிக்கும் வரம்புகள் 

அவ்வாறு ஆரோக்கியமான ஒரு சமூகத்தை உருவாக்குவதற்காகத்தான் கீழ்காணும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் விதிக்கிறான் இறைவன்.

–    ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆடைக் கட்டுப்பாடு,  (திருக்குர்ஆன் 24:31, 33 :59)

–    பாலியல் வக்கிரத்தைத் தூண்டக்கூடிய செயல்களின் பக்கம் நெருங்கத் தடை (ஹதீஸ் மற்றும் திருக்குர்ஆன் 17:3

–    ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பொழுக்கம், பார்வைக் கட்டுப்பாடு  (திருக்குர்ஆன் 24:30,31)

–    பத்து வயதுக்கு மேல் ஆண்குழந்தைகளையும்  பெண்குழந்தைகளையும் பிரித்துப் படுக்க வைத்தல், (ஹதீஸ்)

–    இரு பாலர்க்கும் கட்டாயக் கல்வி, (ஹதீஸ்)

–    பெண்கள் நெருங்கிய ஆண் துணையின்றி நீண்ட பயணங்கள் மேற்கொள்ளத் தடை,, (ஹதீஸ்) 

 –    அந்நிய ஆண்களும் பெண்களும் சரளமாகப் பழகுவதற்க்குத் தடை (திருக்குர்ஆன் 24:27, 33: 55)

–    அந்நிய ஆண்களோடு பெண்கள் குழைந்து பேசத் தடை, (திருக்குர்ஆன் 33:32)

–    வயது வந்த அந்நிய ஆணும் பெண்ணும் தனித்திருக்கத் தடை (ஹதீஸ்)

–    வயது வந்த ஆண்களுக்கும் பெண்களுக்கும் விரைவாகத் திருமணம், (திருக்குர்ஆன் 24:32 மற்றும் ஹதீஸ்)

–    மணப்பெண்ணின் சம்மதமின்றி மணமுடிக்கத் தடை ( (திருக்குர்ஆன் 17:31)

–    வரதட்சணைக்குத் தடை, பெண்ணுக்கு மணக்கோடை கொடுக்க கட்டளை (திருக்குர்ஆன் 4:4, 17:31)

–    குடும்பத் தலைமையும் பொருளாதார சுமையும் ஆண் மீது கடமை,.  குடும்ப நிர்வாகம் பெண் மீது கடமை, பொருளாதாரச் சுமை மீது அல்ல. (திருக்குர்ஆன் 4:34 மற்றும் ஹதீஸ்)

–    கற்பொழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு கூறினால் கசையடி (திருக்குர்ஆன் 24:4      )

–    விபச்சாரக் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் (திருக்குர்ஆன் 24:2 மற்றும் ஹதீஸ்)

–    அவற்றை பொதுமக்களுக்கு முன் நிறைவேற்றுதல் (திருக்குர்ஆன் 24:2) 

(குறிப்பு: ஹதீஸ் என்றால் நபிகள் நாயகம் மூலமாக இடப்பட்ட கட்டளைகளைக் குறிக்கும்)

ஆண்களுக்கு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் இஸ்லாம் வழங்கும் பலதாரமணத்திற்கான அனுமதியும் கூட சமூகத்தில் விபச்சாரம் மலிந்து  தந்தைகள் இல்லாத சமுதாயம் உருவாகும் நிலை உண்டாகாமல் தடுக்கவே என்பதை சிந்திப்போர் அறியலாம்.மேற்படி வரம்புகள் அனைத்தையும் விதித்தவன் இவ்வுலகின் அதிபதி என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. ஆண் பெண் இயற்கை உட்பட இவ்வுலகில் உள்ள அனைத்தையும் படைத்தவன் அவனே!

முக்காலத்தையும் உணர்ந்தவனும் மனிதனுக்கு எது எப்போது நல்லது என்பதைப் முழுமையாக அறிந்தவனும் அவனே! இறுதித் தீர்ப்பு நாளன்று நம்மை விசார்க்க இருப்பவனும் அவனே! அவனது ஏற்பாட்டில் குறைகண்டு தான்தோன்றித்தனமாக மனித வாழ்க்கை தொடருமானால் பாலியல் பலாத்காரங்கள் மட்டுமல்ல, கொலைகளும் கொள்ளைகளும் கொடுமைகளும் வரம்புக்கு மீறி பரவுவதைத் தவிர்க்கமுடியாது!

மட்டுமல்ல, இறைவனுக்கு சொந்தமான பூமியில் அவனது கட்டளைகளைப் புறக்கணித்துவிட்டு தான்தோன்றித்தனமாக வாழ்ந்ததற்காக மறுமையில் அதற்கு தண்டனையாக நரக வேதனையும் கிடைக்கும்.எனவே நம் நாட்டு மக்களின் இம்மை மற்றும் மறுமை நலன் கருதி இறைவன் நமக்குக் கற்றுத் தரும் ஒழுக்க மாண்புகளையும் வரம்புகளையும் கட்டுப்பாடுகளையும் கட்டாயமாகப் பேணுவோமாக!

Share this Article

Add a Comment

Your email address will not be published.