Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
2012 –இல் உலகம் ஏன் அழியாது? -பாகம் ஒன்று. - Thiru Quran Malar

2012 –இல் உலகம் ஏன் அழியாது? -பாகம் ஒன்று.

Share this Article

இந்த ஆக்கத்தை குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் நோக்கத்திலோ அல்லது குழம்பிய குட்டையை மேலும் குழப்பிவிடும் நோக்கத்திலோ அல்லது ஒரு ஊகத்தின் அடிப்படையிலோ நாம் வெளியிடவில்லை. மாறாக 2012 -இல் உலகம் அழியும் என்று கூறி ஒரு சிலர் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள குழப்பத்தை ஒரு முடிவுக்குக்கொண்டு வந்து அது பற்றிய தெளிவை ஏற்படுத்தும் நோக்கத்தோடு வெளியிடப்படுவதே இது!

இங்கு சொல்லப்படும் உண்மைகளின் நம்பகத்தன்மை

நமது இந்தத் தெளிவான ஆக்கம் மிகமிக உறுதியான ஆதாரங்களின்  அடிப்படையில் ஆனது. ஆம், யார் இவ்வுலகத்தை உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே அதன் அழிவைப் பற்றிக் கூற முடியும். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன். அவனுக்கு மட்டுமே தன் படைப்பினங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவு உள்ளது. 

அந்த வகையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனும் இவ்வுலகின் சொந்தக்காரனும் ஆன இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனையும் அவனது இறுதித் தூதராக இவ்வுலகுக்கு வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்களையும் அடிப்படையாகக் கொண்டதே இந்த ஆக்கம்.

உறுதிமிக்க ஆதாரங்கள்

முதலில் உங்கள் மனங்களில் எழும் சந்தேகங்களை இப்போது தீர்த்து வைப்போம்…….திருக்குர்ஆன் இறைவனின் வேதம்தான் என்பதை எவ்வாறு நம்புவது?    அதை அறியும் முன் திருக்குர்ஆன் என்றால் என்ன என்பதை அறிந்து கொள்வோம். 

திருக்குர்ஆன் எப்படி வந்தது?

முஸ்லிம் அல்லாத அன்பர்கள் திருக்குர்ஆன் என்பது முஹம்மது நபி (ஸல்) அவர்களால் எழுதப்பட்டது என்று இன்றும் நம்பி வருகிறார்கள். மாறாக முஹம்மது நபியவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்தார் என்பதும் இந்த அகிலத்தைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனால் அவர்களுக்கு ஒலிவடிவில் அருளப்பட்ட இறை வசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பதுமே உண்மையாகும்.  

இது ஒரு குறிப்பிட்ட நாட்டினருக்கோ மொழியினருக்கோ சமூகத்துக்கோ அல்லது முஸ்லிம்களுக்கு   மாத்திரமோ அருளப்பட்டது அல்ல. மாறாக அகில உலக மக்களுக்கும் பொதுவாக அவர்களைப் படைத்தவனால் அருளப்பட்ட வழிகாட்டி நூலாகும்.

  இவ்வேதம், யாவரையும் மிகைத்தோனும் ஞானம் மிக்கோனுமாகிய அல்லாஹ்விடமிருந்தே இறக்கியருளப்பட்டது.(திருக்குர்ஆன் 46:2)

(அல்லாஹ்- உலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனுக்கு அரபு மொழியில் அல்லாஹ் என்று வழங்கப்படுகிறது. இவ்வார்த்தையின் பொருள் “வணங்குவதற்குரிய ஒரே இறைவன்” என்பதாகும். தமிழில் கடவுள் என்றும் ஆங்கிலத்தில் ‘காட்’ என்றும் ஹிந்தியில் ‘பகவான்’ என்றும் சொல்வதுபோல அரபிமொழியில் இறைவனைக் குறிக்கும் பதமே அல்லாஹ் என்பது. இவ்வார்த்தையின் சிறப்பாவது, இதற்கு ஆண்பால் பெண்பால் கிடையாது. பன்மையும் கிடையாது. கடவுள் – கடவுளர்கள் பகவான் – பகவதி, GOD – GODS, GODESS  என்றெல்லாம் கடவுளைக் குறிக்கும் பிறமொழி வார்த்தைகள் சிதைவது போல அல்லாஹ் என்ற சொல் ஒருபோதும் சிதைவதில்லை. எப்போதும் ஒருமையிலேயே விளங்கும்.)
(ஸல்- ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லாம் என்பதன் சுருக்கம்- இதன் பொருள்: இறைவனின் சாந்தி அவர் மீது உண்டாகட்டும் என்பது)  

இது இவ்வுலகின் உரிமையாளனான இறைவனின் அறிவுரைகள் என்பதாலும் அவனது இறுதி வேதம் என்பதாலும்   இன்று வாழும் மக்கள் யாவரும் இதன் படி வாழ்க்கையை அமைத்துக்கொள்ள கடமைப் பட்டுள்ளார்கள்.
அடுத்ததாக இந்தத் திருக்குர்ஆன் எப்படி வந்தது, மற்றும் நபிகள் நாயகம் யார் என்பன பற்றி அறிந்து கொள்வோம்:

திருக்குர்ஆன் அருளப்பட்ட விதம்


இந்தக் குர்ஆனில் நபிகள் நாயகத்தின் வார்த்தைகளோ வேறு எந்த மனிதர்களின் வார்த்தைகளோ துளியளவும் கிடையாது. முழுக்க முழுக்க  இறைவார்தைகளை மட்டுமே கொண்ட நூல் திருக்குர்ஆன்! இதை கீழ்வரும் சரித்திர உண்மைகளை அறியவரும்போது புலப்படும்.

முஹம்மத் நபி அவர்கள் உயர்குலமான குரைஷிப் பரம்ரையில் அப்துல்லாஹ்  ஆமினா தம்பதியினருக்கு கி.பி. 571ல் மக்கா நகரில் பிறந்தார்கள். இவர்கள் தாயின் வயிற்றில் இருக்கும் போது தந்தையாரையும், பிறந்து சில மாதங்களில் தனது தாயாரையும் இழந்தார்கள். அநாதையான இவரை அவர்களின் சிறிய தந்தை அபூதாலிப் என்பவர் பெறுப்பேற்று வளர்த்தார்கள். அநதையாகவே வளர்ந்தாலும் நற்பண்புள்ளவராகவும் உண்மையாளராகவும் திகழ்ந்த இவரை மக்கள் அல் அமீன் (பொருள்: நம்பிக்கைக்கு உரியவர்) என்று பட்டம் சூட்டி அழைத்தனர்.

ஆனால் அவரைச்சுற்றி அனாசாரங்களும் மூடநம்பிக்கைகளும் அநியாயங்களும் அட்டூழியங்களும் வெகுவாகப் பரவியிருந்தன. அங்கு மக்கள்  முன்னோர்கள் விட்டுச்சென்ற முடமான பழக்கவழக்கங்களை கண்மூடித்தனமாகப் பின்பற்றி வந்தனர். யாரென்றே தெரியாதவர்களுக்கு எல்லாம் சிலைகள் வைத்து வணங்கினார்கள். கடவுளின் பெயரால் புரோகிதர்கள் கற்பித்த மூடநம்பிக்கைகளையும் வீண் சடங்குகளையும் மறுகேள்வி கேட்காமல் பின்பற்றினார்கள்.

பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தனர், மது குடித்தனர், மனித உயிர்களை துச்சமாக மதித்தனர். பெண்களை அடிமைகளாக நடத்தினர். சாதராண விஷயத்திற்காக பலஆண்டுகள் தொடராக சண்டை இட்டுக் கொண்டனர்.  நிறவெறி, கோத்திரவெறி, தேசியவாதம், சாதியம் போன்ற தீமைகள் கட்டுக்கடங்காமல் மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தது இப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் தான் நபிகள் நாயகம் அவர்களது நாற்பதாவது வயதில் இறைத்தூதராக இறைவனால் நியமனம் செய்யப் படுகிறார்கள்.

அமைதியின்மை மக்களை அலைக்கழித்துக் கொண்டிருந்த அந்நாட்டில் நபிகள் நாயகம்(ஸல்) இஸ்லாம் என்ற ஒரு சீர்திருத்தக் கொள்கையை அறிமுகப்படுத்தி அதன்பால் மக்களை அழைத்தார்கள். இஸ்லாம் என்றால் கீழ்படிதல் என்றும் அமைதி என்றும் பொருள். அதாவது படைத்த இறைவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி பெறலாம் மறுமையிலும் அமைதியை – அதாவது சொர்க்கத்தை அடையலாம் என்பது இக்கொள்கை முன்வைக்கும் தத்துவமாகும்.

இக்கொள்கையின் முக்கிய போதனை படைத்த இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதும் அவனை நேரடியாக இடைத் தரகர்கள் இன்றியும் வீண் சடங்கு சம்பிரதாயங்கள் இன்றியும் வணங்க வேண்டும் என்பதும் ஆகும். அது மட்டுமல்ல இறைவன் அல்லாத எதனையும் அதாவது மனிதர்களையோ மற்ற படைப்பினங்களையோ அல்லது உயிரும் உணர்வுமற்ற கற்களையோ உருவங்களையோ வணங்குவதும் அவற்றைக் கடவுள் என்று அழைப்பதும் அவற்றிடம் பிரார்த்திப்பதும் பெரும் பாவமாகும் என்றும் இக்கொள்கை கூறுகிறது.

ஆனால் முன்னோர்களின் பழக்கவழக்கங்களே  சரி என்று மூடமாக நம்பியிருந்தவர்களும் கடவுளின் பெயரால் மக்களைச்  சுரண்டிக் கொண்டிருந்தவர்களும் தங்களுக்கு எதிரியாக இக்கொள்கையைக் கண்டார்கள். விளைவு?    நபிகளாரும் அவரோடு  சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்களும் பயங்கரமான எதிர்ப்புகளையும் சித்திரவதைகளையும் சந்திக்க நேர்ந்தது. . பதிமூன்று வருடங்கள் தொடர்ந்து பொறுமையோடு தீயோரின் அடக்குமுறைகளை எதிர்கொண்டாலும் ஒருகட்டத்தில் கொடுமைகள் கட்டுக்கடங்காமல் போகவே, இறைவனின் கட்டளைப்படி நபிகளார் மக்காவைத் துறந்து சுமார் 500 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மதீனா நகருக்குச் செல்ல நேர்ந்தது.

அங்கு ஏற்கனவே இஸ்லாம் பரவியிருந்ததால் அவருக்கு ஆதரவும் பாதுகாப்பும் கிடைக்கப் பெற்றார்கள். அது மட்டுமல்ல மதீனாவில் இஸ்லாம் வளர வளர ஒரு இறை நம்பிக்கையாளர்களின் சமூக அமைப்பும் அரசும் அமையும் அளவுக்கு வலிமை பெற்றார்கள். ஆனால் மக்காவின் கொடுங்கோலர்கள் அங்கும் படை எடுத்து வந்து தாக்க, நபிகள் நாயகமும் ஆதரவாளர்களும் தற்காப்புப் போர் புரிய நேரிடுகிறது.

தொடர்ந்து நடந்த போர்களில் வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தன. இறுதி வெற்றி சத்தியத்திற்கே. மக்கவும் வெற்றி கொள்ளப் படுகிறது. கொடுமை செய்தவர்களுக்கும் நபிகளார் இறுதியில் பொது மன்னிப்பு வழங்க அனைவரும் சத்தியத்தை ஏற்க்கிறார்கள்..

அராபிய நாடு முழுவதும் சத்தியத்தை ஏற்றுக்கொண்ட நிலையில், தனது 63-வது வயதில் நபிகள் நாயகம் இவ்வுலகை விட்டுப் பிரிகிறார்கள். இவ்வாறு நபிகள் நாயகம் தனது நபித்துவ வாழ்வின் போது அதாவது 40-வது வயதிலிருந்து 63-வது வயது வரை சந்தித்த பல்வேறு சூழ்நிலைகளின்போது அவருக்கு இறைவன் புறத்திலிருந்து அறிவுரைகளாகவும் கட்டளைகளாகவும் சிறிது சிறிதாக இறக்கியருளப்பட்ட திருவசனங்களின் தொகுப்பே திருக்குர்ஆன் என்பது.                          (இன்ஷாஅல்லாஹ் தொடரும்)

Share this Article

Add a Comment

Your email address will not be published.