இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்!
இஸ்லாம் என்ற சுயசீர்திருத்த வாழ்வியல் கொள்கை உலகில் வேகமாகப் பரவிவருவது தங்களின் சுயநல நோக்கங்களுக்கு தடையாக அமையும் என்பதை அறிந்த ஆதிக்க சக்திகள் இஸ்லாத்தை மக்களிடையே தவறான ஒளியில் சித்தரிக்கக் கடுமையான பிரச்சாரங்களை தங்களின் ஊடகங்கள் மூலம் மேற்கொள்கிறார்கள். அதற்காக முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context ) திருக்குர்ஆனின் வசனங்களை மேற்கோள் காட்டி இஸ்லாம் வன்முறையைத் தூண்டுகிறது என்று பிரச்சாரம் மேற்கொள்கிறார்கள்.
உதாரணமாக கீழ்கண்ட வசனங்களை பாருங்கள். 4:74 – இவ்வுலக வாழ்வை விற்று மறுமையை வாங்குவோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடட்டும்! யாரேனும் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட்டாலோ,வெற்றி பெற்றாலோ அவர்களுக்கு மகத்தான கூலியை பின்னர் வழங்குவோம்.4:76 – நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வின் பாதையில் போரிடுகின்றனர்.மறுப்போர் தீய சக்திகளின் பாதையில் போரிடுகின்றனர்.எனவே ஷைத்தானின் கூட்டாளிகளுக்குஎதிராகப் போரிடுங்கள்!ஷைத்தானின் சூழ்ச்சி பலவீனமானதாக உள்ளது.
இதைப் படிக்கும் வாசகர்களின் மனதில் இஸ்லாம் போரை ஊக்குவிக்கும் மார்க்கம் என்ற ஒரு எண்ணத்தை உண்டாக்க முயல்கிறார்கள். இங்கு உண்மை என்னவென்றால் மேற்படி வசனங்களின் தொடரில் வசன எண் 4:75 இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. ஏன்? காரணம் அந்த வசனத்தையும் சேர்த்துப் படிக்கும்போது வாசர்களுக்கு உண்மை விளங்கிவிடும் என்பதுதான்!
4:75 “பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.” அக்கிரமக்காரர்களுக்கு எதிரான போரை பற்றி தான் இந்த வசனங்கள் பேசுகின்றன. இது தான் அறப்போர். தர்மத்தை நிலைநாட்டும் போர்.
இருட்டடிப்பால் திரிக்கப்படும் நூல்கள்
உலகில் எந்த புத்தகத்தை எடுத்து படித்தாலும், அந்த புத்தகத்தின் நோக்கம் என்ன, என்ன கருத்தை சொல்ல அந்த புத்தகம் முயற்சிக்கிறது, எந்த சுழலில் அந்த கருத்துக்கள் சொல்லப்படுகின்றன, என்பதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம். இது அல்லாமல், தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல், நடுவில் ஒரு வசனத்தை எடுத்துக் கொண்டு விமர்சனம் செய்தால், அது தவறாகவே இருக்கும். இந்த விதிக்கு எந்த புத்தகமும் விலக்கல்ல.
உதாரணமாக:
பகவத் கீதை:
ஆத்மா நித்தியன்; அழிவற்றான்; அளவிடத்தகாதான். எனினும் அவனுடைய வடிவங்கள் இறுதியுடையன என்பர். ஆதலால் பாரதா, போர் செய். 2:18
“கொல்லப்படினோ வானுல கெய்துவாய். வென்றால் பூமியாள்வாய். ஆதலால் போர் செயத் துணிந்து நீ எழுந்து நில்.” 2:37
இது போல் வரும் வசனங்களை வைத்துக் கொண்டு, போர் செய்து வன்முறையை கீதை தூண்டுகிறது என்று எவரேனும் விமர்சனம் செய்தால் அது சரியாகுமா?
அதர்வ வேதம்:
“வேத வன்னியே, வேதங்களை விமர்சிப்பவரை நீ வெட்டி வீழ்த்து. (இன்னும் அவரை) நீ கிழித்து, எரித்து சாம்பலாகி விடு.” அதர்வ வேத மந்திரம் 12/5/62
இது போல் வரும் வசனங்களை வைத்துக் கொண்டு, வேதங்கள், விமர்சனம் செய்வோரை கொல்ல சொல்கிறது என்று ஒருவர் கூறினால் அது சரியாகுமா?
கம்ப ராமாயணம்:
கம்ப ராமாயணத்தில், வாலி வதை படலம் மிக பிரபலமானது. வாலியை இராமன் மறைந்திருந்து கொல்கிறான். இதை பற்றி வாலியே “ஒளித்து நின்று,வரி சிலை குழைய வாங்கி, வாய் அம்பு மருமத்து எய்தல்தருமமோ? பிறிது ஒன்று ஆமோ?” என்றெல்லாம் இராமனை நோக்கி கேள்வி எழுப்புகிறான்.
வாலி வதை படலத்தை மட்டும் படிப்போர், இராமனை அநியாயக்காரன் என்று கூறினால் அது சரியாகுமா?
திருக்குறள்:
தமிழின் ஒப்பற்ற ஓர் இலக்கியம் திருக்குறள். இதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்காது. கீழே உள்ள குரளைப் படியுங்கள்.
“தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.”
கற்புடைய பெண், தெய்வத்தைக்கூட வணங்க மாட்டாள் தெய்வத்துக்குப் பதிலாகத் தினத்தினம் காலையில் கணவனைத் தொழுதுவிட்டுத்தான் படுக்கையை விட்டு எழுதிருப்பாள், அவள் ‘பெய்; என்று சொன்ன உடனேயே மழை பெய்யும் என்பதே இந்த குறளின் பொருள்.
ஒரு “பகுத்தறிவுவாதி” அது எப்படி மழை ஒரு பெண்ணின் பேச்சுக்காக பெய்யும். வானத்தில் ஏற்படும் இரசாயன மாற்றமெல்லாம் என்ன ஆனது? எனவே இந்த குறள் விஞ்ஞானத்திற்கு எதிராக உள்ளது என்று வாதிட்டால், அது சரியாகுமா?
ஒரு பெண்ணியவாதி, இந்த குறளை படித்து விட்டு, மனைவி கணவனுக்கு கீழே என்று சொல்லி இருக்கிறார்.
எனவே திருவள்ளுவர் ஆண்ணாதிக்க சிந்தனை கொண்டவர் என்று கூறினால் அது சரியாகுமா?
முன்பின் தொடர்புகளை மறுத்து (out of context ) எல்லா புத்தகங்களையும் தவறானதாக சித்தரிக்க முடியும். உதாரணமாக ….
பைபிள்:
பெற்றோரையும், மனைவியையும், பிள்ளைகளையும் வெறுக்க சொல்லும் பைபிள்:
யாதொருவன் என்னிடத்தில் வந்து, தன் தகப்பனையும் தாயையும் மனைவியையும் பிள்ளைகளையும் சகோதரனையும் சகோதரிகளையும், தன் ஜீவனையும் வெறுக்காவிட்டால் எனக்குச் சீஷனாயிருக்கமாட்டான்.
லூக்கா 14:26
இயேசுவை ஏற்காதவர்களை கொல்ல சொல்லும் பைபிள்:
“அன்றியும் தங்கள்மேல் நான் ராஜாவாகிறதற்கு மனதில்லாதிருந்தவர்களாகிய என்னுடைய சத்துருக்களை இங்கே கொண்டுவந்து, எனக்கு முன்பாக வெட்டிப்போடுங்கள் என்று சொன்னான் என்றார்.” லூக்கா 19:27
இயேசு பிரிவினையே உண்டாக வந்ததாக சொல்லும் பைபிள்:
நான் பூமியிலே சமாதானத்தை உண்டாக்க வந்தேன் என்று நினைக்கிறீர்களோ? சமாதானத்தையல்ல, பிரிவினையையே உண்டாக்க வந்தேன் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். எப்படியெனில், இதுமுதல் ஒரே வீட்டிலே ஐந்துபேர் பிரிந்திருப்பார்கள், இரண்டுபேருக்கு விரோதமாய் மூன்றுபேரும், மூன்றுபேருக்கு விரோதமாய் இரண்டுபேரும் பிரிந்திருப்பார்கள். தகப்பன் மகனுக்கும் மகன் தகப்பனுக்கும், தாய் மகளுக்கும் மகள் தாய்க்கும், மாமி மருமகளுக்கும் மருமகள் மாமிக்கும் விரோதமாய்ப் பிரிந்திருப்பார்கள் என்றார்.” லூக்கா 12:51-53
பூமியின்மேல் சமாதானத்தை அனுப்பவந்தேன் என்று எண்ணாதிருங்கள்; சமாதானத்தையல்ல, பட்டயத்தையே அனுப்பவந்தேன். எப்படியெனில், மகனுக்கும் தகப்பனுக்கும், மகளுக்கும் தாய்க்கும், மருமகளுக்கும் மாமிக்கும் பிரிவினை உண்டாக்க வந்தேன். ஒரு மனுஷனுக்குச் சத்துருக்கள் அவன் வீட்டாரே. மத்தேயு 10:34-36.
தேவனை ஏற்காதவர்களை கொல்ல சொல்லும் பைபிள்:
“அங்கே உன் தேவனாகிய கர்த்தருக்கு ஆராதனை செய்யும்படி நிற்கிற ஆசாரியனுடைய சொல்லையாகிலும், நியாயாதிபதியினுடைய சொல்லையாகிலும் கேளாமல், ஒருவன் இடும்புசெய்தால், அவன் சாகக்கடவன்; இப்படியே தீமையை இஸ்ரவேலிலிருந்து விலக்கக்கடவாய்.” உபாகமம் 17:12
கர்த்தரை எதிர்ப்பவரை கல்லெறிந்து கொள்ள சொல்லும் பைபிள்:
“கர்த்தருடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லாரும் அவனைக் கல்லெறியவேண்டும்; பரதேசியானாலும் சுதேசியானாலும் கர்த்தரின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.” லேவியராகமம் 24:16
இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
ஆக, எந்த புத்தகத்தை விமர்சனம் செய்தாலும், அந்த புத்தகத்தின் நோக்கம் என்ன, என்ன கருத்தை சொல்ல அந்த புத்தகம் முயற்சிக்கிறது, எந்த சுழலில் அந்த கருத்துக்கள் சொல்லப்படுகின்றன, என்பதையெல்லாம் கணக்கில் கொள்வது அவசியம்.
மாறாக, ஆங்காங்கே ஓரிரு வசனங்களை எடுத்து கொண்டு விமர்சனம் செய்தால் அது தவறாகவே முடியும். இது போல் தவறான விமர்சனம் எல்லா புத்தகங்களிலும் செய்ய முடியும்.
நன்றி: invitetogod.com
இஸ்லாம் ஏன் எதிர்ப்புக்குள்ளாகிறது?
http://quranmalar.blogspot.com/2012/11/blog-post_24.html