Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ஆட்சியாளர்களுக்கு விசாரணை உறுதி! - Thiru Quran Malar

ஆட்சியாளர்களுக்கு விசாரணை உறுதி!

Share this Article

நாட்டுப்பற்று என்பது என்ன?

உண்மையான நாட்டுப்பற்று அல்லது தேசப்பற்று என்பது அந்நாட்டில் வாழும் மக்களை ஜாதி,மத, மொழி, நிற பேதமின்றி அவர்களை உளமாற நேசித்தலும் அவர்களுக்கு நேரும் இடுக்கண்களைக் களையப் பாடுபடுதலும் ஆகும். இதைச் செய்யாமல் அந்நாட்டின் மண்ணை முத்தமிடுவதிலோ அல்லது ஆண்டுக்கு ஒரு முறை கொடிஏற்றி வணக்கம் செலுத்துவதிலோ அல்லது சில கவிதை வரிகளை அல்லது பாடல்களை உரக்கப் பாடுவதிலோ துளியும் இல்லை என்பதை அறிவோம். இதை உறுதிப்படுத்தியது கொரோனா தொற்றின்போது நம் நாட்டு ஆட்சியாளர்கள் நடந்துகொண்ட விதம்.

கொரோனா தோலுரித்துக் காட்டிய நாட்டுப் பற்று

அந்த வகையில் கொரோனா தொற்று நம் நாட்டின் ஆட்சியாளர்கள் நாட்டு மக்கள் மீது எவ்வளவு பற்று கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்பதை வெளிச்சம்போட்டுக் காட்டியதை அறிவோம். ஊரடங்கு அறிவிக்கப்பட்ட உடன் நாட்டின் கடைநிலையில் உள்ள தொழிலாளர்கள் அனுபவித்த கொடுமைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக நாம் அறிந்தோம்.

பிழைக்க வந்த இடத்தில் இருந்து சொந்த ஊருக்குத் திரும்பிச் செல்ல வாகன ஏற்பாடுகளை செய்து தர எந்த மத்திய மாநில அரசுகளும் ஆதிக்கம் படைத்தவர்களும் எவரும் முன்வராததால் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்கள் தங்கள் பயணச் சுமைகளையும் குழந்தைகளையும் முதியோரையும் சுமந்துகொண்டு நடை பயணமாகவே சென்றார்கள் அவர்கள். உண்ணவும் பருகவும் ஏதுமின்றி உயிரை இழந்தவர்களும் அவர்களில் உண்டு. நோயுற்று இறந்தோரும் அவர்களில் உண்டு. வாழ்க்கையை வெறுத்து தற்கொலை செய்து கொண்டோரும் அவர்களில் உண்டு. 

ஆட்சியாளர்கள் விசாரிக்கப்படுவர்

India racked by greatest exodus since partition due to coronavirus ...

நாட்டுமக்களின் நலன் காப்பதாக மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து அம்மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரியணை ஏறியவர்கள் இந்த ஆட்சியாளர்கள். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள்  பாமரர்கள்தானே என்ற அலட்சியத்தால் அவர்களின் துன்பங்களை மாநில அரசுகளும் மத்திய அரசும் கண்டு கொள்ளவில்லை என்றே தெரிகிறது. பெரும்பான்மை மக்கள் பிரதிநிதிகள் தங்கள் கைவசம் இருப்பதால் தங்களை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணம் அவர்களை ஆட்கொண்டிருக்கலாம்.

அல்லது அடுத்த தேர்தலுக்குள் மக்களை மீண்டும் மூளைச்சலவை செய்து மீண்டும் அரியணை ஏறலாம் என்றும் அவர்கள் எண்ணி இருக்கலாம். எது எப்படியானாலும் அவர்களுக்கு மேலே அனைத்தையும் கண்டு கொண்டும் பதிவு செய்துகொண்டும் இருப்பவன் ஒருவன் உள்ளான் என்பதை நினைவூட்டுவது நம் கடமையாக உள்ளது.

ஆம், அவன்தான் இவ்வுலகைப் படைத்து பரிபாலிக்கும் இறைவன்.   அவன் தற்காலிகமாக தந்திருப்பதே இந்த ஆட்சியதிகாரம், இதுபற்றி இறைவன் என்னை விசாரிக்க உள்ளான் என்ற பொறுப்புணர்வு இருந்தால் நாட்டை ஆள்வோர் எவரும் பொதுமக்கள் படும் இன்னல்களைக் கண்டு அலட்சியமாக இருக்கவும் மாட்டார்கள். நாட்டின் சொத்துக்களை தனதாக்கும் முயற்சியிலும் ஈடுபடமாட்டார்கள். ஏன், இரவில் நிம்மதியாக தூங்கவும் மாட்டார்கள்!இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பின்,  பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே; அவரிடம் அவரது குடிமக்களைப் பற்றி வினவப்படும்…. “அறிவிப்பு: அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)  நூல்:புகாரி, முஸ்லிம்)

ஆட்சியாளர்களே, இறைவனிடம் விசாரணை என்றால் சாதாரணமானது அல்ல. இவ்வுலகில் வலுவான வழக்கறிஞர்களை வைத்துக்கொண்டு சட்டத்தின் ஓட்டைகள் வழியாக தப்பிப்பதோ அல்லது நீதிபதிகளை மிரட்டியும் விலைக்கு வாங்கியும் தண்டனையில் இருந்து தப்பிப்பதோ எல்லாம் அங்கு நடக்காது.

இவ்வுலகில் உங்கள் ஆட்சியின்போது நிகழ்த்தப்பட்ட அனைத்து அத்துமீறல்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் உங்கள் மோசமான ஆட்சியின் காரணமாக குடிமக்கள்  அனுபவித்த அனைத்து இடையூறுகளுக்கும் இன்னல்களுக்கும் இறுதித்தீர்ப்பு நாளன்று விசாரணைக்கு வரும். தொடர்ந்து அதற்கான தண்டனையும் வழங்கப்படும். சந்தேகத்திற்கு இடமின்றி நடக்க உள்ள நிகழ்வு இது. வினை விதைத்தவன் அதை அறுவடை செய்யாமலா போவான்?

உறுதியான இறுதியான விசாரணை

= அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்;அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும். (திருக்குர்ஆன் 36:65)

= எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (திருக்குர்ஆன் 99:7,8)

விசாரணைக்குப் பிறகு பாவிகளுக்கு நரகமும் புண்ணியவான்களுக்கு சொர்க்கமும் விதிக்கப்படும். அதுதான் மனிதனின் நிரந்தரமான அழியாத இருப்பிடம் ஆகும்.அந்த நரகம் எப்படிப்பட்டது என்பதை விளங்க திருக்குஆனைப் படியுங்கள். பல்வேறு இடங்களில் அதுபற்றி திருக்குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான் உதாரணத்திற்கு கீழ்கண்ட வசனகளைப் பாருங்கள்:

= நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது, வரம்பு மீறிவர்களுக்குத் தங்குமிடமாக. அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ, குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள். கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர. (அதுதான் அவர்களுக்குத்) தக்க கூலியாகும். (திருக்குர்ஆன் 78:21-30)

= …..அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்¢ (அந்நெருப்பின்) சுவர் அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். அவர்கள் (தண்ணீர் கேட்டு) இரட்சிக்கத் தேடினால் உருக்கப்பட்ட செம்பு போன்ற தண்ணீரைக் கொண்டே இரட்சிக்கப்படுவார்கள். (அவர்களுடைய) முகங்களை அது சுட்டுக் கருக்கி விடும். மிகக் கேடான பானமாகும் அது! இன்னும், இறங்கும் தலத்தில் அதுவே மிகக் கெட்டதாகும். ‘(திருக்குர்ஆன் 18:29) 

Share this Article

Add a Comment

Your email address will not be published.