Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு - Thiru Quran Malar

மனித இனம் பூமிக்கு வந்த வரலாறு

Share this Article

நம்பத்தகுந்த வரலாறு எங்கு கிடைக்கும்? 

மனிதஇனம் இந்த பூமிக்கு வந்ததன் பின்னால் கண்டிப்பாக ஒரு வரலாறு இருக்க வேண்டும். பகுத்தறிவு பூர்வமாக சிந்தித்தால் உண்மை என்ன என்பதை நாம் ஊகித்துதான் அறிய முடியும். ஏனெனில் நாம் அப்போது இருக்கவில்லை. இந்த விஷயத்தில் அறிவியல் ஆராய்ச்சிகள் ஏதும் சொல்வதாக இல்லை. அதே நேரத்தில் அதிநுட்பங்கள் வாய்ந்த இந்தப் பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டு அதிநுட்பங்கள் வாய்ந்த ஒரு உடலுக்குள் இருந்து கொண்டு ‘எல்லாமே தற்செயல்’ என்று பிதற்றுவது அறியாமையின், சிந்தியாமையின் சிகரம்!

இனி பூமியின் மீது மனித தோற்றம் பற்றி வேறு யார் எதைக் கூறினாலும் நம்பினாலும் அவை உறுதியற்ற ஊகங்களாகவே அமையும். இந்நிலையில் இவ்வுலகையும் மனிதர்களையும் இன்னபிற ஜீவிகளையும் படைத்தவன் எவனோ அவன் நமக்கு எதைச் சொல்கிறானோ அது மட்டுமே உண்மையாக இருக்க வாய்ப்புள்ளது என்பதை சிந்திப்போர் அறியலாம். அதை ஆய்வுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதே அறிவுடைமை.

இன்னும் அதுவே நம் வாழ்க்கையின் உண்மைக் குறிக்கோளை அறியவும் அதை பயனுள்ள முறையில் செலவிடவும் உதவும்.
அந்த வகையில் நாம் பூமிக்கு வந்த வரலாற்றை இன்று உறுதியான முறையில் அறிய  நமக்குத்  துணை  நிற்பது  இறுதிவேதம் திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதர் முஹம்மது நபி அவர்களின் கூற்றுக்கள் மட்டுமே. அதற்கான சில முக்கிய காரணங்கள் உள்ளன: 

= இறைவனிடமிருந்து அவனது இறுதித்தூதர் முஹம்மது நபி அவர்கள் மூலமாக வந்த திருக்குர்ஆன் பதினான்கு நூற்றாண்டுகள் ஆகியும் மூல மொழியிலேயே உலகெங்கும் ஒரே போல பாதுகாக்கப்பட்டு வருகிறது.

=  இலட்சக்கணக்கான மக்களால் மூலமொழியிலேயே அந்த வசனங்கள் மனப்பாடமும் செய்யப்பட்டு உள்ளதால் எந்த ஒரு மாற்றங்களுக்கும் அது இரையாவதில்லை.

=  நிரூபிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளோடும் வரலாற்று உண்மைகளோடும் அற்புதமான முறையில் பொருந்திப் போகிறது.

= அரபு மொழியில் அதன் உயர்ந்த இலக்கியத் தரம், அதன் தீர்க்கதரிசனங்கள் மெய்ப்பிக்கப்பட்டு வருதல், வசனங்களின் முரண்பாடின்மை, அறிவியல் வளர்ச்சியால் புதிதுபுதிதாக கண்டுபிடிக்கப்படும் நிரூபிக்கப்பட்ட உண்மைகளோடு முரண்படாமை  

இன்னும் இவைபோன்ற பல அற்புத குணங்களால் திருக்குர்ஆன் தன்னை ஒரு முழுமையான நம்பத்தகுந்த இறைவேதம் என்பதை நிரூபித்து வருகிறது. இது பற்றிய ஐயம் நீங்க இதைப் படியுங்கள்: ஒப்பிலா இறைமறை திருக்குர்ஆன்

நமது பின்னணியை அறியும் முன்.. இறைவேதம் திருக்குர்ஆன் மூலம் நமக்கு அறியக் கிடைக்கும் பூமியில் நமது தோற்றத்தின்  வரலாற்று சுருக்கத்தினை நாம் கீழே காண இருக்கிறோம்.  இது தொடர்பான திருக்குர்ஆன் வசனங்களைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் வாசகர்களாகிய  நாம் நமது நிலையைப் பற்றி சற்று நினைவுகூர வேண்டும்:

மனிதனின் அற்ப நிலை

= இம்மாபெரும் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கும் கோடானுகோடி பந்துகளில் ஒரு பந்தான பூமிப் பந்தின்மீது ஒட்டிக்கொண்டு இருக்கும் ஒரு நுண்ணிய துகள் போன்றவர்கள் நாம். நம்மில் ஓவ்வொருவரது ஆயுளும் நீர்க்குமிழி போல மிகமிக அற்பமானதே. ஒரு அற்பமான இந்திரியத்துளியிலிருந்து உடல் பெற்று உருவாகி வளர்ந்து மறையக் கூடியவர்கள் நாம்.

= இவற்றின் படைப்பிலோ இயக்கத்திலோ கட்டுப்பாட்டிலோ ஒரு துளியளவு கூட நம் பங்களிப்பு என்பது இல்லை. மட்டுமல்ல, நாம் நமது என்று சொல்லிக்கொள்ளும் நம் உடல் பொருள் ஆவி என இதில் எதுவுமே நமது அல்ல, இவற்றின் கட்டுப்பாடும் முழுமையாக நம் கைவசம் இல்லை.

= நாம் இங்கு வருவதும் போவதும் – அதாவது நம் பிறப்பும் இறப்பும் – நம் விருப்பப்படி நடப்பது அல்ல.

= மனித குலத்தின் ஒட்டு மொத்த அறிவு என்பது நமது முன்னோர்கள் இதுவரைத் திரட்டித்தந்தவை, மனிதகுலம் இதுவரை மேற்கொண்ட ஆராய்ச்சிகளின் விளைவாக பகுத்தறிந்தவை, மற்றும் அவர்கள் பகிர்ந்து கொண்டவை, நாம் சுயமாக ஐம்புலன்களின் வாயிலாக அறிந்த தகவல்களை வைத்து பகுத்தறிந்தவை என பலவும் அவற்றில் அடங்கும்.

இவை ஒட்டுமொத்தத்தையும் ஒரே இடத்தில் திரட்டினாலும் அது இப்பிரபஞ்சத்தைப் பற்றிய முழுமையான அறிவு என்று கூற சற்றும் வாய்ப்பே இல்லை. அறிந்தது துளியளவு அறியாதது கடலளவு என்பது கூட மிகைப்படுத்தப்பட்ட உண்மையே!

திருக்குர்ஆன் வசனங்களின் இயல்பு

= அடுத்ததாக திருக்குர்ஆன் வசனங்கள் என்பவை இவ்வுலகைப் படைத்தவனால் அவனது  பரந்த அறிவில் இருந்து பகிரப்படுபவை. இம்மாபெரும் பிரபஞ்சத்தில் அற்பமான தோற்றமும் அற்பமான ஆயுளும் கொண்ட மனிதர்களாகிய நமக்கு இந்தக் குறுகிய பரீட்சை வாழ்க்கைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே கூறுகிறான் என்பதை நாம் நினைவில் கொள்ளவேண்டும்.

மேலும் நமக்கு வாய்த்துள்ள அற்ப அறிவுக்கு எட்டாத பல விடயங்களும் இங்கு கூறப்படும் போது அவற்றை அவ்வாறே ஏற்றுக்கொள்வதே அறிவுடைமை. மாறாக நமது அற்ப அறிவைக் கொண்டு இவ்வுலக நடைமுறையோடு ஒப்பிட்டு அவை அறிவுக்குப் பொருந்தாதவை என்று வாதிடுவது வாதியின் அறிவீனத்தையே பறைசாற்றும் என்பதை நாம் அறியவேண்டும்.

மீண்டும் நினைவு கூருவோம். கீழ்கண்ட நிகழ்வுகள் நமது அறிவு எல்லைக்கு அப்பால் நடந்தவை. நமக்குப் பழகிய நிகழ்வுகளோடு ஒப்பீடு செய்து அல்லது நமக்கு எட்டிய அற்ப அறிவைக் கொண்டு இவற்றை ஒப்பீடு செய்து அணுகினால் அது குழப்பத்தையே தரும்.

பதங்கள் விளக்கம்:

வாசகர்கள் அறிந்து கொள்வதற்காக கீழ்கண்ட வசனங்களில் இடம்பெறும் சில பதங்கள் பற்றிய சுருக்கமான விளக்கங்கள் வருமாறு: 

அல்லாஹ்: இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வரும் ஏக இறைவனைக் குறிக்கும் சொல். இதன் பொருள் ‘வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன்’ என்பது.

வானவர்கள் அல்லது மலக்குகள் : வானவர்கள் ஒளியினால் படைக்கப்பட்டவர்கள். (அரபு மொழியில் ‘மலக்கு’கள் என்று வழங்கப்படும்) அவர்கள் ஆண்களுமல்ல பெண்களுமல்ல. அவர்கள் எப்போதும் இறைவனின் கட்டளைப்படியே நடப்பவர்கள். ஒருபோதும் அவனை மீறி நடக்கவோ மாறு செய்யவோ மாட்டார்கள். அவர்களுக்கு இடப்பட்ட கட்டளைகளை தவறாது செய்து முடிப்பார்கள்.

ஜின்கள்: மனிதர்களைப் போலவே பகுத்தறிவும் விருப்ப உரிமையும் கொடுக்கப்பட்ட இனம். நெருப்பின் சுவாலையில் இருந்து படைக்கப்பட்டவர்கள்.  மனிதர்களைப் போலவே ஆண் பெண் மற்றும் சந்தானங்கள், நல்லவர்கள் கெட்டவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் என இவர்களுக்குள்ளும் உள்ளனர்.

= வானவர்கள் ஒளியினாலும், ஜின்கள் நெருப்பினாலும், ஆதம் (என்னும் முதல் மனிதர்) உங்களுக்கு விளக்கியவாறு (மண்ணினாலும்) படைக்கப்பட்டவர்கள்’ என அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: முஸ்லிம், அஹ்மத்)

இப்லீஸ் மற்றும் ஷைத்தான்:ஷைத்தான்கள் என்பவை ஜின் இனத்தைச் சேர்ந்தவை. இப்லீஸ் என்ற நபரின் வழித்தோன்றல்கள் தான் ஷைத்தான்கள். இப்லீஸ் என்பவன் தனி நபர். அந்தத் தனிநபரின் மூலம் உருவான கெட்ட சந்ததிகள்தாம் ஷைத்தான்கள். மனித மற்றும் ஜின் இனத்தைச் சார்ந்தவர்களின் மனங்களில் ஊசலாட்டத்தையும் தீய எண்ணங்களை விதைப்பதற்கு சக்தி பெற்றவர்கள் ஷைத்தான்கள்.

ஆதம்: முதல் மனிதரின் பெயர்.மேற்கூறப்பட்ட எந்த இனங்களும் மனிதனின் தற்போதைய நிலையில் அவனது கண்களுக்குப் புலப்படாதவை என்பதையும் அவை அனைத்தும் மனிதன் படைக்கப்படுவதற்கு முன்னரே படைக்கப்பட்டவை என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மனிதனைப் படைப்பதற்கு முன் நடந்த உரையாடலை நாம் கீழ்கண்டவாறு திருக்குர்ஆனில் காண்கிறோம்:

மனிதனின் படைப்புக்கு முன்னர்

2:30. (நபியே) இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான்.

2:31. இன்னும், (இறைவன்) எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் ஆதமுக்கு கற்றுக் கொடுத்தான்; பின் அவற்றை வானவர்கள் முன் எடுத்துக்காட்டி, “நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாயிருப்பின் இவற்றின் பெயர்களை எனக்கு விவரியுங்கள்” என்றான்.

2:32. அவர்கள் “(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்” எனக் கூறினார்கள்.

2:33. “ஆதமே! அப்பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!” என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது “நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?” என்று (இறைவன்) கூறினான்.

2:34. பின்னர் நாம் வானவர்களை நோக்கி, “ஆதமுக்குப் பணி(ந்து ஸுஜூது செய்)யுங்கள்” என்று சொன்னபோது இப்லீஸைத்தவிர மற்ற அனைவரும் சிரம் பணிந்தனர்; அவன் (இப்லீஸு) மறுத்தான்; ஆணவமும் கொண்டான்; இன்னும் அவன் சத்தியமறுப்பாளர்களைச் சார்ந்தவனாகி விட்டான்.

மேற்கண்ட வசனங்களில் இருந்து முதல் மனிதர் ஆதமுக்கு இறைவன் மற்ற இனங்களுக்கு வழங்காத அறிவை வழங்கி அவரை சிறப்பித்ததையும் அவருக்கு மரியாதை செய்யுமாறு மற்ற இனங்களை ஏவியதையும் இப்லீஸைத் தவிர மற்றவர்கள் யாவரும் சிரம் பணிந்ததையும் நாம் அறிகிறோம். வானவர்கள் எவ்வாறு மனிதர்கள் குழப்பம் விழைவிப்பவர்கள் அல்லது இரத்தம் சிந்துபவர்கள் என்பதை அறிந்து கொண்டார்கள் என்ற விடயம் நமக்குப் புதிராக இருக்கலாம்.

ஏற்கெனவே வாழ்ந்து கொண்டிருந்த ஜின் இனங்களின் செயல்பாடுகளைக் கண்டும் அவர்கள் அக்கேள்வி எழுப்பி இருக்கலாம். அல்லது வேறு ஏதாவது வழியில் இறைவனால் அவர்களுக்கு அதுபற்றிய அறிவு கொடுக்கப்பட்டு இருப்பதற்கும் வாய்ப்புண்டு. (இன்றுதான் ஒரு பொருளை தயாரிப்பதற்கு முன்னரே அதன் கம்ப்யுட்டர் ப்ரோடோடைப் செய்து அதைப் பற்றி கம்பெனிகள் விவாதிக்கும் முறையை அறிவோமே). இறைவனே மிக அறிந்தவன்.

சொர்க்கத்தில் குடியிருத்தல்

தொடர்ந்து நடந்தவற்றை கீழ்கண்ட வசனங்களில் காண்கிறோம்.

7:19. (பின்பு இறைவன் ஆதமை நோக்கி:) “ஆதமே! நீரும், உம் மனைவியும் சுவர்க்கத்தில் குடியிருந்து, நீங்கள் இருவரும் உங்கள் விருப்பப் பிரகாரம் புசியுங்கள்; ஆனால் இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்; (அப்படிச் செய்தால்) நீங்கள் இருவரும் அநியாயம் செய்தவர்கள் ஆவீர்கள்” (என்று அல்லாஹ் கூறினான்).

7:20. எனினும் அவ்விருவருக்கும் மறைந்திருந்த அவர்களுடைய (உடலை) மானத்தை அவர்களுக்கு வெளிப்படுத்தும் பொருட்டு ஷைத்தான் அவ்விருவரின் உள்ளங்களில் (தவறான எண்ணங்களை) ஊசலாடச் செய்தான்; (அவர்களை நோக்கி, “அதன் கனியை நீங்கள் புசித்தால்) நீங்கள் இருவரும் மலக்குகளாய் விடுவீர்கள், அல்லது (இச்சுவனபதியில்) என்றென்னும் தங்கிவிடுவீர்கள் என்பதற்காகவேயன்றி (வேறெதற்கும்,) இந்த மரத்தை விட்டும் உங்களை உங்கள் இறைவன் தடுக்கவில்லை” என்று கூறினான்.

7:21. “நிச்சயமாக நான் உங்களிருவருக்கும் நற்போதனை செய்பவனாக இருக்கிறேன்” என்று சத்தியம் செய்து கூறினான்.

7:22. இவ்வாறு, அவன் அவ்விருவரையும் ஏமாற்றி, அவர்கள் (தங்கள் நிலையிலிருந்து) கீழே இறங்கும்படிச் செய்தான் – அவர்களிருவரும் அம்மரத்தினை (அம்மரத்தின் கனியை)ச் சுவைத்தபோது – அவர்களுடைய வெட்கத்தலங்கள் அவர்களுக்கு வெளியாயிற்று; அவர்கள் சுவனபதியின் இலைகளால் தங்களை மூடிக்கொள்ள முயன்றனர்; (அப்போது) அவர்களை அவர்கள் இறைவன் கூப்பிட்டு: “உங்களிருவரையும் அம்மரத்தை விட்டும் நான் தடுக்கவில்லையா? நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் என்று நான் உங்களுக்கு சொல்லவில்லையா?” என்று கேட்டான்.

 சொர்க்கத்தில் இறைவன் புசிக்க வேண்டாம் என்று தடுத்த கனியை ஷைத்தானின் தூண்டுதலால் புசித்த பின் தாங்கள் செய்த தவறை உணர்ந்தார்கள் நமது ஆதி தந்தையும் தாயும். பிறகு இறைவனிடம் பாவ மன்னிப்பு கோரினர். திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

2:37. (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அவை என்ன வார்த்தைகள் என்பதை கீழ்கண்ட வசனம் கூறுகிறது:

7:23. அதற்கு அவர்கள், “எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம்”  என்று கூறினார்கள்.

இறைவன் மன்னித்ததைத் தொடர்ந்து மனித இனம் பூமியில் குடியேற்றப்பட்டது. ஒரு தற்காலிகமான குறுகிய கால வாழ்க்கையை ஆதம் – ஹவ்வா தம்பதியினரும் அவர்களின் வழித்தோன்றல்களும் இங்கு கழிக்க இறைவன் பணித்தான்.

7:24. (அதற்கு இறைவன், “இதிலிருந்து) நீங்கள் இறங்குங்கள் – உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள்;  உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது; அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு” என்று கூறினான்.

7:25. “அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள்; அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள்; (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்” என்றும் கூறினான்.

பூமி வாழ்க்கையை ஒரு பரீட்சை வாழ்க்கையாக இறைவன் அமைத்துள்ளான். இதில் இறைவனின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப வாழ்பவர்கள் இந்தப் பரீட்சையில் வெல்கிறார்கள். அவர்கள் மீண்டும் சொர்க்கத்திற்குள் நுழைகிறார்கள். இறைவனையும் அவனது வழிகாட்டுதலையும் புறக்கணித்து வாழ்வோருக்கு நரகம் தண்டனையாக வழங்கப் படுகிறது. 

2:38. நாம் கூறினோம்: “நீங்கள் அனைவரும் இங்கிருந்து இறங்கி விடுங்கள். பிறகு உங்களுக்கு என்னிடமிருந்து நேர்வழி கிடைக்கும்போது யார் எனது நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை; அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

2:39. அன்றி யார் (அதை) ஏற்றுக்கொள்ள மறுத்து, எம்முடைய வசனங்களைப் பொய்யென்று கூறுகின்றார்களோ அவர்கள்தாம் நரகவாசிகளாவர்; அவர்கள் அதிலேயே என்றென்றும் வீழ்ந்து கிடப்பார்கள்!”

 இதுதான் நாம் பூமிக்கு வந்ததன் சுருக்கமான வரலாறு!

Share this Article

Add a Comment

Your email address will not be published.