Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும் - Thiru Quran Malar

இறைவன் பெண்ணுக்கு வழங்கும் உரிமைகளும் பாதுகாப்பும்

Share this Article

இறுதி இறைவேதம் திருக்குர்ஆனும் அதை தன் வாழ்க்கை முன்மாதிரியாகக் கொண்டு நடைமுறையில் வாழ்ந்து காட்டியவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னுதாரண வாழ்க்கையில் இருந்தும் பெறப்படுபவையே இஸ்லாமிய வாழ்வியல் சட்டங்கள்.

இவற்றை பேணுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும். அரபுநாட்டில் நபிகளாரின் காலத்தில் நடைமுறைக்கு வந்த இந்த வாழ்வியல் சட்டங்கள் அன்று எவ்வாறு பெண்களை கொடுமைகளில் இருந்து விடுவித்ததோ அதே போல பிற்காலங்களில் எங்கல்லாம் இஸ்லாம் பரவியதோ அங்கெல்லாம் பெண்களை அவர்களின் மூதாதையர்களின் மூடப்பழக்க வழக்கங்கள் உண்டாக்கி வைத்த கொடுமைகளில் இருந்து விடுவித்தது, தொடர்ந்து விடுவித்துக் கொண்டு வருகிறது என்பதை நடைமுறையில் காணலாம்.

பிறப்புரிமை: இஸ்லாம் பெண்களுக்கு வழங்கும் முதல் உரிமை பிறப்பதற்கான உரிமை. பெண் குழந்தை என்றால் இழிவு எனக் கருதி அவர்களை உயிருடன் புதைக்கும் பழக்கம் அங்கு அராபியர்களிடம் இருந்து வந்தது.

குழந்தைகளை கொலை செய்வதை குறிப்பாக பெண்குழந்தைகளை கொல்வதை கடுமையாக எச்சரித்து தடுத்தது.  அதனை மறுமை வாழ்வுடன் தொடர்புபடுத்தி அச்சமூட்டுகிறான் இறைவன்:

 உயிருடன் புதைக்கப்பட்ட (பெண்குழந்தையான)வளும் வினவப்படும் போது. எக்குற்றத்திற்காக கொல்லப்பட்டாள் (என்று வினவப்படும் போது) (திருக்குர்ஆன் 82:8-9)


கற்கும் உரிமை: கல்வி கற்பதற்கான உரிமையை வழங்குவதோடு நின்றுவிடாமல் அதை கடமையாக்கியது இஸ்லாம்.

“அறிவைத் தேடுவது ஒவ்வோர் ஆணுக்கும் பெண்ணுக்கும் கட்டாயமாகும்” என்று அறிவித்து நடைமுறைப் படுத்தினார் நபிகள் நாயகம்(ஸல்).

அன்னாரின் துணைவியார் ஆயிஷா அம்மையார் மாபெரும் மார்க்க மேதையாக திகழ்ந்தார் என்பதை நபிமொழி பதிவுகள் சான்று கூறுகின்றன.


மானிட சமன்பாடு :பெண்கள் மனித இனமா, பெண்களுக்கு ஆன்மா உண்டா என்றெல்லாம்  பிற சமூகங்களில் விவாதம் நடந்து கொண்டிருந்த சமயத்தில், ஆண்களும் பெண்களும் சமமே, அவர்கள் ஒரே ஆண் பெண்ணிலிருந்து தோன்றியோர் என்பதை தெளிவாக எடுத்துரைத்து இந்த இழிவுக்கு முடிவு கட்டியது இஸ்லாம்.

அவர்களோடு உள்ள சகோதரத்துவத்தையும் உறுதிப்படுத்தி இறுதிநாள் வரை பின்பற்ற அடித்தளமிட்டது இஸ்லாம். 

மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனை பயந்து நடந்து கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆன்மாவிலிருந்து படைத்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரைப் படைத்து) அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான். பின்னர், அவர்கள் இருவரிலிருந்தும் பல ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான்’. (திருக்குர்ஆன் 4:1)

ஆன்மீக அந்தஸ்து: ஆண்களைப் போலவே பெண்களுக்கும் ஆன்மீகத்தில் சம அந்தஸ்த்தையும்  உரிமைகளையும் இஸ்லாம் வழங்கியுள்ளது. நன்மையான செயல்களுக்கான கூலி இரு சாராருக்கும் சமமாக வழங்கப்படுகிறது.

33:35. நிச்சயமாக இறைவனுக்கு கீழ்படியும் ஆண்களும், பெண்களும்; நன்னம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்; இறைவழிபாடுள்ள ஆண்களும், பெண்களும்; உண்மையே பேசம் ஆண்களும், பெண்களும்; பொறுமையுள்ள ஆண்களும், பெண்களும்; (அல்லாஹ்விடம்) உள்ளச்சத்துடன் இருக்கும் ஆண்களும், பெண்களும்; தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும்; நோன்பு நோற்கும் ஆண்களும், பெண்களும்; தங்கள் வெட்கத்தலங்களை (கற்பைக்) காத்துக் கொள்ளும் ஆண்களும், பெண்களும்; அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யும் ஆண்களும், பெண்களும் – ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான நற்கூலியையும் சித்தப்படுத்தியிருக்கின்றான்.

பொருளாதார உரிமை: பெண்களின் உயிர், கண்ணியம் சொத்து ஆகியவற்றிற்கான உரிமைகள் ஆண்களைப் போன்றே வழங்கப்படுகின்றன. சொத்துக்களை வைத்திருப்பதற்கு மாத்திரமன்றி, அவற்றை விற்கவோ, வாங்கவோ பூரண சுதந்திரம் அவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 இறந்து போன பெற்றேரோ, நெருங்கிய உறவினரோ விட்டுப்போன பொருட்களில் ஆண்களுக்கு பாகமுண்டு. அவ்வாறே பெண்களுக்கும் பாகமுண்டு’ (திருக்குர்ஆன் 4:7)

பொருளீட்டும் உரிமை: ஆண்களைப்போன்றே பெண்களுக்கும் பொருளீட்டும் சமத்துவத்தை இஸ்லாம் முன்வைத்தது.

 ஆண்களுக்கு அவர்கள் சம்பாதித்வை உரியன. பெண்களுக்கு அவர்கள் சம்பாதித்தவை உரியன.(4:32)


ஆளுமைக்கு மதிப்பு: ஒருவர் இறந்து போனதும் அவரது சொத்துக்களை வாரிசு சொத்துக்களாக பங்கிடுவது போல இறந்து போன மனிதரின் மனைவியரை பங்கிட்டுக்கொள்ளும் தீயபழக்கம் இஸ்லாம் வருவதற்கு முன் அரபு சமுகத்தில் காணப்பட்டது.

மனிதாபிமானமற்ற இந்த பாரம்பரியத்தை இஸ்லாம் அழித்தொழித்து, பெண்ணின் ஆளுமைக்கு மதிப்பும், கண்ணியமும் வழங்கியது.

 விசுவாசம் கொண்டோரே! பெண்களை பலவந்தமாக நீங்கள் அனந்தரம் கொள்வது உங்களுக்கு ஆகுமானதல்ல’ (4:19)

திருமண சீர்திருத்தம் : இஸ்லாம் திருமணத்தை ஒரு வாழ்க்கை ஒப்பந்தம் என்ற எளிய சித்தாந்தமாக உலகிற்கு அறிமுகப் படுத்தியது.  

இருமனம் இணையும் திருமண உறவில் தன்னை மணக்கும் மணவாளனை தேர்வு செய்யும் உரிமையையும்,  வரதட்சணைக்கு எதிராக மஹர் என்னும் மணக்கொடையை கேட்கும் உரிமையையும் இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.

திருமணத்திற்கு பெண்ணின் சம்மதத்தை கட்டாயமாகியது.


மேலும், (நீங்கள் திருமணம் செய்யும்) பெண்களுக்கு அவர்களுக்குரிய மஹர் தொகையை (கடமையெனக் கருதி) மனமுவந்து வழங்கி விடுங்கள். (திருக்குர்ஆன் 4:4)


கன்னிப் பெண்ணாயினும். விதவையாயினும் சம்மதம் பெறவேண்டுமென்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது, கன்னிப் பெண் (சம்மதம் தெரிவிக்க) வெட்கப்படுவாளே என்று கேட்டேன். அதற்க நபி(ஸல்) அவர்கள், அவளது மௌனமே அவளது சம்மதமாகும்’ என்று கூறினார்கள்.  அறிவிப்பாளர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: புகாரி, முஸ்லிம்


விவாகரத்து உரிமை:  இஸ்லாம் ஆண்களுக்கு மாத்திரமன்றி பெண்களுக்கும் தான் விரும்பாத போது கணவனிடமிருந்து விவாகரத்து பெறும் உரிமையை வழங்குகிறது.

சாட்சி கூறும் உரிமை: பெண் பெண்ணாக மதிக்கப்படாத காலத்திலேயே அவள் சாட்சியம் சொல்லக்கூடிய அளவிற்கு உயாந்தவர்கள் என்று அவளை உயர்த்தி அந்த உரிமையையும் இறைவன் வழங்கியுள்ளான்.


‘… கடனுக்கு பெண்கள் இருவரை சாட்சியாளர்களாக எடுத்துக் கொள்ளுங்கள்..” 
                           – திருக்குர்ஆன் 2: 282


 கனிவோடு நடத்த கட்டளை: பெண்களுடன் அன்பாகவும்,  கனிவுடனும் நடக்குமாறு இஸ்லாம் ஏவுகின்றது.

4:19. நம்பிக்கை கொண்டவர்களே! பெண்களை (அவர்கள் மனப் பொருத்தம் இல்லாத நிலையில்) நீங்கள் பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்கு கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர்கள்;. இன்னும், அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள் – நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியில்லை ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்.


மானத்திற்கு பாதுகாப்பு: பெண்களது மானத்திற்கான உரிமையையும் உத்தரவாதத்தினையும் இஸ்லாம் வழங்குகிறது.

எவர்கள் கற்புள்ள பெண்கள் மீது அவதூறு கூறி, (அதற்கு வேண்டிய) நான்கு சாட்சிகளை அவர்கள் கொண்டுவராவிட்டால், அவர்களை நீங்கள் 80 கசையடி அடியுங்கள். பின்னர் அவர்கள் கூறும் சாட்சியத்தை எக்காலத்திலும் ஒப்புக்கொள்ளாதீர்கள். ஏனெனில், நிச்சயமாக அவர்கள் வரம்பு மீறியவர்கள்’. (திருக்குர்ஆன் 24:4)

 ஹிஜாப் என்ற விமர்சனத்துக்கு உள்ளாகும் ஆடை ஒழுக்கம்:

பெண்ணை ஆணாதிக்கத்தின் உச்சகட்டக் கொடுமையில் இருந்து விடுவிக்க இஸ்லாம் பரிந்துரைக்கும் விடயமே ஹிஜாப். அவளை கடைசரக்காகவும் காட்சிப்பொருளாகவும் ஆக்கி அவளது கற்ப்பை சூறையாடும் காமுகர்களிடம் இருந்து விடுவிக்கும் பாதுகாப்பு அரண்தான் இது.

இஸ்லாம் வழங்கிய  உரிமைகளை பூர்த்தி செய்யும் முகமாக அவள் பொதுவாழ்வில் ஈடுபடும்போது அந்நிய ஆண்களின் காமப் பார்வையும் இன்ன பிற தீங்குகளில் இருந்தும் ஏற்படும் இடையூறுகளை தவிர்த்து அவளது காரியங்களை எளிதாக நிறைவேற்றிக்கொள்ள வழிவகுப்பதே ஹிஜாப் என்பதை சிந்திப்போர் அறியலாம்.     

இவ்வாறு இஸ்லாம் பெண்களுக்குத் தேவையான சகல உரிமைகளும் அவர்கள் கேட்காமலே அதற்காக அவர்கள் போராடாமலேயே அவர்களுக்கு வழங்கி கவுரவித்தது.

உலகெங்கும் பெண்ணடிமைத்தனம் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் பெண்ணுக்காக யாரும் பரிந்து கூட பேச முன்வராத காலத்தில் அவளது உரிமைகளை உணர்த்தியது.

ஆணாதிக்கத்தின் பிடியில் இருந்து விடுவித்தது.இவற்றை எல்லாம் மீறிய இன்னொன்றையும் கவனியுங்கள்.

 எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையும் நம் கடமை!:  இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பெண்களின் உரிமையை மட்டுமல்ல  … எதிரி நாட்டுப் பெண்களின் உரிமையையும் கூட பேண வலியுறுத்துகிறது இஸ்லாம்!

போரில் எதிரி நாட்டோடு எப்படியும் அணுகலாம், அவர்களை எப்படி வேண்டுமானாலும் அழிக்கலாம் என்ற எந்த வரம்பும் வரையறுக்கப்படாத காலகட்டத்தில் ‘இல்லை இல்லை இப்படித்தான் அணுகவேண்டும்’ என்று யுத்த தர்மங்களை அறிமுகப்படுத்தியது இஸ்லாம்.

அங்கு போரில் ஈடுபடாத பெண்கள், சிறுவர்கள், வயோதிபர்கள்,  அங்கவீனர்களுக்கு பாதகம் ஏற்படாத வகையில் நடந்து கொள்வதை இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.


 இது தொடர்பாக நபி (ஸல்) கூறும் போது, ‘வயது முதிர்ந்தவர்கள், குழந்தைகள், பெண்கள், ஆகிய யாவரையும் கொல்லாதீர்கள்’ (அபூதாவூத்)

ஒரு  போரின்போது தரையில் ஒரு பெண்ணின் சடலம் வீழ்ந்து  கிடப்பதைக் கண்ட நபியவர்கள் கூறினார்கள்,

இவள் போர் செய்யவில்லை. பின் ஏன் இவள் கொலைக்கு  ஆளானாள்?’ என்று கடுமையாக கடிந்து கொண்டார்கள்..


ஆம், எதிரிகளை வெல்வது அல்ல இஸ்லாத்தின் நோக்கம். மாறாக அவர்களை சீர்திருத்தி பூமியில் தர்மத்தை நிலைநாட்டுவதே.

எனவே அவர்களுக்கு இறைவன் பூமியில் வழங்கிய உரிமைகளை அவர்கள் எதிரிகள் என்ற காரணத்துக்காக மீறுவதும் தடை செய்யப்பட்ட ஒன்றுதான். இதுதான் இஸ்லாம்!


அனைவரையும் படைத்து பரிபாலித்துவரும் அளவற்ற அருளாளன் அருளிய மார்க்கமே இஸ்லாம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

Share this Article

Add a Comment

Your email address will not be published.