Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் நான்கு - Thiru Quran Malar

2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் நான்கு

Share this Article

உலகின் ஆக்கம்- ஏன்? எதற்காக?

10:3.நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே ; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் – பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்தப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன் ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

10:4.நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது – நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; இறைவிசுவாசம் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.

39:5. அவன் வானங்களையும் பூமியையும் உண்மையைக் கொண்டு படைத்திருக்கிறான்; அவனே பகலின் மீது இரவைச் சற்றுகிறான்; இன்னும் இரவின் மீது பகலைச் சற்றுகிறான்; சூரியனையும் சந்திரனையும் (தன் ஆதிக்கத்திற்குள்) வசப்படுத்தினான், இவை ஒவ்வொன்றும் குறிப்பிடட தவணைப் பிரகாரம் நடக்கின்றது; (நபியே!) அறிந்து கொள்வீராக! அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னப்பவன்.

39:6. அவன் உங்களை ஒரே மனிதரிலிருந்து படைத்தான்; பிறகு அவரிலிருந்து அவருடைய மனைவியை ஆக்கினான்; அவன் உங்களுக்காக கால ;நடைகளிலிரந்து எட்டு (வகைகளை) ஜோடி ஜோடியாக படைத்தான்! உங்கள் தாய்மார்களின் வயிறுகளில் ஒன்றன் பின் ஒன்றாக மூன்று இருள்களுக்குள் வைத்து உங்களை படைக்கிறான்; அவனே அல்லாஹ்; உங்களுடைய இறைவன்; அவனுக்கே ஆட்சியதிகாரம் (முழுவதும் உரித்தாகும்) அவனைத் தவிர வேறு நாயன் இல்லை. அவ்வாறிருக்க (அவனை விட்டும்) நீஙகள் எப்படி திருப்பப்படுகிறீர்கள்?’

13:3. மேலும் அவன் எத்தகையவன் என்றால் அவனே பூமியை விரித்து. அதில் உறுதியான மலைகளையும் ஆறுகளையும் உண்டாக்கினான்; இன்னும் அதில் ஒவ்வொரு கனிவர்க்கத்திலிருந்தும் இரண்டு இரண்டாக ஜோடிகளை உண்டாக்கினான்; அவனே இரவைப் பகலால் மூடுகிறான் – நிச்சயமாக இவற்றில் சிந்திக்கும் மக்களுக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

மேற்படி வசனங்களில் இருந்தும் இன்னும் ஏராளமான திருக்குர்ஆன் வசனங்களில் இருந்தும் நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இவ்வுலகு சர்வஞானம் கொண்டவனும் சர்வவல்லமையாளனும் ஆகிய ஏக இறைவனால் வீணாகப் படைக்கப் படவில்லை, மாறாக மிகமிக உயர்ந்த நோக்கங்களோடு படைத்து பரிபாலிக்கப்பட்டு வருகிறது என்பதே!

உலக அழிவு பற்றி நமது பகுத்தறிவு உணர்த்தும் உண்மைகள் 

நாளை நடப்பவைகளில் சிலவற்றை நிச்சயமாக நாம் அறிவோம். எடுத்துக்காட்டாக மரணத்தைக் கூறலாம். மரணம் சர்வ நிச்சயமான ஒன்று! ஆனால் அது எப்போது? எங்கே? எப்படி நேரும்? என்பதை எவராலும் கூறிவிட இயலாது அல்லவா?; அதுபோலத் தான் இவ்வுலகம் அழியும் என்பதும் திண்ணம். ஆனால் அது நிகழும் நாள் எந்நாள் என்பது எவருக்கும் தெரியாது. அது இவ்வுலகை எவன் உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று.

அதைப் பற்றி அவன் நமக்கு எவ்வளவு அறிவித்துத் தருகிறானோ அவ்வளவு மட்டுமே நாம் இதை கணிக்க முடியும்.அந்த இறைவன் தனது இறுதித் தூதர் மூலமாக அனுப்பப்பட்ட வேதம் மூலமாகவும் மற்றும் அத்தூதர் மூலமாக அறிவித்த பிற செய்திகள் மூலமாகவும் உலக அழிவைப் பற்றி என்ன கூறியுள்ளானோ அவை மட்டுமே இன்று இவ்விஷயத்தில் இறுதியானவை மற்றும் உறுதியானவை!

அழிவு நிச்சயம்

நமக்குக் கிடைத்துவரும் அறிவியல் செய்திகளையும் அனுபவங்களையும் பொது அறிவைக்கொண்டும் பகுத்தறிவைக் கொண்டும் ஆராயும்போது  இவ்வுலகம் ஒருநாள் நிச்சயமாக அழியும் என்பது புலனாகிறது.உதாரணமாக, அறிவியல் தகவல்கள் படி சூரியன் அதன் முடிவை நெருங்கும்போது செக்கச் சிவந்ததோர் பிரம்மாண்டமாக ஆகிவிடும். அப்போது அது செவ்வாயின் சுற்றுவட்டப் பாதைவரை விரிவடைந்து பெரிதாகி விடும். அதனிடையே பூமி எரிந்து சாம்பலாகி விடும்.

அத்துடன் ஆவியாகி சூரியனுடன் இணைந்து விடும். அதுவரை பூமியில் எஞ்சியிருக்கும் உயிரினங்கள் யாவும் அத்துடன் ஒட்டுமொத்தமாக அழிந்து விடும். மனித இனம் அதுவரை பூமியில் நீடித்து இருக்குமா என்பதை யாராலும் கூற முடியாது.கட்டுப்பாடற்ற புவி வெப்பத்தின் மூலமாகவோ சாம்ராஜ்ஜியங்களை கட்டமைப்பதற்கான பேராசையின் விளைவாக ஏற்படக் கூடிய போர்களின் மூலமாகவோ ஒட்டுமொத்த உயிரின வாழ்வு மண்டலத்தையும் மனிதர்களே அழித்து விடாமல் இருந்தால் ஒருவேளை இப்புவியில் மனித இனமும் எஞ்சியிருக்கக் கூடும்.

ஆயினும் நாம் அறிந்துள்ளதோ அறியாததோ ஆன காரியங்களின் மூலம் இந்த பூவுலகின் ஆயுள் ஒருநாள் முற்றுப் பெறத்தான் போகிறது.உதாரணமாக விண்வெளியில் தவழ்ந்து கொண்டிருப்பவற்றுள் ஏதேனும் ஒரு பெரும் பொருள் நிலை குலைந்து வேகமாக வந்து பூமியில் மோதினால் இங்கு வாழும் உயிரினங்கள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக மடிந்து விட அதுவே போதுமானதாகும்.

அவ்வாறு நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் மிக மிக குறைவு தான் என்று விஞ்ஞானிகள் கூறினாலும் – அப்படி எதுவும் நிகழாது என்று திட்டவட்டமாக கூறிட எவராலும் இயலாது.சூரியனிலிருந்து வீசுகின்ற ஒளியின் அளவு ஏதேனும் காரணத்தால் சற்றே கூடினாலும் இந்த பூமியில் உயிர் வாழ முடியாத நிலை நேர்ந்திடும். இதற்கான சாத்தியக் கூறுகள் மிகக் குறைவே என்று அறிவியலாளர்கள் கூறுவர்.

என்றாலும் நாம் இன்று காண்கிற இந்த பிரபஞ்சம் என்றாவது ஒரு நாள் அழிந்து விடும் என்பதும் சர்வ நிச்சயமாகும்.இதோ, இவ்வுலகைப் படைத்தவனே நம்மப் பார்த்துக் கேட்கிறான்:

67:16  .வானத்தில் இருப்பவன் உங்களைப் பூமியில் சொறுகிவிடுவான் என்பதை பற்றி நீங்கள் அச்சமற்று இருக்கிறீர்களா? அப்போது (பூமி) அதிர்ந்து நடுங்கும்.

67:17  .அல்லது வானத்திலிருப்பவன் உங்கள் மீது கல்மாரியை அனுப்புவது பற்றி அச்சமற்று இருக்கிறீர்களா? ஆகவே, எனது எச்சரிக்கை (செய்யப்பட்ட வேதனை) எப்படி என்பதை விரைவில் நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

திருக்குர்ஆன் வசனங்கள் நூற்றாண்டுகளுக்கு முன் பாலைவனத்தில் வாழ்ந்துக்கொண்டு இருந்த பாமரர்களை நோக்கியும் பேசுகின்றன. இன்று விஞ்ஞானத்தில் ஓரளவு முன்னேறியிருக்கும் இன்றைய மக்களை நோக்கியும் பேசுகின்றன என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

அறியாமை

உலகம் அழியப் போகிறது என்று ஏறத்தாழ கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பலர் கூறினர். அதாவது 2000ம் ஆண்டில் ஏசு கிறிஸ்து திரும்பவும் உலகில் வருவார் என்றும் அத்துடன் உலகம் அழிந்து போய் விடும் என்றும் ஒரு சாரார் கூறினர்.2000ம் ஆண்டுடன் பெரும் பிரளயங்களோ, வேறு வகையான மாபெரும் இயற்கை சீற்றங்களோ நேர்ந்திடும்.

அதன் மூலம் உலகம் அழிந்திடும் என்று அடுத்து ஒரு சாரார் அறிவித்தனர்.இப்படியெல்லாம் பரவிய பற்பல வதந்திகளால் தாக்குண்டு, உலகம் அழிவதற்கு முன்பாகவே தற்கொலை செய்து தங்களை மாய்த்துக் கொண்டவர்கள் பற்றிய செய்திகள் பலவும் அப்போதே வெளிவந்தன. இவர்களில் பலரும் ஒருவேளை உள்ளபடியே நம்பிக் கொண்டிருந்தவற்றைத்தான் அறிவித்திருக்கக் கூடும். ஆனால் அப்படி எதுவும் நேர்ந்திடவில்லை!

அறிவுடைமை ஏது?

ஆண்டுகள் உள்ளிட்ட காலக்கணக்கீடுகளை ஏற்படுத்தியிருப்பது மனிதர்களது சவுகரியத்திற்காகத் தானேயன்றி பிரபஞ்சத்தின் செயல்பாடுகளில் இதற்கெல்லாம் எந்த பங்கும் இல்லை என்பதை விளங்கிக் கொள்ளும் போதுதான் இத்தகைய அறியாமைகள் மற்றும் மூட நம்பிக்கைகளின் பாற்பட்ட அறிக்கைகளின் அர்த்தமின்மையை உணர்ந்திட இயலும்.

ஆனால் உலகம் அழியும்போது அதை தடுக்க எந்தச் சக்தியாலும் முடியாது.. இதைப் படைத்தவன் கூறுவதைப் பாருங்கள்:

அந்த நிகழ்ச்சி நடக்கும் போது அது நிகழ்வதைத் தடுப்பதும் (அதைத்) தாமதப்படுத்துவதும் முன் கூட்டியே நடக்கச் செய்வதும் எதுவுமில்லை .(திருக்குர்ஆன் 56: 1-3)

ஆனால் அது எப்போது நிகழும் என்பதை திட்டவட்டமாக மனிதர்கள் எவராலும் கூறவும் முடியாது.ஆகவே உலக அழிவை பற்றி தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் தகவல்களை பொருட்படுத்த வேண்டியதில்லை. ஆனால் நாம் கவலையோடு ஆராய வேண்டிய விடயம் மற்றொன்று.

அதுதான் நாம் ஏன் இங்கு வாழ்கிறோம்? நம்மை ஏன் இறைவன் படைத்தான்? அந்த அழிவுக்கு முன்னரே நமக்கு மரணம் வரலாம் அதன்பின் நம் நிலை என்ன? அந்த அழிவை நாம் சந்திக்க நேர்ந்தாலும் அந்த அழிவுக்குப் பின் நம் நிலை என்ன என்பவற்றை  ஆராய்ந்து அதன்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்வதே அறிவுடைமை!

Share this Article

Add a Comment

Your email address will not be published.