2012 –இல் உலகம் ஏன் அழியாது? – பாகம் மூன்று
யார் இவ்வுலகத்தை உருவாக்கினானோ அவனுக்கு மட்டுமே அதன் அழிவைப் பற்றிக் கூற முடியும். அவன் மட்டுமே முக்காலத்தையும் உணர்ந்தவன். அவனுக்கு மட்டுமே தன் படைப்பினங்களைப் பற்றிய நுணுக்கமான அறிவு உள்ளது. அந்த வகையில் இவ்வுலகைப் படைத்து பரிபாலிப்பவனும் இவ்வுலகின் சொந்தக்காரனும் ஆன இறைவனின் வார்த்தைகளான திருக்குர்ஆனையும் அவனது இறுதித் தூதராக இவ்வுலகுக்கு வந்த முஹம்மது நபி(ஸல்) அவர்களின் கூற்றுக்களையும் அடிப்படையாகக் கொண்டதே இந்த ஆக்கம். இதுவரை திருக்குர்ஆனின் நம்பகத்தன்மை பற்றி அறிந்து கொண்டோம், இனி நபிகள் நாயகம் (ஸல்) பற்றி அறிவோம் வாருங்கள்….
நபிகள் நாயகம்(ஸல்) யார்?
அவரது முக்கியத்துவம் அடுத்ததாக நாம் இங்கு கையாளப்போவது இறுதி இறைத்தூதரான முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மூலமாக இறைவன் அறிவித்துக் கொடுத்த செய்திகளைத்தான். . நபிகளாரின் சொற்கள், அவர்களின் செயல்கள், அவர் அங்கீகரித்தவை ஆகியவற்றின் தொகுப்புக்கு ஹதீஸ் என்று கூறப்படும்.
இவை தனித் தொகுப்பாக விளங்குகின்றன. நபிகளாரின் தோழர்களால் இவை அறிவிக்கப்பட்டு பிற்காலத் தலைமுறையினரால் அறிவிப்பாளர்களின் தரம் பரிசோதிக்கப் பட்டு மிகக் கவனமாக இவை பதிவுசெய்யப் பட்டுள்ளன. முஹம்மது நபி (ஸல் அவர்கள் அறிவித்த செய்திகளை அறியும் முன் அவர்களைப் பற்றிய சில உண்மைகளையும் நினைவு கூர்வது இங்கு பொருத்தமாக இருக்கும்:
முஹம்மது நபி (ஸல்) அவர்களைப் பற்றி…..நம் ஆதிபிதா அல்லது முதல் மனிதராகிய ஆதம் அவர்களே ஓர் இறைத்தூதராக இருந்தார்கள் அவரைத் தொடர்ந்து பூமியின் பல்வேறு பாகங்களுக்கும் வெவ்வேறு காலகட்டங்களில் அனுப்பப்பட்ட அனைத்து இறைத்தூதர்களும் ஒரே கொள்கையைத்தான் போதித்தார்கள். அவர்கள் அனைவரும் இறைவனுக்குக் கீழ்படிதல் (அரபு மொழியில் அதுவே இஸ்லாம் என்று இன்று அறியப்படுகிறது) என்ற அதே கொள்கையைத்தான் தத்தமது மக்களுக்கு போதித்தார்கள்.
அவர்கள் அனைவரும் தத்தமது மக்களை நோக்கி “இறைவன் ஒருவனையே வணங்குங்கள். அவனுக்கு கீழ்ப்படிந்து வாழுங்கள். அவ்வாறு கீழ்படிந்து வாழ்ந்தால் இவ்வுலகிலும் அமைதி காண்பீர்கள். அதற்குப் பரிசாக மறுமையில் சொர்க்கத்தை அவன் வழங்குவான். கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாக நடந்தால் இவ்வுலகிலும் அமைதியின்மை காண்பீர்கள். மறுமையில் நரக தண்டனையும் உங்களுக்குக் காத்திருக்கிறது.” என்று போதித்தார்கள்.
ஆனால் என்ன நடந்தது? தூதுர்களின் மறைவுக்குப் பின் அவர்களின் உருவச்சிலைகளை கடவுளாக பாவித்து வணங்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு கடவுள் உணர்வு சிதைக்கப்பட்டதன் காரணமாக பாவங்கள் பெருகின, இனத்துக்கு ஒன்று ஊருக்கு ஒன்று என்று கடவுளர்களின் எண்ணிக்கையும் பெருகிய காரணத்தால் ஜாதிகளும் பிரிவினைகளும் பல்கிப் பெருகின.
இவ்வாறு அதர்மம் தலை தூக்கும்போதெல்லாம் மீண்டும்மீண்டும் தர்மத்தை நிலைநாட்ட மீண்டும்மீண்டும் தூதர்கள் அனுப்பப் பட்டனர். இவர்களில் இறுதியாக வந்தவரே முஹம்மது நபி(ஸல்) அவர்கள். எந்த ஓரிறைக் கொள்கையை முன்னாள் இறைத்தூதர்கள் வாழையடி வாழையாக போதித்தனரோ அதே கொள்கையை சற்றும் மாறுபடாமல். முஹம்மது நபி (ஸல்) அவர்கள் போதித்தார்கள்.
கண்டிப்பாக இறைவன் எந்த முரண்பாடுகளையும் கற்பிக்க மாட்டான் என்பதையும் இறைத்தூதர்களும் ஒருவருக்கு ஒருவர் முரண்பட மாட்டார்கள் என்பதையும் நாம் விளங்கிக்கொள்ள வேண்டும். இன்று முரண்பாடுகளாக ஏதாவது தென்பட்டால் அவை பிற்காலங்களில் ஒருசில குழப்பவாதிகளும் இடைத்தரகர்களும் அரசியல் சக்திகளும் மதத்தின் பெயரால் மக்களைச் சுரண்ட நுழைத்தவை என்பதையும் நாம் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் இறுதித் தூதராக வந்துள்ளதாலும் இன்று நாம் வாழும் காலகட்டத்திற்காக அனுப்பப்பட்டவர் என்பதாலும் அவர் மூலம் மார்க்கம் முழுமைப் படுத்தப்பட்டதாலும் அவரது ஒருசில சிறப்புகளை அறிந்துக்கொள்வது அவரது வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் நம்பகத்தன்மையையும் நமக்கு எடுத்துணர்த்தும்.முந்தைய இறைத்தூதர்களோடு ஒப்பிடும்போது முஹம்மது நபி(ஸல்) ஒருசில வேறுபாடுகளை நீங்கள் காணமுடியும்.
அவை:
1. அகில உலகுக்கும் பொதுவான இறைத்தூதராக முஹம்மது நபி அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
முந்தைய இறைத்தூதர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் மற்றும் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்காகவோ அல்லது ஒரு குறிப்பிட்ட சமுதாயங்களுக்காகவோ அனுப்பட்டிருந்தார்கள். உதாரணமாக,
7:65 இன்னும் ஆது கூட்டத்தாரிடம் அவர்களுடைய சகோதரர் ஹூதை (நபியாக அனுப்பி வைத்தோம்)
7:85 மத்யன் நகரவாசிகளிடம் அவர்களுடைய சகோதரராகிய ஷுஐபை (நம் தூதராக அனுப்பிவைத்தோம்)
தூதர்கள் வரிசையில் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு முன் வந்து சென்றவர் இயேசு(அலை) அவர்களும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை நோக்கித்தான் அனுப்பப் பட்டு இருந்தார்.
43:59 அவர் (ஈஸா நம்முடைய) அடியாரே அன்றி வேறில்லை. அவருக்கு நாம் அருட்கொடையைச் சொரிந்து இஸ்ராயீலின் சந்ததியாருக்கு அவரை நல்லுதாரணமாக ஆக்கினோம்.
மேற்கூறப்பட்ட உண்மை இன்று நம்மிடையே காணக்கிடைக்கும் பைபிளிலும் இடம்பெறுவதைக் காணலாம்.
அப்பொழுது அந்த திசைகளில் குடியிருக்கிற கானானிய ஸ்திரி ஒருத்தி அவரிடத்தில் வந்து ஆண்டவரே தாவீதின் குமாரனே எனக்கு இரங்குப் பிசாசினால் கொடிய வேதனைப்படுகிறாள் என்று சொல்லக் கூப்பிட்டாள் அவளுக்கு பிரதியுத்தமாக அவர் ஒரு வார்தையும் சொல்லவில்லை அவர்களுடைய சீஷர்கள் வந்து இவள் நம்மைப் பின் தொடர்ந்து கூப்பிடுகிறாளே இவளை அனுப்பிவிடும் ஊன்று அவரை வேண்டிக்கொண்டார்கள்.
அதற்கு அவர் காணாமல்போன ஆடுகளாகிய இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்கு அனுப்பப்பட்டேனே யன்றி மற்றபடியல்ல என்றார். அவள் வந்து ஆண்டவரே எனக்கு உதவி செய்யும் என்று அவரைப் பணிந்து கொண்டாள் அவர் அவனை நோக்கி “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்குட்டிகளுக்குப் போடுகிறது நல்லதல்ல” என்றார். (மத்தேயு 15:22 26 )
ஆனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இறுதி இறைத்தூதராகவும் உலகம் முழுமைக்கும் பொதுவானவராகவும் அனுப்பப்பட்டார்கள். நாம் இன்று இவ்வுலகின் இறுதி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அன்றும் இன்றும் உள்ள தகவல் தொடர்பு வசதிகளை ஒப்பிட்டுப் பார்த்தாலே இந்த உண்மையை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அன்று ஊர்களுக்கும் நாடுகளுக்கும் இடையே தகவல் தொடர்பு இல்லாத நிலையில் வெவ்வேறு நாடுகளுக்கு வெவ்வேறு தூதர்கள் அனுப்பபட்டிருந்தனர். இன்றைய காலகட்டம் தகவல் தொடர்பு மிக விரிவடைந்த கால கட்டம். இங்கு பேசினால் உடனுக்குடன் உலகின் மறு மூலையில் கேட்கக் கூடிய அளவுக்கு முன்னேறியிருக்கிறோம். இப்படிப்பட்ட சூழலில் இறுதி இறைத்தூதர் உலகம் முழுமைக்கும் பொதுவானவராக அனுப்பப் பட்டார்கள்..இவருக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் வரப்போவதில்லை. இனி உலகம் அழியும் நாள் வரையும் இவர்தான் இறைவனின் தூதர்.
2. அடுத்த வேறுபாடு: நாம் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல முந்தைய இறைத்தூதர்களைப் போல் அல்லாமல் இவர்மூலமாக அருளப்பட்ட வேதம் (திருக்குர்ஆன்) அழியாமல் பாதுகாக்கப் படுகிறது
3. அடுத்த வேறுபாடு: முந்தைய இறைத்தூதர்களை மக்கள் கடவுள்களாக ஆக்கி வழிபடுவதைப் போல் இவரை யாரும் வழிபடுவதில்லை.
இறுதித் தூதருக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களை அவர்களது மறைவுக்குப் பின்னர் அவர்களுக்காக நினைவுச் சின்னங்கள் என்ற பெயரில் உருவப்படங்களையும் சிலைகளையும் உருவாக்கி பின்னர் அவற்றையே கடவுளாக பாவித்து மக்கள் வழிபாடு செய்யத் துவங்கினர். இதற்கு இறுதித் தூதருக்கு முன் வந்த ஏசு நாதரும் விலக்கல்ல. அவருக்கும் இன்று மக்கள் படம் வைத்து சிலை வைத்து வழிபடுவதை நாம் காண்கிறோம்.
ஆனால் இறுதித் தூதர் முஹம்மது நபி அவர்கள் வந்து சென்ற பின் 14 நூற்றாண்டுகள் ஆகியும் இப்பூமியின் மேற்பரப்பின் மீது எங்காவது அவருடைய உருவப்படத்தையோ சிலையையோ பார்த்திருக்கிறீர்களா? இன்று அவரை உயிருக்குயிராக நேசித்து அவரை முன்மாதிரியாக பின்பற்றுவோர் கோடிக்கணக்கில் உலகெங்கும் இருந்தும் எங்குமே அவரது உருவப்படத்தைக் காணமுடியவில்லை என்றால் என்ன பொருள்.?
அவர் போதித்த ஓரிறைக் கொள்கை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைத்தானே அது காட்டுகிறது? படைத்தவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன் என்ற அவரது கொள்கை முழக்கம் இன்றும் ஓங்கி ஒலிக்கிறது என்பதைத் தானே காட்டுகிறது!.அவர் தனது மரணப் படுக்கையில் இருக்கும் போதும் மக்களை நோக்கி, “மக்களே ! எனது மரணத்துக்குப் பின் எனது சமாதியை விழா நடக்கும் இடமாக மாற்றி விடாதீர்கள். ஏனெனில் முந்தைய இறைத்தூதர்கள் விஷயத்தில் மக்கள் அவ்வாறு செய்து அவர்களை கடவுள்களாக்கி விட்டது போல் என்னைக் கடவுளாக்கி விடாதீர்கள்” என்று எச்சரித்தார்.
இன்றும் அவரது சமாதி சவுதி அராபியாவில் மதீனா நகரில் உள்ளதை அறிவீர்கள். ஆனால் யாரும் அங்கு சென்று “நபிகள் நாயகமே, எனக்கு இதைக் கொடுங்கள் அல்லது அதைக் கொடுங்கள்” என்று பிரார்த்திப்பதை நீங்கள் பார்க்க முடியாது.அவரது வாழ்நாளில் கூட அவருக்கு மரியாதை செய்யும் நிமித்தமாக காலில் விழப் போனவர்களை மட்டுமல்ல, தனக்காக பிறர் எழுந்து நிற்பதைக் கூட அவர்கள் தடை செய்தார்கள்.
“யாருக்கேனும் தனக்காக பிறர் எழுந்து நின்று மரியாத செய்வது சந்தோஷத்தை அளிக்குமானால் அவர் செல்லுமிடம் நரகம் என்பதை அறிந்து கொள்ளட்டும்” என்று மக்களுக்கு உபதேசித்து சுயமரியாதைக்கு இலக்கணம் வகுத்துச் சென்றார்.
4. அடுத்த வேறுபாடு: இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.
இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம். இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள்.
அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம். இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை.
மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது. உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக, சாதாரண குடிமகனாக, போர் வீரராக, படைத்தளபதியாக, ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக…… அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை.
அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன. அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள், பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல, அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது!
அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல. அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார்? எவ்வாறு உணவு உண்டார்? உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார்? என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள்.
அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:
33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.
இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது. அவர் மூலமாக இறைவன் அறிவித்துள்ள செய்திகள்தான் ஹதீஸ் அல்லது நபிமொழிகள் என்று அறியப்படுகின்றன. இவ்வாறு திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ் என்ற இரு உறுதியான அடிப்படைகள்தான் இனி நாம் பார்க்கப் போகும் செய்திகளின் ஆதாரங்கள்.
உலக அழிவு விடயத்தில் மட்டுமல்ல வேறு எந்த விவகாரங்களானாலும் சரித்திரம், அறிவியல், ஆன்மிகம் மனித வாழ்வியல் ஒழுக்கவியல் என எந்த துறைகளானாலும் சரி, அவை உண்மையா பொய்யா ஊகங்களா கற்பனையா நடக்குமா நடக்காதா என்பதை உரசிப்பார்த்து பிரித்தறிய இந்த இரண்டு ஆதாரங்களோடு பொருத்திப் பாருங்கள்.
பொருந்தினால் அது உண்மை இல்லையேல் அது கற்பனை அல்லது பொய் என்று நாம் புரிந்து கொள்ளலாம். ஏனெனில் இவை இரண்டும் இவ்வுலகின் படைப்பாளனிடம் இருந்து வந்தவை. எனவே இவற்றை நீங்கள் உறுதியாக நம்பலாம்.. இவ்வுலகைப் படைத்தவன் திருக்குர்ஆன் மூலமாகவும் அவனது தூதர் மூலமாகவும் என்ன சொல்லித்தருகிறானோ அதுமட்டுமே உலக அழிவு விடயத்தில் முழுக்கமுழுக்க உண்மை.
மற்ற அனைத்தும் வெற்று ஊகங்களே என்பதை இப்போது நீங்கள் புரிந்துகொண்டு இருப்பீர்கள். இனி இந்த உறுதியான ஆதாரங்கள் உலக அழிவைப் பற்றி மட்டுமல்ல இவ்வுலகின் ஆக்கத்தைப் பற்றியும் அழிவுக்குப் பின் நடக்க இருப்பவை பற்றியும் என்ன கூறுகின்றன என்பதைக் கண்டறிவோம் வாருங்கள்.