வெற்றிபெற்ற மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை… அங்கு!
புகழ்பெற வேண்டி உழைத்தவர்கள்
= அரபு மண்ணில் இஸ்லாத்தின் வருகைக்கு முன்னர் ஹாத்திம் தாயி என்பவர் அரபியரிடத்தில் மிகுந்த மரியாதைக்குரியவராக திகழ்ந்தார். அவரது தாராள குணம் அரேபியர்களிடத்தில் முன்மாதிரியான ஒன்றாக அறியப்பட்டிருந்தது. அவர் ஏழைகளுக்கு உணவளித்தார், வழிபோக்கர்களுக்கு தங்குமிடம் தந்தார். எதிரிகளிடத்திலும் கருணையோடு நடந்தார்.
பிற்காலத்தில் அவரது மகன் அதி இப்னு ஹாத்திம் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார். #நபிகளாரின் மிகச்சிறந்த தோழர்களில் ஒருவரானார். ஒருநாள் தனது தந்தையைப் பற்றி நபிகளாரிடம் வினவினார் அவர்.
“இறைவனின் தூதரே, எனது தந்தை உறவினர்களோடு நல்லமுறையில் நடந்துகொண்டார். ஏழைகளுக்கு உணவளித்து வந்தார். அவர் இதைச் செய்து வந்தார், அதைச் செய்து வந்தார்.. என்று அவர் செய்துவந்த நன்மைகளைப் பட்டியலிட்டுக் கூறிக்கொண்டே வந்தார். பிறகு கேட்டார், அவர் செய்தவற்றுக்கு இறைவனிடம் கூலி ஏதும் கிடைக்குமா?” நபிகளார் பதிலளித்தார்கள், “அதியே, உன் தந்தை ஒன்றை (அதாவது புகழை) அடைய விரும்பினார். அதை அவர் அடைந்தும் விட்டார்.” (முஸ்னத் அஹமது)
புகழ்பெற்ற மனிதர்கள் மண்ணிலிருந்து மறையும் போதெல்லாம் இறுதியில் நடப்பது இதுவே.அறிவியலில், திரையுலகில், அரசியலில், செல்வசெழிப்பில், கல்வியில், விளையாட்டில், தொழிற்துறையில், வியாபாரத்தில், சமூகசேவையில்… என மனித வாழ்வின் பல்வேறு துறைகளில் இமாலய வெற்றிகளை ஈட்டியவர்களை நாம் கண்டு வருகிறோம்.
அதேநேரத்தில் ஒரு துறையில் மிகச்சிறந்த அறிவாளிகள் அல்லது ஆற்றல் மிக்கவர்கள் வேறுதுறைகளில் அறிவீனர்களாகவோ அல்லது பலவீனர்களாகவோ இருப்பது கூடும். எனினும் ஒருவருடய அறிவும் ஆற்றலும் அவருக்கு ஆன்மீக ரீதியான பயன் தராவிட்டால் அது ஈடில்லாத பேரிழப்பே!
அவர்கள் இவ்வுலகில் நிகழ்த்திய சாதனைகள், வென்ற விருதுகள், பட்டங்கள், குவித்த செல்வங்கள், புகழ்மாலைகள், நினைவுச்சின்னங்கள் போன்றவை இவ்வுலகைப் படைத்தவனின் பால் எந்த அளவுக்கு மதிப்புக்குரியவை என்பதுதான் இறுதி வெற்றியின் அளவீடு ஆகும்.
இக்கூறப்பட்ட எதுவும் இவ்வுலக வாழ்க்கை என்ற பரீட்சையை நாம் முடித்துக்கொண்டு #இறைவன்பால் திரும்பும்போது கூடவராது என்பது ஒவ்வொருவரும் அறிந்ததே. இவ்வுலகில் சாதனைகள் புரிவதற்கு அஸ்திவாரமாக இருந்த நம் உடலையும் புலன்களையும் அறிவையும் ஆற்றல்களையும் வழங்கியவனைப் பற்றி அறியாதிருப்பதும் ஆராயாதிருப்பதும் பகுத்தறிவுக்கு இழுக்கே.
அவனை மறுப்பது என்பது நம்மைப் படைத்து பரிபாலிப்பதோடு மட்டுமல்லாமல் அவன் வழங்கும் அருட்கொடைகளுக்கு செய்யப்படும் நன்றிகேடே! மேலும் அந்த இறைவன் தனது செய்திகளை வேதங்கள் மற்றும் தூதர்கள் மூலமாக அனுப்பும்போது அவற்றை அலட்சியம் செய்வதும் புறக்கணிப்பதும் இறைவனிடம் தண்டனைக்குரிய செயல்களே. இதோ இறைவனின் இறுதிவேதம் இவ்வாறு கூறுகிறது:
= “(தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று (நபியே!) நீர் கேட்பீராக. யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங்களையும், அவனை (மறுமையில்) சந்திப்போம் என்பதையும் நிராகரிக்கிறார்கள்; அவர்களுடைய செயல்கள் யாவும் வீணாகும்; மறுமை நாளில் அவர்களுக்காக எந்த மதிப்பையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். அதுவே அவர்களுடைய கூலியாகும் – (அது தான்) நரகம் – ஏனென்றால் அவர்கள் (உண்மையை) நிராகரித்தார்கள்; என்னுடைய வசனங்களையும், என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள். (திருக்குர்ஆன் 18:103- 106)
புகழ் பெற்ற பிரபலங்களின் நிலை
இன்றைய உலகில் அதிகாரம், செல்வம், அறிவாற்றல், செல்வாக்கு, புகழ் என்பவை யாரிடம் உள்ளதோ அவர்கள் எதைப் பரிந்துரைக்கிரார்களோ அவையே உண்மைகளாக- நியாயமானதாக – நேர்மைக்கான அளவுகோலாக சமூகத்தால் மதிக்கப்படுகின்றன. உதாரணமாக…
= எண்ணெய் வள நாடுகளை சதா போர்முனையில் நிறுத்தி ஆயுத விற்பனை மூலம் கொள்ளையடிக்கும் வல்லரசு நாடுகளின் அதிபர்கள் சமாதானப் பிரியர்களாக உலாவருகிறார்கள். தங்களின் சக்திவாய்ந்த ஊடகங்கள் மூலம் அவர்களுக்கு எதிராகப் போராடும் சுதந்திரப்போராட்ட வீரர்களை பயங்கர வாதிகளாக சித்தரிக்கிறார்கள். உலகம் அவற்றை அப்படியே நம்புகிறது.
= சினிமா மூலம் விபச்சாரக் கலாச்சாரத்தை மக்களிடையே பரப்பும் நடிகர்களும் நடிகைகளும் விளம்பரங்களில் தோன்றி நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களுக்கு பரிந்துரை செய்கிறார்கள். மக்கள் அவற்றை அப்படியே நம்பி வாங்குகிறார்கள்.இன்னும் இவைபோன்ற பல விடயங்களையும் நாம் கண்டு வருகிறோம். பெரும்பான்மை மக்களால் வாய்மையானவர்களாகப் போற்றப்படும் இவர்கள் இறைவனின் பார்வையிலும் அவ்வாறே மதிக்கப்படுவார்களா?
= ஒரு (பணக்கார) மனிதர் #இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது #நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களிடம்), ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்” என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மெளனமாயிருந்தார்கள்.
பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்லிம்களில் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?’ என்று கேட்டார்கள். தோழர்கள், ‘இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவிதாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்” என்று கூறினர்.
அப்போது #இறைத்தூதர்(ஸல்) அவர்கள், ‘அவரைப் போன்ற (வசதி படைத்த) வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்’ எனக் கூறினார்கள்.
அறிவிப்பளர் :ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) (நூல்: புகாரி)
அறிவாற்றல் வழங்கப்பட்டவர்களின் நிலை
அறிவாற்றல் என்பது மனிதனுக்கு இறைவனால் வழங்கப்படும் பார்வை மற்றும் கேள்வி போன்ற ஒரு ஆற்றலே. ஒருவருக்கு அருமையான கண் பார்வை இருந்தும் தனக்கு சுற்றுமுற்றும் பார்ப்பதற்கு பயன்படுத்தாமல் இருந்தால் அப்பார்வைப் புலனால் என்ன பயன்? அதேபோலவே அறிவாற்றல் பெற்ற ஒருவர் அதை வழங்கிய இறைவனை பகுத்தறிய பயன்படுத்தாவிட்டால் அதனால் என்னதான் பயன்?
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின் ( குறள் எண் : 2 )
பொருள் : தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?