வாழ்வே மாயமா?
நாம் இன்று வாழ்ந்துகொண்டிருக்கும் வாழ்க்கை எப்படிப்பட்டது என்பதை இறைவன் இரத்தினச்சுருக்கமாக பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களில் கூறுவதைப் பாருங்கள்…..
18:45.மேலும், இவ்வுலக வாழ்க்கைக்கு ஓர் உதாரணம், அவர்களுக்கு (நபியே!) நீர் கூறுவீராக! ”அது நாம் வானத்திலிருந்து இறக்கி வைத்த நீரைப் போலிருக்கிறது; பூமியிலுள்ள தாவரங்கள் அதனுடன் கலந்(து செழித்)தன. ஆனால் அவை காய்ந்து, பதராகி அவற்றைக் காற்று அடித்துக் கொண்டு போய் விடுகிறது – மேலும், எல்லாப் பொருளின் மீதும் அல்லாஹ் ஆற்றலுடையவனாக இருக்கின்றான். (அல்லாஹ் என்றால் வணக்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
ஆம், இந்த வாழ்வின் தற்காலிகமான நிலையற்ற தன்மையைப் புரிந்துகொண்டு அதன்படி மறுமை என்னும் நிலையான நிரந்தர வாழ்விற்கு எது தேவையோ அதை தேடுவதிலும் சேகரிப்பதிலும் முனைவார்கள் அறிவுடையோர். அவை எவையென கற்றுத் தருகிறான் இறைவன்….
18:46. செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன.
நிலையற்ற இவ்வுலகு எவ்வாறு அழியும் என்பதை திருக்குர்ஆனும் நபிமொழிகளும் நமக்கு பலகோணங்களிலும் படம்பிடித்துக்காட்டுகின்றன….. இதோ இங்கும்…. இன்று பூமிக்கு உறுதிநிலையை கொடுத்துக் கொண்டிருக்கும் மலைகள் அன்று பெயர்த்தெடுக்கப்பட்டு தூள்தூளாக்கப்பட்டு பரத்திவிடப்படுமாம்…..! இது இதை நிகழ்த்தக் கூடியவனின் வாக்குமூலம்…. புறக்கணிக்க முடியுமா?
18:47.(நபியே!) ஒரு நாள் நாம் மலைகளை (அவற்றின் இடங்களை விட்டுப்) பெயர்த்து விடுவோம்; அப்போது, பூமியை நீர் வெட்ட வெளியாகக் காண்பீர்; அவர்களை ஒன்று சேர்ப்போம், (அந்நாளில்) நாம் ஒருவரையும் விட்டு வைக்க மாட்டோம்.
அனைத்து மனிதர்களும்- இந்த பூமியில் தோன்றிய முதல் மனிதனில் இருந்து இதில் வாழப் போகும் இறுதி மனிதன் வரை- அவர்கள் எந்த நாட்டில் பிறந்து இருந்தாலும் சரி, எந்த மொழியைப் பேசி இருந்தாலும் சரி, எந்த மதத்தில் பிறந்து வாழ்ந்து இறந்து இருந்தாலும் சரி, அவ்வாறு இறந்தவன் ஆணாயினும் பெண்ணாயினும் பாமரன் ஆயினும், படித்தவன் ஆயினும், ஏழை ஆயினும், செல்வந்தன் ஆயினும் சரி, அவர்களின் உடலைப் புதைத்து இருந்தாலும், எரித்து இருந்தாலும், பறவைகளுக்கு உணவாகக் கொடுத்து இருந்தாலும் கடலிலோ நீரிலோ கரைத்து இருந்தாலும் சரியே….. அவர்கள் அனைவரும் ஒருவர் விடாமல் இறுதி விசாரணைக்காக எழுப்பப் படுவார்கள்!
18:48.அவர்கள் யாவரும் உம்முடைய இறைவனின் சமூகத்தில் வரிசையாகக் கொண்டு வரப்படுவார்கள்; ”நாம் உங்களை முதல் தடவை படைத்தவாறே திட்டமாக இப்பொழுதும் நீங்கள் நம்மிடம் வந்து விட்டீர்கள், ஆனால் நாம் உங்களுக்காக வாக்களிக்கப்பட்ட இத்தகைய நாளை ஏற்படுத்த மாட்டோம் என்று நீங்கள் எண்ணிக் கொண்டிருந்தீர்கள்” (என்று சொல்லப்படும்).
எது நடக்காது, நடக்கவே நடக்காது என்ற இறுமாப்பில் இன்று மனிதர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்களோ, சத்தியத்தை சொல்லவந்த இறைத்தூதர்களையும் வேதங்களையும் புறக்கணித்து ஏளனம் செய்தார்களோ அவர்கள் அனைவரும் அந்த சம்பவத்தை நேரடியாக ஒளிவுமறைவு இன்றி காண்பார்கள்!
சத்தியத்தைப் புறக்கணித்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்து வந்தவர்கள் குற்றவாளிகளாக அன்றைய நீதிமன்றத்தில் ஆஜர் ஆவார்கள். உலக நீதிமன்றங்களில் இருந்ததைப்போல குற்றவாளிகளுக்கு பரிந்துரைக்க எந்த வழக்கறிஞர்களோ அரசியல் சக்திகளோ குறுக்கு வழிகளோ எதுவும் அங்கு இருக்காது! குற்றவாளிகளை தப்பவைக்க சட்டங்களை வளைத்து ஓடிப்பதற்கும் சாத்தியமில்லை.
அவர்கள் தப்பியோட ஏதும் புகலிடங்களும் அங்கு காணமாட்டார்கள். ஆம், அதுதான் நூறு சதவீதம் நீதி நடப்பாகும் நாள்!
18:49.இன்னும் (வினைச்சுவடியாகிய) புத்தகம் (அவர்கள் முன்) வைக்கப்படும்; அதிலுள்ளதைக் கண்டு குற்றவாளிகள் மிக்க அச்சத்துடன் இருப்பதைக் காண்பீர்; மேலும் அவர்கள், ‘’எங்கள் கேடே! இந்த ஏட்டிற்கு என்ன (நேர்ந்தது)? சிறியவையோ பெரியவையோ எதையும் வரையறுக்காது இது விட்டுவைக்கவில்லையே!” என்று கூறுவார்கள்; இன்னும், அவர்கள் செய்த யாவும் அவர்கள் முன் வைக்கப்படுவதைக் காண்பார்கள்; ஆனால் உம்முடைய இறைவன் ஒருவருக்கும் அநியாயம் செய்யமாட்டான்.
ஒவ்வொருவரும் தத்தமது சுயசரிதையை எந்த ஒரு சிதைவும் இன்றி முழுமையாகக் காண்பார்கள். ஒவ்வொருவரும் அவர்களது வாழ்வில் சாதித்த அனைத்தையும் அணுவணுவாக விவரிக்கப்பட்ட பதிவேடாக அது இருக்கும்.
இங்கு இறைவன் எதை செய் என்று கூறினானோ அவை புண்ணியங்களாகவும் எதைவிட்டும் தடுத்தானோ அவற்றை செய்திருந்தால் அவை பாவங்களாகவும் அங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
யாருக்கும் எந்த அநியாயமும் செய்யப்படமாட்டாது. நல்லோர்க்கு இறைவன் வாக்களித்திருந்த சொர்க்கத்தையும் தீயோர்க்கு புகலிடமான நரகமும் மனிதனுக்கு அன்று வெளிப்படுத்தப்படும். அவரவர் சாதனைகளுக்கு உரியதைஅன்று பெற்றுக்கொள்வார்கள்!