Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு) - Thiru Quran Malar

இறுதி இறைதூதரே நபிகளார் (பாகம் நான்கு)

Share this Article

உலக மக்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரி 

இவரது வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்குக் கிடைப்பதுபோல் முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை முன்மாதிரி இன்று நமக்கு கிடைப்பதில்லை.இறைத்தூதர்கள் அனைவரும் எந்த மக்களுக்காக அனுப்பப்பட்டார்களோ அந்த மக்களுக்கு வாழ்க்கை முன்மாதிரிகளாகத் திகழ்ந்தார்கள். முந்தைய இறைத்தூதர்களின் வாழ்க்கை வரலாறுகள் அல்லது வாழ்க்கை முன்மாதிரிகள் முறைப்படி பதிவு செய்யப்படாத நிலையை நாம் இன்று காண்கிறோம்.

இறுதித்தூதர் முஹம்மது நபியவர்கள் இறுதி நாள் வரை இப்பூமியில் வாழப் போகும் அனைத்து மனிதர்களுக்கும் முன்மாதிரியாக அனுப்பப்பட்டவர்கள். அதற்கேற்றவாறு அவருடைய நபித்துவ வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டங்களும் அவரது தோழர்களாலும் அன்னாரது துணைவியர்களாலும் அறிவிக்கப்பட்டு அவை பரிசோதிக்கப்பட்டு மிக நேர்த்தியாக பதிவு செய்யப் பட்டிருப்பதைக் காண்கிறோம்.

இப்பதிவுகளுக்கு ஹதீஸ்கள் என்று கூறப்படும். இவ்வுலகில் வாழ்ந்த எந்த தலைவருடையதும் அல்லது எந்த மதகுருமார்களுடையதும் அல்லது வரலாற்று நாயகர்களுடையதும் வரலாறு இவ்வளவு நுணுக்கமாக மற்றும் ஆதார பூர்வமாக பதிவுசெய்யப் பட்டதில்லை. மனித வாழ்வோடு சம்பந்தப் பட்ட எல்லா துறைகளுக்கும் அவருடைய வாழ்விலிருந்து அழகிய முன்மாதிரியைக் காணமுடிகிறது.

உதாரணமாக அவரை பணியாளாக, எஜமானனாக, வியாபாரியாக சாதாரண குடிமகனாக, போர் வீரராக படைத்தளபதியாக ஜனாதிபதியாக, ஆன்மீகத் தலைவராக, கணவராக, தந்தையாக, அவரது வாழ்நாளில் கண்டவர்கள் எடுத்துக் கூறும் செய்திகளின் தொகுப்புதான் ஹதீஸ்கள் என்பவை. அவரது வீட்டுக்கு உள்ளே வாழ்ந்த வாழ்க்கையும் வெளியே வாழ்ந்த வாழ்க்கையும் என அனைத்துமே அங்கு பதிவாகின்றன.

அவர் கூ.றிய வார்த்தைகள், அவர் செய்த செயல்கள்  பிறர் செய்யக் கண்டு அவர் அங்கீகரித்த செயல்கள் என அனைத்தும் இன்று இஸ்லாமிய சட்டங்களுக்கு அடிப்படையாகின்றன.அன்னாரது வரலாற்றின் இன்னொரு அற்புதம் அவரது வாழ்க்கை வரலாறு ஏடுகளில் மட்டுமல்ல, எண்ணங்களில் மட்டுமல்ல அவரைப் பின்பற்றி வாழ்ந்த மற்றும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கின்ற கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கையில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது என்பது! அன்று அவரிட்ட கட்டளைகள் இன்றும் மீறப்படாமல் பின்பற்றப் படுகின்றன என்பது மட்டுமல்ல.

அவரது அன்றாடப் பழக்க வழக்கங்களை அறிந்து அதைப் போலவே தம் வாழ்வை அமைக்கத் துடிக்கும் மக்கள் கோடி, கோடி! உதாரணமாக அவர் தொழுகையில் எவ்வாறு நின்றார், எவ்வாறு உணவு உண்டார், உண்ணும்போது எவ்வாறு அமர்ந்தார் என்பதை அறிந்து அதைப் போலவே வாழையடி வாழையாக கடைப் பிடிப்பவர்கள் முஸ்லிம்கள். அன்று அவர் தாடி வைத்திருந்தார் என்ற ஒரே காரணத்துக்காக இன்று கோடிக்கணக்கான மக்கள் முகத்தில் அதைக் காணமுடிகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! ஏனெனில் இறைவனே அவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:

33:21 அல்லாஹ்வின் மீதும் இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது.

இவ்வாறு இன்றைய காலகட்டத்தில் வாழும் நமக்காக இறைவனால் அனுப்பப்பட்ட முன்மாதிரித் தலைவர்தான் முஹம்மது நபியவர்கள் என்பது தெளிவாகிறது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.