வாழ்கையின் நோக்கமும் மறுமை வாழ்வும்
இன்று நாம் வாழும் #வாழ்க்கை என்பது என்ன? இதன் நோக்கம் என்ன? தற்காலிகமான இவ்வாழ்வுக்குப் பிறகு நமக்கு என்ன காத்திருக்கிறது? இங்கு நாம் எப்படி வாழவேண்டும்? இதுபோன்ற கேள்விகள் அனைத்துக்கும் தெளிவான மற்றும் உறுதியான பதில்களையும் வழிகாட்டுதல்களையும் இறுதிவேதமான #திருக்குர்ஆனில் இருந்தும் இறுதி இறைத்தூதர் #முஹம்மது நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்களில் இருந்தும் நாம் பெறலாம்அதை சுருக்கமாகக் கூறுவதென்றால்……..
v இவ்வுலக வாழ்க்கை தற்காலிகமானது ஒரு பரீட்சை போன்றது.
67:2 .உங்களில் எவர் செயல்களால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காiக அவன், மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்; மேலும், அவன் (யாவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்பவன்.
18:7. (மனிதர்களில்) அழகிய செயலுடையவர்கள் யார்என்று அவர்களைச் சோதிப்பதற்காக, நிச்சயமாக பூமியிலுள்ளவற்றை அதற்கு அலங்காரமாக நாம் ஆக்கினோம்.
2:155 .நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம்;. ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!
v இங்கு நமது வினைகள் முழுமையாகப் பதிவு செய்யப்படுகின்றன.
36:12 .நிச்சயமாக மரணமடைந்தவர்களை நாமே உயிர்ப்பிக்கிறோம்; அன்றியும் (நன்மை, தீமைகளில்) அவர்கள் முற்படுத்தியதையும், அவர்கள் விட்டுச் சென்றவற்றையும் நாம் எழுதுகிறோம்; எல்லாவற்றையும், நாம் ஒரு விளக்கமான ஏட்டில் பதிந்தே வைத்துள்ளோம்.
நமது செயல்கள் பதிவாகின்றன என்பதை உணர மிகப்பெரிய ஆராய்ச்சிகள் ஒன்றும் தேவை இல்லை. சற்று நம் மூளையைப் பற்றி சிந்தித்தாலே போதும். நாம் கவனித்து செய்யும் செயல்கள் மட்டுமல்ல கவனம் செலுத்தாமல் செய்யும் செயல்கள் (conscious and subconscious) என அனைத்தும் அங்கு பதிவாகின்றன.
இவை போக ஒலி, ஒளி வாசம் போன்ற அனைத்துமே மின்காந்த அலைகள் என்பதை நாம் அறிவோம். அவை தன் பாதையில் எதிகொள்ளும் திடப் பொருட்களின் மீது தங்கள் பதிவுகளை ஏற்படுத்துகின்றன. இந்த அடிப்படையில் தான் ஆடியோ, வீடியோ பதிவுகள் நடைபெறுகின்றன என்பதை அனைவரும் அறிந்தே இருக்கிறோம்.
v இறைவனிடமிருந்து கட்டளை வரும் போது ஒருநாள் இவ்வுலக அழிவு ஏற்படும். தொடர்ந்து மீண்டும் இறைக் கட்டளை வரும்போது அனைவரும் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவார்கள்.
36:49. அவர்கள் ஒரே ஒரு பேரொலிக்காகக் காத்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறில்லை அவர்கள் வழக்காடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே அது அவர்களைப் பிடித்துக் கொள்ளும்.
36:50. அப்போது அவர்கள் மரணசாசனம் சொல்ல சக்தி பெறமாட்டார்கள்; தம் குடும்பத்தாரிடம் மீளவும் மாட்டார்கள்.
78:17-20 .நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஸூர் (எக்காளம்) ஊதப்படும் அந்நாளில் நீங்கள் அணிஅணியாக வருவீர்கள். இன்னும், வானம் திறக்கப்பட்டு பல வாசல்களாகி விடும். மலைகள் பெயர்க்கப்பட்டு கானல் நீராகிவிடும்.
v மீண்டும் ஒரு இறைக் கட்டளை வரும்போது இவ்வுலகில் வாழ்ந்து மறைந்த அனைத்து மனிதர்களும் ஒருவர் விடாமல் மீண்டும் உயிர்கொடுத்து எழுப்பப் படுவார்கள்.
64:7 (மரித்த பின்னர்) அவர்கள் எழுப்பப்படவே மாட்டார்கள் என்று நிராரிப்பவர்கள் எண்ணிக் கொண்டனர்; ”அப்படியல்ல! என்னுடைய இறைவன் மீது சத்தியமாக நீங்கள் நிச்சயமாக எழுப்பப்படுவீர்கள்! பிறகு நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக அறிவிக்கப்படுவீர்கள் – மேலும் அது அல்லாஹ்வுக்கு மிகவும் எளிதேயாகும்” என்று (நபியே!) நீர் கூறுவீராக.
36:51- 52 .மேலும் ஸூர் ஊதப்படடதும் உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து வெளிப்பட்டுத் தங்கள் இறைவனிடம் விரைவார்கள். ”எங்களுடைய துக்கமே! எங்கள் தூங்குமிடங்களிலிருந்து எங்களை எழுப்பியவர் யார்?” என்று அவர்கள் கேட்பார்கள்; அர்ரஹ்மான் வாக்களித்ததும் (அவனுடைய) தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுதான்” (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
(#அர்ரஹ்மான் என்றால் கருணையாளனான இறைவனைக் குறிக்கும் சொல்)
v ஒவ்வொரு மனிதர்களும் அவரவர்களின் வினைப் பட்டியல் அவர்களின் முன் சமர்ப்பிக்கப்பட்டு விசாரிக்கப் படுவார்கள்
36:65 .அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
99:7-8 .எனவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாலும் அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். அன்றியும், எவன் ஓர் அனுவளவு தீமை செய்திருந்தாலும், அ(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான்.
v யாருடைய நன்மைகள் அதிகமோ அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளில் இருப்பிடம் வழங்கப்பட்டு அங்கு நிரந்தரமாக இன்ப வாழ்வு வாழ்வார்கள்.
10:9 நிச்சயமாக எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்களுக்கு அவர்களுடைய இறைவன் அவர்கள் இறைநம்பிக்கை கொண்ட காரணத்தினால் நேர் வழிகாட்டுவான்¢ இன்பமயமான சுவனபதிகளில் அவர்களுக்குக் கீழ் நதிகள் ஓடிக் கொண்டிருக்கும்.
43:71 பொன் தட்டுகளும், கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டேயிருக்கும்¢ இன்னும் அங்கு அவர்கள் மனம் விரும்பியதும், கண்களுக்கு இன்பம் தருவதும் அதிலுள்ளன¢ இன்னும், ‘நீங்கள் இங்கு என்றென்றும் தங்கியிருப்பீர்கள்!’ (என அவர்களிடம் சொல்லப்படும்.)
v யாருடைய தீமைகள் அல்லது பாவங்கள் அதிகமோ அவர்களுக்கு தண்டனையாக நரகத்திற்கு அனுப்பப்பட்டு அங்கு தொடர் வேதனைகளை அனுபவிப்பார்கள்.
20:74 நிச்சயமாக எவன் தன் இறைவனிடத்தில் குற்றவாளியாக வருகிறானோ, அவனுக்கு நரகம் நிச்சயமாக இருக்கிறது, அதில் அவன் மரிக்கவும் மாட்டான் வாழவும் மாட்டான்.
7:41 அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.
நாம் ஒவ்வொருவரும் மரணத்தை சுவைக்க இருக்கிறோம் என்பதும் இன்று நாம் காணும் இவ்வுலகம் என்பது தற்காலிகமானது என்பதும் மிகத் தெளிவான உண்மைகள். நமது நாளைய இருப்பிடம் சொர்க்கமா இல்லை நரகமா என்பதை முடிவு செய்யும் பரீட்சைக் கூடமே இந்தத் தற்காலிக உலகம் என்னும் பாடத்தைப் பெறுவோர்தான் உண்மையில் அறிவாளிகள்.
அதன்படி இந்தப் பரீட்சை வாழ்வைப் புரிந்துகொண்டு அதை உறுதியான உள்ளத்தோடு எதிர்கொண்டால் இம்மை வாழ்வும் அமைதியாக இருக்கும். மறுமையில் மோட்சமும் அதாவது சொர்க்கமும் கிடைக்கும்.
ஆக, #இறைவன் அமைத்த இந்தப் பரீட்சையை உரிய முறையில் வெல்ல இறைவனே வடிவமைத்து தந்த வாழ்க்கைத் திட்டத்திற்குப் பெயர்தான் இஸ்லாம் என்பது. (இறைவனுக்குக் கீழ்படிதல் என்பதே இவ்வார்த்தையின் பொருள்). அதற்கான முழுமையான வழிகாட்டிகளே திருக்குர்ஆனும் நபிகள் நாயகமும் (அவர்மீது இறைவனின் சாந்தி உண்டாவதாக)