அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்?
அடிமைப் பெண்களை அனுபவிக்க இஸ்லாம் அனுமதித்தது ஏன்
திருக்குர்ஆனின் பல வசனங்களில் “வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்ட பெண்கள்” என்ற சொற்றொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அடிமைப் பெண்களைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படும் சொல்லாகும்.
“அடிமைப் பெண்களுடன் திருமணம் செய்யாமல் அவர்களின் எஜமானர்கள் குடும்பம் நடத்தலாம்” என்று பல வசனங்களில் கூறப்பட்டுள்ளது.
இன்று அடிமைப் பெண்களோ, அடிமை ஆண்களோ இல்லாததால் இதைப் புரிந்து கொள்வதற்கு இது பற்றிய வரலாறு தெரிந்திருப்பது அவசியம்.
இரண்டு நாடுகளுக்கிடையே போர் நடக்கும் போது, போரில் வெற்றி பெற்றவர்கள் தோற்றவர்களைச் சிறைப்பிடிப்பார்கள். சிறைப் பிடிக்கப்பட்டவர்களில் ஆண்களும் இருப்பார்கள். குறைந்த அளவில் பெண்களும் இருப்பார்கள்.
இவ்வாறு சிறைப்பிடிக்கப்பட்டவர்களை அடைத்து வைக்க அன்று சிறைக் கூடங்கள் இல்லை. அவர்களுக்கு உணவளித்துப் பராமரிப்பதும் தேவையற்ற சுமையாக அமையும். எனவே கைது செய்யப்பட்டவர்களைப் போரில் ஈடுபட்டவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அவர்களிடம் வேலை வாங்கி விட்டு அவர்களுக்கு உணவளிப்பது சிரமமாக இருக்காது.
வேலைக்கு ஆள் தேவையில்லை என்ற நிலையில் இருப்பவர்கள் தமக்குக் கிடைத்த அடிமைகளை வசதியானவர்களிடம் விற்று விடுவார்கள். இதனால் அடிமைச் சந்தைகளும் கூட செயல்பட்டு வந்தன.
எத்தனையோ சமூகக் கொடுமைகளை ஒரு உத்தரவின் மூலம் ஒழித்துக் கட்டிய இஸ்லாம் அடிமைகளையும் ஒழித்துக் கட்டியிருக்க முடியாதா? ஏன் அதை இஸ்லாம் ஏற்றுக் கொண்டது? என்ற கேள்வி சிலருக்குத் தோன்றலாம்.
இதில் பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். போர்க்களத்தில் பிடிக்கப்படுவதன் மூலம் அடிமைகள் உருவானாலும் போர் வீரர்கள் உடனுக்குடன் அவர்களை விற்றுக் காசாக்கி விடுவார்கள். பெரும்பாலும் விலை கொடுத்து வாங்கியவர்களிடம் தான் அடிமைகள் இருந்தனர்.
இனிமேல் அடிமைகள் இருக்கக் கூடாது என்று உத்தரவிட்டால் அடிமைகளை விலைக்கு வாங்கியவர்கள் பெரிய அளவில் நட்டமடைவார்கள். அவர்கள் அனைவருக்கும் இழப்பீடு அளித்தால் அரசை நடத்த முடியாது. இழப்பீடு அளிக்காமல் உத்தரவு போட்டால் சட்டப்பூர்வமான அனுமதி இருந்த போது செய்த வியாபாரத்தில் மக்களுக்கு இழப்பு ஏற்படுத்துவது அநியாயமாகும்.
அப்படியே அனைத்து அடிமைகளுக்காகவும் இழப்பீடு கொடுத்து விடுவிக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டாலும் அது கேடாகத்தான் முடியும்.
ஏனெனில் அடிக்கடி போர்கள் நடந்து கொண்டிருந்த அன்றைய சூழ்நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் ஒருதலைப் பட்சமாக இவ்வாறு அறிவித்தால், முஸ்லிம் கைதிகள் மற்ற நாட்டில் அடிமைகளாக இருக்கும் நிலை ஏற்படும். எதிரிகள் உடனே விடுதலையாகும் நிலையும் ஏற்படும்.
நபிகள் நாயகத்தை எதிர்த்துப் போர் செய்தால் நமக்குப் பெரிய இழப்பு ஏற்படாது. அவருக்குத்தான் இழப்பு ஏற்படும் என்ற எண்ணம் சுற்றியுள்ள நாடுகளுக்கு ஏற்படும். எனவே தான் உத்தரவு போட்டு அடிமை முறையை ஒழிக்கவில்லை.
உலக நாடுகள் அனைத்தும் ஒருமித்த தீர்மானத்திற்கு வரும் வரை நபிகள் நாயகம் (ஸல்) மட்டும் முடிவெடுப்பது நன்மை பயக்காது.
அதே சமயத்தில் அடிமைகளை இல்லாதொழிக்க வேறு பல ஏற்பாடுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்தார்கள்.நன்றி :பிஜே