Warning: strpos() expects parameter 1 to be string, array given in /home/quranmal/public_html/wp-includes/blocks.php on line 20
ரமலான் - இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்! - Thiru Quran Malar

ரமலான் – இறைவனுக்கு நன்றிகூறும் மாதம்!

Share this Article

இதோ மீண்டும் புதுப்பொலிவோடு ஒரு ரமலான் மாதம்!

இவ்வுலகில் இறைவனை நம்புவோருக்கு இது ஆன்மீக வசந்த காலம்! உள்ளங்களில் குதூகலமூட்டி அவர்களின் நம்பிக்கைக்குப் புத்துணர்வூட்டிச் செல்கிறது இந்த இனிய மாதம்!

உலக மக்கள் தொகையில் ஏறக்குறைய நான்கில் ஒருவர் இம்மாதம் முழுக்க பகலில் உண்ணா நோன்பு இருந்து புலன்களைக் கட்டுப்படுத்தி கொண்டு கழிப்பதை அறிவீர்கள். அத்துடன் தொழுகை, தானதர்மங்கள் இவற்றை கூடுதல் சிரத்தையுடன் அவர்கள் நிறைவேற்றுவதையும் காண்கிறீர்கள்.

மாதம் நிறைவடைவதை ‘ஈகைத் திருநாள்’ என்ற பெயரோடு அவர்கள் கொண்டாடுவதையும் ஒவ்வொரு வருடமும் காண்கிறீர்கள். இந்த ரமலான் மாதத்திற்கு அப்படியென்ன சிறப்பு?ஆம், அதற்கு ஒரு மிகச்சிறந்த காரணம் இருக்கிறது! அது என்ன?

இந்த மாதத்தில்தான் மனிதகுலம் எது நன்மை எது தீமை என்று தெளிவாகப்  பிரித்தரிவிக்கக் கூடியதும் முழுமையான வாழ்வியல் வழிகாட்டியுமான  திருக்குர்ஆனை பரிசாகப் பெற்றது. ஆம், இந்த மாதத்தில்தான் இவ்வேத வரிகள் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மூலமாக பூமியில் வாழும் மக்களை நோக்கி வரத் துவங்கின.

திருமறைக் குர்ஆனின் வெளிப்பாட்டின் துவக்கத்தைக் கொண்டாடும் விதமாகவே இம்மாதம் உலகெங்கும் கண்ணியப்படுத்தப் படுகிறது.

உயிரோடிருக்கும்போது இம்மாதத்தை அடையும் ஒவ்வொருவர் மீதும் பகலில் விரதமிருப்பது படைத்த இறைவனால் கடமையாக்கப் பட்டுள்ளது.  அந்தக் கட்டளையைத் தாங்கி வரும் வசனம் இதோ:

ரமலான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு முழுமையான வழிகாட்டியாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாகவும், (நன்மை – தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல் குர்ஆன் இறக்கியருளப் பெற்றது, ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ, அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும், ……,, (திருக்குர்ஆன் 2:185)

திருக்குர்ஆன் எதற்கு வழிகாட்டுகிறது?

மனிதன் அடிக்கடி மறந்துவிடும் மூன்று முக்கியமான உண்மைகளை திருக்குர்ஆன் நினைவூட்டுகிறது. இவை ஒன்றும் புதிதல்ல, மாறாக திருக்குர்ஆனுக்கு முன்னதாக இறைவனால் அனுப்பப்பட்ட இறை வேதங்களும் முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த இறைத்தூதர்களும் தத்தமது மக்களுக்கு போதித்தவையே அவை:

1. ஒன்றே குலம்: அனைத்து மனிதர்களும் ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து உருவாகி உலகெங்கும் பல்கிப் பெருகியவர்களே. நாம் எங்கு வாழ்ந்தாலும் எம்மொழியைப் பேசினாலும் ஒரே குடும்பத்தின் அங்கத்தினர்களே.

”மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து அநேக ஆண்களையும் பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான்;. ஆகவே அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். ……..நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான்.’ (திருக்குர்ஆன் 4:1) 

(அல்லாஹ் என்றால் ‘வணக்கத்துக்குரிய ஒரே இறைவன்’ என்று பொருள்)

2. ஒருவனே இறைவன்: அனைத்து மனிதர்களையும் அகில உலகையும் படைத்து பரிபாலித்து வரும் இறைவனும் ஒருவனே. அவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன். அவனது தன்மைகளை திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது:

நபியே நீர் கூறுவீராக! “அல்லாஹ் – அவன் ஒருவனே. அவன் தேவைகள் ஏதும் இல்லாதவன். அவன் எவரையும் பெற்றெடுக்கவில்லை அவனையும் யாரும் பெற்றெடுக்கவில்லை. அன்றியும் அவனைப்போல் எவரும் எதுவும் இல்லை.”  (திருக்குர்ஆன் 112: 1-4)

படைத்த இறைவனைத்தவிர மற்றவை அனைத்தும் படைப்பினங்களே. அவனுக்கு பதிலாக படைப்பினங்களை  வணங்குவதோ அவற்றைக் கடவுள் என்று அழைப்பதோ மிகப்பெரிய பாவமாகும்.

இச்செயல் இறைவனைச்  சிறுமைப்படுத்துவதோடு உண்மையான இறையச்சத்தை மக்கள் மனங்களில் இருந்து களைந்து விடுவதால் சமூகத்தில் பாவங்கள் பெருகக் காரணமாகிறது. மேலும் மனிதகுலத்தைக் கூறுபோட்டுப் பிளவுபடுத்துவதும் ஆகும் என்பதாலும் இப்பாவம் இறைவனால் மன்னிக்கப்படாததாகும் என்றும் திருக்குர்ஆன் கூறுகிறது.

3. வினைகளுக்கு விசாரணையும் மறுமை வாழ்க்கையும்:    இவ்வுலகம் ஒருநாள் முழுக்க முழுக்க அழிக்கப்படும். மீணடும் அனைத்து மனிதர்களும் அவர்கள் தம்  வாழ்நாளில் செய்த வினைகளுக்கு கூலிகொடுக்கப் படுவதற்காக மீணடும் உயிர்கொடுத்து எழுப்பப்படுவர்.

இவ்வுலகில் இறைகட்டளைகளுக்கு கீழ்படிந்து வாழ்ந்த நல்லோருக்கு சொர்க்கமும் கீழ்படியாமல் தான்தோன்றித்தனமாக வாழ்ந்த தீயோருக்கு நரகமும் அன்று விதிக்கப் படும்.

‘ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆகவேண்டும்; அன்றியும் – இறுதித் தீர்ப்பு நாளில் தான், உங்க(ள் செய்கைக)ளுக்குரிய பிரதி பலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும்;. எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ. அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார்;. இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை.’ (திருக்குர்ஆன் 3:185)   

 மேற்கண்ட முக்கிய போதனைகள் போக திருக்குர்ஆன் மனித வாழ்க்கை சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நம்மைப் படைத்தவனே தரும் மிக மிகப் பக்குவமான தீர்வுகளை தாங்கி நிற்கிறது.

தனி நபர் ஒழுக்கம், ஆண்-பெண் பிரச்சினைகள், இல்லறம்,  திருமணம், குழந்தை வளர்ப்பு, தூய்மை, உடல் நலம் தொடங்கி வியாபாரம் பொருளாதாரம், கொடுக்கல்-வாங்கல்,  பாகப்பிரிவினை, குற்றவியல், நீதித்துறை அரசியல் என மனிதனின் தனி நபர் வாழ்க்கைக்கும் சமூக வாழ்க்கைக்கும் தொடர்புடைய அனைத்துத் துறைகளிலும் அழகிய  தீரவுகளை வழங்குகிறது  திருக்குர்ஆன்!

நன்மை – தீமைகளை ஏன்  பிரித்தறிய வேண்டும்? நாம் ஒரு சமூகமாக இணக்கத்தோடு வாழ்வதற்கு நல்லொழுக்க வரைமுறைகளும் அனைவரையும் கட்டுப்படுத்தும் சட்டதிட்டங்களும் இன்றியமையாததாகும். நம்மில் பலரும் பல மதங்களையும் கொள்கைகளையும் சார்ந்தவர்களாக உள்ளோம்.

ஒருவருக்குப் பாவமாகப்படுவது மற்றவர்களுக்குப் பாவமாகப் படுவதில்லை. அதுபோலவே ஒரு சாராருக்குப் புண்ணியமாகப் படுவது மற்றவர்களால் பாவமாகவோ அருவருக்கத்தக்கச் செயலாகவோ எண்ணப்படுகிறது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் பாவபுண்ணியங்களை எவ்வாறு தீர்மானிப்பது? யார் தீர்மானிப்பது? …. இக்குழப்பத்தில் இருந்து மனிதனை விடுவிக்க இவ்வுலகின் உரிமையாளனே வழங்கிய  நன்மை தீமைகளை தெளிவாக்கும் அளவுகோல்தான் திருக்குர்ஆன்!

இவ்வுலகைப் படைத்து பரிபாலித்து வருபவனே மனிதனையும் அவனது தேவைகளையும் அவன் பூமியில் செய்யவேண்டிய கடமைகளையும் அவனது உரிமைகளையும் அதிபக்குவமாக அறிந்தவன் என்பதாலும் அவனே மறுமையில் நம் பாவ புண்ணியங்களை விசாரிக்க உள்ளான் என்பதாலும்  அவன் வழங்கும் அளவுகோலே மனிதகுலம் பின்பற்றுவதற்கு ஏற்றது.

அவ்வாறு பின்பற்றினால் அதன்மூலம் அவர்களது இம்மை வாழ்வும் அமைதி மிக்கதாக அமையும். அவர்களது மறுமை வாழ்வும் சொர்க்கத்தில் அமையும் என்பது இஸ்லாமிய நம்பிக்கை.

இம்மாதத்தில் நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டுள்ளது? நோன்பு என்பது பசி, தாகம், இச்சை, இவைகளை இறைவனிடத்திலுள்ள நன்மையை எதிர்பார்த்தவராக  இம்மாதத்தின் பகல் நேரத்தில் கட்டுப்படுத்திக் கொள்வதாகும். நோன்பின் நோக்கமே இறையச்சத்தை ஏற்படுத்திக் கொள்வதுதான்.

விசுவாசங் கொண்டோரே! உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டிருந்தது போன்று உங்கள் மீதும் நோன்பு (நோற்பது) கடமையாக்கப்பட்டிருக்கின்றது, (அதனால்) நீங்கள் (உள்ளச்சம் பெற்று) பயபக்தியுடையவர்களாகலாம். (அல்குர்ஆன் 2: 183)

இறைவனுக்கு பயந்து, அவன் ஏவியவைகளை செய்தும், தடை செய்தவைகளை தவிர்த்தும் நடப்பதுதான் இறையச்சமாகும். அதற்கு உரிய  பயிற்சியை நோன்பு கொடுக்கின்றது. 

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளை கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லா பாவங்களையும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

யார் கெட்ட பேச்சுக்களையும், கெட்ட செயல்களையும் விட்டுவிடவில்லையோ அவர் உணவை விடுவதிலும், குடிப்பை விடுவதிலும் இறைவனுக்கு எந்த தேவையும் இல்லை என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்  (ஆதாரம்: நபிமொழி நூல் புகாரி)


ஈகைத் திருநாள் என்பது என்ன?
 இம்மாதத்தின் நிறைவை கொண்டாடும் நாளே ‘ஈதுல் பித்ர்’ அதாவது ஈகைத் திருநாள்.

அந்நாளை ஏழைகளும் நலிந்தோரும் உட்பட அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்காக தான் உண்ணும் உணவு தானியங்களை தன்னைச் சூழவுள்ள ஏழைகளை கண்டறிந்து கட்டாயமாக வழங்கிவிட்டே வசதி உள்ளோர் கொண்டாடவேண்டும் என்று வலியுறுத்துகிறது இஸ்லாம்! இதனாலேயே இந்நாள் ஈகைத் திருநாள் என்று அறியப்படுகிறது.

Share this Article

Add a Comment

Your email address will not be published.