திருக்குர்ஆன் இந்திய மண்ணில் செய்யும் புரட்சிகள்!
“பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு!”“இந்திய நாடு என் வீடு! இந்தியன் என்பது என் பேரு!”
என்றெல்லாம் இங்கு தமிழில் தேசபக்திப் பாடல்களைப் பாடுவதைப் போன்றே வெவ்வேறு இந்திய மொழிகளிலும் நாடெங்கும் மக்கள் பாடி மகிழ்கிறார்கள். மதம்,, நிறம், மொழி, கலாச்சாரத்தால் வேறுபட்டு நின்றாலும் அந்த வேற்றுமையிலும் ஒற்றுமை காண்பது பாருக்குள்ளே பாரதம் மட்டும்தான்! அதனால்தான் நாம் பெருமைப் படுகிறோம், இம்மண்ணில் பிறந்ததற்காக! ஆனால் உண்மையில் இந்தப் பெருமையை நமக்கு தேடித் தந்தது யார்?
= இந்நாட்டை தங்கள் காலனித்துவ ஏகாதிபத்தியத்தின் கீழ் அடிமைப் படுத்தி நாட்டு வளங்களைக் கொள்ளை அடித்துச் சென்றவர்களா?
= அதற்கு முன்னர் நாடுகளைப் பிடிக்கும் நோக்கோடு இந்திய மண்ணுக்குள் கால்பதித்த முகலாயர்களா?
=அல்லது அதற்கும் முன்னதாக கைபர் கணவாய் மூலமாக நாடோடிகளாக வந்து தங்கள் மதநம்பிக்கைகளைப் மக்களிடையே பரப்பி அவர்களை மேல்சாதி கீழ்ஜாதி என்றெல்லாம் கூறுபோட்டவர்களா?……
கண்டிப்பாக இவர்கள் யாருமே இந்நாட்டுக்கு பெருமை சேர்த்தவர்கள் கிடையாது. மாறாக அவர்களின் சுயநல நோக்கோடுதான் அவர்கள் இம்மாண்ணுக்குள் நுழைந்தார்கள். அவர்கள் நம் மீது தத்தமது அடிமைத்தளைகளை விதைத்து நம் செல்வங்களைக் கொள்ளையடித்தார்கள், அனுபவித்தார்கள் இன்னும் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்நாட்டு வளங்களை குறிவைத்தே இவர்கள் இந்நாட்டுக்குள் நுழைந்தார்கள். ஆனால் வேற்றுமையில் ஒற்றுமை காண்பது இவர்களின் நோக்கமாக இருந்ததில்லை.
மாறாக பிரிவினை மூலம் எவ்வாறு ஆதாயம் அடைவது என்ற சுயநலம்தான் இவர்களை ஆட்கொண்டது. அதன் தீய விளைவுகளை இன்றும் அனுபவித்து வருகிறோம். இவை ஒருபுறம் இருக்க இவர்களின் நுழைவால் நாட்டுக்கு சில நன்மைகளும் நேர்ந்துள்ளன என்பதை நாம் மறுப்பதற்கில்லை. அவற்றிற்கு காரணம் இவர்களல்ல, மாறாக இவர்கள் மூலம் இந்நாட்டுக்குள் நுழைந்த வேதங்களும் தத்துவங்களும்தான் அவை.
வேற்றுமையில் ஒற்றுமை காணும் பண்பு நம் நாட்டில் எவ்வாறு வந்தது என்பதை நாம் ஆராயும்போது பலரும் தங்கள் பங்களிப்பை ஆற்றியிருந்தாலும் நமக்கு கண்கூடாகத் தெரிவது திருமறைக் குர்ஆன்தான். சுயநல சக்திகள் பல மக்களுக்குள் ஜாதி, மொழி, இனம், நாடு, ஊர் என்ற அடிப்படையில் பிரிவினைகளைத் தூண்டி ஆதாயம் தேட முனைந்தாலும் அவற்றைத் தடுக்கும் சக்தியாக திருக்குர்ஆன் நிற்பதைக் காணலாம்.
49:13. மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்லாஹ் என்றால்வணக்கத்திற்குத் தகுதி வாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)
இவ்வாறு மனிதகுல ஒற்றுமையைப் பறைசாற்றி நிற்கிறது குர்ஆன். இந்த மண்ணிற்கு வந்த எந்த வேதமும் கூறாத ஒன்று இது! முன்னாள் இறை வேதங்களை சுயநல சக்திகள் திரித்து மக்களை ஜாதி ஜாதியாகப் பிரித்துக் கூறுபோட்டு ஆதாயம் தேடிக்கொண்டு இருந்த வேளையில்தான் இந்த தூய இறைமறை இந்நாட்டு மக்களைக் காப்பாற்றும் அரணாக வந்து நின்றது.
சகோதரத்துவமும் சமத்துவமும்
= இவ்வேதத்தை ஏற்றுக்கொண்ட மக்களிடையே இனம், மொழி, நிறம், குலம், கோத்திரம் என்ற பிரிவினை உணர்வுகளை இது துடைத்தெறிகிறது. அனைவரும் ஒரு தாய் மக்களே என்ற சகோதர உணர்வை மேலோங்கச் செய்து மக்கள் செயற்கையாகக் கற்பிக்கக் கூடிய ஏற்றத்தாழ்வுகளை இல்லாமல் ஆக்குகிறது. இவ்வாறு மானிட சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் ஒருசேர நிலைநாட்டுகிறது இவ்வேதம். பள்ளிவாசல்களில் எந்தப் பாகுபாடுகளுக்கும் இடம் கொடாமல் தோளோடு தோள் சேர்ந்து வரிசைகளில் நின்று மக்கள் தொழுகை நடத்துவதைக் காணாதவர் இருக்க முடியாது.
தீண்டாமை ஒழிப்பு
= ஜாதிகளை ஒழிக்கவும் தீண்டாமையை ஒழிக்கவும் பெரியார், அம்பத்கர் போன்ற பெரும் சீர்திருத்தவாதிகள் தங்கள் முழு வாழ்நாட்களையும் செலவிட்டதை இந்நாடு கண்டது.. ஆனால் அவர்களால் மக்களிடையே விழிப்புணர்வைத்தான் ஏற்படுத்த முடிந்ததே தவிர இத்தீமைகளை ஒழிக்க முடியவில்லை என்பதே உண்மை. ஆனால் திருக்குர்ஆன் தான் முன்வைக்கும் “மனிதர்கள் அனைவரும் சகோதரர்களே அவர்களைப் படைத்த இறைவன் மட்டுமே வணக்கத்துக்கு உரியவன்” என்ற ஆணித்தரமான கொள்கையை ஏற்றுக்கொண்ட மாத்திரத்திலேயே அந்த மனிதனை இத்தீமைகளிருந்து விடுவிக்கவும் பாதுகாக்கவும் செய்கிறது.
அருளப்பட்ட நாள் முதல் உலகெங்கும் மனிதர்களிடையே நடத்திவரும் புரட்சியை அது இம்மண்ணிலும் நிகழ்த்தியது, தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறது. அமேரிக்கா ஆப்ரிக்கா கண்டங்களில் வெள்ளையர்களையும் கறுப்பின மக்களையும் அவர்களிடையே தீண்டாமையை நீக்கி அவர்களை ஐவேளைத் தொழுகைகளில் அணிசேர வைக்கிறது, ஒரே தட்டில் இருந்து உணவைப் பகிர்ந்து உண்ணவும் வைக்கிறது இந்த இறைவனின் திருமறை! மேலும் வருடம் ஒருமுறை உலகின் மையப்பகுதியாம் மக்கா நகரில் ஹஜ்ஜின் போது மனிதகுலத்தின் அனைத்து இனத்தவரையும், நிறத்தவரையும், மொழியினரையும், தேசத்தவர்களையும் ஒரே சீருடையில் அணிவகுக்கச் செய்து அழகு பார்க்கிறது இந்த ஒப்பிலா அற்புதமாம் திருக்குர்ஆன்!
மூடநம்பிக்கை மற்றும் சுரண்டல் ஒழிப்பு
= ஒன்றே குலம் ஒருவன் மட்டுமே இறைவன் என்ற கொள்கையோடு இறைவனை இடைத்தரகர்கள் இன்றியும் வீண் சடங்குசம்பிரதாயங்கள் இன்றியும் வணங்கக் கற்றுக் கொடுப்பதால் மூடநம்பிக்கைகளில் இருந்தும் கடவுளின் பெயரால் சுரண்டப்படுவதிலிருந்தும் மக்களைப் பாதுகாக்கிறது இந்த திருக்குர்ஆன்!
சுயமரியாதை
= படைத்தவன் மீது அசைக்கமுடியாத நம்பிக்கையை மனித மனங்களில் ஆழமாக விதைப்பதால் அவர்களை ஒரே நேரத்தில் பயபக்தி உள்ளவர்களாகவும் அஞ்சா நெஞ்சர்களாகவும் சுயமரியாதை மிக்கவர்களாகவும் ஆக்குகிறது திருக்குர்ஆன்!
பொறுப்புணர்வு
= சமூகத்தில் நன்மையை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் இறைவழிபாட்டின் அம்சங்களாகக் கற்றுக் கொடுப்பதால் மக்களை சமூகப் பொறுப்புணர்வு உள்ளவர்களாகவும் கடமை உணர்வு உள்ளவர்களாகவும் வார்த்தெடுக்கிறது இந்த வான்மறை!
உரிமை மீட்பு
= திருக்குர்ஆனை ஏற்றுக் கொள்ளாத மக்களிடையேயும் தன் அழகிய தாக்கங்களையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதையும் நாம் காணலாம். உதாரணமாக நம் நாட்டில் மேல்தட்டு மக்கள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் உரிமைகளைப் பற்றி உணரவும் அரசு அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் தக்க இட ஒதுக்கீடுகளைத் தரவும் தூண்டுகோலாக அமைந்தது இந்தக் குர்ஆனின் தாக்கமே என்றால் மிகையாகாது.
பரந்த சகோதரத்துவம்
= மனிதன் என்ற முறையில் கருத்துவேறுபாடுகளும் கொள்கை வேறுபாடுகளும் பல இருந்தாலும் சக மனிதனை தனது சகோதரனாகவே கண்டு உறவாடக் கற்றுக் கொடுக்கிறது இம்மறை. சக மனிதன் எவ்வளவுதான் தீய எதிரியாக இருந்தாலும் எதிர்க்கப் படவேண்டியது அவனல்ல, மாறாக அவனுக்குள் நுழைந்து விட்ட ஷைத்தான்தான் என்ற அழகிய சீர்திருத்தக் கொள்கையை முன்வைக்கிறது திருக்குர்ஆன்.இவற்றைப் போல இந்த இறைமறை வளர்த்திடும் இனிய பண்புகள் ஏராளம்! ஏராளம்! இம்மண்ணின் மைந்தர்கள் அவற்றை உரமூட்டி வளர்த்திட்டால், இறைவன் நாடினால் “யாதும் ஊரே! யாவரும் கேளிர்!” என்று முழங்கும் நாள் தூரத்தில் இல்லை!