முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது?
முஹர்ரம் மாதம் பத்தாம் நாள் – இந்நாள் ஆஷுரா நாள் என்றும் முஸ்லிம்களிடையே அறியப்படுகிறது. – அன்று என்ன விசேஷம்?
அன்று தெருக்களில் சிலர் ஊர்வலமாக தங்களைத்தாங்களே சாட்டைகளால் அடித்துக் கொண்டும் கத்தியால் கீறிக்கொண்டும் இரத்தம் சிந்திக் கொண்டு செல்வதைப் பார்த்திருப்பீர்கள்.
இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம்?
எந்த சம்பந்தமும் இல்லை என்பதுதான் உண்மை. மூடநம்பிக்கைகளுக்கும் வீண் சடங்குகளுக்கும் தன்னைத் தானே வருத்திக் கொள்வதற்கும் இடமளிக்காத மார்க்கம் இஸ்லாம் என்பதை நீங்கள் அறிவீர்கள். பிறகு இவை எவ்வாறு இஸ்லாத்தின் பெயரால் அரங்கேறுகின்றன?
இந்த முஹர்ரம் பத்தாம் நாள் என்ன நடந்தது?
எகிப்து நாட்டை ஆண்டு வந்த ஃபிர்அவுன் என்ற கொடுங்கோலன் இஸ்ரவேலர்களை அடிமைகளாகப் பிடித்து வைத்து கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான். மேலும் தன்னைத் தானே கடவுள் என்று கூறிக்கொண்டு நாட்டு மக்களை அவனுக்கு சிரம் பணியுமாறு அடக்குமுறை செய்து கொண்டிருந்தான்.
அவனுக்கு பாடம் புகட்டி மக்களை நேரான பாதைக்கு அழைக்க இறைத்தூதர் மூஸா அவர்களை இறைவன் தேர்ந்தேடுத்து அவனிடம் சென்று சத்தியத்தை எடுத்துரைக்குமாறு பணித்தான். சூனியத்தைக் காட்டி தன்னைக் கடவுள் என்று நம்ப வைத்துக் கொண்டிருந்த ஃபிர்அவுனிடம் அவை பொய் என்று நிரூபிக்கத் தக்க அற்புதங்களையும் மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் கொடுத்திருந்தான்.இதைத் திருக்குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
7:103 அவர்களுக்குப் பிறகு, மூஸாவை நம் அத்தாட்சிகளுடன் ஃபிர்அவ்னிடத்திலும் அவனுடைய தலைவர்களிடத்திலும் நாம் அனுப்பிவைத்தோம்; அப்போது அவர்கள் அவற்றை (நிராகரித்து) அநியாயம் செய்து விட்டார்கள்; இத்தகைய குழப்பக்காரர்களின் முடிவு எப்படியிருந்தது என்பதை கவனிப்பீராக!
7:104 .”ஃபிர்அவ்னே! நிச்சயமாக நான் அகிலங்களின் இறைவனால் அனுப்பப்பட்ட தூதன் ஆவேன்” என்று மூஸா கூறினார்.
7:105 .”அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதுவும்) கூறாமலிருப்பது என்மீது கடமையாகும்; உங்களுடைய இறைவனிடமிருந்து உங்களுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருக்கிறேன் – ஆகவே இஸ்ரவேலர்களை என்னுடன் அனுப்பிவை” (என்றும் அவர் கூறினார்).
7:106. அதற்கு அவன், ”நீர் அத்தாட்சிகளைக் கொண்டு வந்திருப்பீரானால் – நீர் உண்மையாளராக இருப்பின் அதைக் கொண்டுவாரும்” என்று கூறினான்.
7:107. அப்போது (மூஸா) தம் கைத்தடியை எறிந்தார் – உடனே அது ஒரு பெரிய பாம்பாகி விட்டது.
7:108. மேலும் அவர் தம் கையை வெளியில் எடுத்தார் – உடனே அது பார்ப்பவர்களுக்குப் பளிச்சிடும் வெண்மையானதாக இருந்தது.
7:109 .ஃபிர்அவ்னின் சமூகத்தாரைச் சேர்ந்த தலைவர்கள், ”இவர் நிச்சயமாக திறமைமிக்க சூனியக்காரரே!” என்று கூறினார்கள்.
7:110. (அதற்கு, ஃபிர்அவ்ன்), ”இவர் உங்களை, உங்களுடைய நாட்டை விட்டும் வெளியேற்ற நாடுகிறார்; எனவே (இதைப்பற்றி) நீங்கள் கூறும் யோசனை யாது?” (என்று கேட்டான்.)
7:111 .அதற்கவர்கள், ”அவருக்கும் அவருடைய சகோதரருக்கும் சிறிது தவணையைக் கொடுத்து விட்டு, பல பட்டினங்களுக்குச் (சூனியக்காரர்களைத்) திரட்டிக்கொண்டு வருவோரை அனுப்பி வைப்பீராக!
7:112 .”அவர்கள் சென்று சூனியத்தில் வல்லவர்களையெல்லாம் உம்மிடம் கொண்டு வருவார்கள்” என்று கூறினார்கள்.
7:113 .அவ்வாறே ஃபிர்அவ்னிடத்தில் சூனியக்காரர்கள் வந்தார்கள். அவர்கள், ”நாங்கள் (மூஸாவை) வென்றுவிட்டால், நிச்சயமாக எங்களுக்கு அதற்குரிய வெகுமதி கிடைக்குமல்லவா?” என்;று கேட்டார்கள்.
7:114. அவன் கூறினான்; ”ஆம் (உங்களுக்கு வெகுமதி கிடைக்கும்). இன்னும் நிச்சயமாக நீங்கள் (எனக்கு) நெருக்கமானவர்களாகி விடுவீர்கள்.”ஒரு பண்டிகை நாளன்று மக்கள் கூட்டம் திரண்டது. அனைவர் முன்பாகவும் இரு தரப்பாரும் தத்தமது கலைகளைக் காண்பிக்க ஏற்பாடானது.
7:115 .”மூஸாவே! முதலில் நீர் எறிகிறீரா? அல்லது நாங்கள் எறியட்டுமா?” என்று (சூனியக்காரர்கள்) கேட்டனர்.
7:116 .அதற்கு (மூஸா), ”நீங்கள் (முதலில்) எறியுங்கள்” என்று கூறினார். அவ்வாறே அவர்கள் (தம் கைத்தடிகளை) எறிந்தார்கள்; மக்களின் கண்களை மருட்டி அவர்கள் திடுக்கிடும்படியான மக்தான சூனியத்தை செய்தனர்.
7:117 .அப்பொழுது நாம் ”மூஸாவே! (இப்பொழுது) நீர் உம் கைத்தடியை எறியும்” என அவருக்கு வஹீ அறிவித்தோம்; அவ்வாறு அவர் எறியவே (அது பெரிய பாம்பாகி) அவர்கள் (சூனியத்தால்) கற்பனை செய்த யாவற்றையும் விழுங்கி விட்டது.
7:118 .இவ்வாறு உண்மை உறுதியாயிற்று, அவர்கள் செய்த (சூனியங்கள்) யாவும் வீணாகி விட்டன.
7:119 .அங்கேயே தோற்கடிக்கப்பட்டார்கள்; அதனால் அவர்கள் சிறுமைப்பட்டார்கள்.
சூனியக்கலையில் தலைசிறந்த அக்கலைஞர்கள் அவர்கள் காண்பது உண்மை இறைவனின் அற்புதமே என்பதை உணர்ந்து சரணடைந்தனர்.
7:120. அன்றியும் அந்தச் சூனியக்காரர்கள் சிரம் பணிந்து
7:121 .”அகிலங்களின் இறைவன் மீது நிச்சயமாக நாங்கள் விசுவாசம் கொண்டோம்;
7:122 .”அவனே மூஸாவுக்கும் ஹாரூனுக்கும் இறைவனாவான்” என்று கூறினார்கள்.
7:123 அதற்கு ஃபிர்அவ்ன் (அவர்களை நோக்கி) ”உங்களுக்கு நான் அனுமதி கொடுப்பதற்கு முன்னரே நீங்கள் அவர் மேல் விசுவாசம்; கொண்டு விட்டீர்களா? நிச்சயமாக இது ஒரு சூழ்ச்சியாகும் – இந்நகரவாசிகளை அதிலிருந்து வெளியேற்றுவதற்காக மூஸாவுடன் சேர்ந்து நீங்கள் செய்த சூழ்ச்சியேயாகும் – இதன் விளைவை நீங்கள் அதிசீக்கிரம் அறிந்து கொள்வீர்கள்!
7:124 .”நிச்சயமாக நான் உங்கள் கைகளையும், கால்களையும் மாறுகை, மாறுகால் வாங்கி உங்கள் யாவரையும் சிலுவையில் அறைந்து (கொன்று) விடுவேன்” என்ற கூறினான்.ஆனால் அவனது மிரட்டல்களுக்கு அவர்கள் பணியவில்லை. உறுதியோடு எதிர்த்து நின்றார்கள்.
7:125 .அதற்கு அவர்கள் ”(அவ்வாறாயின்) நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் தான் திரும்பிச் செல்வோம்; (எனவே இதைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை)” என்று கூறினார்கள்.
7:126 .”எங்களுக்கு எங்கள் இறைவனிடமிருந்து வந்துள்ள அத்தாட்சிகளை நாங்கள் நம்பினோம் என்பதற்காகவே நீ எங்களைப் பழி வாங்குகிறாய்?” என்று கூறி ”எங்கள் இறைவனே! எங்கள் மீது பொறுமையையும் (உறுதியையும்) பொழிவாயாக முஸ்லீம்களாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களாக எங்களை ஆக்கி), எங்க(ள் ஆத்மாக்க)ளைக் கைப்பற்றிக் கொள்வாயாக!” (எனப் பிரார்தித்தனர்.)
இதைத் தொடர்ந்து நடந்த சில சம்பவங்களுக்குப் பிறகு இறைவன் முசா(அலை) அவர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் அந்நாட்டை விட்டு வெளியேறுமாறு பணித்தான். ஆனால் அவர்களை அழித்தொழிக்க ஆணவம் கொண்ட ஃபிர்அவுனும் அவனது படைகளும் பின்தொடர்ந்தார்கள். வழியில் செங்கடல் குறுக்கிட்டது. ஆனால் இறைவனின் மாபெரும் அற்புதத்தால் செங்கடல் பிளந்து அவர்களுக்கு வழிவிட்டது. அவர்கள் கடலைக் கடந்த பின் அவர்களைத் துரத்திக்கொண்டு வந்த ஃபிர்அவுனும் அவனது படைகளும் கடலைக் கடக்கும்போது கடல் மீண்டும் இணைந்து மூழ்கடிக்கப்பட்டார்கள்.
7:136 .ஆகவே அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால் அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.
அவ்வாறு இறைத்தூதர் மூசாவும் அவரைப் பின்பற்றியவர்களும் அற்புதமான முறையில் காப்பாற்றப் பட்ட நாள்தான் முஹர்ரம் பத்தாம் நாள்.