முஹர்ரமும் மூடநம்பிக்கைகளும்
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாள் என்று அழைக்கப்படும் முஹர்ரம் மாதம் பத்தாவது நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான்.
மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிவிப்பாளர்;இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்,
ஆஷுரா தினத்தன்று நபி(ஸல்) அவர்கள் நோன்பு நோற்று அதை நோற்கும்படி ஏவிய போது இது யூதர்களும் கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளல்லவா அல்லாஹ்வின் தூதரே! என நபித்தோழர்கள் கேட்டார்கள், அதற்கு நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் நாடினால், எதிர்வரும் வருடம் ஒன்பதாவது நாளையும் (சேர்த்து) நோற்பேன் என்றார்கள். அடுத்த வருடம் வருவதற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் மரணித்து விட்டார்கள். (முஸ்லிம்)
எனவே முஹர்ரம் ஒன்பது பத்து ஆகிய நாட்களில் நோன்பு நோற்பது மட்டுமே நாம் அந்நாளை அனுஷ்டிக்கும் முறையாகும். இதைத் தவிர அந்நாளில் மார்க்கத்தின் பெயரால் எதையும் விசேஷமாக செய்ய அனுமதி கிடையாது. அவ்வாறு செய்தால் அவை அனைத்தும் வழிகேடே!
இறைவனின் தூதர்(ஸல்) அவர்கள் என்ன காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றார்களோ நோற்கச் சொன்னார்களோ அதே காரணத்தின் அடிப்படையில் ஆஷூரா நோன்பை நோற்றால் கடந்த வருடத்துப் பாவங்கள் மன்னிக்கப்படும்.
ஆஷூராவின் நோன்பு முந்தைய வருடத்துப் பாவங்களுக்கு பரிகாரமாக அமைகிறது –நபிமொழி (புகாரி)
முஹர்ரத்தின் பெயரால் இஸ்லாத்தில் நுழைந்து விட்ட மூடநம்பிக்கைகள்:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு சரித்திரத்தில் ஒரு சம்பவம் முஹர்ரம் பத்தாம் நாள் தற்செயலாக நிகழ்ந்தது. அதுதான் அந்நாளில் பல மூடநம்பிக்கைகளை கட்டவிழ்த்து விட்டது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரரான ஹுசைன் (ரலி) அவர்கள் கர்பலா என்ற இடத்தில் வைத்துக் கொல்லப்படுகிறார்கள்.
இந்த சம்பவத்தை அரசியலாக்கி பிற்காலத்தில் ஒரு சிலர் தூய இஸ்லாத்தில் குழப்பம் உண்டாக்கும் நோக்கத்தில் பல மூட நம்பிக்கைகளை நுழைத்தார்கள். அவற்றைத்தான் நீங்கள் இன்று தெருக்களில் காண்கிறீர்கள்!
கொல்லப்பட்டவரின் பெயரில் துக்கம் அனுஷ்டிக்கிறோம் என்று சொல்லி தங்களைத்தாங்களே துன்புறுத்தும் விதமாக உடலைக் கத்தியால் கீறிக்கொள்வதும் சாட்டைகளால் அடித்துக்கொள்வதும் இரத்தம் சிந்துவதும் தீ மிதிப்பதும் முழுக்கமுழுக்க தூய இறைமார்க்கத்திற்கு புறம்பானதாகும்.
நாட்டு வழக்கம் மற்றும் முன்னோர்களின் வழக்கம் என்று சொல்லி எந்த மூடநம்பிக்கைகளை முஸ்லிம் பெயர்தாங்கிகள் நடத்தினாலும் அவற்றைக் கண்டு விட்டு இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.
இவற்றை இஸ்லாம் போதிக்கவில்லை,இவற்றை போதிக்க இஸ்லாம் வரவில்லை,
இவற்றை தடுக்கவே இஸ்லாம் வந்தது. உலகின் பெரும்பாமை மக்களை இப்படிப்பட்ட மூடசெயல்களில் இருந்து காப்பாற்றவும் செய்தது. தொடர்ந்து காப்பாற்றியும் வருகிறது.
ஒப்பாரி வைப்பது, ஆடைகளையும், உடல்களையும் கிழித்துக் கொள்வது இறை நிராகரிப்புச் செயலாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(முஸ்லிம்)
மேலும் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்”
தன்னுடைய கன்னத்தில் அறைந்து கொள்பவனும் ஆடையைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் காலத்துச் சொற்களைப் பயன்படுத்துபவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.” [புகாரி எண்; 1294 ]