மாற்றான் தோட்டத்து மல்லிகை மணக்காதது ஏன்?
நாம் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் உலகு……… நம்மில் யாருக்குமே இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் காட்டு தர்பாரிலோ, அக்கிரமங்களும் அட்டூழியங்களும் அநியாயங்களும் அதர்மமும் நாளுக்கு நாள் பெருகி வருவதிலோ உடன்பாடு இருக்காது என்பது திண்ணம்.
ஆனால் நாம் அனைவருமே இந்நிலை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து வர நம்மை அறியாமலேயே நீர் பாய்ச்சி உரமூட்டி நமது பங்களிப்பைச் செய்துகொண்டிருக்கிறோம். எப்படி?
= தீமைகள் நம் முன் புயலாய் வீசும்போதும் கண்டும் காணாதவர்களாக ஒதுங்கிவிடும் குணம் நம்மில் பெரும்பாலானோருக்கு உண்டு. நமக்கு ஏன் வம்பு? என்று ஒதுங்கிவிடும் மனப்போக்கு.
= நமக்குள் இயற்கையாகவே ஊறியிருக்கும் இன வெறி! நம் குடும்பம், நம் ஜாதி, நம் மொழி, நம் ஊர், நமது மாநிலம், நமது நாடு…… என நம்மவர்களை மட்டும் நியாயப் படுத்தும் மனப்போக்கு.
மேற்கண்ட இரண்டு மனப்போக்குகளுமே மிக மிக ஆபத்தானவை. இவை இரண்டும் நம்மிடையே தொடரும் வரை இவ்வுலகிலும் நாம் அமைதியைக் காண முடியாது என்பது மட்டுமல்ல, மறுமை வாழ்வில் நம்மை அவை நரகத்திற்கு இட்டுச் செல்லும் என்பது உறுதி!
நம் தோட்டத்து மல்லிகை மட்டுமே மணமுள்ளது, மாற்றான் தோட்டத்து மல்லிகை அது ஊர் முழுக்க மணத்தைப் பரப்பினாலும் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனோபாவம் மிக மிகக் கொடியது! ஆனால் இறைவனைப் பற்றியோ அல்லது நம் வாழ்வின் அடிப்படை உண்மைகளைப் பற்றியோ மரணத்தைப் பற்றியோ மரணத்திற்குப் பின் வரவுள்ள வாழ்வு பற்றியோ சொர்க்கம் பற்றியோ நரகம் பற்றியோ நமக்கு எச்சரிக்கைகள் வரும்போது அவற்றை இந்த மனோபாவதோடு அலட்சியம் செய்வது மிகப் பெரிய அறியாமை என்றே சொல்லவேண்டும்.
உதாரணமாக, புற்று நோயால் பாதிக்கப்பட்ட மராட்டியர் ஒருவர் அதற்கான சரியான மருந்தை நீண்ட அலைச்சல்களுக்குப் பிறகு பெறுகிறார் என்று வைத்துக் கொள்வோம் . அதை குடிக்கப் போகும்போது அது கர்நாடகத்தில் தயாரானது என்று அறிய வருகிறார்.
“’ஆ, இது கர்நாடகத்தில் தயாரானதா? என் உயிர் போனாலும் அதை குடிக்க மாட்டேன்!” என்று அவர் அடம் பிடிப்பாரானால் அவரை என்னவென்று சொல்வீர்கள்?அதைப் போலவே கடல் கடந்து வாழும் உங்கள் தந்தை அல்லது தாய் உங்களுக்காக ஒரு முக்கியமான செய்தியைக் கொண்ட ஒரு கடிதத்தையோ அல்லது ஒரு விலை உயர்ந்த ஒரு பொருளையோ தனது கன்னட நண்பர் ஒருவர் மூலம் கொடுத்தனுப்புகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். காவிரி நீரை தடுத்த கன்னடர்கள் நமது விரோதிகள் என்று சொல்லி உங்கள் பொருளை பெற்றுக் கொள்ளாமல் புறக்கணித்து விடுவீர்களா?
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள்மெய்ப்பொருள் காண்பது அறிவு!என்று சரியாகச் சொன்னானே வள்ளுவன், அப்படியல்லவா நாம் உண்மைகளை அணுகவேண்டும்? ஆம் அன்பர்களே, நமது மொழியில் அல்லது நமது மதத்தவருக்கு அல்லது நமது நாட்டவருக்கு அல்லது நமது முன்னோருக்கு வந்த வேதத்தை அல்லது தூதரை மட்டுமே பின்பற்றுவோம் என்று இறுமாந்திருப்பது இறைவனுக்கு எதிராக நாம் தூக்கும் போர்க்கொடி என்பதை என்பதை நாம் உணரவேண்டும்.
உங்களைப் படைத்துப் பரிபாலித்து வரும் இறைவனுக்கு நீங்கள் உங்கள் மொழியின் மீது, நாட்டின் மீது நீங்கள் கொண்டிருக்கும் பற்றோ அல்லது வெறியோ ஒரு பொருட்டல்ல. அனைத்துலக மக்களும் அவன் பார்வையில் சமமே.
இப்பரந்த உலகில் அவன் நாடுவோரைத் தேர்ந்தெடுத்து அவர்களைத் தன் தூதர்களாக்கி அனுப்புவது அவன் விருப்பம். அதை ஆராய்ந்து ஏற்றுக்கொள்வது நமக்கு நன்மை. புறக்கணிப்பது தீமை மட்டுமல்ல பேராபத்து!
வானம், சூரியன், மழை, காற்று போன்றவை அனைத்து மக்களுக்கும் எப்படி போதுவானவையோ அதைப் போலவே அவனது வழிகாட்டுதலும் பொதுவானது!நமது நிறம். மொழி, குலம், நாடு, இனம் இவையெல்லாம் அவன் நமக்கு தற்காலிகமாக இவ்வாழ்க்கை எனும் பரீட்சையில் வழங்கியுள்ள ஏற்பாடுகளே. அவை பெருமை அடிப்பதற்க்காகவோ பிறரை சிறுமைப் படுத்துவதவற்க்காகவோ உள்ளவை அல்ல.
அவன் நாடியிருந்தால் நம்மை ஆப்ரிக்கவிலோ அமெரிக்காவிலோ கருப்பு இன மக்களாகவோ காட்டு வாசிகளாகவோ படைத்திருக்க முடியும். எனவே நமக்காக அருளப்பட்ட திருக்குர்ஆனை அரபு நாட்டு வேதம் என்றோ முஸ்லிம்களின் வேதம் என்றோ சொல்லி நாம் புறக்கணித்தால் இழப்பு நமக்குத்தான்.
இவ்வாறு சத்தியாத்தை சத்தியமாகக் கண்டும் ஏற்க மறுக்கும் இனம் பபுரியாத இனவெறி நமக்குள் எங்கிருந்து வருகிறது? அது வேறு ஒன்றுமல்ல, நமது முன்னோர்களைப்பற்றி நமக்கு இருக்கக் கூடிய கண்மூடித்தனமான மதிப்பீடுதான்! அவர்கள் மேல் அன்பும் மரியாதையும் நாம் காட்டவேண்டும்தான்.
ஆனால் அவர்கள் அனைவருமே நல்லவர்கள் அல்லது அவர்கள் செய்து போனதல்லாம் சரி என்ற மனப்போக்கு ஆபத்தானது!இப்படிப்பட்டவர்களைப் பார்த்து இறைவன் தனது திருமறையில் கேட்கிறான்:
2:170 .மேலும், ”அல்லாஹ் இறக்கி வைத்த இ(வ்வேதத்)தைப் பின்பற்றுங்கள்”” என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் ”அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் (நடக்கக்) கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்”” என்று கூறுகிறார்கள்;. என்ன! அவர்களுடைய மூதாதையர்கள், எதையும் விளங்காதவர்களாகவும், நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா?
கீழ்காணும் வசனத்தில் இன்னும் வனமையாகக் கண்டிக்கிறான் பாருங்கள்:
31:21 ‘அல்லாஹ் இறக்கி வைத்த (வேதத்)தை நீங்கள் பின்பற்றுங்கள்” என அவர்களுக்குச் சொல்லப்பட்டால், அவர்கள் ‘(அப்படியல்ல)! நாங்கள் எங்களுடைய மூதாதையவர்களை எதில் கண்டோமோ, அதைத் தான் நாங்கள் பின்பற்றுவோம்” என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தாலுமா (பின்பற்றுவர்?)
(அல்லாஹ் என்றால் வணக்க்கத்திற்குத் தகுதிவாய்ந்த ஒரே இறைவன் என்று பொருள்)